இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0495நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:495)

பொழிப்பு: ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்

மணக்குடவர் உரை: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்; அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.

பரிமேலழகர் உரை: முதலை நெடும்புனலுள்(பிற) வெல்லும் - முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும், புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
(எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஆழமான நீர்நிலையில் பிற உயிரினங்களை முதலை வெல்லும். அந்நீர்நிலையினின்றும் நீங்குமாயின் அம்முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின். நீங்கின் அதனைப் பிற


நெடும்புனலுள் வெல்லும் முதலை:
பதவுரை: நெடும்-ஆழமுடைய; புனலுள்-நீருள்; வெல்லும்-வெல்லா நிற்கும்; முதலை-முதலை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்;
பரிப்பெருமாள்: நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்;
பரிதி: தனக்குப் பலமான நீரிலே முதலை வெல்லும்; .
காலிங்கர்: நெடிய ஆழமுடைய புனல் தனக்குச் சென்ற நிலம் ஆதலின், மற்று அவ்விடத்து யானை, புலி மனிதர் மற்றும் அனைத்துப் பகையும் வெல்லும் முதலையானது; .
பரிமேலழகர்: முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லாநிற்கும்;

'நெடிய நீரின்கண் பலவற்றையும் முதலை வெல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தண்ணீரில் முதலை எதனையும் வெல்லும்', '(தனக்குப் பலமான இடத்தை விட்டு விலகாமலிருந்தால் தோல்வி வராது என்பது எதைப்போல என்றால்) ஆழமான தண்ணீரில் இருக்கிற வரையிலும் முதலையானது மற்ற எந்தப் பிராணியையும் வென்றுவிடும்', 'முதலை ஆழமுடைய நீரில் பிற உயிர்களைக் கொன்று வெல்லும் ', ' ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெடிய ஆழமுடைய நீரின்கண் முதலை எதனையும் வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற:
பதவுரை: அடும்-தோற்கடிக்கும்; புனலின்-நீரின்றும்; நீங்கின்; அகன்றால்; அதனை-அதை; பிற-மற்றவை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.
பரிப்பெருமாள்: அஃது அந்நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேலதற்குக் காரணங் கூறிற்று. இவை யைந்தும் இடமறியவேண்டு மென்பது கூறின.
பரிதி: அல்லாத நிலத்திலே முதலை தோற்பதுபோலத் தனக்கு வெற்றியான இடம் அறிந்துகொள்க என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுதான் பயின்ற நிலம் அல்லாத கரைமீது படின், எறும்பும் அதனை அடும். ஆகலான், அரசர் முதலான அனைவர்க்கும் இடம் அறிதல் பெரிதுமன் என்றவாறு.
பரிமேலழகர்: அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, 'எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கலாற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்..

'அந் நீரினின்று நீங்குமாயின் அதனைப் பிறவெல்லாம் வெல்லும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ';தரையில் முதலையை எதுவும் வெல்லும்', '.ஆனால் தண்ணீரை விட்டு வெளியே வந்து விட்டால் அந்த முதலையை மற்ற எந்தப் பிராணியும் வென்றுவிடும்', 'அந்த நீரைவிட்டு அது வெளிவருமாயின் அதனை மற்ற உயிர்கள் கொல்லும் வலிமையுடையன ', 'அந்த நீரைவிட்டு அது வெளிவருமாயின் அதனை மற்ற உயிர்கள் கொல்லும் வலிமையுடையன ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அந்த நீரைவிட்டு அது நீங்கினால் அதனை மற்றவை எதுவும் வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீருக்குள் உள்ளவரைதான் முதலைக்கு பலம் இருக்கும். அது நீர்நிலையை விட்டுப் பெயர்ந்தால் சிறு விலங்கிடம்கூடத் தோல்வியடையும்.

நெடும்புனலுள் முதலை எதனையும் வெல்லும் அந்த நீரைவிட்டு அது நீங்கினால் அதனை மற்றவை எதுவும் வெல்லும் என்பது பாடலின் பொருள்.
இப்பாடல் தரும் செய்தி என்ன?

நெடும்புனலுள் என்ற தொடர் ஆழமுடைய நீருள் என்ற பொருள் தருவது.
வெல்லும் என்ற சொல்லுக்கு வென்றுவிடும் என்பது பொருள்.
முதலை என்ற சொல் முதலை என்ற விலங்கைக் குறிக்கும்.
அடும் என்ற சொல் வெல்லும் என்ற பொருளது.
புனலின் என்ற சொல் நீரினின்றி என்ற பொருள் தரும்
நீங்கின் என்ற சொல்லுக்கு அகன்றால் என்று பொருள்.
அதனைப் பிற என்ற தொடர் 'அதை மற்ற' எனப் பொருள்படும்.

ஆழமான நீருள் இருந்தால் முதலை அதனினும் வலிய உயிர்களையும் வெல்லும். ஆனால் அந்நீர்நிலையினின்று அகன்றால் அதனினும் எளிய உயிர்களும் அதனை வென்றுவிடும்.

'நெடிய ஆழமுடைய புனல் தனக்குச் சென்ற நிலம் ஆதலின், மற்று அவ்விடத்து யானை, புலி மனிதர் மற்றும் அனைத்துப் பகையும் வெல்லும் முதலையானது. மற்று அதுதான் பயின்ற நிலம் அல்லாத கரைமீது படின், எறும்பும் அதனை அடும். ஆகலான், அரசர் முதலான அனைவர்க்கும் இடம் அறிதல் பெரிதுமன்' என்ற காலிங்கர்: உரை இக்குறட்கருத்தை நன்கு விளக்குகிறது.
அவரவர் இடத்தில் அவரவர்க்கு வலியுண்டு: முதலை நிலத்திற் செல்லக் காலையும் நீரில் நீந்திச்செல்ல துடுப்புப் போன்ற வாலும் உடையது.. ஆயினும் முதலைக்குரிய இடம் நீர்தான். நீருள் இருந்தால் அதற்கு வலிய விலங்குகளையும் தன்பால் இழுத்துக்கொண்டு போகும் ஆற்றல் உண்டு. அதே முதலை நீர்நிலையைவிட்டுப் பெயரின் அதனை எளிய விலங்குகளும் துன்புறுத்தும்' நிலத்திலும் நடக்கக்கூடியதாகையால் நீர் நிலைக்கு வெளியிலும் முதலைக்கு ஓரளவு வலிமை உண்டு என்றாலும் அதனுடைய பகைகளுக்குத் தப்பித்துகொள்ளும் வாய்ப்புகளும், வழிகளும் பலவுண்டு. முதலைக்குத் தன்னிடத்தில் இருக்கும்போது பெரும் வலிமையும் வேறிடத்திற்குச் சென்றால் அது இல்லாமையும் காணப்படுகின்றன. நீரில் சிங்கம் போன்றவை அவ்வளவு எளிதாக இயங்க முடியாதாதலால் அது முதலைக்குச் சாதகமாகி விடுகிறது. மாறாக நிலத்தில் முதலை அவ்வளவு எளிதாக இயங்க முடியாதாதலால் அதனை இழிந்த விலங்குகளும் வெல்லக்கூடும். .

நெடும்புனல் என்ற தொடர் வள்ளுவர் புதிதாகப் படைத்தது என்பார் செ வை சண்முகம். நெடும்புனல் என்பதற்கு ஆழமான நீர் என்று அனைவரும் பொருள் கூற காலிங்கர் நெடிய ஆழமுடைய புனல் என்று அகலத்தையும் சேர்த்துப் பொருள் கூறுகிறார். ஆழத்துடன் அகலமும் இருந்தால் முதலைக்கு வெல்லுதல் இன்னும் எளிதாகிறது.
மு கோவிந்தசாமி 'முதலை நெடும்புனலுள் வெல்லும்; அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற வெல்லும்' எனக் கூட்டி உரைப்பார். 'அடும்புனல்' என்பது -பிற உயிர்களைக் கொல்லத் தக்கதாக அகன்றதும் ஆழமானதுமான நீர் நிலை என்பது பொருள். பரிமேலழகர் 'நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் முதலை வெல்லும்;, அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லும்.' என்று உரை பகன்றார். .இவ்வுரையில் 'பிறவற்றை' என்பது யானை, புலி, கரடி போன்ற வலிய விலங்குகளையும் 'பிற' என்னும்போது இழிந்த விலங்குகளையும் சுட்டும் என்ற நயம் சுட்டுவார் தண்டபாணி தேசிகர்

இப்பாடல் தரும் செய்தி என்ன?

முதலை நீரில் வலியுள்ளது. அதனை நீங்கின் பிற அதனை வெல்லும் என்பது உவமை. உவமை சொல்லப்பட்டது. ஆனால் உவமப் பொருள் சொல்லப்படவில்லை. எனவே இக்குறள் பிறிது மொழிதல் அணியில் அமைந்துள்ளது. இப்பாடலின் உவமப் பொருள் என்ன?
எல்லாரும் தம்நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றது என்பது பரிமேலழகரின் விளக்கம்.
"தன்னூர்க்கு யானை. ,அயலூர்க்குப் பூனை" , என்பது இங்குக் கவனிக்கத்தக்கது . பகைவர்க்கு ஊற்றமில்லாத இடஞ்சென்று பொருக என்பது தேவநேயப் பாவாணர் கருத்து . .
அவரவர்கள் உரிய இடத்தில் வலிமை உடையவர்கள் என்ற கருத்து உருவகமாகக் கூறப்பட்டுள்ளது என்றே உரையாளர்கள் அனைவரும் கூறினர்.
இக்குறபாவுக்கு சி இலக்குவனார்: 'தமக்குரிய இடத்திலிருந்து நீங்குதல் வெற்றியைத் தராது' எனக் கருத்துரைத்தார். இக்கருத்துக்குத் தண்டபாணி தேசிகர் கூறும் மறுப்பும் நோக்கத்தக்கது. அது: 'இக்கருத்து படையெடுத்துப் போதல் கூடாது; எடுத்து வந்தவரை வெல்லலாம் என்ற நோக்குடையதாதலின் முற்றும் பொருந்துவதாக இல்லை. தமக்குத் தகுந்த அல்லது ஏற்ற என்றிருக்குமாயின் அரணுள் இருப்பார்க்கும், வருவார்க்கும் இயைபுடையதாம். 'வருவாரும்; நெடும்புனலையே நாடிவரும் முதலையைப் போலத் தமக்கு வெற்றி தரும் இடனையே தேர்ந்து நேர்வராயின்' வெற்றி கிட்டும் எனின் மிக ஏற்புடையதாகும்'.

பாதுகாப்பையும் பழகிய நிலத்தையும் நோக்கி வெற்றியிருப்பதால் இடனறிதல் இன்றியமையாதது என்பது இக்குறள் கூறும் செய்தியாகும்-

நெடிய ஆழமுடைய நீரின்கண் முதலை எதனையும் வெல்லும் அந்த நீரைவிட்டு அது நீங்கினால் அதனை மற்றவை எதுவும் வெல்லும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இருக்கும் இடமிருந்தால் எல்லாம் நலமே என்னும் இடனறிதல் பாட்ல.

பொழிப்பு

ஆழமான நீர்நிலையில் முதலை எதனையும் வெல்லும்; அந்நீர்நிலையினின்றும் நீங்குமாயின் அம்முதலையை எதுவும் வெல்லும்