இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0494



எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:494)

பொழிப்பு: தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்

மணக்குடவர் உரை: தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்; வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின்.
இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இடன் அறிந்து துன்னியார் - தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், துன்னிச் செயின் - அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், எண்ணியார் எண்ணம் இழப்பர் - அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.
(அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: இடம் பார்த்துப் பிடியை விடாது செய்யின் பகைவர் தம் சூழ்ச்சியைக் கைவிடுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் எண்ணியார் எண்ணம் இழப்பர் .


எண்ணியார் எண்ணம் இழப்பர்:
பதவுரை: எண்ணியார்-நினைத்தவர்; எண்ணம்-நினைப்பு, திட்டம்; இழப்பர்-நீங்கப் பெறுவர்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்;
பரிப்பெருமாள்: தன்னைக் கெடுத்தற்கு எண்ணினவர்கள் தங்களெண்ணம் இழப்பார்கள்;
பரிதி: எண்ணிய எண்ணம் இழப்பர்
காலிங்கர்: போர் வினை செய்தற்கு எண்ணி வந்த பகைவரானவர் எண்ணமும் பழுதுபடுவர்1 எவ்விடத்து எனின், .
பரிமேலழகர்: அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.

''தம்மைக் கெடுத்தற் கெண்ணினவர் தங்களெண்ணம் இழப்பர்'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெல்லும் நினைப்புக் கொண்ட பகைவர்கள் தம் கருத்திழப்பர் ', 'அக்காரியத்தைக் கெடுக்க எண்ணியவர்களுடைய எண்ணம் பலிக்காது', 'அவரை வெல்லக் கருதிய பகைவர் தம் எண்ணம் முற்றுப்பெறார் ', 'அவரை வெல்வதாக எண்ணியிருந்த பகைவர் அவர் எண்ணத்தினை இழப்பர் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர் வெல்லும் எண்ணத்தைக் கைவிடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின்:
பதவுரை: ; இடம்;இடம்; அறிந்து-தெரிந்து; துன்னியார்-பொருந்திச் சென்ற அரசர்; துன்னி-பொருந்தி நின்று; செயின்-செய்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: வினைசெய்யும் இடமறிந்து நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடமறிந்து செய்வோர் அமைதியும் வேண்டுமென்றது; இனி அமாத்தியர் இலக்கணம் கூறுகின்றார். ஆகலின் இது பின் கூறப்பட்டது.
பரிதி: மாற்றார் இடம் அறிந்து காரியம் கொள்ள வல்லாராயின் என்றவாறு.
காலிங்கர்: நமக்கு இடமாவது இது என்று எண்ணிக்கொண்டு வினை செய்வாராயின்; மற்று அப்பகைவர்க்கு எண்ணமே உள்ளது; இவர்க்கு எண்ணமும் இடமும் இரண்டும் உண்டு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இடன் அறிந்து துன்னியர் என்பது இது நமக்கு இடம் என்று அறிந்து பொருந்தி வாழ்வர் என்றது; துன்னி என்பது மற்று அவ்விடத்துக் கூடிநின்றது என்றது.
பரிமேலழகர்: தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர் அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின்,
பரிமேலழகர் குற்ப்புரை: 'அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது

'இடமறிந்து பொருந்திச் செய்வாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.< மணக்குடவர் 'நட்டோரானவர் மனம் பொருந்திச் செய்வாராயின்' எனக் கூறினார். இக்கூற்று இவ்வதிகார்த்துக்கு இயைபில்லை. காலிங்கர் 'பகைவர்க்கு எண்ணமே உள்ளது; இவர்க்கு எண்ணமும் இடமும் இரண்டும் உண்டு' என்று தெளிவுபடக் கூறுகிறார் .

இன்றைய ஆசிரியர்கள் 'வினை செய்தற்கேற்ர இடமறிந்து அதனைப் பற்றிக் கொண்டவர்கள் மனம் பொருந்தப் போர் செய்யின் ', 'தக்க இடததை ஆராய்ந்தறிந்து அதைச் சேர்ந்து அந்த இடத்தை விட்டுப் பெயர்ந்து விடாமல் அங்கிருந்தே காரியத்தைச் செய்தால் ', 'போர் செய்வதற்கு ஏற்ர இடத்தை அறிந்து அவ் இடத்தைப் பற்றிக் கொண்டவர்கள் அதனை விட்டுவிடாது வெற்றிபெற முயன்றால் ', 'தாம் வினை செய்வதற்குரிய இடத்தினையறிந்து சென்ற அரசர் அரணப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின் ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இடமறிந்து அதைப் பற்றிக்கொண்டு பிடியை விட்டுவிடாது முயன்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஏற்ற இடம் அறிந்து அதனைப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாகச் செயலாற்றினால் அழிவு செய்ய எண்ணி வந்த எதிராளியும் தன் எண்ணம் இழந்து போவார்.

இடமறிந்து அதைப் பற்றிக்கொண்டு பிடியை விட்டுவிடாது முயன்றால், மாற்றார் வெல்லும் எண்ணத்தைக் கைவிடுவர் என்பது பாடலின் பொருள்.
'துன்னியார்' யார்?

எண்ணியார் என்ற சொல் நினைத்தவர் எனப் பொருள்படும்.
எண்ணம் இழப்பர் என்ற தொடர்க்கு நினைப்பைக் கைவிடுவர் என்பது பொருள்.
இடனறிந்து என்ற தொடர் செயலாற்றும் இடம் தெரிந்து என்ற பொருள் தரும்.
துன்னிச் செயின் என்ற தொடர்க்கு பொருந்தச் செய்தல் என்று பொருள்.

செயல் ஆற்றுதற்கு ஏற்ர இடத்தை அறிந்து அவ்விடத்தைப் பற்றிக் கொண்டவர்கள் அதனை விட்டுவிடாது முயன்றால் அவரை முறியடிக்க கருதிய பகைவரது எண்ணம் முற்றுப்பெறாது.

இக்குறள் செயலாற்றுதற்கேற்ற இடம் கண்டறிந்து துன்னிச் செய்தால் அதாவது அங்கேயே பொருந்தி நின்று விடாப்பிடியாக செயல் ஆற்றினால் வெற்றி கிட்டும் என்பதைச் சொல்கிறது. 'துன்னிச் செய்தல்' என்ற தொடர்க்குத் தாம் வெற்றிபெறுமளவும் தம் இடத்தை விட்டு அகலாது நின்று செயல்புரிதல் எனப் பொருள் கொள்வர். .அப்படிச் செயல் ஆற்றினால் எண்ணியார் எண்ணம் இழப்பர் என்கிறது பாடல். இக்குறள் விடாமுயற்சியுடையாரை துன்னியார் என்றும் வெல்ல நினைத்து வந்தாரை எண்ணியார என்றும் கூறுகிறது. இடனறிந்து விடாச் செயல் புரிபவரை அழிக்க எண்ணிய மாற்றார் எண்ணியார் எனப்பட்டார் ஆனால் அம்மாற்றார் எண்ணம் ஈடேறாது ஒழியுமாதலால் அவர் தம் எண்ணத்தைக் கைவிட்டுப் பின்வாங்கிச் செல்வர்/ . துன்னியார் தக்க இடம் அறிந்து அங்கே நிலைத்து, அதனை விடாது காத்துக் கொண்டால் வெற்றி பெறுவர் என்பது கருத்து. .
காலிங்கர் ''பகைவர்க்கு வெற்றி காண வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் உள்ளது. ஆனால் இடம் அறிந்தவ்ர்க்கோ எண்ணமும் இடமும் இரண்டும் உள்ளது' என்று தெளிவுபட உரைக்கிறார்.

'துன்னியார்' யார்?

துன்னியார் என்ற் சொல் பொருந்தி நின்றவர் எனப் பொருள்படும்.
துன்னியார்’ என்பதற்கு, நட்டோர் எனப் பொருள் கூறுவார் மணக்குடவர். இவர் உரையின்படி நட்புடையாருடன் பொருந்திச் செயல் ஆற்றுபவர் எனக் கொள்ள்வேண்டும். அதற்குத் துணையாக வந்தவர்கள், அவ்விடத்துத் தம்மை ஊன்றிக் கொண்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
பரிமேலழகர் துன்னியார் என்பதற்குப் போர் செய்யச் சென்ற அரசர் என்றார். ஏனையோர் தம்நாட்டின் அரணகத்து இருந்த அரசர் என்றனர்.. வந்தவர் வெல்லக் கருதி வந்தவர். இருந்தனர் தம்மையும் தம் நாட்டையும் காக்குங் கருத்தோடு இருந்தவர். ஆகையால் இடனறிதல் முதலியன இரு சாரார்க்கும் இன்றியமையாதனவேயாதலின் இரு சாரார்க்கும் இயையப் பொருள் காணலே ஏற்புடைத்தெனத் துணியலாம். என்பது தண்டபாணி தேசிகர் கருத்துரை..

இடமறிந்து அதைப் பற்றிக்கொண்டு பிடியை விட்டுவிடாது முயன்றால், மாற்றார் வெல்லும் எண்ணத்தைக் கைவிடுவார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இடனறிதலும் விடாப்பிடியும் பகைவரைப் பின்வாங்கச் செய்யும்.

பொழிப்பு

இடமறிந்து அதனைப் பற்றிக் கொண்டு விடாது செய்யின் எதிராளிகள் தம் சூழ்ச்சியைக் கைவிடுவர்.