இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0464



தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:464)

பொழிப்பு: இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

மணக்குடவர் உரை: ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார், இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.

பரிமேலழகர் உரை: தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.
(தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தௌ¤வுள் வழித் தொடங்குக என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வெட்க உணர்ச்சிக்கு அஞ்சுகின்றவர் விளங்காத காரியத்தை மேற்கொள்ளார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.


தெளிவு இலதனைத் தொடங்கார்:
பதவுரை: தெளிவு; இலதனை- தெளிவு இல்லாததை; தொடங்கார்-துவங்க மாட்டார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்;
பரிப்பெருமாள்: ஆராய்ந்தறிதலில்லாத வினையைச் செய்யத் தொடங்கார்;
பரிதி: உலகத்துப் பொருந்தாக் காரியம் செய்யார்
காலிங்கர்: இங்ஙனம் தாமும் சான்றோரும் தம்முள் கூடியாயினும் தனித்தாயினும் தெளிந்து, சிறந்த கருமஞ் செய்யும் அத்துணை அல்லது மற்றுந் தெளிவில்லதனைச் செய்யத் தொடங்கார்;
பரிமேலழகர்: இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார்;
பரிமேலழகர் குறிப்புரை:: தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். [மடங்கல்-வினையைத் தொடர்ந்து செய்யாது, நடுவில் விடுதல்.]

இப்பகுதிக்கு 'ஆராய்த்தறிதலில்லாத செயலைத் தொடங்கார்' என்று மணக்குவர்/பரிப்பெருமாள் கூறினர். பரிதி 'உலகத்துப் பொருந்தாக் காரியம் செய்யார் என்கிறார். காலிங்கர் சான்றோருடன் கூடியோ அல்லது தனித்தோ தெளிவில்லாத கருமஞ் செய்யார்' எனக் கூறினார். பரிமேலழகர் உரை காலிங்கர் ஒட்டியே அமைகிறது.

இன்றைய ஆசிரியர்கள 'தம் அறிவுக்குத் தெளிவாக விளங்காத செயலைத் தொடங்கமாட்டார்', 'தமக்கெ தெளிவாக விளங்காத காரியத்திப் பிறர் சொல்லுவதை மட்டும் வைத்துக் கொண்டு ஆரம்பித்துவிடமாட்டார்கள்', 'நன்மை பயக்கும் என்று தெளிவாக விளங்காத செயல்களைச் செய்யத் தொடங்கார்கள் ', 'ஆராய்ந்து முடிவு செய்யாத செயலைச் செய்யத் தொடங்கார்.' ,என்ற பொருளில் உரை தந்தனர்.

தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்க மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

இளிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்:
பதவுரை:; இளிவு-இகழ்ச்சி; என்னும்-என்கின்ற; ஏதப்பாடு-குற்றம் உண்டாதல்; அஞ்சுபவர்-நடுங்குபவர்கள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சுபவர்.
பரிப்பெருமாள்: இகழ்ச்சியாகிய குற்றப்பாட்டிற்கு அஞ்சும் அவர்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒரு வினை செய்ய நினைக்கும் காலத்து நின்ற நிலை அறிய வேண்டும் என்றது.
பரிதி: உலகத்துக்கு இழிவான காரியம் செய்யப் பயப்படுபவர்கள் என்றவாறு.
காலிங்கர்: யாரெனின் மற்று அவர் இது செய்தார் என்று பிறர் நகுதல் நமக்கு ஓர் இழிவாம் என்னும் குறைபாட்டை நாணுவர் என்றவாறு.
பரிமேலழகர்: தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்.
பரிமேலழகர் குறிப்புரை:: இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.

'இழிவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி சற்று வேறுபாடாக 'உலகத்துக்கு இழிவான காரியம் செய்யப் பயப்படுபவர்கள்' என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள்' இழிவென்னும் குற்றம் வருதலை அஞ்சுவோர்', 'ஏமாந்து போனவர் என்ற இகழ்ச்சிக்கு ஆளாகக் கூடாதென்று அஞ்சுகின்றவர்கள் ', 'தமக்கு அவமதிப்பாகிய குற்றம் வரக்கூடாதென்று அஞ்சுகின்றவர்கள்', 'தமக்கு இழிவு உண்டாதலை அஞ்சுகின்றவர் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

தமக்கு இகழ்ச்சியாம் என்னும் குறைபாட்டை நாணுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புரியாத தொழிலில் புக வேண்டாம் என்னும் பாடல்.

தமக்கு இளிவாம் என்னும் குறைபாட்டை நாணுவோர் தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்க மாட்டார் என்பது பாடலின் பொருள்.
'இளிவு' இங்கு எதைக் குறிக்கிறது?

தெளிவிலதனை என்பதற்குத் தெளிவில்லாததை என்று பொருள்.
தொடங்கார் என்ற சொல்லுக்கு தொடங்க மாட்டார் என்பது பொருள்.
இளிவு என்ற சொல் இழிவு அதாவது இகழச்சி என்ற பொருள் தரும்.
என்னும் என்றது என்கின்ற எனப் பொருள்படும்.
ஏதப்பாடு என்ற சொல் குற்றம் உண்டாதலைக் குறித்தது.
அஞ்சுபவர் என்ற சொல்லுக்கு அச்சப்படுவர் என்பது பொருள். இங்கு அதை நாணுவர் எனக் கொள்வர்.

தனக்கே தெளிவில்லாத செயலால் பின்னர் இகழ்ச்சிக்குள்ளாக நேரிடலாம். நாண் குணம் கொண்டவர் அத்தகைய செயலைத் தொடங்கமாட்டார்.
தெளிவில்லாத செயல் எவை? செயலின் விளைவுபற்றித் தெளிவாகத் தெரியாததை தெளிவில்லாத செயல் எனலாம் தொழில் தெரிந்த இனத்தோடு ஆராய்ந்து துணியாத செயல், இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத முயற்சி,, தம் அறிவுக்குத் தெளிவாக விளங்காத செயல் போன்றவை தெளிவில்லாத செயல்களாம் . தோல்வியில் முடிதலுக்கான அல்லது அது நடுவில் முடங்கிப்போவதற்கான அறிகுறிகள் மிகையாக உள்ளன என்று உணரப்படும் முயற்சியும் தெளீவில்லாததுவே..
தெளிவில்லாத செயல் தொடங்கிவிட்டால் தொடக்க முதலே மனக்கலக்கம் உண்டாகும். அது பின்னர் தோல்வியில் முடிந்தால் பொருள் இழப்பும் இழிவும் உண்டாகும். கண்டோரும் கேட்டோரும் செயலில் குற்றம் காட்டுவர்.
செயல் பற்றிய தெளிவான அறிவு வேண்டும்; பின்னாளில் பிறரால் தூற்றப்படும் நிலைமைக்கு உள்ளாகாத செயலாக இருக்க வேண்டும் இவ்வகையான் உகந்த சூழல் நிலவாவிட்டால் முயற்சி தொடங்கலாகாது.

'இளிவு' இங்கு எதைக் குறிக்கிறது?

ஒரு செயல் தோல்வியில் முடிந்தால் கைமுதல் இழப்பு உண்டாவது மட்டுமன்றி இவர் இது செய்தார் என்று முயற்சியை ஏளனம் செய்வதும். இவர் ஏமாந்து போனவர் என்று பிறர் நகுதலும் இழிவை உண்டாக்கும். தொடங்கிய பின் இடையில் மடங்கினால் அதாவது செயலைத் தொடராமல் நடுவிலேயே விடுதலும் இழிவாகவே கருதப்படும்.

தமக்கு இகழ்ச்சியாம் என்னும் குறைபாட்டை நாணுவோர் தெளிவு இல்லாத செயலைச் செய்யத் தொடங்க மாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பின்னாளில் வெட்கப்படும்படியாக நேரிடலாம் என்னும் செய்லைத் தொடங்காமலே இருக்கலாம் என்னும் தெரிந்து செயல்வகை பாடல்.

பொழிப்பு

இகழ்ச்சியை நாணுபவர்கள் தம் அறிவுக்குத் தெளிவாகாத செயலை மேற்கொள்ளார்.