இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0512



வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:512)

பொழிப்பு: பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை: பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி, அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக.
பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.

பரிமேலழகர் உரை: வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க.
(வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)

வ சுப மாணிக்கம் உரை: வருவாய் பெருக்கி வளஞ் செய்து மேலும் ஆராய்பவனே காரியம் செய்யத் தக்கவன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் வினை செய்க.

வாரி பெருக்கி வளம்படுத்து:
பதவுரை: வாரி-வருவாய்; பெருக்கி-விரியச் செய்து; வளம்-செல்வம்; படுத்து-வளர்த்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி;
மணக்குடவர் குறிப்புரை: பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதல்- பொருளும் இன்பமும் உண்டாகச் செய்தல்.
பரிப்பெருமாள்: பொருள் வருதற்கு இடமானவற்றை முன்பு நின்ற நிலையிற் பெருக்கி, அவ்விடங்களி லுண்டாகும் பயனை முன்பு நின்ற நிலையிலுண்டாக்கி;
பரிப்பெருமாள் குறிப்புரை: பொருள் வருதற்கிடமாவது நிலம் முதலான இடம்: அதனைப் பெருக்குதலாவது, காடு கெடுத்து நாடு ஆக்குதல் முதலாயின. வளம் படுத்தலாவது, பயிர் ஏற்றுங்கால் வான் பயிர் ஏற்றுவித்தலும் பாழான இடங்களிலே குடியேற்றி ஆயம் பொருள் உண்டாக்குதலும்.
பரிதி: பொருள் தேடித் தேடின பொருளைப் பெருக்கி;
காலிங்கர்: பொருள் வருவாயைப் பலவாற்றாலும் பெருக்கி, மற்று அது வளப்படி வருகின்ற பொருள்களையும் சிதறாமல் ஒருவகைப்படுத்தி;
பரிமேலழகர்: பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, அப்பொருளால் செல்வங்களை வளர்த்து;
பரிமேலழகர் குறிப்புரை: வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன.

'பொருள் வருவாயைப் பெருக்கி, அப்பொருளால் செல்வங்களை வளர்த்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வருவாய்க்குரிய வழிகளை விரிவுபடுத்தி அதனால் செல்வங்களைப் பெருக்கி', 'வருகின்ற வழிகளை அதிகப்படுத்தி, பொருளாதார நிலைமையை வளப்படுத்தி', 'பொருள்வரும் வழிகளை விரிவுபடுத்தி அப்பொருளால் பயன்படுஞ் செல்வங்களை வளர்த்து', 'பொருள் வரும் வழிகளை மிகுதிப்படுத்தி, செல்வங்களை வளர்த்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் வருவாயைப் பெருக்கி அப்பெருக்கத்தால் வளங்களை விரிவுபடுத்தி என்பது இப்பகுதியின் பொருள்.

உற்றவை ஆராய்வான் செய்க வினை:
பதவுரை: உற்றவை-பொருந்திய இடையூறுகள்; ஆராய்வான்-பொருந்த நாடுபவன்; செய்க-செய்யவேண்டும்; வினை-செயல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக.
பரிப்பெருமாள்: அவ்விடத்துற்ற மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பெரும்பாலும் (அரசன் வினை) செய்வானை நோக்கிற்று.
பரிதி: வரலாறு பண்ணிக் கூட்டிய பொருள் சேதம் வராமல் காக்க வல்லவன் ராச காரியம் பார்ப்பான் என்றவாறு.
காலிங்கர்: இரண்டுக்கும் இடையூறு வந்துற்ற காலத்து மற்று அவ்விடையுறுதலை அழிந்து போமாறு சிந்தித்துத் தெளியவல்லான் யாவன்; மற்று அவன் செய்க அரசர்க்குக் கருமம் என்றவாறு.
பரிமேலழகர்: அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன். அரசனுக்கு வினை செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'மிகுதி குறைவுகளை ஆராயவல்லவன் வினை செய்வானாக' என்றும் பரிதி 'கூட்டிய பொருள் சேதம் வராமல் காக்க வல்லவன் ராச காரியம் பார்ப்பான்' என்றும் கூற காலிங்கரும் பரிமேலழகரும் 'பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன். அரசனுக்கு வினை செய்க' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கவல்லவன் வினை ஆட்சி செய்வானாக', 'அந்த வளம் நிலைப்பதற்கான முறைகளை ஆராயக்கூடியவன் காரியம் செய்யவேண்டும்', 'அவைகளுக்கு நேர்ந்த இடையூறுகளை ஆராய்ந்து நீக்கவல்லவன் அரசனுக்கு வேலை செய்யவேண்டும்', 'நாட்டில் நிகழ்ந்துள்ள செயல்களின் இயல்புகளை ஆராய்கின்றவன் அரசியல் வினைகளைச் செய்வானாக' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவன் வினை செய்யட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள்வரும் வழிகளைப்பெருக்கி, அப்பொருளால் வளங்களை விரிவுபடுத்தி, இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவன் வினையை ஆளவேண்டும்.

பொருள் வருவாயைப் பெருக்கி அப்பெருக்கத்தால் வளங்களை விரிவுபடுத்தி, உற்றவை ஆராய்வான் வினை செய்யட்டும் என்பது பாடலின் பொருள்.
'உற்றவை ஆராய்வான்' என்பதன் பொருள் என்ன?

வாரி பெருக்கி என்ற தொடர்க்கு பொருள் வரும் வழிகளைப் பெருக்கி என்பது பொருள்.
வளம்படுத்து என்ற சொல் வளங்களை உண்டாக்கி என்ற பொருள் தரும்.
செய்க வினை என்ற தொடர்க்கு வினையைச் செய்யட்டும் என்று பொருள்.

பொருள் வரும் வழிகளை விரிவுபடுத்தி அதனால் வளங்களை உண்டாக்கி, அவை தொடர்பான இடையூறுகளைத் தொடர்ச்சியாக ஆராய்பவன் வினை ஆள்வானாக.

பொருள் நிர்வாகத்திற்கான -நிதி மேலாண்மைக்கு- உயர்ந்த பொறுப்பிற்குரியவரை- தெரிந்து அமர்த்துதல் பற்றிய பாடல் போன்று தோன்றுகிறது. அப்பொறுப்புக்குத் தெளியப்பட்டவர் என்ன என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறார் என்பதைச் சொல்கிறது இது. இப்போதுள்ள பொருள்வரும் வழிகள் எவை? மற்ற எவ்வழிகளிலெல்லாம் பொருள் பெருக்கமுடியும்? என்று கண்டறிந்து வருவாயை மிகைப்படுத்தலும் வந்த பொருள் மூலம் வளங்களை உண்டாக்குதலும் அவரது முதன்மையான கடமைகளாம். இங்கு வளம் எனச்சொல்லப்பட்டது கட்டமைப்பு வசதிகள் (Infrastructure) ஆகும். நிலவளம், நீர்வளம்- ஏரி முதலிய பாசனவசதிகள் உழவு, நீர் வருவாய், ஏரிகுளம் பாதுகாப்பு, சாலை, நீர்ப் போக்குவரத்து முதலியவற்றைக் குறிக்கும். மேலும் பெரும் முயற்சிகளில் ஈடுபடும்போது இடையூறுகள் தொடர்ந்து உண்டாகிக்கொண்டே இருக்கும். அவற்றை முன்கூட்டியே ஆராய்ந்து நிர்வகிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இவரே பொறுப்பாளர் ஆக முடியும்.
வாரிபெருக்கும் வழிவகைகளாக காடுகெடுத்து நாடாக்குதல் விளைநிலம் பெருக்கச் செய்தல், குடியேற்றுதல் போன்ற பலவற்றைக் குறிப்பிடுவர். ' 'வாரிபெருக்கி' என்னும் தொடருக்கு உரை கூறுங்கால் பரிமேலழகரும் அமைச்சர் அறிந்திருக்க வேண்டுவனவற்றை 'உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம்' என்றார். வார்த்தை என்றதனால் 'உழவு, பசுக்காவல், வாணிபன்' ஆகியவற்றிற்குரிய நூல்களை அமைச்சர் கற்று இத்தொழில்களை நாட்டில் பெருக்க வேண்டும் என்பது இவ்வுரையாசிரியர் கருத்தாகலாம். வள்ளுவர் காலத்திலேயே இத்தொழில்கட்குரிய தனிநூல்கள் இருந்தனவா என்பது தெளிவின்று. சங்ககாலத்தில் உழவும் வாணிபமும் மிகச் செழித்தோங்கியிருந்தமையால் இவை குறித்த நூல்களும் இருந்திருத்தல் கூடும்.' (காமாட்சி சீனிவாசன்)
நாட்டிலுள்ள கால்நடையால் அரசனுக்கு வருவாயுண்டு. உழவர்கள் நிரைகாத்து அரசனுக்கு நிதி தந்தனர் என்பதை
போர்வகை வாய்ந்த புரவலரின் மேதக்கார்
ஏர்வாழ்நர் என்பதற்கு ஏதுவாம்-சீர்சால்
உரைகாக்கும் மன்னர்க்கு ஒளிபெருகத் தாம்தம்
நிரைகாத்துத் தந்த நிதி

என்னும் பழம்பாடலாலும் அறிய முடிகிறது (இ சுந்தரமூர்த்தி).
வளம் என்பது இயற்கை வளம் மற்றும் மனித மன வளம் குறித்தது. 'பெற்ற செல்வத்தை வளம் படுத்தலாவது ஒன்று பத்தாகப் பெருக்கி உய்த்தீட்டுந் தேனீப் போலக் குவித்தல் மட்டுமன்று; அதனைக் கொண்டு நாட்டுக்குப் பயன்படும் செல்வங்களை வளர்த்தலே வளம்படுப்பதாகும்' (கா சுப்பிரமணியம் பிள்ளை).

'உற்றவை ஆராய்வான்' என்பதன் பொருள் என்ன?

‘உற்றவை’ என்பதற்கு மிகுதி குறைவுகள், சேதம் வராது பாதுகாத்தல், வருவாயும் பயனும், ஊதியம், இடையூறுகள் என்று பலவாறாகப் பொருள் கூறினர். நாட்டிற்கு வந்த இன்பதுன்ப ஏதுக்கள் என்றும் பொருள் உரைக்கப்பட்டது. உற்றவை -தக்கவைகள். பெருக்கவும் வளம்படுத்தவும் தக்கவைகள் என விளக்கினார் நாமக்கல் இராமலிங்கம். சி இலக்குவனார் 'நாட்டில் நிகழ்ந்துள்ள செயல்களின் இயல்புகளை ஆராய்கின்றவன் என்றார்.
உற்றவை, ஊறு என்னும் சொற்கள் பெரும்பாலும் இடையூறுகளையே உணர்த்தும். ஊறொரால் உற்றபின் ஒல்லாமை.... (குறள் 662) உற்றுழி யுதவியும்... (புறம் 183) என்னும் ஆட்சி காண்க என தெளிவுறுத்துவார் இரா சாரங்கபாணி. இடையூறுகள் என்பது எடுத்த செயலை முடிப்பதற்கு முன் இடையில் உறும் தடைகள் குறித்தது. காலிங்கர் 'வருவாய், விரிவாக்கம் இரண்டுக்கும் இடையூறு வந்துற்ற காலத்து மற்று அவ்விடையுறுதலை அழிந்து போமாறு சிந்தித்துத் தெளியவல்லான்' எனப் பொருள் கூறினார்.

'உற்றவை ஆராய்வான்' என்ற தொடர் இடையூறுகளைத் தொடர்ச்சியாக ஆராய்பவன் என்ற பொருள் தரும்.

பொருள் வருகின்ற வழிகளை விரிவுபடுத்தி அப்பொருளால் பயன்படும் செல்வங்களைப் பெருக்கி அவைகளுக்கு நேர்ந்த இடையூறுகளை ஆராய்ந்து நீக்கவல்லவன் வினை ஆட்சி செய்வானாக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பொருட்செல்வ மேலாண்மை தெரிந்து வினையாடல் செய்வது பற்றியது.

பொழிப்பு

வருவாய் பெருக்கி அதனால் வளங்களைச் செய்து, அவை தொடர்பான இடையூறுகளை ஆராய்பவன் வினை செய்வானாக.