இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0500கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:500)

பொழிப்பு: வேல் எறியப்பட்ட வடுக்கள் தாங்கிய முகத்தையுடைய அஞ்சாத யானையையும், கால் ஆழ்ந்த சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.மணக்குடவர் உரை: கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றைக் கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு - பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, கால்ஆழ் களரின் நரி அடும் - அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் என்றவாறு.
('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: நேர் நிற்றலை அஞ்சாத, வேல்கள் பலவற்றால் அழுத்தப்பட்ட முகத்தையுடைய களிறுகளேயாயினும், அவை கால்கள் உள்ளே அமிழும் தன்மையுடைய சேற்று நிலத்தில் அகப்பட்டால், சிறு நரிகளால்கூடக் கொல்லப்படும். எவ்வளவு வலிமையுடையாரும் தமக்குப் பொருந்தாத இடத்திற்குச் சென்றால், தம்மைவிட எளியராலும் தோற்க நேரும்..


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு, கால்ஆழ் களரின் நரி அடும்.


கால்ஆழ் களரில் நரிஅடும்:
பதவுரை: கால்-கால்; ஆழ்-ஆழ்ந்த; களரில்-சேற்று நிலத்தில்; நரி-நரியென்னும்விலங்கு; அடும்-கொல்லும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கால் விழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம்;
பரிப்பெருமாள்: கால் வீழப்பட்ட களரின்கண் நரி கொல்லவற்றாம்;
பரிதியார்: நரி வெல்லுமாப் போல;
காலிங்கர்: தனது கால் உள்ளழுந்தும் களரிடம் புக்குக் கொடுந்துயர் உறுமிடத்து நரி குறுகி மத்தகத்தைக் கவ்விப் பரித்து நுகர்ந்து அதனைப் படுவினை செய்யும்; [படுவினை - கொல்லுந்தொழில்]
பரிமேலழகர்: அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும் என்றவாறு;

'கால் விழப்பட்ட சேற்றுநிலத்து நரி கொல்லும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சேற்று நிலத்தில் நரி கொன்றுவிடும்', 'காலாழுகின்ற சேற்று நிலத்தில் சிக்கிக் கொண்டால் நரி கொன்றுவிடும்', 'அதன் கால்கள் அழுந்தி அமிழத்தக்க சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் அதனை நரி கொல்லும்', 'கால்கள் புதைகின்ற சேற்று நிலத்தின் கண் நரிகள் கொல்லும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கால் புதைந்த சேற்று நிலத்திலே நரிகளால் கொல்லப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்அஞ்சா வேல்ஆழ் முகத்த களிறு:
பதவுரை:கண்-கண்களுக்கு; அஞ்சா-நடுங்காத; வேல்-வேல் (எறியப்பட்டு); ஆழ்-புதைந்த; முகத்த-முகத்தை யுடைய; களிறு-ஆண்யானை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றை.
மணக்குடவர் குறிப்புரை: இது மேலதற்குக் காரணங் கூறிற்று.
பரிப்பெருமாள்: கண்ணஞ்சாத வேலழுந்தப்பட்ட முகத்தினையுடைய களிற்றை.
பரிப்பெருமாள் குறிப்புரை: களர்-போரிற் புறமான கழி. இது மேலதற்குக் காரணங் கூறிற்று.
பரிதியார்: சத்துருவை இடமறிந்து வெல்க என்றவாறு.
காலிங்கர்: தன் சினம் தணியாத தறுகண்மை பெரிதும் உடைத்தாய் மேலவர் எறியவும், கீழவர் குத்தவும் பிறவும் ஆகிய வேல் அழுந்திய வடு அறாத முகத்தை உடைய கடுங்களிறானது [மேலவர் - தேர்மீதும் தன் மீதும், பரிமீதும் உள்ள வீரர்; கீழவர் - காலாட்படையினர்].
காலிங்கர் குறிப்புரை: அதனால் உறுபகை அஞ்சாத் தறுகண் மன்னவராயினும் இடம் அறியவேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை;
பரிமேலழகர் கருத்துரை: 'முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.

'கண்ணஞ்சாத வேலழுத்தப்பட்ட முகத்தினையுடைய களிறு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'வேல்ஆழ்' என மணக்குடவர்/பரிப்பெருமாள், காலிங்கர் பாடங்கொள்ள பரிமேலழகர் 'வேல்ஆள்' அதாவது வேல்வீரர் எனப் பாடங்கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேல்வீரர்களைக் குத்தி எடுத்த யானயையும்', 'பாகரது சினப் பார்வைக்கு அஞ்சாத வேல் அழுந்திய வடு நீங்காத முகத்தினையுடைய போர் யானை ('வேலாண்முகத்த' என்ற பாடம் கொண்டு வேலையுடைய வீரர்களைக் கோத்த கோட்டினையுடைய யானை எனப் பொருள் கூறுவர் சிலர்.) ', 'பாகருடைய சினப்பார்வைக்கும் அஞ்சாது வேல் கொண்டெதிர்க்கும் ஆட்களைக் குத்தியெடுக்கும் யானையானது', 'பாகர்க்கு அடங்காதனவாய் வேலாட்களைக் கோத்த கொம்புகளை (தந்தங்களை) உடையனவாய் இருக்கின்ற யானைகளை (பெரிய யானை சிறிய நரியால் கொல்லப்படுவது யானைக்கு ஏற்ற இடம் இல்லாமையால். அதுபோல சிறியவரும் பெரியவரை வெல்லக்கூடும் பொருத்தமில்லா இடத்தில் இருப்பின்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பயமேயில்லாத வேல் ஆழத் தாங்கிய முகத்தினையுடைய யானை என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
வேல் அழுந்திய முகத்தையுடைய எதற்கும் பயமில்லாத யானை, சேற்றுக்குள் கால் அழுந்திச் சிக்குண்டால் நரியால்கூட அழியக்கூடும்;

பயமேயில்லாததும் வேல் அழுந்தப்பட்ட முகத்தினையுடையதுமான யானையின் கால் சேற்று நிலத்திலே ஆழ்ந்தால் அதை நரி கொன்றுவிடும் என்பது பாடலின் பொருள்.
இப்பாடல் கூறும் செய்தி என்ன?

கால்ஆழ் என்ற சொல்லுக்கு கால் ஆழ்ந்த என்பது பொருள்.
களரில் என்ற சொல் சேற்றில் என்ற பொருள் தரும்.
நரிஅடும் என்ற தொடர் நரியும் கொன்றுவிடும் எனப்பொருள்படும்.
கண்அஞ்சா என்ற சொல்லுக்குப் பயப்படாத என்று பொருள்.
வேல்ஆழ் என்ற சொல் வேல்புதைந்த என்ற பொருள் தருவது.
முகத்த களிறு என்ற தொடர் முகத்தையுடைய யானை என்ற பொருளது.

அஞ்சாததும் பகைவரின் வேல் ஆழப்பதிந்ததும் ஆகிய முகத்தையுடைய யானையைக் கால் ஆழ்ந்துவிட்ட புதைநிலத்தின்கண் நரிகூடக் கொன்றுவிடும். ஆதலால் இடரான இடமறிந்து அதனின்று ஒருவர் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.

களர் என்பது சேறு. அது சில இடங்களில் ஆழ்ந்து புதை சேறாகக் கிடக்கும். அவ்விடங்களில் சிக்கிக் கொண்டால் யானை போன்ற வலிமையான உயிர்களும் வெளிவர இயலாமல் செயலற்றுப் போகும். கால்கள் புதைந்து கொள்ளும்படியான அத்தகைய உள்வாங்கு சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்டால் யானையை நரியும் வென்றுவிடும். நரி வீரமில்லாத சிறிய விலங்கு. இருந்தபோதிலும் இடம் காரணமாக நரி யானையைக் கொன்றுவிடும் வாய்ப்புக்கள் உண்டு.
கண்அஞ்சா என்ற தொடர்க்குத் ''தன் சினம் தணியாத தறுகண்மை பெரிதும் உடைத்தாய்' என்றும் ''பாகரின் கண்ணுக்கு அஞ்சாமல் அதாவது பாகனின் அங்குசத்திற்கும் அடங்காமல் வீறு கொண்ட' என்றும் 'பாகரது சினப் பார்வைக்கு அஞ்சாத' என்றும் நேர் நிற்றலை அஞ்சாத' என்றும் விளக்கம் தந்தனர்.. காலிங்கரின் "சினம் தணியாத தறுகண்மை பெரிதும் உடைத்தாய் மேலவர் எறியவும், கீழவர் குத்தவும் பிறவும் ஆகிய வேல் அழுந்திய வடு அறாத முகத்தை உடைய கடுங்களிறானது" என்ற உரை வீரமுள்ள போர்யானையை நன்கு படம் பிடித்துக் காட்டுகிறது. கண்அஞ்சா என்றது பயப்படாத என்ற பொருள் தருவது. அச்சத்தை மெய்ப்பாட்டால் வெளிப்படுத்துவது கண்ணாதலால் கண்ணஞ்சுதல் என இணைத்தே வழங்கப்பெற்றது என்பர். 'சினம் கொண்ட அஞ்சாத யானை என்பது இதற்குப் பொருத்தமான பொருள் ஆகிறது.

'வேல்ஆழ் முகத்த களிறு' என்றதற்குப் பகைவரின் வேல்களால் ஆழப்பதிந்த முகத்தினை உடைய யானை என்று பொருள்பட மணக்குடவர் உரை செய்தார். இவர் 'வேலாழ்' என்று பாடம் கொண்டார். 'வேல்களால் துளைக்கப் பட்ட முகமானால் ஏற்கனவே வலியிழந்து விடுகிறது; எனவே நரிக்குக் களிற்றைத் தாக்குவது சிரமமில்லை; இடம் காரணமாக யானயை அது கொல்வது இங்கு வலியுறுத்தப்படாது' என்று பரிமேலழகர் மணக்குடவர் உரையை மறுப்பார். இவர் 'வேலாள்' என்று பாடங்கொண்டு. 'வேல்ஆள், முகத்த களிறு' அதாவது வேல் வீரர்களை முகத்தில் தாங்கிய (தந்தங்களில் வீரர்களைக் கோத்த) யானை என்ற பொருளில் உரை கூறினார். .'வேலாழ்', 'வேலாள்' இவற்றில் எது சரி என்பதற்கு இரா சாரங்கபாணியின் கருத்து அறியத்தக்கது. அவர் கூறுவதாவது: "பரிமேலழகர் கொள்வது போல் கொள்ளாது 'வேலாழ் முகம்' என்ற வினைத்தொகையை இறந்தகாலம் விரித்து வேலாழ்ந்தமையால் வடுவுடைய முகம் எனக் காலிங்கர் பொருள் கொள்வதுபோற் கொள்ளின், பரிமேலழகர் மறுப்புக்கின்மையோடு 'காலாழ்' என்பதற்கேற்ப எதுகை நயமுந்தோன்றும்."
'வேலாழ் ' என்பதுவே பொருத்தமான பாடமாகும்.

இப்பாடல் கூறும் செய்தி என்ன?

இப்பாடல் பிறிதுமொழிதல் அணியில் அமைந்துள்ளதால், உவமையை வைத்து உவமிக்கத்தக்க பொருள்கள் என்று எதனையும் ஒப்பிடலாம். இடனறிதல் அதிகாரம் என்பதால் இங்கு இடத்தின் இன்றியமையாமை வலியுறுத்தப்பட்டதாகக் கொள்ளவேண்டும்.
பயமேயில்லாததும் வேல்கள் முகத்தில் ஆழப்புதைந்த முகத்தையுடையதுமான யானை புதைந்து போகும் அளவுக்கு உள்ள சேற்றில் கால் வைத்தால் வலிமை மிகக் குறைந்த நரிகளால் கொல்லப்படும் என்பது உவமை. உவமப் பொருளாக 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' எனப் பரிமேலழகர் கூறினார்.

இக்குறளில் காட்டப்படும் யானை போர்த்திறன் மிகக் கொண்டது. எதற்கும் அஞ்சாதது. முகத்திலே போர்க்கள வேல்கள் தைத்த வடுக்கள் உள்ள பெருமையுடையது.. ஆனால் அந்த வலிமையான வீரமுள்ள யானையும் ஒரு நரியிடத்தில் தோற்று விடுகிறது. எப்படி?; அந்த யானை இடறி ஒரு புதை சேற்றில் சிக்கிக் கொண்டதுதான் காரணம். இப்பொழுது சேற்றிலிருந்து காலை எடுக்க முடியாமல் துன்பப்படுகிறது. இச்சூழலைப் பார்த்துக் கொண்டிருந்த நரி அருகில் வந்து யானையைத் தாக்க வாய்ப்பாகிவிடுகிறது.. கால் ஆழப் பதிந்து விட்டதால் யானையால் நகர முடியவில்லை என்பதால் அது தோற்கும் நிலை உண்டாகி விடுகிறது. போர்க்களத்தில் உள்ள கெட்டிநிலம். யானைக்குத் தக்க இடமாயிருந்தது. ஆனால் சேற்றுநிலம்.அதற்குத் துணை செய்யமுடியவில்லை.
யானை நரியுடன் பகைகொண்டு போர் செய்வதற்காகச் செல்லவில்லை. சேற்று நிலத்திற்குத் தானாக விரும்பிச் செல்லவுமில்லை . தன்னையும் அறியாமல் அகப்பட்டுக் கொண்ட இடம் அது. என்னதான் வலிமைகொண்டிருந்தாலும் ஒருவர் புதைசேறு போன்ற இடர்நிறைந்த இடம் நோக்கிச் சென்றுவிடாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

பயமேயில்லாத வேல் அழுந்தப்பட்ட முகத்தினையுடைய யானை கால் புதைந்த சேற்று நிலத்திலே நரிகளால் கொல்லப்படும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருந்தா இடத்தில் சிக்கிக் கொள்ளாமல் தம்மைக் காத்துக் கொள்ளவேண்டும் என்னும் இடனறிதல் பாடல்.

பொழிப்பு

நேர்நிற்றலுக்கு அஞ்சாததும் பகைவரின் வேல்கள் ஆழப்பதிந்த, முகத்தினையுடையதுமான யானை புதை சேற்றில் கால் உள்ளழுந்தச் சிக்குண்டால் நரியும் கூட அதைக் கொன்றுவிடும்.