இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0511நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:511)

பொழிப்பு: நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தரும் இயல்புடைய செயல் ஆளப்படும்.

மணக்குடவர் உரை: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.

பரிமேலழகர் உரை: நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
(தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு செயலின் நன்மையும் தீமையும் பார்த்து நலஞ்செய்வானை வேலைக்குக் கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.


நன்மையும் தீமையும் நாடி:
பதவுரை: நன்மையும்-நல்லதையும்; தீமையும்-கெடுதியையும்; நாடி-ஆராய்ந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து;
பரிதி: ஒருவன் நற்குணத்தையும் தீயகுணத்தையும் விசாரித்து;
காலிங்கர்: இவ்வுலகத்து வேந்தர் ஒருவனைக் கொண்டு ஒருவனை ஆட்சி செய்யுமிடத்துக் கீழ்ச்சொல்லிப் போந்த முறைமையானே அவரது நன்மைக் கூறும் தீமைக் கூறும் தெரிந்து;
பரிமேலழகர்: அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து;

'நன்மையானவற்றையும் தீமையானவற்றையும் ஆராய்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு செயலின் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து', 'குறிப்பிட்ட காரியத்தின் நன்மை தீமைகளை அறிந்து', 'ஒரு முயற்சியின் நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து', 'ஒருவன் செய்துள்ள செயல்களால் உண்டான நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்:
பதவுரை: நலம்-நன்மை; புரிந்த-தரும்; தன்மையான்-இயல்பால்; ஆளப்படும்-செலுத்தப்படும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமையைப் பொருந்தாது நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்.
பரிப்பெருமாள்: தீமையை ஒருவி நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவனைச் செய்வானாகப் படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பெரும்பான்மையும் அற ஆராய்ச்சிக்குக் கடவாரை நோக்கிற்று.
பரிதி: இரண்டிலும் பெரிய குணத்தை உளம் கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவற்றுள் நல்லொழுக்கம் மிக்குவரும் தன்மைக்கண்ணே வினை ஆட்சிசெய்ய அடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.

'நன்மையின்கண்ணே பொருந்தின தன்மையுடையவன் வினை செய்வானாகச் செய்யப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவற்றுள் நன்மைதரும் செயலை விரும்பிச் செய்பவனை ஆட்சிக்குரியவனாக்குக', 'முன்னே அப்படிப்பட்ட காரியத்தை நன்றாகச் செய்து முடித்துள்ள அனுபவம் உள்ளவனைக் கொண்டு அதைச் செய்விக்க வேண்டும்', 'நல்லதையே செய்ய விரும்பும் இயல்புடையான், முயற்சிகளிலே பயன்படுதற்குரியன்', 'நன்மையை விரும்பிச் செய்த தன்மையால் அரசியல் வினைகளில் ஈடுபடுத்துதல் வேண்டும். நன்மை செய்துள்ளாரையே அரசியல் வினைகட்குரியர் ஆக்குதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நன்மை ஆகும் இயல்பு உடைய வினை செய்யப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலால் உண்டாகும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லது தரும் வினையை ஆட்படுத்தவேண்டும்.

நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து நலம்புரிந்த தன்மையால் அச்செயலை ஆளவைக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நலம்புரிந்த தன்மையான்' குறிப்பது என்ன?

நன்மையும் தீமையும் என்றதற்கு நல்லனவும் தீமைகளும் என்பது பொருள்.
நாடி என்ற சொல் ஆராய்ந்து என்ற பொருள் தரும்.
ஆளப்படும் என்ற சொல்லுக்கு ஆளப்படுதல் வேண்டும் என்று பொருள்.

ஒருசெயலை இவ்வாறு செய்தால் நன்மையும் இவ்வாறு செய்தால் தீமையும் உண்டாமென ஆராய்ந்து, நன்மையுண்டாம் வினை செய்யப்படும்.

'தெரிந்து வினையாடல்' அதிகாரம் வினைக்கான பொறுப்புக்களை ஒப்படைப்பது பற்றியது. எந்த வகையான வினையை ஒப்படைப்பது என்பதைச் சொல்கிறது இக்குறள். சென்ற அதிகாரமான தெரிந்து தெளிதலில் ஒருவனின் குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து அவைகளுள் மிகுதியாய் இருப்பனவற்றைத் தேடி அம்மிகுதிகளைக் கொண்டே வினைசெய்வானைத் தெளிய வேண்டும் என்று சொல்லப்பட்டது. இங்கு ஆகும் செயல்கள் எவை ஆகாத செயல்கள் என்பனவற்றை ஆராய்ந்து அவற்றுள் நன்மை பயக்கும் செயலை மேற்கொண்டு தெளியப்பட்டவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது.
வினை செய்யத்தொடங்குமுன் இந்தத் தெளிவு வேண்டும். இல்லாவிட்டால் ஆகாத செயல்களில் முற்பட்டுப் பொழுதையும் முயற்சியையும் வீணாக்க வேண்டிவரும். ஆகக்கூடிய செயலானாலும் அதன் பயனாக ஏற்படும் முடிவு நன்மை தருமா எனவும் செயலைச் செய்தால் தீமைவருமா அல்லது அச்செயலைச் செய்யாவிட்டாலும் தீது நேருமா என்பனவற்றையும் தெளிந்து செயல் தொடங்குவது நல்லது.

காலிங்கர் உரை 'இவ்வுலகத்து வேந்தர் ஒருவனைக் கொண்டு ஒருவனை ஆட்சி செய்யுமிடத்துக் கீழ்ச்சொல்லிப் போந்த முறைமையானே அவரது நன்மைக் கூறும் தீமைக் கூறும் தெரிந்து மற்று அவற்றுள் நல்லொழுக்கம் மிக்குவரும் தன்மைக்கண்ணே வினை ஆட்சிசெய்ய அடுக்கும்' என்கிறது. இதில் 'ஒருவனைக் கொண்டு ஒருவனை' என்பது 'ஒருவனைக் கொண்டு ஒருவினை என்றிருந்தால்தான் பொருள் தெளிவாகிறது. 'வினையால் உண்டாகும் நன்மை தீமைகளை ஆராய்ந்து நல்லதில் நாட்டம் உள்ளவனை வினைக்கு உரிமை ஆக்கவேண்டும்' என்று வினை செய்வான் தன்மையை (நல்லதில் நாட்டம் உள்ளவன்) எனக் கூறுவதைவிட வினை செய்வான் மேற்கொள்ளும் செயலின் தன்மையைச் சொல்லும் காலிங்கர் உரை பொருத்தமாகப்படுகிறது.
பரிப்பெருமாள் 'அற ஆராய்ச்சிக்குக் கடவாரை நோக்கிற்று' என்றார். இதன் பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டவன், நீதிமன்றம், அறங்களின் கண்காணிப்பு இவற்றில் ஆளப்படுதலைக் கருதிற்று' என்பதாகும். அற ஆராய்ச்சியாளரை மனதில் கொண்டு இப்பாடல் இயற்றப்பட்டிருக்கலாம். ஆனால் தெரிந்து வினையாடல் அதிகாரப் பாடல் அனைத்துச் செயல்களுக்கும் பொருந்துவதாக அமைந்துள்ளன. அவ்வாறே பொருள் கொள்ளுதல் நன்று.

'நலம்புரிந்த தன்மையான்' குறிப்பது என்ன?

நலம் என்ற சொல் நன்மை எனவும் புரிந்த என்ற சொல் பயந்த அல்லது தந்த எனவும் தன்மையான் என்ற சொல் இயல்பால் எனவும் பொருள்படும். 'நலம்புரிந்த தன்மையான் என்றதற்கு எவை நல்லவற்றைச் செய்யுமோ அந்த இயல்பால் என்பது நேர்பொருள்.
ஆனால் நல்லதையே செய்ய விரும்பும் இயல்புடையான் எனப் பெரும்பான்மை உரையாளர்கள் பொருள் காண்கின்றனர். காலிங்கர் ஒருவரே ‘தன்மையான்’ என்பதற்குத் தன்மைக் கண்ணே என உரை செய்தார். இவரது உரையே பொருத்தமாகத் தோன்றுகிறது.
'நலம் புரிந்த தன்மை' என்பது முன் நன்றாகச் செய்து முடித்திருக்கிற 'அனுபவம்' என்று பொருள் கூறுவார் நாமக்கல் இராமலிங்கம்.

நலம் புரிந்த தன்மையான்' என்பதற்கு நன்மை பயக்கும் இயல்பால் என்பது பொருள்.

நன்மையையுந் தீமையையும் ஆராய்ந்து நலம் தரும் இயல்புடைய செயலை ஆளவைக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நன்மை புரியும் தன்மை கொண்ட செயலைத் தெரிந்து வினையாடல் செய்யவேண்டும்.

பொழிப்பு

ஒரு செயலின் நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து அவற்றுள் நன்மைதரும் தன்மையுடைய செயல் ஆளப்படும்.