இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0506



அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி

(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:506)

பொழிப்பு: உலகப் பற்று அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.

மணக்குடவர் உரை: ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க; அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.

பரிமேலழகர் உரை: அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார்.
('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)

ஜி வரதராஜன் உரை: பற்றில்லாதவர் உலகத்திலே காணும்படியான இன்பதுன்பங்களுக்கு அப்பாற்பட்டவர். மேலும் உலகப் பழிச் சொல்லுக்கும் வெட்கப்படாதவர். ஆதலால், அவரை நம் செயலுக்குரியவராகத் தெளிவதனின்றும் விலக்கிவிடுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி.


அற்றாரைத் தேறுதல் ஓம்புக:
பதவுரை: அற்றாரை-நீங்கியவரை; தேறுதல்-தெளிதல்; ஓம்புக-நீக்குக.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க;
பரிப்பெருமாள்: ஒழுக்கமற்றாரைத் தேறுதலைத் தவிர்க;
பரிதி: பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை நம்பாதே;
காலிங்கர்: உலகத்துச் சிலரொடு நண்பும் நயமும் அற்று ஒழுகுவாரைக் கண்டால் தாமும் அவரைத் தேறுதலைப் பரிகரிக்க;
பரிமேலழகர்: சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக;

'ஒழுக்கமற்றாரை/ பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை/ உலகத்துச் சிலரொடு நண்பும் நயமும் அற்று ஒழுகுவாரை சுற்றம் இல்லாரைத் தெளிதலைத் தவிர்க/நம்பாதே/பரிகரிக்க/ஒழிக ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிக வறியவரை நம்பாதே', 'பொருள், சுற்றம் முதலிய இல்லாதாரை நம்புதல் கூடாது', 'அன்பில்லாதவர்களை நம்பிவிடுவதை விலக்க வேண்டும்', 'கொள்கை இல்லாதாரைத் தெளிதலை ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வாழ்க்கைப் பற்றுக்கோடற்றாரைத் தெளிதலைத் தவிர்க என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றவர் பற்றிலர் நாணார் பழி:
பதவுரை: மற்று-ஏன் எனில்; அவர்-அவர்; பற்றிலர்-தொடர்பிலர்; நாணார்-அஞ்சார்; பழி-பழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
பரிப்பெருமாள்: அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அரசனோடு ஒத்த மறைந்த குற்றம் உடையாரைத் தேறலாம்; அவர் தம் குற்றம் மறைக்குமாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் என்பது மயேச்சுரர் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது.
பரிதி: ஏன் என்றால் அவர் பற்றும் இலர், பழிக்கும் நாணார் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனின் (தம்மாட்டு அவர் அந்)நிலையர் ஆகலான் பாங்கினால் தம்மொடு பரிவிலர்; மற்று அதுவேயும் அன்றிப் பழி அஞ்சுதலும் இலர் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் உலகத்தோடு தொடர்பு இலர், ஆகலான் பழிக்கு அஞ்சார்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.

'அவர் ஓரிடத்துப் பற்றுடையாரும் அல்லர், பழிக்கும் நாணாராதலான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏன்? அவர் எப்பிடிப்பும் இல்லார்; பழிக்கும் அஞ்சார்', 'அவர்களுக்குப் பற்று இருக்காது. பழிச்செயலுக்கும் நாணமாட்டார்கள்', 'அவர்கள் யாரிடத்திலும் பற்றுடையவர்களாக நடந்து கொள்ளமாட்டார்கள்; பழி பாவங்களுக்கும் அஞ்ச மாட்டார்கள்', 'அவர் மக்கட் பற்றும் நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் இல்லாதவராக இருப்பர்; பழிக்கும் அஞ்சார்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஏனெனில் அவர்கள் எப்பிடிப்பும் இல்லார்; பழிச்செயலுக்கும் நாணமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகவாழ்வில் பிடிப்புக் காட்டாதவரைத் தேறற்க; அவர்களுக்கு பற்று இல்லை. பழியும் நாணமாட்டார்.

வாழ்க்கைப் பற்றுக்கோடற்றாரைத் தெளிதல் ஓம்புக; ஏன்எனில் அவர்கள் எப்பிடிப்பும் இல்லார்; பழிச்செயலுக்கும் நாணமாட்டார்கள் என்பது பாடலின் பொருள்.
'ஓம்புக' குறிப்பது என்ன?

தேறுதல் என்ற சொல்லுக்குத் தேர்ந்து எடுத்தல் என்பது பொருள்.
ஓம்புக என்ற சொல்லுக்குக் காக்க என்பது பொருள்; இங்கு செய்யாமல் காக்க அதாவது நிகழாவாறு காத்தல் என்ற பொருளில் வந்தது.
மற்றுஅவர் என்றது ஏனெனில் அவர் என்ற பொருள் தரும்.
பற்றிலர் என்ற சொல்லுக்குப் பற்றுகள் இல்லாதவர் என்று பொருள்.
நாணார் பழி என்றது பழிகளுக்கு அஞ்சார் எனப் பொருள்படும்.

வாழ்க்கைப் பிடிப்பு இல்லாதாரைத் தெளிதலை தவிர்க; அவர் எப்பற்றும் இல்லாதவராக இருப்பர்; பழிக்கும் அஞ்சார்.

அற்றார் என்ற சொல்லுக்கு இல்லாதார் என்பது பெருவழக்காய் உள்ள பொருள். செல்வம் அற்றார் என்றால் பொருள் இல்லாத வறியவர், அவா அற்றார் அவா இல்லாதவர் என்பன போல. இப்பாடலில். எது இல்லாதார் என்று சொல்லப்படவில்லை. எனவே பரிமேலழகர் 'பற்று இலர்' என்பது பிற்பகுதியில் வருவதால் 'சுற்றம்' (உறவு) என்பது வருவிக்கப்பட்டது எனக் கூறி, பற்று இலர் என்பதற்கு- உலகத்தோடு தொடர்பு இலர் என விளக்கமும் கூறினார். ஆனால் பற்று இன்மை என்பது சுற்றம் இல்லாததனால் மட்டும் உண்டாவதில்லை. எனவே இவ்வுரை ஓரளவே பொருந்தும்.
மற்றவர்கள் 'அற்றார்' என்றதற்கு வெவ்வேறு பொருள் கூறினர். ஒழுக்கம் அற்றார், பொருளும் கிளையும் கல்வியும் அற்றார், சிலரோடு நண்பும் நயமும் அற்று ஒழுகுவார், சுற்றம் இல்லார், மிக வறியவர், பண்பிலாதார், அன்பில்லாதவர், பற்றில்லாதவர், குறிப்பிடத்தக்க எவ்வித நலனும் இல்லாதார், நல்ல நெறி இல்லார், கொள்கை இல்லாதார், மனிதநேயம் அற்றவர், மகப்பேறும் உறவினரும் இல்லாதவrர், நெறியற்றவர், குடும்பப் பொறுப்பு விட்டவர்கள், சமூகத்தின் தர்மங்கள் எதுவும் தம்மைக் கட்டுப்படுத்தாது என்று எண்ணுகிறவர்கள், எதன்மீதும் பற்றில்லாது தான்தோன்றித்தனமாக அலைபவர்கள், ஆசையற்றவர் நாட்டுப் பற்றற்றவர், வினையில் பிடிப்பற்றறோர் என்று வேறுபட்ட பலபொருள்கள் கூறப்பட்டன.

பரிதி பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை எனப் பொருள் கூறினார். பொருளற்றார் வறுமையாலும், கிளையற்றார் உலகில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையானும் கல்வியற்றார் அறியாமையினாலும் தீய செயல்கள் செய்வாராதலால் அவரை நம்பாதே என்று அமைகிறது.
பரிப்பெருமாள் குறள் 504-க்கான உரையில் 'குற்றமும் நாடி' என்ற பகுதிக்கு 'குற்றமுடையவனை வினை செய்தற்குத் தெளிக' என்றார். இக்குறளில் மகேச்சுரர் மதத்தைச் சுட்டிக் காட்டி 'அரசனோடு ஒத்த மறைந்த குற்றம் உடையாரைத் தேறலாம்; அவர் தம் குற்றம் மறைக்குமாறு போல அவர் குற்றமும் மறைப்பர் ஆதலான் என்பது மகேச்சுரர் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது' எனவும் சிறப்புரை தந்தார். பரிப்பெருமாள் இங்கு அற்றார் என்பதற்குக் குற்றம் உடையார் எனப் பொருள் கண்டுள்ளார்.
அற்றார் என்பதற்கு ஒழுக்கம் அற்றார் என மணக்குடவர் உரை செய்தார். ஒழுக்கம் என்பது நற்குண நற்செயல்களனைத்தும் அடங்கிய சொல் அது இல்லாதாரைத் தவிர்க என்னும் அவர் உரை சிறந்ததாகிறது. ஆனாலும் இதுவும் குறட்கருத்தை முற்றும் உணர்த்துகிறது என்று சொல்லமுடியாது.

வாழ்க்கையில் பற்றுக்கோடு அற்று இருப்பவரைத் தேறலாகாது என்பது ஒரு கருத்து. பற்றுக்கோடற்றவர் 'விரக்தி'யில் இருப்பவரைக் குறிக்கும். உலகவாழ்வில் பற்றுக் கோடு இல்லாதவர் பற்றிலர். அதன் காரணமாகவே குற்றம் செய்தால் பழிவருமென்று வெட்கப்படவும் மாட்டார். எனவே ஒருவர் மற்ற பணிக்கான தகுதிகள் பெற்றவராயிருந்தாலும் வாழ்வு பற்றி எதிர்மறைக் கருத்துக் கொண்டிருந்தால், அவரது செயல்திறன் மிகவும் குறைவாகவே இருக்கும். பணியில் தேவையான ஈடுபாடும் காட்டமாட்டார். அதனால் செயல் வெளிப்பாடும் சிறப்பாக இருக்காது. அவர்களைப் தேர்வு செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்பது இக்குறட்கருத்து.

'ஓம்புக' குறிப்பது என்ன?

'ஓம்புக' என்ற சொல் காக்க என்ற பொருள் தருவது. இங்கு 'நிகழாவாறு காக்க' என்ற பொருளில் ஆளப்பட்டது என்பார் தேவநேயப் பாவாணர். மற்ற உரைகாரர்கள் 'தேறற்க', 'பரிகரிக்க', 'நீக்குக', 'நம்பாதே' எனப்பொருள் கண்டனர்.
ஓம்புக என்பதற்குத் 'தேறலாம்' என்றார் பரிப்பெருமாள். ஏன் தேறலாம் எனச் சொன்னார் என்பது மேலே முன் பகுதியில் விளக்கப்பட்டது. “ஓம்புதல்” என்ற சொல்லுக்கு கடைபிடித்தல், தவிர்த்தல் என ஒன்றுக்கொன்று எதிரான பொருள்களில் அகராதிகளில் கூறப்படுகிறது, இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்வதும் தேறப்புகுவாரைப் பொருத்தவரை சரியாயிருக்கும். உலகில் உறவுகளின் பிணைப்புகளும், அவற்றால் வரும் நடுவுநிலை பிறழ்தல்களுக்கு ஆளாகாதவர்களுமாக கண்டு தேர்ந்து அவர்களை பணிகளுக்கு அமர்த்துக என்பது பொருளாகிறது.

ஓம்புக என்பதற்கு இங்கு 'நிகழாவாறு காக்க' என்பது பொருள்.

பற்றுக்கோடற்றாரைத் தெளிதலைத் தவிர்க; ஏன்எனில் அவர்கள் எப்பிடிப்பும் இல்லார்; பழிச்செயலுக்கும் நாணமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உலகப் பற்றுக்கோடு உள்ளவராகத் தெரிந்து தெளிதல் வேண்டும்.

பொழிப்பு

பிடிப்பற்றவரைத் தெளிதலைத் தவிர்க; ஏன்எனில் அவர் பற்று இல்லார்; பழிக்கும் அஞ்சார்.