இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0470



எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:470)

பொழிப்பு: தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

மணக்குடவர் உரை: முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான்.
இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.)

சி இலக்குவனார் உரை: தமக்குப் பொருந்தாதனவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது இகழும். ஆதலின் உலகம் இகழாதனவற்ரை நன்கு எண்ணிச் செய்ய வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.


எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்:
பதவுரை: எள்ளாத-இகழாத; எண்ணி-நாடி; செயல்-செய்தல்; வேண்டும்-தகும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்;
மணக்குடவர் குறிப்புரை: இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: முடியுமாயினும் பிறராலிகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறராலிகழப்படாதன செய்யவேண்டு மென்றது.
பரிதி: உலகம் இகழாத காரியத்தை விசாரித்துச் செய்க;
காலிங்கர்: அரசராவோர் தாம் யாதானும் ஒரு கருமம் செய்யும் இடத்துப் பிறர் இகழா)தனவாகிய நற்கருமங்களே தம் மனத்தோடு தெரியத் தேர்ந்து செய்யவேண்டும்; எள்ளாத என்பது இகழாமை.
பரிமேலழகர்: ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க.
பரிமேலழகர் விரிவுரை: அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு.

'பிறரால் இகழப்படாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'ஆதலால் பிறரால் இகழப்படாத செயல்களை எண்ணிச் செய்தல் வேண்டும்.' 'எந்தக் காரியத்தைச் செய்தானாலும்) அந்தக் காரியம் ப்ழிவராத காரியமா என்பதை எண்ணிப் பார்த்துச் செய்ய வேண்டும் ', 'உலகத்தோர் இகழாத செயல்கள் இவை யென்று எண்ணி அவற்றையே செய்தல் வேண்டும் ', 'ஆதலின் உலகம் இகழாதனவற்ரை நன்கு எண்ணிச் செய்ய வேண்டும்' ,என்ற பொருளில் உரை தந்தனர்.

இகழப்படாத செயல்கள்தாமா என்று எண்ணிச் செய்தல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு:
பதவுரை: தம்மொடு-தம் நிலைமையோடு; கொள்ளாத-பொருந்தாதவை; கொள்ளாது-அடையாது; உலகு-உலக மக்கள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான்.
பரிப்பெருமாள்: தமக்குத் தகாத செய்தியை யுலகத்தார் கொள்ளாராதலான்.
பரிதி: செய்யானாகில் தன் மனம் கொள்ளாத காரியம் உலகங் கொள்ளாது என்றவாறு.
காலிங்கர்: மற்று இங்ஙனம் செய்யார் மனத்தொடு கொள்ளாதனவற்றைச் செய்ய விரும்புவாராயின் உயர்ந்தோராகிய நல்லினத்தோர் கண்ணுற்றுத் தெரியுமிடத்து அதனைச் சிறுதும் கைக்கொள்ளார் என்றவாறு.
பரிமேலழகர்: அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும்,
பரிமேலழகர் விரிவுரை: 'தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.

'தமக்குத் தகாத செய்தியை உலகோர் கொள்ளார்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூற, பரிதியும் காலிங்கரும் செய்வார் மனம் கொள்ளாதவற்றை உலகம் கொள்ளார்' என்றனர். பரிமேஎலழகர் தம் நிலைமைக்குப் பொருந்தாத உபாயங்களைச் செய்தால் உலகம் இகழும்' என்று உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் நிலைமைக்குப் பொருந்தாத செயல்களைச் செய்யின் உலகத்தார் ஏற்க மாட்டார்', 'தனக்கு ஏற்காத காரியத்தை உலகமும் ஏற்றுக் கொள்ளாது. அதைச் செய்தால் பழி வரும் ', 'உயர்ந்தோர் தமது உயர்நிலையோடு பொருந்தாத செயல்களை நல்லன வென்று ஏற்றுக்கொள்ளார்', 'தமக்குப் பொருந்தாதனவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது இகழும். 'என்றபடி பொருள் உரைத்தனர்.

தம் தகுதிக்கு ஒவ்வாத செயலை உலகோர் ஏற்கமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சட்டத்திற்கு) முரணான சமுதாய நலனுக்கு ஏற்பிலாத செயல்களைச் செய்யலாகாது என்னும் பாடல்..

இகழப்படாத செயல்கள்தாமா என எண்ணிச் செய்தல் வேண்டும்; தம்மொடு கொள்ளாத உலகு ஏற்காது என்பது பாடலின் பொருள்.
'தம்மொடு கொள்ளாத' என்றால் என்ன?

எள்ளாத என்ற சொல்லுக்கு இகழப்படாத என்று பொருள்.
எண்ணி என்ற சொல் கருதி அல்லது ஆய்ந்து என்ற பொருள்படும்.
செயல்வேண்டும் என்ற தொடர் செய்யவேண்டும் என்ற பொருள் தரும்.
கொள்ளாது என்ற சொல்லுக்கு ஏற்றுக்கொள்ளாது என்று பொருள்.
உலகு என்ற்து உலகோரைக் குறித்தது.

தமக்குத் தகாதனவற்றை உலகோர் ஏற்கமாட்டார். எனவே உலகத்தாரால் .இகழத்தக்கதா அல்லவா என்பதை எண்ணியே ஒருவன் செயல் ஆற்ற வேண்டும்.

தமக்குத் தகாத செய்தியை உலகத்தார் கொள்ளாராதலான் தகாது செயலை உலகம் எள்ளும். அப்படி எள்ளப்படாத செயலையே செய்யவேண்டும் எள்ளாத என்றால் இகழப்படாததைக் குறிக்கும். எள்ளாதன செய்தலாவது தமக்கு இழிவு உண்டாக்காத முயற்சியை மேற்கொள்ளல் ஆகும்; உலகு ஏற்காத இகழ்வான செயல்களாவன சட்டத்திற்குப் புறம்பானவையும் சமுதாய நலனுக்கு முரணானவையுமாகும்.
இழிவான செயல் என்பது செயலின் தன்மை மட்டுமல்ல செயலை நிறைவேற்ற மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றியதும் ஆகும். அதாவது செயலின் நோக்கம் மட்டுமல்ல; முடிவுகளைப் பெறுவதற்குக் கையாளும் வழிகளையும் எள்ளத்தக்கதா இல்லையா என்பதை எண்ணிச் செய்யவேண்டும்.
உலகம் இகழா செயலையும் செயல்முறைகளையும் நாடிச் செய்க. என்பது குறள் கூறும் செய்தி.

'தம்மொடு கொள்ளாத' என்றால் என்ன?

தம்மொடு கொள்ளாத என்பதற்கு மணக்குடவர் 'உலகோர்க்குத் தகாத அதாவது உலகோர் ஏற்க இயலாத' என்று உரை செய்தார். பரிமேலழகர் 'செய்வார் தம் நிலைமையோடு) பொருந்தாத' என்றும் உரை வரைந்தார்.. இவ்விரரண்டு உரைகளுமே இகழ்ச்சிக்குரிய செயலைத்தான குறிக்கின்றன.
பரிதியும். காலிங்கரும் தம் மனத்தொடு கொள்ளாத என்ற பொருளில் உரை கூறினார். இது மனம் விரும்பாத செயல் என்ற பொருள் தரும். செய்வார் மனம் விரும்பாத செயலை உலகத்தாரும் விரும்பார். எனவே இதுவும் இகழ்ச்சியான செயல் என்பதையே குறிக்கும்..
உலகோர்க்குத் தகாத என்றும் தம் நிலைமைக்குப் பொருந்தாத என்றும் பொருள் கூறப்பட்டன. இவற்றுள் உலகுக்குத் தகாத என்ற பொருள் பொருத்தம். .

தம்மொடு கொள்ளாத என்ற தொடர் உலகு அதாவது உலகத்தார் ஏற்காத என்ற பொருள் தருவது.

தமக்குப் பொருந்தாதனவற்றை உலகோர் ஏற்கமாட்டார்கள்; இகழப்படாத செயல்கள்தாமா என்று எண்ணிச் செய்தல் வேண்டும் என்பது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உலகோர் தமது தகுதிக்கு ஒவ்வாத செயலை ஏற்கமாட்டார்; ஆதலால் எள்ளப்படுவனவற்றை செய்ய வேண்டாம் என்னும் தெரிந்து செயல்வகை பாடல்.

பொழிப்பு

உலகம் இகழாதவற்றை எண்ணிச் செய்தல் வேண்டும்; தம் தகுதிக்கு ஒவ்வாதனவற்றைச் செய்தால் அது ஏற்காது;