இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0496கடலோடாக் கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:496)

பொழிப்பு: வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது

மணக்குடவர் உரை: கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது.
இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கால் வல் நெடுந்தேர் கடல் ஓடா - நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா, கடல் ஓடும் நாவாயும் நிலத்து ஓடா - இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா. ('கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது. 'மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.)

சி இலக்குவனார் உரை: நிலத்தின்கண் ஓடுகின்ற உருளைகள் வலியனவாகப் பெற்றிருக்கின்ற பெரிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா. கடலில் விரைந்து செல்லக்கூடிய கப்பல்களும் தரையில் செல்லமாட்டா. (அவரவர்க்குரிய இடத்தில்தான் அவரவர் வெல்ல முடியும்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
கால்வல் நெடுந்தேர் கடலோடா; கடல்ஓடும் நாவாயும் நிலத்து ஓடா .


கடலோடாக் கால்வல் நெடுந்தேர்:
பதவுரை: கடலின்கண்; ஓடா-ஓடமாட்டா; கால்-உருளை; வல்-வலிய; நெடும்-நீண்ட; தேர்-இரதம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது;
பரிப்பெருமாள்: கால் வலிய நெடுந்தேர் கடலின்கண் ஓடாது;
பரிதி: கடலோடும் மரக்கலம் நிலத்தில் ஓடாது; .
காலிங்கர்: நிலத்து ஓடுதற்கு உரியனவாகிய கால் உரமுடைய2 பெருந்தேரானவை தமக்கு நிலமல்லாத கடலுள் ஓடமாட்டா;
பரிமேலழகர்: நிலத்தின்கண் ஓடும் கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா,
பரிமேலழகர் குறிப்புரை: 'கடல் ஓடா' என்ற மறுதலை அடையான் 'நிலத்து ஓடும்' என்பது வருவிக்கப்பட்டது. 'கால்வல் நெடுந்தேர்' என்பது ஓடுதற்கு ஏற்ற காலும் பெருமையும் உடையவாயினும் என்பதுபட நின்றது.

'கால்வலிய நெடிய தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல பெரிய வண்டியும் கடலில் ஓடாது ', 'நிலத்தில் ஓடும் வலிய சக்கரத்தையுடைய தேர்கள் கடலில் ஓட மாட்டா', 'உறுதியான சக்கரங்கள் உள்ளனவானாலும் உயரமான தேர்கள் கடலில் ஓடமாட்டா', 'நிலத்தின்கண் ஓடும் நல்ல உருளைகளை யுடைய வலிய பெருந்தேர்கள் கடலின்கண் ஓடமாட்டா ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சக்கரங்களின் வலிமைகொண்ட தேர்கள் கடலில் ஓடாது என்பது இப்பகுதியின் பொருள்.

கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து:
பதவுரை: கடல்-கடல்; ஓடும்-ஓடும்; நாவாயும்-மரக்கலமும்; ஓடா-ஓடமாட்டா; நிலத்து-பூமியின் கண்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது
பரிப்பெருமாள்: கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது
பரிதி: நிலத்திலோடும் தேர் கடலில் ஓடாது; அதுபோல இடனறிய வேணும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அக்கடல் மீது ஓடும் கடுஞ் செலவு உடைய நாவாய்களும் தமக்கு இடமல்லாத தரைமீது ஓடவும் மாட்டா. எனவே அரசர் முதலான அனைவர்க்கும் தத்தம் இடமறிந்து இயற்றுதலே உறுதி உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: இனி அக்கடலின்கண் ஓடும் நாவாய்கள் தாமும் நிலத்தின் கண் ஓடமாட்டா.
பரிமேலழகர் குறிப்புரை: 'மேற்சென்றார் பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் மேலை அலங்காரம் ஆயிற்று.

'கடலின் கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடாது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் '.நீரோடும் கப்பலும் நிலத்தில் ஓடாது', '.கடலில் ஓடும் மரக்கலமும் (கப்பலும்) நிலத்தில் ஓடா ', '.கடலில் ஓடுகின்ற படகுக்ளும் நிலத்தில் ஓடமாட்டா ', 'கடலின்கண் ஓடும் மரக்கலம் நிலத்தின்கண் செல்லமாட்டா' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கடலில் செல்லும் மரக்கலமும் நிலத்தில் ஓடா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தேர் நிலத்தில்தான் இயங்கும்; மரக்கலம் கடலில்தான் இயங்கும். அததன் இடத்தில் அததற்கு வல்லமை உண்டு.

சக்கரங்களின் வலிமைகொண்ட தேர்கள் கடலில் செல்லாது; கடலில் செல்லும் மரக்கலமும் நிலத்தில் ஓடா என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

கடல் ஓடா என்ற தொடர் கடல்மேல் செல்லாது என்ற பொருள் தரும்.
கால்வல் என்றது கால் + வல் இணைந்த சொற்றொடர். வலிய சக்கரங்களையுடைய எனப் பொருள்படும். (தேர்க்குக் கால் போன்றிருத்தலாற் சக்கரம் கால் எனப்பட்டது (தேவநேயப் பாவாணர்)
நெடுந்தேர் என்ற சொல்லுக்குப் பெரிய அல்லது உயரமான தேர் என்பது பொருள். (தேர் என்பது ரதம், வண்டி முதலிய ஊர்திகளின் பொதுப்பெயர் என்பர்.)
கடல்ஓடும் என்ற தொடர்க்கு கடல் மேல் செல்லும் என்று பொருள்.
நாவாயும் என்ற சொல் தோணி அல்லது கப்பல் குறித்தது.
ஒடா நிலத்து என்ற தொடர் நிலத்தின் மேலே ஓடாது எனப் பொருள் தரும்.

வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் செல்லமாட்டா. கடலில் செல்லக்கூடிய கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா. ஆதலால் இடமறிந்து செயலாற்றுதல் வேண்டும்.

சக்கரங்களோடு கூடிய நல்ல பெரிய தேர்கள் நிலப்பரப்பில் நன்றாக ஓடும். ஆனால் அதே தேர்கள் வலிய சக்கரங்களைக் கொண்டிருந்தாலும் கடற்பரப்பில் ஒன்றும் செய்யமுடியாமல் முடங்கிவிடும். அதுபோலச் சக்கரங்களே இல்லாமல் ஆழ்கடலில் வெகுதொலைவு செல்லக்கூடிய தோணிகள் நிலத்தில் இயங்கவே முடியாது.
கடலில் மிதக்கக்கூடிய தன்மையோ கடலில் ஒடவைக்கக்கூடிய கருவிகளோ தேருக்கு இல்லை. அதுபோல கப்பல் கடலில் மிதக்கும் ஆற்றல் உடையது. ஆனால் தரையில் ஓடக்கூடிய கருவி கப்பலில் இல்லையாதலால் தரையில் அந்தக் கப்பலால் சிறிதளவும் அசைந்து இயங்க முடியாது.

எந்தச் செயலையும் அதற்கு ஏற்ற இடம் அறிந்து அதற்குண்டான கருவியின் உதவி கொண்டு வெற்றி காண வேண்டும். இடனறிதல் அதிகாரம் போர்த்தொழில் பற்றியது எனக் கொண்ட உரையாளர்கள் இப்பாடலுக்குப் போர் தொடர்பான விளக்கம் தந்தனர். அவர்கள் சில நாடுகளை வெல்ல வேண்டுமானால் கடல்வழி சென்றுதான் போரிட வேண்டும் என்றும் அதுவே பகைவர்களை வெல்லக்கூடிய வழியாகும். எனவும் சொன்னார்கள். வேறு சிலர் பெருங்கப்பலேயானாலும் அது ஆழ்கடலன்றி நிலத்தின்மேல் பயணிக்காது. அதேபோல எவ்வளவுதான் சிறந்த வீரர்களைசு சுமந்து செல்லுவதானாலும் பெரியதேர் கடல் மேலே செல்லாது என்றபடி பொருள் கூறினர்..நெடுந்தேரையும் நாவாயையும் தரைப்படையாகவும் கப்பற்படையாகவுங் கொண்டு அவற்றை உரிய இடத்திலேயே வெல்க எனக் குறிப்புத் தருவார் மு கோவிந்தசமி.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இப்பாடல் பிறிதுமொழிதல் அணியில் அமைந்துள்ளதால், உவமை மட்டுமே சொல்லப்பட்டது. உவமப் பொருள் என்ன?
நிலத்தில் ஓடும் தேர் கடலில் ஓடாது; கடலில் ஓடும் கப்பலும் நிலத்தில் ஓட முடியாது என்பது உவமை. எவ்விடத்தில் எக்கருவியைப் பயன்படுத்தவேண்டுமோ அவ்விடத்தில் அக்கருவியைப் பயன்படுத்த வேண்டும் என்பது உவமப் பொருள்.
'இஃது இடத்திற்காங் கருவி பண்ணவேண்டுமென்றது' என மணக்குடவர் கருத்துரை வழங்கினார். 'பகைவர் இடங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்ற கருவிகளான் வினை செய்க' என்பது தோன்ற நின்றது' என உரை பகன்றார் பரிமேலழகர். தேவநேயப் பா\வாணர் தமது உரையில் 'முதலை நிலத்தில் மெள்ள மெள்ளவேனும் இயங்கும் . மக்களும் விலங்கு பறவைகளும் நிலைக்கும் நீரில் மெள்ளமெள்ளவேனும் இயங்க முடியும் . ஆயின் , தேர் கடலிலும் கப்பல் நிலத்திலும் இயங்கவே இயங்கா . ஆதனால் , இக்குறளிலுள்ள பிறிதுமொழிதல் மேலையதினும் வேறுபட்டதாம்' எனக் கூறினார்..
இக்குறள் பண்டைக்கால அயல் நாட்டு வணிக முறையைக் குறிப்பிற் காட்டும் அதாவது பிற நாட்டிலிருந்து கப்பலில் வந்த பொருளை வண்டியில் உள்நாட்டிற்குக் கொண்டு செல்வதையும் வண்டியில் கொணர்ந்த உள்நாட்டுப் பொருள்களைக் கப்பலில் ஏற்றி வெளிநாட்டுக் கனுப்புவதையும் குறிக்கும் எனவும் சொல்வர். .

இக்குறளுக்கு இடம், கருவி கருதிச் செய்யவேண்டும் என்று பலர் பொருள் கண்டனர். அப்படிப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று என்று கூறி 'அதிகாரம் இடனறிதலேயன்றி இடத்தோடு கருவியறிதலன்று.; தேர்கடலோடா; நாவாய் நிலத்தோடா. அதுபோல வினை செய்வார் இடனறிந்து செய்க' என்பதே வள்ளுவர் உள்ளமாய் இடனறிதலையே வலியுறுத்தினதாதல் தெளிவு' என்கிறார் தண்டபாணி தேசிகர்.
நீரிலும் நிலத்திலும் ஓடுகின்ற Hover Craft என்ற ஊர்தியை இன்று நாம் காண்கிறோம். இதையும் இடனறிந்து பயன்படுத்திக் கொள்கிறோம்.
அவரவர்க்குரிய இடத்தில்தான் அவரவர் வெல்ல முடியும் என்ற கருத்து ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது. எனவே இடமறிந்து அதற்கேற்ற கருவிகளின் உதவிகொண்டு வெற்றி காணலாம் என்று இக்குறள் கூறுவதாகக் கொள்வதில் குற்றம் ஒன்றும் தோன்றவில்லை.

சக்கரங்களின் வலிமைகொண்ட தேர்கள் கடலில் ஓடாது; கடலில் இயங்கும் மரக்கலமும் நிலத்தில் செல்லாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தேர்க்கு இடம் நிலம்; நாவாய்க்கு இடம் கடல்; இவை இடம் மாறினால் இயங்கா. இவற்றின் இடனறிதல் வேண்டும்

பொழிப்பு

வலிய சக்கரத்தையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓட மாட்டா. கடலில் இயங்கும் கப்பலும் நிலத்தில் செல்லாது