இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0499



சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:499)

பொழிப்பு: அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது

மணக்குடவர் உரை: அரசன் பதியும் பெருமையும் இலராயினும் மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது.
இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: சிறை நலனும் சீரும் இலர் எனினும் - அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும், மாந்தர் உறை நிலத்தொடு ஒட்டல் அரிது - வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
('நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மக்கள் கோட்டைப் பாதுகாப்பும் பெருமையும் இல்லாதவராயிருந்தாலும் அவர்கள் நிலையாய்த் தங்குமிடத்தில் சென்று அவர்களைத் தாக்குதல் கடினம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர். உறைநிலத்தோடு ஒட்டல் அரிது


சிறைநலனும் சீரும் இலர்எனினும்:
பதவுரை: சிறை-அரண்; நலனும்-அழித்தற்கு அருமையும்; சீரும்-சிறப்புகளும்; இலர்-இல்லாதவர்; எனினும்-என்றாலும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் பதியும் பெருமையும் இலராயினும்;
பரிப்பெருமாள்: அரசன் பதியும் பெருமையும் இலராயினும்;
பரிதி: அரணும் படையும் இல்லாத இடமாகிலும்;
காலிங்கர்: மதில் சிறை முதலாகிய நால்வகை வாய்ப்பும், யானை முதலிய படைவாய்ப்பும் இலர் ஆயினும்;
பரிமேலழகர்: அரண் அழித்தற்கு அருமையும் பெருமையுமாகிய ஆற்றல் உடையர் அல்லராயினும்;

'அரணும் படையும் இல்லாத இடமாகிலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'அரசன் பதியும் பெருமையும் இலராயினும்' என உரைப் பிரதிபேதம் கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லரணும் சிறப்பும் இல்லை யெனினும்', 'நல்ல அரணும் மற்றைய சிறப்புகளும் இல்லை என்றாலும்', '(பாதுகாப்பான இட வசதி இல்லை என்பதற்காக இருக்கிற இடத்தையும் விட்டுவிடக்கூடாது) பாதுகாப்பு வசதியும் மற்றச் சிறப்புக்களும் இல்லாவிட்டாலும்', 'காவல் துறை வாய்ப்புகளும் படைப் பெருமையும் உடையர் அல்லராயினும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல அரணும் படைச் சிறப்பும் இல்லை என்றாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது:
பதவுரை: மாந்தர்-மக்கள்; உறை-தங்குகின்ற; நிலத்தோடு-நிலத்தின்கண்; ஒட்டல்-தாக்குதல்; அரிது-அருமையானது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது மாந்தர் உறைவிடத்தின்கண் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: மாந்தர் உறைநிலத்தின்கண் பொருந்துத லரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாந்தர் உறைவிடத்துச் செல்லுங்கால் அறிந்து செல்ல வேண்டுமென்றது.
பரிதி: விசாரவான் இருந்த இடம் கொள்ளப்படாது என்றவாறு. [விசாரவான் - இடம் முதலியவற்றை ஆராய்பவன்].
காலிங்கர்: மற்று அம்மன்னவர் முதலாக மறத்தொழிலாளர் முன் பயின்ற நிலத்துப் பகை வேந்தர்க்குச் சென்று கிட்டுதல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: வினைக்கு உரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின்கண் சென்று தாக்குதல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: 'நிலத்தொடு' என்பது வேற்றுமை மயக்கம். ஆண்மை உடையாரைச் சிறுமைநோக்கி இருப்பின்கண்சென்று தாக்கின், அவர் அது விட்டுப்போதல் துணிவினரன்றிச் சாதல் துணிவினராவர். ஆகவே, அவர்க்குப் பெரும்படை உடையும் என்பதாம்.

'மாந்தர் உறைகின்ற நிலத்தின்கண் பொருந்துதல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எதிரியை வாழுமிடத்தில் தாக்க இயலாது', ' பகை மறவர்களைத் தாக்குதற்கு அவர்கள் தங்கியிருக்கும் இடம் சென்றடைதல் இயலாது', 'மக்கள் அவரவர்களுடைய உறைவிடத்தை விட்டுவிடாமல் இருப்பது அருமையான காரியம்', 'வினைக்குரிய மாந்தரை அவர் உறைகின்ற நிலத்தின் கண்ணே சென்று தாக்குதல் அரிது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மாற்றாரைத் தாக்குதற்கு அவர் மக்கள் வாழும் இடம் சென்றடைதல் கடினம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல பாதுகாப்பும் படைச் சிறப்பும் இல்லாதவர் என்றாலும் மாற்றார் மக்கள் வாழும் இடம் சென்று பொருந்துதல் கடினம்.

நல்ல அரணும் படைச் சிறப்பும் இல்லை என்றாலும் மாற்றாரைத் தாக்குதற்கு அவர் மக்கள் வாழும் இடத்தோடு ஒட்டல் அரிது என்பது பாடலின் பொருள்.
'ஒட்டல் அரிது' என்றால் என்ன?

சிறைநலனும் என்ற சொல்லுக்கு காப்பு அரண் நன்கமைந்ததும் என்பது பொருள்.
சீரும் என்ற சொல் சிறப்பும் என்ற பொருள் தரும்.
இலர்எனினும் என்ற தொடர் இல்லாதவர் என்றாலும் எனப்பொருள்படும்.
மாந்தர் என்ற் சொல் மக்கள் குறித்தது. இங்கு பகை மக்களைக் குறிக்கும்.
உறைநிலத்தோடு என்ற தொடர்க்கு வாழ்கின்ற இடத்தோடு என்று பொருள்.

தற்காப்பு வாய்ப்புகளும் படைப் பெருமையும் இல்லாதவராயினும் மாற்றார் வாழும் இடத்தின் கண்ணே சென்று தாக்குதல் கடினம்.

ஒருவர் வாழும் இடமே அவர்க்கு நல்ல காப்பரணாக அமைந்து அவர்க்குப் போராடும் ஊக்கத்தையும் தரும்.
'தம்மைக் காத்துக் கொள்ளும் திறனும் இல்லை; மாற்றாரைத் தாக்கும் வலியும் இல்லை'. என்று தனது எதிரியைப் பற்றிய செய்திகள் கூறுகின்றன. எதிரி அப்படி ஆயத்தமற்ற நிலையில் இருக்கும்பொழுது அவரது இடத்தோடு நெருங்கிச் சென்றால் என்ன? என்று எண்ண வேண்டாம் என்கிறது இப்பாடல். ஏன்?. ஒருவரது உறைவிடம் சென்று தாக்குவதற்கு முன் நன்றாக சிந்திக்க வேண்டும். தம் வாழ்நிலத்தைக் காப்பதற்கு மக்கள் தீரமுடன் நிற்பர். மேற்கொண்டு வந்தவர்களிடமிருந்து தம் நிலத்தைக் காப்பதில் வேகமும் அவர்களைத் தங்கள் இடத்திலிருந்து விரட்டி அடிப்பதற்காகத் தாக்கும் ஆற்றலும் அவர்களுக்கு வீறுகொண்டு எழும். எனவே அவர்கள் வாழும் இடம் சென்று நெருங்குவது கடினமாகும். பகைவரை வேறு இடத்திற்கு வரவழைத்துப் போர் தொடுத்தால் வெல்லும் வாய்ப்புகள் உண்டு..

தம் இடத்தைக் காக்க உயிரைப் பொருட்படுத்தாது மக்கள் போராடுவராதலின், படை எடுத்து வந்தோர் ஊக்கம் உடையும். மேலும் உறைவிடம் என்றதால் அது அவர்களுக்குப் பழக்கப்பட்ட பொருந்திய இடமுமாகும், நாட்டுப் பற்றுக் காரணமாகத் துணிவுடன் போரிடுவராதலால் அவர்களை வெல்வது எளிமையான செயல் அன்று. வந்தவர் தோற்கவே செய்வர். எனவே மாற்றார் வாழும்இடத்தைத் தாக்கச் செல்வதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும்.

'ஒட்டல் அரிது' என்றால் என்ன?

ஒட்டல் என்ற சொல்லுக்குச் சென்று தாக்குதல் அல்லது சென்று கிட்டுதல் (நெருங்குதல்) என்பது பொருள். .
அரிது என்ற சொல் கடினம் என்ற பொருள் தரும்..
தேவ்நேயப் பாவாணர் ஒட்டல் என்பதற்குப் 'பொருந்துதல்' என்று பதவுரை கூறி, ;'இங்குப் பொருந்திப் பொருதல் ஆதலால் பரிமேலழகர் குறித்தவாறு வேற்றுமை மயக்கம் அன்றாம். அரிமாவும் வரிமாவும்போற் பொரும் ஆண்மை யுடையாரை தொகைச் சிறுமை நோக்கி யிகழ்ந்து அவரிருப்பிடஞ் சென்று தாக்கின் , அவர் மறமிகுதியானும் வேறிடமின்மையானும் உயிரைப் பொருட்படுத்தாது ஊன்றிப்பொருவர் . அதனாற் பெரும்படையும் அவர்க்கு உடையும் என்பதாம் "ஊக்கம் ஒன்பது ஆளை அடிக்கும்" என்பது இங்குக் கவனிக்கத்தக்கது' என உரை தந்தார்..

ஒட்டல் அரிது என்ற தொடர் நெருங்கித் தாக்குதல் கடினம் என்பதைக் குறிக்கும்.

நல்ல அரணும் படைச் சிறப்புகளும் இல்லை என்றாலும் மாற்றாரைத் தாக்குதற்கு அவர் மக்கள் வாழும் இடம் சென்றடைதல் கடினம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மக்கள் தாம் .வாழும் இடத்தை உயிர் கொடுத்தும் காப்பர் என்னும் இடனறிதல் பாடல்.

பொழிப்பு

நல்ல அரணும் சிறப்பும் இல்லை என்றாலும் எதிரியை அவர் மக்கள் வாழுமிடத்தில் தாக்குவது கடினம்