இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0491தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது

(அதிகாரம்:இடனறிதல் குறள் எண்:491)

பொழிப்பு: முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.

மணக்குடவர் உரை: முடியுமிடங் கண்டாலல்லது யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக.
இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று

பரிமேலழகர் உரை: முற்றும் இடம் கண்ட பின்அல்லது - பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது, எவ்வினையும் தொடங்கற்க - அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, எள்ளற்க - அவரைச் சிறியர் என்று இகழாதொழிக.
(முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.)

தமிழண்ணல் உரை: முழுவதும் வெற்றியாக முடித்தற்குத் தக்க இடங்கண்ட பிறகல்லாது முன்னதாக எச்செயலையும் தொடங்காதீர்! அவ்வாறல்லாமல் தொடங்கினால் என்ன ஆகிவிடும் என்று இகழாதீர்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
முற்றும் இடம்கண்ட பின்அல்லது எவ்வினையும் தொடங்கற்க; எள்ளற்க .


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க:
பதவுரை: தொடங்கற்க-துவங்காதொழிக; எவ்வினையும்எந்தச் செயலும்; எள்ளற்க-இகழாதொழிக. .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக;
பரிப்பெருமாள்: யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்று இகழ்வதும் செய்யாது ஒழிக;
பரிதி: யாதொரு காரியமும் எடுத்துக் கொள்ளக் கடவானல்லன்;
காலிங்கர்: போர்த்தொழில் முதலாய எல்லாத் தொழிலும் யாதானும் ஒன்று தொடங்குவது செய்யற்க; மற்று இது நமக்கு எளிது எனக் கொண்டு யாவையும் இகழ்வது செய்யற்க;
பரிமேலழகர்: அவர்மாட்டு யாதொரு வினையையும் தொடங்காதொழிக, அவரைச் சிறியர் என்று இகழாதொழிக.

'யாதொரு வினையுந் தொடங்கா தொழிக; எளிதென்றிகழாதொழிக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.< பரிமேலழகர் பகைவரை இகழாடொழிக என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எச்செயலையும் தொடங்காதே. புறக்கணியாதே', 'எச்செயலும் தொடங்கக் கூடாது. இதனை இகழக்கூடாது', 'எந்தக் காரியத்தையும் தொடங்கிவிடக்கூடாது. இந்த விஷயத்தை எவரும் அலட்சியம் செய்துவிட வேண்டாம்.', 'யாதொரு வினையும் தொடங்காது ஒழிக. எளியது என்று இகழாது ஒழிக. ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எச்செயலையும் தொடங்க வேண்டாம்; எளியது என்று இகழவும் கூடாது என்பது இப்பகுதியின் பொருள்.

முற்றும் இடம்கண்ட பின்அல் லது:
பதவுரை: முற்றும்-முற்றுமிடமாகும், முற்றுகையிடுதற்காகும்; இடம்-இடம்; கண்ட-பெற்ற; பின்--பிறகு; அல்லது-அல்லாமல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முடியுமிடங் கண்டாலல்லது.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இடமறிதல் வேண்டுமென்பது கூறிற்று
பரிப்பெருமாள்: முடியுமிடங் கண்டாலல்லது
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இடனறிதல் வேண்டுமென்பதூஉம் பகைவர் இடம் சிறுது என்று இகழலாகாது என்பதூஉம் கூறிற்று.
பரிதி: யாதொரு காரியமும் எடுத்துக் கொள்ளக் கடவானல்லன்; எடுத்துக் கொண்டால் காரியம் நிறைவேறு மட்டும் சோர்விடக் கடவானல்லன்.
காலிங்கர்: உலகத்து மன்னர் முதலாக மாந்தர் யாவரும் அவையிற்றுக்கு இயைந்த இடம் கண்டபின் அல்லது மற்று அதனால் எவ்வினையும் இடம் குறிக்கொண்டே இயற்றுக என்றவாறு.
பரிமேலழகர்: பகைவரை முற்றுதற்கு ஆவதோர் இடம் பெற்றபின் அல்லது,
பரிமேலழகர் கருத்துரை: முற்றுதல்: வளைத்தல். அதற்கு ஆம் இடமாவது: வாயில்களானும் நூழைகளானும் அவர் புகலொடு போக்கு ஒழியும் வகை அரணினைச் சூழ்ந்து. ஒன்றற்கு ஒன்று துணையாய்த் தம்முள் நலிவில்லாத பலபடை இருப்பிற்கும், மதிலும் அகழும் முதலிய அரண் செய்யப்பட்ட அரசிருப்பிற்கும் ஏற்ற, நிலக்கிடக்கையும் நீரும் உடையது. அது பெற்றால் இரண்டும் செய்க என்பதாம்.

'முடியும் கண்டால் அல்லது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முழுதும் வாய்ப்பான இடம் பெறும்வரை', 'முடிக்கத் தகுந்த இடம் அறிந்தபின் அல்லாமல்', 'தகுந்த இடத்தை அறிந்து கொள்ளாமல் முடிப்பதற்குப் பொருத்தமான இடத்தைப் பெற்றபின் அல்லது'' ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

முடிக்கத் தகுந்த இடம் பெறும்வரை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயல் நிறைவேற்றுதற்குரிய இடம் கிடைக்கும்வரை அதைத் தொடங்க வேண்டாம்; அவ்விடம் பற்றி இகழவும் கூடாது.

முடிக்கத் தகுந்த இடம் பெறும்வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்; எளியது என்று இகழவும் கூடாது என்பது பாடலின் பொருள்.
'எள்ளற்க' குறித்தது என்ன?

தொடங்கற்க என்ற சொல்லுக்குத் தொடங்காதீர் என்பது பொருள்.
எவ்வினையும் என்ற சொல் எச்செயலையும் என்ற பொருள் தரும்.
முற்றும்இடம் என்ற தொடர்க்கு முடியக்கூடிய இடம், முற்றுகைக்கான இடம், இயைந்த இடம் எனப் பொருள் கூறுவர். முடியக்கூடிய இடம் என்பது பொருத்தம்.
கண்டபின் அல்லது என்றது அறிந்தபின் அல்லாமல் குறித்தது.

செயல் நிறைவேற்றுதற்குரிய இடம் கிடைக்கும்வரை அதைத் தொடங்க வேண்டாம்; அவ்விடம் பற்றி இகழவும் கூடாது.

மேற்கொண்ட பணியை எந்த இடத்தில் செய்தால் அதைச் சிறப்பாக முற்ற முடிக்க முடியும் என்பதையறிந்து அதற்கேற்ற இடத்தைத் தேர்வு செய்ய்யவேண்டும். ஒரு செயல் புரிவதற்கு முன் வலி, காலம் இவற்றை அறிந்தபின் இடம் அமையவில்லையானால் பணி தொடங்கக்கூடாது. தேர்வு செய்ய ஒன்றுக்கு மேல் உள்ளன. அவற்றுள் எது வெற்றி தருவதற்கு வாய்ப்புகள் மிகை என்று ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட இடம் காணுவதற்கு முன்னர் செயலைத் தொடங்கக்கூடாது என்று அறிவுறுத்துகிறது இக்குறள். 'கண்டபின் அல்லது; என்று திடமாகக் கூற்ப்படுவது நோக்கத்தக்கது. அவ்விடத்தைப் பற்றி இகழ்ந்து பேசுதலும் கூடாது எனவும் சொல்கிறது பாடல்.

இப்பாடலிலுள்ள முற்றும்இடம் என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. .முற்றுமிடம் என்பது நிறைவேறுதற்குரிய இடம் அதாவது வெற்றி தரக்கூடிய இடம் என்றும் முற்றுகைக்கான இடம் என்றும் முழுவதும் வெற்றியாக முடித்தற்குத் தக்க இடம்,, முழுதும் வாய்ப்பான இடம், பொருத்தமான இடம் என விளக்கப்பட்டது. இடம்முற்றும் எனக்கூட்டி இடத்தை முழுமையும் தெரிந்துகொள்ளும்வரை எனவும் பொருள் கொள்ளப்பட்டது.. இவற்றுள் முற்றுமிடம் என்பதற்கு நிறைவேறுதற்குரிய இடம் என்ற பொருளே சிறக்கும்.
பழம் உரையாசிரியர்கள் இப்பாடல் முற்றுகை யிட இயைந்த இடம் என்று போர்த் தொழில் குறித்தே பேசினர். ஆனால் இப்பாடல் போர் மேற் செல்லுதல் மட்டுமனறி எல்லா வகையான செயல்களுக்கும் இடம் அறிதல் இன்றியமையாதது என்றே கொள்ளுதல் வேண்டும். அதாவது அரசுக்கும் மக்களுக்கும் இடனறிதல் வேண்டும் எனக் கோடல் வேண்டும்.

'எள்ளற்க' குறித்தது என்ன?

எள்ளுதல் என்பதற்கு இகழுதல் என்று பொருள் கொள்வர்.
எள்ளுதல் தவறென்று உணர்த்தும் பாடல் இது. இடம், வினை, பகைவர் இவற்றில் எதை எள்ளுதல் தவறு என்கிறது குறள்?.
இடம் சிறிது என்று எள்ளற்க' எனப் பரிப்பெருமாள் தனது விரிவுரையில் கூறினார்..வ சுப மாணிக்கம் இடம் பற்றியதைப் புறக்கணிகாதெ என்கிறார். நாமக்கல் இராமலிங்கம் இடனறிதலை அலட்சியம் செய்யாதே என்று உரை பகர்ந்தார். தமிழண்ணல் 'தக்க இடங்காணாமல் தொடங்கினால் என்ன ஆகிவிடும் என்று இகழாதீர்! எனப் பொருள் தந்தார்.
நாம் ஈடுபடும் செயல் பெரிதல்ல, என்று அலட்சியமாக செயல்படக்கூடாது என்று வீனையை எள்ள வேண்டாம் என்றனர் சிலர்..
பகைவரை எள்ளற்க என்றபடி பரிமெலழகர் முதலானோர் உரை காண்பர்..
'முற்றும் இடம் காணாமல் எவ்வினையும் தொடங்கற்க; எவ்வினையும் எள்ளற்க எனக் கூட்டித் 'தொடங்கற்க' என்றது தாமே படை எடுத்துப் போவார்க்கும் 'எள்ளற்க' என்பது தம்மேற் படை எடுத்து வருவார்மேல் தாம் சேறற்கும் கூறியனவாகக் கொள்ளுதலே சிறப்பாம்' என விளக்குவார் தண்டபாணி தேசிகர்
தொடங்கற்க’ என ஆற்றல் தோன்றக் கூறப்பட்டுள்ளதால் இகழ்வது செயல்பற்றி இருக்கமுடியாது. ‘அதிகாரத் தலைப்பு நோக்கி, 'இடம்அறிதல் அவ்வளவு தேவையா?'' என்றோ அல்லது ''இந்த இடம்தானே எளிதாக வென்றுவிடலாம்' என்றோ இடம்;பற்றி இகழவேண்டாம் எனக் கொள்வது பொருத்தமாகும்.

முடிக்கத் தகுந்த இடம் பெறும்வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்; எளியது என்று இகழவும் கூடாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செயல் முடிக்கும் இடம் பற்றி எள்ளல் வேண்டாம என்னும் இடனறிதல் பாடல்.

பொழிப்பு

முடிக்க வாய்ப்பான இடம் அறியும்வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்; இகழவும் கூடாது.