இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0485



காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:485)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.

மணக்குடவர் உரை: செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

பரிமேலழகர் உரை: கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.'
(தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஞாலம் முழுதும் ஆளக் கருதுபவர் காலம் பார்த்துக் கலங்காது இருப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஞாலம் கருதுபவர் காலம் கருதி கலங்காது இருப்பர்

பதவுரை: காலம்-(ஏற்ற) பொழுது; கருதி-எதிர்நோக்கி; இருப்பர்-இருப்பர்; கலங்காது-மன அமைதியோடு, அசைவின்றி, தப்பாமல்; ஞாலம்-உலகம்; கருதுபவர்-(வெல்ல)நினைப்பவர்.


காலம் கருதி இருப்பர் கலங்காது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்;
பரிப்பெருமாள்: செய்யுங்காலம் வருமளவும் நினைத்து அசைவின்றி யிருப்பார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலம் வரவு பார்த்து இருக்குங்கால் பின்பு செய்யும் வினை புலப்படாமல் இருக்க வேண்டும் என்றது.
பரிதி: காலங்களை அறிந்து இருப்பானாகில் அவன் கலங்காமல்;.
காலிங்கர்: தாம் செய்யக் கருதிய கருமத்திற்கு அடுத்த காலம் அப்பொழுது இல்லெனில் மற்று அது வரும்வழி அதனைக் குறிக்கொண்டு அமைந்திருப்பர்; யாரோ எனின்;
பரிமேலழகர்: தப்பாது தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.
பரிமேலழகர் குறிப்புரை: தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.

'செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி இருப்பார்/பகைமேல் செல்லார்/குறிக்கொண்டு அமைந்திருப்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வினை முடித்தற்கு ஏற்ற காலம் வரும்வரை அதனை நினைந்து கலக்கமின்றி பொறுத்திருப்பர்', 'நல்ல காலம் வாய்க்கிறவரையிலும் பதற்றமில்லாமல் பொறுத்திருப்பார்கள்', 'மனக்கலக்கம் இல்லாது தம் முயற்சிக்கேற்ற காலத்தையே கருதி அது வரும்வரை பகைமேற் செல்லார்', 'முயற்சித் துன்பங்களாலும் இடையூறுகளாலும் உள்ளங் கலங்காது தமக்கு வெற்றி தரும் காலத்தை எதிர்நோக்கியிருப்பர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயல் முடித்தற்கான தக்க காலத்திற்காகக் கலங்காமல் இருப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

ஞாலம் கருது பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்
பரிப்பெருமாள்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்
பரிதி: ஞாலமும் ஆளப்பெறுவன் என்றவாறு.
காலிங்கர்: வையம் தமது கையகத்தாய நெறி தளராமல் ஆளக் கருதும் அரசர். என்றவாறு. [கையகத்தாய- உள்ளங்கையில் உள்ளதாகிய]
பரிமேலழகர்: ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர்.

'ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதுபவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தைப் பெறக் கருதும் மன்னவர்', ' (உலகம் மெச்சும்படி) உயர்ந்த காரியங்களைச் செய்து முடிக்கிறவர்கள்', 'நிலமுழுதுங் கைக்கொள்ளக் கருதும் அரசர்', 'உலகத்தை ஆளக் கருதுபவர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகாள எண்ணுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்தை ஆள எண்ணுபவர் செயல் முடித்தற்கான தக்க காலத்திற்காகக் கலங்காது இருப்பர் என்பது பாடலின் பொருள்.
'கலங்காது இருப்பர்' குறிப்பது என்ன?

காத்திருந்து பதற்றமின்றி செயல்பட்டால் உலகையே வெல்லலாம்.

உலகத்தைக் கட்டி ஆளவேண்டும் என்ற எண்ணத்தை மனத்திற் கொண்டு இருப்பவர் அதற்கு ஏற்ற வழிகளை யெல்லாம் கைக்கொண்டு இருந்தாலும். தகுந்த காலத்தை அமைதியோடு எதிர்பார்த்திருத்தல் வேண்டும்.
ஒரு முயற்சி வெற்றி பெறுதற்குக் காலம் அறிதல் இன்றியமையாதது. உலகளவான பெருமுயற்சி மேற்கொண்டோர், வெற்றி எட்டும் காலம் இன்றில்லை எனினும் அது கிட்டும் வரை பதற்றமின்றி காத்திருப்பர்; உரமுமான நெஞ்சு கொண்டு திடமான நம்பிக்கையுடன் கலங்காமல் இருப்பர். 'கலங்காது ஞாலம் கருது பவர்’' என்று கொள்வதைவிடக் 'காலங் கருதி கலங்காது இருப்பர்' எனக் கொள்வது சிறந்ததாகும்.
காலத்துடன் கருவி கருதவேண்டும் என்று முன்பு சொல்லப்பட்டது. அடுத்து காலத்துடன் இடம் ஏற்றதாக இருக்கவேண்டும் எனக்கூறப்பட்டது. இங்கு காலம் அறிதலுடன் கலங்காமையும் வேண்டும் என்று கூறப்படுகிறது.


'கலங்காது இருப்பர்' குறிப்பது என்ன?

கலங்காது இருப்பர் என்ற தொடர்க்கு உரையாளர்கள் அசையாமல் இருப்பர், அமைதியாக இருப்பர், தப்பாமல் மேற்செல்லாமல் இருப்பர், பொறுமையாய்க் காத்திருப்பர், பதட்டமில்லாமல் அமைதியாக இருப்பார், மனக்கலக்கம் இல்லாது பகைமேற் செல்லார், முயற்சித் துன்பங்களாலும் இடையூறுகளாலும் உள்ளங் கலங்காது தமக்கு வெற்றியை எதிர்நோக்கியிருப்பர் என்றபடி பொருள் கூறினர்.

கலங்காமல் இருப்பதும் முயற்சியின் வெற்றிக்கு மிக வேண்டியது என்று வள்ளுவர் கருதுகிறார். கலங்காமல் இருப்பர் என்பது அமைதியாக இருப்பர் என்பதைச் சொல்வது. 'அமைதியாக இருப்பர்' என்றால் ஏற்றகாலம் வரும்வரை அமைதியாக வாளா செயலற்றிருப்பார் என்றோ துன்பங்கள் நலிந்தும் பொறுத்திருப்பார் என்றோ பொருளல்ல. அவ்வாறிருப்பது முயற்சி மேற்கொண்டோர்க்குப் பழியையே உண்டாக்கும். துருதுருத்து படபடவென்று ஒரு செயலில் ஈடுபடமாட்டார்கள்; கலக்கமுறாது, விரைவு காட்டாது, பதறாமல், 'காலம் வரட்டும்' என்று பொறுமையாகக் காத்திருப்பர்; எடுத்த முயற்சியில் வெற்றி கொள்ளத் தேவையான உத்திகளை வெளியார் அறியா வண்ணம் மேற்கொள்வர் என்பது 'கலங்காது இருப்பர்' என்பதற்குப் பொருள்.
பரிப்பெருமாள் தமது விளக்கவுரையில் 'இது காலம் வரவு பார்த்து இருக்குங்கால் பின்பு செய்யும் வினை புலப்படாமல் இருக்க வேண்டும்' எனக் கூறுகிறார்; இது காலத்தை வீணாக்காமல் செயலுக்கு வேண்டியவற்றைத் திட்டம் இட்டும் அத்திட்டத்தை எவருக்கும் புலப்படுத்தாமல் இருப்பர் என்னும் வெற்றிக்கான தந்திரத்தைச் சொல்கிறது. போக்கர் என்னும் சீட்டாட்ட விளையாட்டில், திறன்மிக்க ஆட்டக்காரர் முகத்திலிருந்து அவர் மனத்துள் என்ன நினைக்கிறார் என்பதையோ அல்லது வேறு எந்தவித உணர்வுகளையுமோ வாசித்தறிய முடியாது. இது Poker faced (போக்கர் முகத்தவன்) என அறியப்படும். அதுபோல் காலத்திற்காகக் காத்திருப்பவர் முகத்திலிருந்து, முயற்சியின் பின்னணியில் என்ன என்ன நடவடிக்கைகளை அவர் மேற்கொள்கிறார் என்பதை உய்த்தறிய இயலாதவாறு கலங்காது இருப்பர்.

'கலங்காது இருப்பர்' என்ற தொடர் உள்ளங் கலங்காது வெற்றியை எதிர்நொக்கியிருப்பார் என்ற பொருள் தரும்.

உலகத்தை ஆள எண்ணுபவர் செயல் முடித்தற்கான தக்க காலத்திற்காகக் கலங்காமல் இருப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஏற்ற காலத்திற்காகப் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது காலமறிதல் தந்திரம்.

பொழிப்பு

உலகத்தை ஆள எண்ணுபவர் காலம் நோக்கிக் கலங்காது இருப்பர்