இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0508தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:508)

பொழிப்பு: மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.

பரிமேலழகர் உரை: பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)

வ சுப மாணிக்கம் உரை: ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத துன்பம் வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்


தேரான் பிறனைத் தெளிந்தான்:
பதவுரை: தேரான்-ஆராயதவனாக; பிறனை-அயலானை; தெளிந்தான்-நம்பியவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;
பரிப்பெருமாள்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;
பரிதி: ஒருவனிடம் பொல்லாக் குணத்தை விசாரியாமல் நம்புவானாகில்;
காலிங்கர்: தான் பிறன் ஒருவனோடு மருவுதற்கு முன்னமே அவனது குற்றமும் குணமும் தெரிந்து ஆராயாது வறிதே பிறன் ஒருவனை நமக்கு இவன் துணை என்று நம்புதலைச் செய்தால்;
பரிமேலழகர்: தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல்;

'பிறனை ஆராயாதே தெளிந்தவனுக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வழிமுறையென்று தெளிந்தவன்' என்றும் பரிதி 'பொல்லாக் குணத்தை ஆராயாமல் நம்பியவன்' என்றும் காலிங்கர் 'வறிதே நமக்கு இவன் துணை நம்புதலைச் செய்தவன்' என்றும் பரிமேலழகர் 'தன் குடியோடு தொடர்ந்த மரபு அல்லாதானைத் தெளிந்தவன்' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னோடு தொடர்பில்லாதவனை ஆராயாமல் நம்பியவனுக்கு', 'ஆலோசிக்காமல் இன்னொருவரை நம்பிவிடுகிறவனுடைய', 'தம்மோடு எவ்வகைத் தொடர்பும் இல்லாத அயலான் ஒருவனை ஆராயாது நம்புகின்றவனுடைய', 'ஆராயாதவனாய்த் தம்மோடு தொடர்பில்லாத பிறனைத் தெளிந்தவனுடைய', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

வழிமுறை தீரா இடும்பை தரும்:
பதவுரை: வழிமுறை-மரபு; தீரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.
பரிப்பெருமாள்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வழிமுறை என்றது தன் வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார், அமாத்தியராய்ப் போந்த முறைமை. குலத்தின் உள்ளார்க்கு அமாத்தியர் ஆயினார் வழியின் உள்ளாரைத் தேறலாம் என்பது வியாதன் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது.
பரிதி: அதனாலே அவன் தலைமுறைதோறும் துன்பம் வரும் என்றவாறு.
காலிங்கர்: அது மற்று அதன்பின் முறையே வேறு ஒன்றானும் தீராத மரபுக் கேட்டைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.

'அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்நம்பிக்கை அவனுக்கு மட்டுமன்றி அவன்பின் வரும் வழிமுறையினர்க்கும் (சந்ததிக்கும்) நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்', 'வாழ்க்கை நெடுகத் தீராத துன்பமுள்ளதாகிவிடும்', 'வழி முறையிலும் நீங்காத துன்பம் ஏற்படும்', 'வழி முறைகள், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆராயாமலே அயலான் ஒருவனைத் தேர்வு செய்தால் நம்பியவன் மரபினர்க்கும் நீங்காத் துயர் உண்டாகும்.

ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வழிமுறைக்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'வழிமுறை' குறிப்பது என்ன?

தேரான் என்ற சொல்லுக்கு ஆராயாது என்பது பொருள்.
பிறனை என்ற சொல் இங்கு அயலானை, தொடர்பில்லாதவனை, அல்லது முன்பின் அறியாதவனை என்ற பொருள் தரும்.
தெளிந்தான் என்ற சொல்லுக்குத் நம்பியவன் என்று பொருள்.
தீரா இடும்பை என்ற தொடர் நீங்காத துன்பம் எனப் பொருள்படும்.
தரும் என்ற சொல் கொடுக்கும் என்ற பொருள் தருவது.

புதிதாக வந்த ஒருவனை ஆராயாது துணையாகத் தெளிந்தவனுக்கு அந்நம்பிக்கை அவன் வழிமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள பிறன் யார்? அவ்வளவாக அறிமுகம் அற்ற ஒருவன், தன் குடியோடு தொடர்ந்த மரபு இல்லாதவன் அதாவது தன் நாட்டில் வாழும் குடிகளுடன் மாறுபட்ட முறைமை கொண்டவன் பிறன் எனக் குறிக்கப் பெறுகிறான். ஏன் அப்படிப்பட்ட ஒருவன் தேறுதல் செய்யப்படுகிறான்? வேறு ஏதோ சொல்லப்படாத பயன் கருதியோ, யாருடைய பரிந்துரையின் பேரிலோ, அல்லது வறிதே உள்ளுணர்வாலோ அந்தப் பிறன் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.
யாரோ ஒருவனை தகுதி, நடத்தை என்று எதையுமே ஆராயமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் பின்வரும் தலைமுறைக்கும் தொடரும்படி பெருங்கேட்டை உண்டாக்கிவிடுவான் என்கிறது பாடல்.
யாரையும் தெளிந்தே தெளிக என்பாராயினும் தேர்ந்தெடுக்கப் பெறுபவனுக்கு தெளிந்தானோடு தொடர்ந்தும் மரபுரிமையும் வேண்டும் என்றும்
தன்னோடு தொடர்பற்றவனாயின் தேர்ந்து தெளிய வேண்டும்; தன் குலத்தானென்றால் ஆராய வேண்டுவதில்லை என்றும்
பிறனைத் தேரான் வழிமுறை தெளிந்தான் எனக் கூட்டிப் பிறனைத் தேராமல் தம் மரபில் வந்தவனையே தெளிந்தவன் என்றும் வேறு சில உரைகள் கூறுகின்றன.

புதியதாக தேர்வுக்காக வந்தவன் யாராயிருந்தாலும் அவனை குணம் குற்றம் அறம் பொருளின்ப ஆசைகள் ஆகியவற்றை ஆய்ந்து தெளிதல் வேண்டும்; அப்படியில்லாமல் ஒருவகையானும் அறிமுகம் இல்லாதவனை நம்பினால் அதன் வாயிலாக வழிவழி அதாவது தலைமுறைதோறும் துன்பம் வரும் என்பது செய்தி.

'வழிமுறை' குறிப்பது என்ன?

வழிமுறை என்ற சொல் தன் வழியில் உளார்க்கு அதாவது தன்பின்னோர்க்கு என்ற பொருள் தருவது. இச்சொல் வழித்தோன்றல்களைக் குறிப்பது, இது கால்வழி, மரபுவழி, கொடிவழி, வழிவழி, குலவழி எனவும் அறியப்படும். வாழையடி வாழையென வருவது என்று இது வழக்கில் சொல்லப்படுகிறது. வம்சாவழி என்றும் சந்ததி என்றும் கூறப்படுவதும் இதுவே.
வழிமுறை' என்பது குடும்பத்தைக் குறிப்பதல்ல; ஆனால் வாழ்க்கையின் வழிமுறை (வாழ்க்கை நடைமுறை) என்று நாமக்கல் இராமலிங்கமும் (தெளிந்தவனுடைய) வழி முறைகள் என்று சி இலக்குவனாரும் வழிமுறை-படிப்படியாகவும், ஒவ்வொரு செயலும் என்று வழிமுறை வந்தடையும் எனக்கூட்டிப் படிப்படியாகத் துன்பம் வரும் என ஜி வரதாராஜனும் இச்சொல்லுக்கு உரைப்பொருளாகக் கூறினர்.
வழிமுறை இடும்பை தரும் என இயைத்து இவனுக்குப் பின் வழி வழியாகத் துன்பந்தரும் என்று பொருள் கொண்டவரும் உளர்.
'ஆராய்ந்து செயல்களாற்றாத மற்றவன் ஒருவனை தன்பணிக்கு அமர்த்த முடிவுசெய்தவனின் செயலாற்றும் வழிமுறைகளே அவனுக்கு தீராத, முடிவிலாத துன்பத்தினைத் தரும்' என்பது ஓர் புத்துரை.
இவற்றுள் 'பின்வரும் பரம்பரை' என்ற பொருளே பொருத்தமானது.

வழிமுறை என்பதற்கு மரபு அல்லது பின்வரும் தலைமுறை என்பது பொருள்.

ஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உள்ளுணர்வாலோ மற்றப்படியோ அறிமுகம் அற்றவனைத் தெரிந்து தெளிதல் கூடாது.

பொழிப்பு

ஆராயாமல் தொடர்பில்லாதவனை நம்பினால் பின்வரும் தலைமுறைக்கும் நீங்காத துன்பம் வரும்