இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0488



செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:488)

பொழிப்பு: பகைவரைக் கண்டால் பொறுத்துச்¢ செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது நிலைமை தலைகீழாகும்

மணக்குடவர் உரை: பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

பரிமேலழகர் உரை: செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக, இறுவரை காணின் தலை கிழக்கு ஆம் - பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர்.
('பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பகைவரைக் காணும்போது பணிக; காலம் வந்தபோது அவர் கவிழ்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை.காணின் தலை கிழக்காம்


செறுநரைக் காணின் சுமக்க:
பதவுரை: செறுநரைக்-பகைவரைக்; காணின்-கண்டால்; சுமக்க-தாங்க, (பணிக).

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க;
பரிப்பெருமாள்: பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; .
பரிதி: சத்துருக்கள் காலமானால் அவர்களைச் சுமந்து கொள்க; [காலமானால்'=வாய்ப்பான காலமாயின்]
காலிங்கர்: பகைவரைக் கண்ட பொழுது இறுவரைக் காணாக்கால் சுமக்க;
காலிங்கர் குறிப்புரை: சுமக்க என்பது பொறுத்தல்.
பரிமேலழகர்: தாம் வெல்லக்கருதிய அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும் அவரைக் கண்டால் பணிக,

'பகைவரைக் கண்டால் சுமக்க'' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்க்கு இறுதிக்காலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக', 'பகைவர்களைக் கண்டாலும் பொறுக்க வேண்டும்', 'பகைவரைக் கண்டால் அவர்க்கு முடிவு காலம் வரும்வரை பணிதல் வேண்டும்', 'தாம் வெல்லக் கருதிய பகைவரைக் கண்டால் ப்ணிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காலம் வாய்க்காதபோது பகைவரைக் கண்டால் பணிக என்பது இப்பகுதியின் பொருள்.

இறுவரை காணின் கிழக்காம் தலை:
பதவுரை: இறு-அழியும்; வரை-எல்லை; காணின்-நெருங்கினால்; கிழக்காம்-கீழாகும் (கெடுவர்); தலை-தலை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.
பரிப்பெருமாள்: இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.
பரிதி: தனக்குக் காலமானால் தலைகீழாகப் போடுக என்றவாறு.
காலிங்கர் இறுவரைக் காணின் கீழாக விடவற்று ஆகும் தலை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை கிழக்காம் தலை என்பது கீழ்ப்படுத்தல்.
பரிமேலழகர்: பணியவே,அக்காலம் வந்திறும் வழி அவர் தகைவின்றி இறுவர்.
'பரிமேலழகர் குறிப்புரை: பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார், 'சுமக்க' என்றும், அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார், 'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார். தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது கூறப்பட்டது.)

'இறுதிக்காலம் வந்தால் அவர் தலை கிழாய் விடலாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் தகைவின்றி இறுவர் என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பணிந்தால் இறுதிக்காலம் வரும்போது அப்பகைவரின் தலை கீழே விழும்', 'அவர்களை வெல்லத்தக்க தீர்மானமான காலம் தம்முடைய அறிவுக்குப் புலனாகிறவரையிலும்', 'அதனால் அவர் தம்மைக் காணாது முடிவுகாலம் வரும்போது தலைகீழாகக் கெடுவர்', '. அவர் அழியும் காலம் நெருங்கினால் அவர் அழிவது உறுதி ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவர் இறுதிக்காலம் நெருங்கினால் நிலைமை தலை கீழாய் மாறிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்று பணியச் செய்து நிமிர்ந்து செல்லும் பகைவன் காலம் மாறும்போது தலை குப்புறக் கவிழ்வான் என்னும் பாடல்

(காலம் வாய்க்காதபோது) பகைவரைக் காணநேர்ந்தால் பணிக; அவர் இறுதிக்காலம் நெருங்கினால் கிழக்காம் தலை என்பது பாடலின் பொருள்.
'கிழக்காம் தலை' என்றால் என்ன?

செறுநரைக் காணின் என்ற தொடர்க்குப் பகைவரைப் பார்க்கும்பொழுது என்று பொருள் .
சுமக்க என்ற சொல்லுக்கு தாங்குக என்பது பொருள். பணிக ,பொறுக்க என்றும் கொள்வர்.
இறுவரை காணின் என்ற தொடர் இறுதிநேரம் தெரிந்தால் எனப் பொருள்படும்.

வலிய பகைவரைக் கண்டால் அவரைத் தாங்கிக் கொள்க. அவரை வெல்லும் நேரம் தோன்றினால், நிலைமை தலைகீழாகி விடும்.

காலம் கருதி செயலாற்றும் கெட்டிக்காரர் மாற்றாரை வெல்ல இயலா நிலையில் அவர்கட்குப் பணிந்து அவரை அழிக்கக்கூடிய நிலை வந்தவுடன் எதிர்த்து அவரை இறுதி செய்வர். . பகையை .வெல்வவேண்டும் என்ற எண்னம் நெஞ்சிலே நிறைந்து இருக்கிறது. ஆனால் இன்று பகைவர் வலிமையாக உள்ளார். இந்நிலையில் தம் வலியைக் கூட்டவேண்டும் அல்லது பகைவர் வலி குறைவதைப் பார்த்திருக்க வேண்டும். இடையில் பகைவரிடம் பணிந்து செல்வது ஒரு நல்ல உத்தியாகும். அவரைத் தாங்குவதுபோல் காட்சி அளிப்பதை ஒரு கருவியாகக் கையாளலாம். தகுந்த காலம் வரும்வரை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் பகையுணர்வை மறைத்துக். கொஞ்சமும் பகை இல்லாததுபோல் தோற்றமளிக்க வேண்டும். இதை இழுக்காக எண்னாமல் வெல்வதற்கான உத்தி அல்லது தந்திரம் என்று நினைத்துச் செய்யவேண்டும்.கால நிலைமைக்குத் தக்கவாறு அடங்கி, பொருந்தாத செயல்களைச் செய்யாமல், நடந்து கொள்வதே நல்லதாகும். காலம் செல்லச் செல்ல.பகைவர் கெட்டழியக் கூடிய பருவம் நெருகிகொண்டிருக்கிறது என்று புலப்படும்போது நிலைமை தலைகீழாக மாறிவிடும். அப்பொழுது நம் கை ஓங்கிவிடும். .ஆங்கிலத்தில் Stooping to Conquer என்பதை இதற்கு இணையாகச் சொல்லலாம்.

'கிழக்காம் தலை' என்றால் என்ன?

இத்தொடரிலுள்ல் தலை என்பதற்கு உடம்பிலுள்ள் தலை என்பதே பொருள். கிழக்கு என்ற சொல்லுக்கு கிழக்குத் திசை என்ற திசைப் பொருளும் கீழ் என்ற மற்றொரு பொருளும் உண்டு. இங்கு கீழ் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது. கிழக்காம் தலை என்பது தலைகீழ் ஆகும் அதாவது தலைகீழாக மாறும் என்ற பொருளது.
உரையாளர்கள் இத்தொடரை பல்வேறுவிதமாக விளக்குகின்றனர். அவற்றில சில
தலை கீழாய் விடலாம்,
தலைகீழாகப் போடுக .
கீழாக விடவற்று ஆகும் தலை.
தகைவின்றி இறுவர்
தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால், அது தன் தலைகீழாக விழும்,
கொன்று தலைகீழாக அவர்களை உருட்டி விடுக.
தலைகீழாக விழுந்து மாய்வர்.
தலை கீழே விழும்.
தலைகீழாகக் கெடுவர்.
அழிவது உறுதி.
தலை கீழாக விழும்படி புரட்டித் தள்ளிவிடு.
தலை கீழே விழும்.
தலைகீழாக விழுந்து மாய்வர் .
கொல்லுதலைத் தலைகீழாக விழுந்து சாகுமாறு தலையினின்று தள்ளுதலாகியது
தலை கீழே விழுமாறு அவரைப் பணியவைப்பாயாக.
தலைக்கனத்தால் தம்தலை தாழ்ந்து அழியும்.
தலைக்கனத்தால், மிகைத்து நேரும் போது, அவர்கள் தலை தானாக கீழ்வீழும்.
தலை தானாகவே விழுந்து விடும்
இயல்பாய் கவிழ்வார் தலை.
உறக்கத்திற்காகத் தலையைக் கீழே சாய்க்காதே
தலை வணங்கித் தோல்வியடைவர்
தலை வெட்டுப் பட்டுக் கீழே விழுந்து கெடுவர்
கிழக்கு என்பதற்குச் திசைப் பொருள் கூறி, தன் அற்றிவுக்குத் தென்படுகிற வரைக்கும் என்றும் உரை உள்ளது.
தக்க சமயம் வந்தால் எல்லாம் தலைகீழாகிவிடும்., நிலைமை தலைகீழாகி விடும். என்றும் உரைகள் உள.

காலம் நமக்கு வாய்ப்பாக மாறும்பொழுது எல்லாம்) தலைகீழாகிவிடும் என்ற பொருள் பொருத்தமாகிறது.

காலம் வாய்க்காதபோது) பகைவரைக் காணநேர்ந்தால் பணிக; அவர் இறுதிக்காலம் நெருங்கினால் தலை கீழாய் மாறிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு .

.காலம் மாறும்போது காட்சியும் வேறாகும் என்பதை வழக்குநடை கொண்டு சொல்லும். காலமறிதல் பாடல்.

பொழிப்பு

பகைவரைக் காணும்போது பணிக; அவரது இறுதி எல்லை நெருங்கும்போது நிலைமை தலை கீழாகும்.