இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0450பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:450)

பொழிப்பு: நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

மணக்குடவர் உரை: பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்; பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.

பரிமேலழகர் உரை: பல்லார் பகை கொள்ளலின் பத்து அடுத்த தீமைத்து - தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து; நல்லார் தொடர் கைவிடல் - அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
(பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தமக்குத் துணைவராக உள்ள பெரியவர்களுடைய ஆதரவு விட்டுப் போகும்படி தவறி நடந்து கொள்வது பலபேரைப் பகைத்துக் கொள்வதைவிடப் பலமடங்கு தீமை உண்டாக்கக்கூடியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லார் தொடர்கை விடல், பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே.


பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே:
பதவுரை: பல்லார்-பலர்; பகை-பகைமை; கொளலின்-அடைவதைவிட; பத்து-பதிற்று; அடுத்த-மடங்கான; தீமைத்தே-தீங்குடையதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலரோடு பகைகொண்டால் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்;
பரிப்பெருமாள்: பலரோடு பகைகொண்டான் எவ்வளவு துன்பமுறும்; அதனினும் பத்துமடங்கு துன்பமுறும்;
பரிதி: துர்ச்சனர் பதினாயிரம் பேரை பகை கொள்வதிலும் பொல்லாது;
காலிங்கர்: தான் தனியனாயிருந்து அளவிறந்த பலரோடும் பகைகொள்வதினும் நூறு மடங்கு குற்றத்தை உடைத்து;
பரிமேலழகர்: தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து;

'பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு துன்பமுறும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலரைப் பகைப்பதினும் பெருந்தீமை', 'தான் தனியாயிருந்து பலரோடு பகை கொள்ளுதலினும் பத்து மடங்கு தீமை உடையது', 'பலரோடு பகை கொள்வதைப் பார்க்கிலும்', 'பலருடைய பகைமையக் கொள்ளுதலைவிடப் பத்து மடங்கு தீமைகளை உடையது' என்ற பொருளில் உரை தந்தனர்.

பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நல்லார் தொடர்கை விடல்:
பதவுரை: நல்லார்-பெரியார்; தொடர்-உறவு; கைவிடல்-ஏற்காதொழிதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
பரிப்பெருமாள்: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது இடுக்கண் வரும் என்றது. பரிதி: நல்லோரைக் கைவிடல் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் தெரிந்துணரவல்ல பெரியாரைத் துணையாய் பெற்று வைத்தும் அவரது தொடர்ச்சியைத் தாம் கைவிடுதல் என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் பெரியாரோடு நட்பினைக் கொள்ளாதொழிதல்.
பரிமேலழகர் விரிவுரை: பலர் பகை ஆயக்கால் 'மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல் , பேது செய்து பிளந்திடல்' (சீவக. விமலை.32) என்பவையல்லது, ஒருங்கு வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான் உய்தல் கூடும். நல்லார் தொடர்பை விட்டால் ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின், இது செய்தல் அதனினும் தீது என்பதாம். இவை மூன்றுபாட்டானும் அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

'பெரியாரைத் துணையாகக் கொள்ளாதொழியின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காளிங்கர் 'பெரியாரது தொடர்ச்சியைடத தாம் கைவிடுதல்' என்று பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவர் ஒருவர் நட்பை விடுவது', 'ஒருவன் பெரியவர்களுடைய நட்பைக் கொள்ளாதிருத்தல்', 'நல்லவர்களுடைய நட்பை இழத்தல் பதின்மடங்கு கெடுதியானது', 'நல்லவர்களுடைய நட்பை விட்டு விடுதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியாரின் தொடர்பைத் தொடராமல் விடுவது பெருந்துன்பம் விளைக்கும் என்னும் பாடல்.

பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது பாடலின் பொருள்.
'தொடர் கைவிடல்' என்றால் என்ன?

பல்லார் என்ற சொல் பலர் என்ற பொருள் தரும்.
கொளலின் என்ற சொல்லுக்கு கொள்ளுதலைவிட என்று பொருள்.
பத்துஅடுத்த என்றது பத்து மடங்கு என்று பொருள்படும்.

பகை தீமை தருவது. பலருடைய பகை ஒன்று சேர்ந்து விட்டால் அது பெருந்துன்பமாம். அத்தகைய நிலைமையை விடவும் தீமையானது பெரியார் துணையைத் தொடராமல் விட்டுவிடுவது. செயற்கரிய செய்யும் பெரியாரது நட்பு கிடைப்பது எளிதல்ல. அரிதாகக் கிடைத்த பெரியார் தொடர்பை துண்டித்து விட்டால் அதனால் மிகையான கேடுகள் உண்டாகும்.
பத்தடுத்த என்பதற்கு பத்து மடங்கு என்பது நேர் பொருள் ஆனாலும் அது 'அளவு கடந்த' என்ற பொருளிலே இங்கு ஆளப்படுகிறது. எனவேதான் உரையாசிரியர்கள் நூறுமடங்கு என்றும் பத்தாயிரம் மடங்கு என்றும் கூறியுள்ளனர்.

நல்லார் என்ற சொல் இங்கு பெரியாரைக் குறிக்கும். பெரியார் தொடர்பு ஒருவரை எப்பொழுதும் காக்கும். நல்லார் என்பதற்கு நற்பண்புள்ளவர்கள், போர்த்திறன் அறிவுரையாளர்கள் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர். நல்லார் என்பதற்கு அவரவர் துறையில் நல்லவர்கள் அதாவது திறமையானவர்கள் என்று பொருள் கொள்வதே பொருத்தம். இப்பெரியாரது தொடர்பைத் தக்க வைத்துக் கொள்ள அறுவுறுத்துகிறது இப்பாடல். தமக்குத் துணைவராக உள்ள அனுபவம் பெற்ற பெரியார் உறவு விட்டுப் போகும்படி செய்வதால் ஆக்கம் பெறும் நிர்வாக வாயில்கள் அடைபட்டுத் துன்பம் நேரும். அரிய செயல் புரியும் அவர்களை நீண்ட காலம் தம்முடன் வைத்துக் கொள்வது நிலையான நிர்வாகம் இடரின்று தொடர உதவும்.

தெரிந்துணரவல்ல பெரியாரைத் துணையாய் பெற்று வைத்தும் அவரது தொடர்ச்சியைக் கைவிட்டுத் தனியனாயிருப்பவர் அளவிறந்த இடர்களை எதிர்நோக்க நேரிடும். பெரியார் உடனிருப்பது ஒருவர்க்கு எப்பொழுதும் பெரும் வலிமையாகும். அவர்கள் பிரிவு என்பது அந்த வலிமையை இழப்பதாகும். வலிமை யிழந்தவனை வீழ்த்துவது எளிதாகும். பெரியாரது வலியை நீக்கியவர் தீமைகள் தம்மைச் சூழ விரைவில் அழிவர்.

'தொடர் கைவிடல்' என்றால் என்ன?

'தொடர் கைவிடல்' என்பது நல்லார் தம்மை விட்டு விலகுவதையோ அல்லது அவர்களே தம்மை விட்டுப் பிரிதலையோ குறிக்கலாம். கைவிடல் என்ற சொற்றொடர் நோக்கும்போது இதுகாறும் இருந்த தொடர்பையும் விடுதல் அதாவது தலைவன் பெரியாரை நீக்குதல் என்று கொள்வதே சரியாகும். இதைத் தம் அறியாமையால் பெரியாரை விலக்குதல் (தண்டபாணி தேசிகர்) என்று கொள்வது இன்னும் சிறப்பாக அமையும். பெரியாரின் வலி தெரியாமல் அவர் தொடர்பை விட்டுவிடுதல் அல்லது அவர் தொடர்ச்சியை நீக்கல் என்பதை இத்தொடர் குறிக்கும்.

பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல் பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைகோடல் நீண்டகால அடிப்படையில் அமைவது நலம் என்று சொல்லும் பாடல்

பொழிப்பு

பலரோடும் பகைகொள்ளுதலின் பத்துமடங்கு தீமை உடைத்து பெரியாரது தொடர்ச்சியைக் கைவிடுதல்