இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0498சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:498)

பொழிப்பு: சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்

மணக்குடவர் உரை: சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும்.
இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.

பரிமேலழகர் உரை: உறுபடையான் - பெரும்படையுடைய அரசன், சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், ஊக்கம் அழிந்து விடும் - அவனால் தன் பெருமை அழியும்.
('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும் என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: படைகுறைந்தவனுக்கு ஏற்ற இடம் சென்றால் படை நிறைந்தவன் உள்ளம் சோர்வடைவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்.


சிறுபடையான் செல்லிடம் சேரின்:
பதவுரை: சிறு-சின்ன; படையான்-படையுடையவன்; செல்லிடம்--செல்லும் இடம்; சேரின்-சேர்ந்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே;.
பரிப்பெருமாள்: சிறுபடை யுடையவனுக்கு இயலுமிடத்தே;
பரிதி: அற்பப்படை யுடையவனாகிலும் அவனுக்குக் கை சென்றவிடத்திலே;.
காலிங்கர்: உலகத்து ஒரு வேந்தன் சிறுபடையாவானாயினும் மற்று அவனது செலவு பயின்ற இடத்தைத் தான் மதியாது சென்று கிட்டுமாயின்;.
பரிமேலழகர்: ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின்,
பரிமேலழகர் குறிப்புரை: செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம்.'

'சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'அவன் புகலைச் சென்று சாருமாயின்' என்றார்

இன்றைய ஆசிரியர்கள் 'வெல்லுதற்குச் சிறு படையுடையவனின் புகலிடத்தைச் சென்று சேர்வானாயின்', ' (பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டால்) குறைந்த பரிவாரமுள்ளவனானாலும் ஒருவன் தகுந்த இடடததில் மட்டும் இருந்து கொண்டால்.', 'சிறிய சேனையையுடையவன் செல்லுதற்குரிய இடத்தில் பெரிய சேனையையுடையவன் சென்றால்', 'சிறு படையுடையானை வெல்ல நினைத்து அவனுக்குரிய இடத்தில் சென்றால் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே சென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும்:
பதவுரை: உறு-பெரிய; படையான்-படையுடையவன்; ஊக்கம்-மனஎழுச்சி; அழிந்துவிடும்-கெட்டுப் போகும்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரும்படையை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெடும்.
மணக்குடவர்: குறிப்புரை இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிப்பெருமாள்: பெரும்படை யுடையவன் பொருந்துவனாயின் மன மிகுதி கெட்டுவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இகழ்ந்து செல்லின், வெற்றியில்லையாமென்றது.
பரிதி: மிகுந்த படையுடையவன் சென்றாலும் கெடுவன் என்றபாறு.
காலிங்கர்: மற்றை மிகுபடையாட்சி வேந்தனானவன் தனது வலி அழிந்து கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: பெரும்படையுடைய அரசன், அவனால் தன் பெருமை அழியும்.
'பரிமேலழகர் குறிப்புரை: அழிந்துவிடும' என்பது 'எழுந்திருக்கும'¢ என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி, இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்குசென்று வினைசெயல் ஆகாமையானாகப் பயிற்சியின்மையானாக,அப்பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.

'பெரும்படையை யுடையவன் மிகுதி கெடும் என்றும் வலி அழிந்து கெட்டுவிடும் என்றும்/ தன் பெருமை அழியும் என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரும்படையுடைய அரசன் ஊக்கம் கெட்டு அழிவான்', 'மிகுந்த பரிவாரங்கள் உள்ளவன் அவனை வெல்ல நினைக்கும் முயற்சிகள் பலிக்கமாட்டா ', 'அவன் ஊக்கம் கெட்டொழியும். அவ்விடம் பெருஞ்சேனை தொழில் செய்வதற்குத் தக்க இயைபில்லாமல் இருப்பதனால்', 'பெரும் படையை உடைய அரசன் மன எழுச்சி கெட்டு பெருமை அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பெரும்படையை யுடையவன் மன எழுச்சி கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
படைவலி குறைந்தவனும் ஏற்ற இடத்திற்குச் சென்றால் பெரும்படையுடையவன் ஊக்கம் குறைந்து போவான்.

சிறுபடையை யுடையவன் செல்லிடம் சேரின், பெரும்படையை யுடையவன் மன எழுச்சி கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
'செல்லிடம் சேரின்' குறிப்பது என்ன?

சிறுபடையான் என்ற சொல்லுக்குச் சிறிய படையையுடையவன் என்பது பொருள்.
உறுபடையான் என்ற சொல்லுக்கு பெரிய படையையுடையவன் என்று பொருள்.
ஊக்கம் என்ற் சொல் மனமிகுதி எனப் பொருள்படும்.
அழிந்துவிடும் என்ற தொடர் கெட்டுவிடும் குறித்தது. /p> .

சிறிய படையையுடையவனுக்கு ஏற்ற இடததில் சென்றால் படை நிறைந்தவன் உள்ளம் சோர்வடைந்து வலி குறைந்து விடுவான்.

பகைப்படையின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொண்டு, அது இயங்கும் இடத்தின் தன்மை அறியாமல் பெரிய படையுடையவன் செல்வானேயானால் இடத்தின் வலி தெரிந்தபின் , அவனது போரிடும் மனஎழுச்சி குறைந்து விடும் அதாவது அவன் தோல்வியைத்தான் சந்திக்க நேரிடும். தன் படைப்பெருமை மட்டும் நோக்கி எதிராளியினது சிறுபடைதானே என இகழ்ச்சியாக எண்ணி விட வேண்டாம். அப்படை எந்த இடத்தில் உள்ளது என்றும் ஆராயப்படவேண்டும். இல்லாவிடில் சிறுபடையான் இடம் அறியும்போது அவனை வெல்லும் வழி தெரியாது தனது மனமிகுதியை இழந்து விடுவான்.
ஊக்கம்’ என்பதற்கு மனமிகுதி, வலி, பெருமை எனப் பொருள் கூறப்பட்டன. இவாற்றுள் மனமிகுதி என்ற பொருளே சிறக்கும்.

தேவநேயப் பாவாணர்: 'உடும்பு முயல் முதலியவற்றைத் துரத்திச் சென்ற நாய், அவை வளைக்குள் நுழைந்தபின் திரும்பி வருவது போன்றது' என இக்குறட்கருத்துக்கு எடுத்துக் காட்டுத் தருகிறார். இவர் '1841- ஆம் ஆண்டு நிகழ்ந்த முதலாம் ஆப்கானியப் போரில் , இந்தியப்படை முழுவதும் கைபர்க்கணவாயிற் சுட்டுக் கொல்லப்பட்டது இங்கு நினைக்கத்தக்கது' என மேலும் ஒரு நிகழ்ச்சியையும் சுட்டுவார்.
ஊக்கம் ஏன் அழியும் என்பதற்குச் 'சென்ற இடத்தில் பெருஞ்சேனை தொழில் செய்வதற்குத் தக்க இயைபில்லாமல் இருப்பதனால்' என்று ஓர் உரைவிளக்கம் சொல்கிறது. இன்னோர் உரை '.வந்த பெருஞ்சேனைக்குப் போதிய தொழிலின்மையால் வந்த சேனை ஊக்கம் இன்றிக் கெடும்' என்கிறது.

'செல்லிடம் சேரின்' குறிப்பது என்ன?

செல்லிடம் என்பதற்கு இயலுமிடம், செலவு பயின்ற இடம், புகலிடம் (தங்கியிருக்குமிடம்) ,பாதுகாப்பான இடம், (படைகுறைந்தவனுக்கு) ஏற்ற இடம், சிறிய படையுடையவன் இடம், தகுதியான இடம், செல்வாக்கு இருக்கும் இடம் எனப் பலவாறு உரையாளர்கள் பொருள் கூறினர். இவற்றுள் இயலுமிடம், ஏற்ற இடம் என்பன பொருத்தமாகும்.
சேரின் என்ற சொல் சேர்ந்தால் என்ற பொருள் தரும்.
யார் யாரிடம் சென்று சேர்கின்றனர்? சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும் என இடனறிதலை முதலில் சிறுபடையானுக்கு உரியதாக்கிப் பின்னர் அவ்விடத்தை உறுபடையான் சேரின் கெடும் என்று சில உரையாசிரியர்கள் விளக்கம் கூறினர். இக்கருத்தைவிட உறுபடையான் சிறுபடையான் செல்லிடம் சேரின் ஊக்கம் அழிந்துவிடும் அதாவது பெரும்படையான் ஊக்கம் அழியக் காரணம் சிறுபடையான் செல்லிடம் சேர்தலே என்ற பொருளில் அமைந்த உரை தெளிவாக உள்ளது.

சிறுபடையை யுடையவனுக்கு இயலுமிடத்தே சென்றால், பெரும்படையை யுடையவன் மன எழுச்சி கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

படை வன்மையைவிட வெல்வதற்கு இடனறிதல் வேண்டும்.

பொழிப்பு

சிறிய படையை யுடையவனுக்கு ஏற்ற இடம் சென்றால் பெரும்படையை யுடையவன் உள்ளம் சோர்வடைந்து விடும்.