இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0466



செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:466)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்

மணக்குடவர் உரை: செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்; செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று.

பரிமேலழகர் உரை: செய்தக்க அல்ல செயக் கெடும் - அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும், செய்தக்க செய்யாமையானும் கெடும் - இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.
(செய்யத்தக்கன அல்லாவாவன : பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை. செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதால் கெடுவான். செய்யத்தக்க செயல்களைச் செய்யாமையானும் கெடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.

பதவுரை: செய்-செய்ய; தக்க-தகுந்தவை; அல்ல-அல்லாதவைகளை; செய-செய்தலால்; கெடும்-கேடு உண்டாகும், கெடுவான், அழியும்; செய்தக்க-செய்யத் தகுந்தவை; செய்யாமையானும்-செய்யாதிருத்தலாலும்; கெடும்-அழியும், அழிவான்.


செய்தக்க அல்ல செயக்கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்;
பரிப்பெருமாள்: செய்யத்தகாதனவற்றைச் செய்தலாலும் கெடும்;
பரிதி: உலகத்துச் செய்ய வேண்டாத காரியம் செய்யக் கெடும்;.
காலிங்கர்: யாதானும்ஒரு காரியம் செய்யத் தொடங்குமிடத்து அரசியல்பிற்கு நீதியல்லது செய்யின் கேடுவரும்;
பரிமேலழகர்: அரசன் தன்வினைகளுள் செய்யத்தக்கன அல்லவற்றைச் செய்தால் கெடும்;
பரிமேலழகர் விரிவுரை: செய்யத்தக்கன அல்லாவாவன பெரிய முயற்சியினவும், செய்தால் பயனில்லனவும், அது சிறிதாயினவும் ஐயமாயினவும், பின் துயர்விளைப்பனவும் என இவை.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'செய்யத்தகாதனவற்றைச் செய்தால் கெடும்'' என்று பொதுமையில் இப்பகுதிக்கு உரை கூறினார். பரிதி 'உலகத்துச் செய்ய வேண்டாத காரியம்' என்றார். காலிங்கர் அரசியல்பிற்கு நீதியல்லாத செய்யின் கேடுவரும்' என உரைக்கிறார். பரிமேலழகர் 'அரசன் செய்யத்தக்கன அல்லவை செய்தால் கெடும்' என்று கூறி எடுத்துக்காட்டுகளும் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள 'செய்ய வேண்டாதன செய்தாற் கெடுவான்' 'செய்யத்தகாத காரியத்தைச் செய்து விடுவதாலும் தீமை உண்டு', 'செய்யத்தகாதவற்றைச் செய்தமையானும் கெடுதி யுண்டாகும்', 'ஒருவர் செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் கெடுவர் ',என்ற பொருளில் உரை தந்தனர்.

செய்யத்தகாதவற்றைச் செய்தால் கெடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்தக்க செய்யாமை யானும் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று
பரிப்பெருமாள்: செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறாதனவெல்லாம் தொகுத்துக் கூறிற்று
பரிதி: உலகத்துச் செய்யவேண்டிய காரியம் செய்யாமலிருந்தாலும் கெடும்.
காலிங்கர்: மற்று அஃது அன்றி அரசியல்பிற்கு நீதியாம் அவற்றைச் செய்யாமையானும் கேடுவரும். காலிங்கர் கருத்துரை: மற்று அதனால் தகாதனவற்றைச் செய்யாமையும் தகுவன செய்தலும் என்னும் இரண்டினாலும் கேடு இன்றிப் பெரிது்ம் ஆக்கம் எய்தும் என்றவாறு.
பரிமேலழகர்: இனி அதனானே அன்றிச் செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்.
பரிமேலழகர் விரிவுரை: செய்யத்தக்கனவாவன: அவற்றின் மறுதலையாயின. இச்செய்தல் செய்யாமைகளான் அறிவு, ஆண்மை, பெருமை,என்னும் மூவகை ஆற்றலுள் பொருள், படை என இரு வகைத்தாகிய பெருமை சுருங்கிப் பகைவர்க்கு எளியனாம் ஆகலான், இரண்டும் கேட்டிற்கு ஏதுவாயின. இதனான் 'செய்வன செய்து, ஒழிவன ஒழிக' என இருவகையனவும் உடன் கூறப்பட்டன.

'செய்யத் தகுவனவற்றைச் செய்யாமையாலும் கெடும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற பரிதி 'உலகத்துச் செய்யவெண்டிய காரியம் செய்யாமலிருந்தாலும் கெடும்' என்றார். காலிங்கர் 'அரசியல்பிற்கு நீதியாம் அவற்றைச் செய்யாமையானும் கேடுவரும்' என உரை தருகிறார். பரிமேலழகர் 'செய்யத்தக்கனவற்றைக் செய்யாமை தன்னானும் கெடும்' .எனக்கூறி அதற்கு விளக்கமும் நல்குவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டியன செய்யாவிட்டாலும் கெடுவான்', 'செய்ய வேண்டிய காரியத்தை உடனே செய்யாமல் தாமதிப்பதாலும் தீமை உண்டாகும்', 'செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கெடுதி உண்டாகும்', 'செய்யக்கூடியவற்றைச் செய்யாமலிருந்தாலும் கெடுவர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கெடுதி உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யத்தகாதவற்றைச் செய்தால் கெடுவர்; செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கெடுதி உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
ஒன்று செய்யாவிட்டால் கேடு எப்படி உண்டாகும்?

முயற்சிக்கு எந்த வகையிலும் கேடு நேராவண்னம் திட்டமிடல் வேண்டும்.

செய்யக் கூடாத செயல்களைச் செய்வதனாலும் கேடு உண்டாகும்; செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுதி உண்டாகும்.
ஏதேனும் ஒரு முயற்சி, செயல் அல்லது தொழில் தொடங்குமுன் அதைத் திட்டமிடுவது பற்றியது தெரிந்துசெயல்வகை அதிகாரம். அப்படித் திட்டமிடும்போது செய்வன செய்து, செய்யக்கூடாதன விலக்கி, மேற்கொள்ளப்போகும் செயலுக்குக் கேடு நேராவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறது பாடல். தகாத செயல்களைச் செய்தாலும், செய்யவேண்டியவைகளைச் செய்யாமல் விட்டாலும் செயலுக்கு கேடு உண்டாகும் என்பதை உணர்ந்து முயற்சியைத் திட்டமிடவேண்டும் என்கிறது இது. ஒவ்வொரு தொழிலுக்கும் ஏற்றவாறு அவற்றைக் கணித்து செயல் திட்டம் உருவாக்க வேண்டும்.

ஒன்று செய்யாவிட்டால் கேடு எப்படி உண்டாகும்??

செய்யுளின் இரண்டாம் பகுதி 'செய்யாமையானும் கெடும்' எனச் சொல்கிறது. ஒரு செயலைச் செய்யாமல் விட்டால் அது ஆக்கம் தராமல் போகலாம். ஆனால் அது எப்படி கெடுதல் உண்டாக்கக் கூடும்?
இங்கு செய்யாமை எனச் சொல்லப்பட்டது ஒரு செயலைச் செய்யாமலேயே இருப்பது அல்ல; செய்யத்தக்கவற்றைச் செய்யாமல் இருப்பது கூறப்படுகிறது. செய்யத்தக்க என்பது செய்தக்க என வந்தது. 'செய்தக்க செய்யாமை யானும் கெடும்' என்பதற்குக் காட்டாக, உடல்நலம் பேணுதலைக் கருதலாம். கள், புகைபிடித்தல் இவற்றைத் தொடர்ந்தால் உடல்நலம் கெடும்; அது 'செய்தக்க அல்ல செயக்கெடும்' என்பதில் அடங்கும். உடற்பயிற்சி மேற்கொள்ளாமை, ஆண்டுக்கொருமுறை உடல்நல சோதனை செய்யாமலிருத்தல் என்பன 'செய்தக்க செய்யாமை' ஆம்.
எவை செய்யத்தகாதன எவை செய்யத்தக்கன என்று இப்பாடலில் எதுவும் சொல்லபடவில்லை. யாருக்கு அல்லது எதற்குச் செய்யத்தக்கன எனவும் கூறப்படவில்லை. காலிங்கர் 'மற்றுஅஃது அன்றி அரசியல்பிற்கு நீதியாம் அவற்றைச் செய்யாமையானும் கேடுவரும்' என்றும் பரிதி 'உலகத்திற்குச் செய்யத்தக்கன' என்றும் உரை வகுத்தனர். இவர்களது உரைகளை நோக்கும்போது அவை சமுதாய/அரசியல் நலன்கள் பயக்கக்கூடிய செயல்களைச் செய்யாமையைக் குறிப்பிடுவனவாகத் தெரிகிறது. பரிமேலழகர் செய்யத் தகுந்த செயல்களாக 1.சிறிது முயற்சியால் முடியக்கூடிய செயல். 2. பயன் தரும் செயல். 3. பெரிய பயன் விளையும் செயல். 4. சந்தேகத்துக்கு இடமில்லாத செயல் எனப் பட்டியல் தருவார்.

மேற்கொள்ளவிருக்கும் செயலில் செய்யவேண்டிய ஆக்கம் தரும் செயல்களைச் செய்யாமையால் ஏற்படும் இழப்பே இங்கு கேடு எனச் சொல்லப்படுகிறது. போதிய தரவுகள் திரட்டாமல் இருப்பது, கிடைத்தவற்றை ஆராய்ந்து பார்க்காமல் இருப்பது, விழிப்புணர்வும் அர்ப்பணிப்பும் இல்லாமை, திட்டத்தை உரிய அறிஞர்களின் பார்வைக்கு வைக்காமல் இருப்பது, போன்றவையும் செய்யாமையில் அடங்கும். தொழிற்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காப்பு, காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றிற்கு வகை செய்யாதிருத்தல் முதலியனவும் மடங்கலுக்கும் தோல்விக்கும் காரணமாகி முயற்சிக்குக் கேடு உண்டாக்கக் கூடியவையே.
நாடு, மக்கள், மேற்கொண்டவினை இவைகட்கு இயைய செய்யத்தகாதனவும் தக்கனவும் அவ்வப்போது அமையும் ஆகலின் அவைகளை வரைந்து கூறாது உய்த்துணர வைத்த மணக்குடவர் உரைக்குறிப்பு விஞ்சி நிற்கிறது (தண்டபாணி தேசிகர்).

செய்யத்தகாதவற்றைச் செய்தால் கெடுவர்; செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கெடுதி உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

எந்தவிதத்திலும் முயற்சிக்குக் கேடு உண்டாகதவாறு தெரிந்து செயல்வகை கொள்க.

பொழிப்பு

செய்யத்தகாதவற்றைச் செய்தால் கெடுவர்; செய்யத்தகுவனவற்றைச் செய்யாமையானும் கேடு உண்டாகும்.