இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0481



பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

(அதிகாரம்:காலமறிதல் குறள் எண்:481)

பொழிப்பு (மு வரதராசன்: காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

மணக்குடவர் உரை: இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும்.
இது காலமறிதல் வேண்டும் என்றது.

பரிமேலழகர் உரை: கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது.
(எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன்னைவிட வலிமையுடைய கூகையைக் காகம் பகற்பொழுதில் வெல்லும். (கூகையை இரவில் வெல்ல முடியாது); அதுபோல பகைவனை வெல்லக் கருதும் அரசர்க்கு ஏற்ற காலமும் இன்றியமையாதது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூகையைக் காக்கை பகல்வெல்லும்; இகல்வெல்லும்.வேந்தர்க்கு பொழுது வேண்டும்.

பதவுரை: பகல்-பகற்பொழுது; வெல்லும்-வென்றுவிடும்; கூகையை-கோட்டானை, ஆந்தையை; காக்கை-காகம்; இகல்-மாறுபாடு; வெல்லும்-வெல்லக் கருதும்; வேந்தர்க்கு-ஆட்சித் தலைவர்க்கு; வேண்டும்-இன்றியமையாதது; பொழுது-நேரம், காலம்.


பகல்வெல்லும் கூகையைக் காக்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்;
பரிப்பெருமாள்: இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்;
பரிதி: பகற்காலம் கூகையைக் காக்கை வெல்லும். இராக்காலம் காக்கையைக் கூகை வெல்லும்;
காலிங்கர்: கூகையாகிய புள்ளினை எறியுமிடத்துத் தனக்கு வாய்த்த காலமாகிய பகற்பொழுதின்கண் சென்று அடர்த்து வெல்லும் காக்கையானது மற்று அங்ஙனமே வெல்லும் காக்கையை எறியுமிடத்துத் தனக்கு வாயத்த காலமாகிய இருட்பொழுதின்கண் சென்று அடர்த்து வெல்லும் கூகையானது; .
பரிமேலழகர்: தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும்,

'கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காக்கை கோட்டானைப் பகலில் வென்றுவிடும்', 'தன்னைவிட வலிமையுடைய ஆனால் பகலில் கண் தெரியாத கோட்டானைக் காக்கை பகற்பொழுதில் வென்றுவிடும்', '(அச்சம் மிகுந்த வலிமை குறைந்த) காக்கை (அதைவிட அச்சம் குறைந்து வலிமை மிகுந்ததான்) ஆந்தையைப் பகற்பொழுதில் வென்றுவிடும்', 'பகற்பொழுதிலே காக்கையானது தன்னிலும் வலிய ஆந்தையை வெல்லும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகற்பொழுதிலே காக்கை ஆந்தையை வெல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும்
மணக்குடவர் குறிப்புரை: இது காலமறிதல் வேண்டும் என்றது.
பரிப்பெருமாள்: ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும்
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காலமறிதல் வேண்டும் என்றது.
பரிதி: அத்தன்மை போலக் காலமறிந்துசெயலில் வெல்லலாம் என்பது.
காலிங்கர்: இனி இவைபோலத் தம்மில் தாம் மாறுபட்டுப் பொரும் மன்னவர்க்கும் தமக்குச் செயமாகிய வாய்ப்புடைக் காலம் அறிந்து அடர்த்தலே இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது.
பரிமேலழகர் குறிப்புரை: எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

'அது போலப் பகைவரது மாறுபாட்டை வெல்ல அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் அறிதல் இன்றியமையாதது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேந்தர் வெல்லும் காலம் பார்க்க வேண்டும்', 'அதுபோலப் பகையை வெல்லக் கருதும் அரசனுக்கு ஏற்ற காலம் வேண்டும்', 'அதைப்போல அரசனுக்குத் தன் எதிரிகளை வெல்லுவதற்குத் தக்க காலம் வேண்டும்', 'ஆதலின் பகைவரை வெல்லக் கருதும் அரசருக்குக் காலம் இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அதுபோல மாற்றாரை வெல்லக் கருதும் ஆட்சியாளருக்குக் காலம்அறிதல் இன்றியமையாதது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகற்பொழுதிலே காக்கை ஆந்தையை வெல்லும்; மாற்றாரை வெல்லக் கருதும் ஆட்சியாளருக்குக் காலம்அறிதல் இன்றியமையாதது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஆட்சியாளர் மாறுபாடு கொண்டோரை வெல்வதற்கான காலம் உணர்ந்து மேற்செல்ல வேண்டும்.

தன்னைவிட வலிதாகிய கூகையைக் காக்கை பகற்பொழுதில் வென்றுவிடும்; அதுபோலப் பகைவரை வெல்லக் கருதும் ஆட்சித்தலைவருக்குக் காலம் ஏற்றதாக இருக்கவேண்டும்.
பகற்பொழுதில் ஆந்தையை வென்றுவிடும் காக்கை இருள் நேரத்திலே ஆந்தையிடும் தோற்றுவிடும். ஒரு செயலில் வெற்றியடைவதற்கு காலமறிதலும் வேண்டும். கூகை வலியதுதான் என்றாலும் பகலில் அதைக் காக்கை வென்றுவிடும். அதுபோல மாறுபாடு கொண்டவரை வெல்லக் கருதுவோர்க்கு தக்க காலம் வேண்டும். ஏற்ற காலமில்லாதபோது வலிமையிருந்தும் பயனில்லை. காலம் என்பது நேரப் பொழுது மட்டுமன்றி சூழல், இயற்கையின் வெப்பகுளிர்நிலை, இடப்பெயர்வு ஏற்பாட்டியல் முதலியனவற்றையும் கருதுவது.

அற்காக்கை கூகையைக் கண்டு அஞ்சி அகன்றார் (கம்ப இராமாயணம் பாலகாண்டம் கார்முகப் படலம் பொருள்: இரவில் காக்கைகள் கோட்டானைப் பார்த்து அஞ்சியவற்றைப் போல அஞ்சி ஓடினார்கள்) என்று கம்பரும் காக்கை-கூகை உவமையைப் பயன்படுத்தியுள்ளார்.
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குகூ காக்கைக்குக் கொக்கொக்க கைக்குக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா
(காளமேகப் புலவர் பாடல்கள் பொருள்: காக்கைக்கா காகூகை [காக்கைக்கு ஆகா கூகை] - காகத்திற்கு கூகை (ஆந்தை) ஆகாது, கூகைக்கா காகாக்கை [கூகைக்கு ஆகா காக்கை] - கூகைக்கு காகம் ஆகாது; கோக்குக்கூக் காக்கைக்குக் [கோக்கு கூ காக்கைக்கு] - கோ [மன்னன்] கூவை [உலகை/ நாட்டை] காக்க வேண்டுமாயின்; கொக்கொக்க [கொக்கு ஒக்க] - கொக்கை போல இருக்க வேண்டும்- அஃதாவது கொக்கு தனக்கு இரையாக மீன் சிக்கும் வரை காத்திருப்பதை போல மன்னவன் சரியான நேரம் பார்த்து செயலாற்ற வேண்டும்; கைக்கைக்கு காக்கைக்கு - கைக்கைக்கு [பகையிடமிருந்து] காப்பதற்கு கைக்கைக்கா கா [கைக்கு ஐக்கு ஆகா] - ஐக்கு [தலைவனுக்கு] கைக்கு ஆகா [செய்ய இயலாது]) என்ற காளமேகப்புலவர் பாடல் இக்குறட்கருத்தையும் கொக்கொக்க.... (490) என்ற குறளின் கருத்தையும் இணைத்து யாக்கப்பெற்றது; இதன் ஒலிநயம் சுவைக்கத்தக்கதாக உள்ளது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

வேந்தர் என்ற சொல்லாட்சியால் இக்குறள் போர் தொடுப்பதற்கு ஆயத்தமாகும் காலம் தொடர்பானது என விளக்குவர்.
காக்கையும் ஆந்தையும் ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே உடல் அமைப்புக் கொண்ட, பறவைகள். காக்கை பகலில் திரியும் ஆந்தை இரவுப் பறவை. இரண்டிற்கும் பகையுள்ளது. இரவில் கூகையிருக்கும் இடத்திற்குப் போவதற்குக் காக்கை அஞ்சும். அதே ஆந்தையைக் காக்கை பகலில் கண்டால், கொத்தித் துரத்தி விடும். இன்னொருவகையில் சொல்வதானால் ஆந்தையின் முழு பலம் இரவிலும், காகத்தின் முழு பலம் பகலிலும் வெளிப்படும். இதனால் காக்கை ஆந்தையை வெல்ல முடிகிறது.
இப்பறவைகளின் வெற்றி தோல்விகளுக்கு கண் தெரியாமையும் ஒரு காரணம். கூகைக்கு இரவில் நன்றாகக் கண்தெரியும். ஆனால் பகல் நேரத்தில் கண் பார்வை குறைவு. எனவே வலி குறைவு. உறுப்புக்குறை அதாவது கண் தெரியாமையும் இவ்வுயிரினங்களின் வலி-வலியின்மைக்குக் ஏதுவாகின்றன என்றாலும் அவற்றின் குருட்டுத்தனத்துக்குக் காரணம் பொழுதேயாதல் தெளிவு. வலிகுறைந்த காகம் வலியுள்ள கூகையை வெல்ல பகற்காலம் துணை செய்கிறது, காகம் ஆந்தை இவற்றின் வெற்றியும் தோல்வியும் காலத்தாற்றான் விளைவன.
பகைவரை வெல்ல நினைக்கும் ஆள்வோர் காலமறிந்து படையைச் செலுத்த வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது. தன்னுடைய பலம் எதிராளியின் பலத்தை மிஞ்சுகிற காலத்திலே அவர்கள் மேல் செல்ல வேண்டும். காலம் பொருந்தாவிட்டால் வலியாற் பயனில்லை என்பது கருத்து.
காலம் கருதாததால், ஹிட்லரின் ஜெர்மானியப் படை, உலகப் போரின் முடிவில் ரஷ்யப் பகுதியில், கடுமையான குளிரில் அகப்பட்டுக் கொண்டு, பேரிழப்பும், படுதோல்வியும் கண்டது வரலாறு.
இக்குறட் கருத்தைப் போட்டி நிறைந்த தொழில், வணிகமுயற்சி போன்ற மற்ற துறைகளுக்கும் பொருத்திக் கொள்ள முடியும்.

பகற்பொழுதிலே காக்கை ஆந்தையை வெல்லும்; பகைவரை வெல்லக் கருதும் ஆள்வோருக்குக் காலம்அறிதல் இன்றியமையாதது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

போட்டியாளரை வெல்வதற்குக் காலமறிதல் இன்றியமையாதது.

பொழிப்பு

காக்கை ஆந்தையைப் பகலில் வென்றுவிடும். மாற்றாரை வெல்லக் கருதும் ஆட்சியாளர் காலம் பார்க்க வேண்டும்.