இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0449முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:449)

பொழிப்பு: முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

மணக்குடவர் உரை: முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போலத் தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.

பரிமேலழகர் உரை: முதல் இலார்க்கு ஊதியம் இல்லை - முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம், மதலையாம் சார்பு இலார்க்கு நிலை இல்லை - அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
(முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)

சி இலக்குவனார் உரை: முதல் இல்லாதவர்க்கு இலாபம் இல்லை; அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணை இல்லாதவர்க்கு நிலைத்திருக்கும் தன்மை இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம் சார்பிலார்க்கு நிலை இல்லை.


முதலிலார்க்கு ஊதியம் இல்லை:
பதவுரை: முதல்-முதற்பொருள்; இலார்க்கு-இல்லாதவர்க்கு; ஊதியம்-வருவாய்; (பேறு, ஆக்கம்); இல்லை-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முதலில்லாதார்க்கு இலாபமில்லையானாற் போல;
பரிப்பெருமாள்: முதலில்லார்க்கு இலாபமில்லையாயினாற் போல;
பரிதி: முதற்பொருள் இல்லாற்கு லாபமில்லாதது போல;
காலிங்கர்: முன்னம் தமக்கு நெஞ்சுறுதியாகிய முதற்பொருள் (இல்லாதார்க்கு) மற்று அஃதடியாக (ப்பின்பு) பொலிந்து வரும் இலாபம் யாதும் இல்லையன்றே.
பரிமேலழகர்: முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லையாம்,

'முதற்பொருள் இல்லாதவர்க்கு இலாபமில்லாதது போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முதலில்லாதவர்க்கு ஊதியம் உண்டோ?', 'முதலீடு செய்யப் பொருளில்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம்(இலாபம்) இல்லை', 'பெரியவர்களுடைய ஆதரவு வியாபாரிக்கு மூலதனம் போலவும் குழந்தையின் அணைப்புப் போலவும் உதவுவது. மூலதனம் இல்லாத வியாபாரிக்கு இலாபம் இல்லை', 'முதல் இல்லாத வணிகருக்கு மிச்சம் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை:
பதவுரை: மதலை-முட்டுத்தூண்; ஆம்-ஆகும்; சார்பு-துணை; இலார்க்கு-இல்லாதவர்க்கு; இல்லை-இல்லை; நிலை-சலியாது நிற்றல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாங்குதலாகிய சார்பு இல்லாதர்க்கு அரசு நிலைநிற்றல் இல்லை.
பரிப்பெருமாள்: தாங்குதலாகிய சார்பு இல்லாதவர்க்கு அரசு நிலை நிற்றல் இல்லை.
பரிப்பெருமாள் கருத்துரை: பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறுகின்றார். ஆதலின் முற்படப் பொருட்கேடுண்டாம் என்று கூறினார்.
பரிதி: பிள்ளையில்லாதாற்கு நிலைமையில்லை என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுபோல தமது நீதி தளராமல் தாங்கும் தாணுவாகிய சார்வில்லாதார்க்கு நிலை இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலத் தம்மைத் தாங்குவதாம் துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும் நிலையில்லை.
பரிமேலழகர் கருத்துரை: முதலைப் பெற்றே இலாபம் பெறவேண்டுமாறு போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெறவேண்டும் என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.

'தாங்குதலாகிய சார்பு இல்லாத அரசுக்கு நிலைநிற்றல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணை இல்லாதவர்க்கு ஒரு நிலை உண்டோ?', 'அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை', 'குழந்தையை அணைத்து ஆறுதல் செய்து அறிவு சொல்லும் தாய் போன்ற பெரியவ்ரகளுடைய ஆதரவில்லாதவர்களுக்கு நல்ல நிலைமை இருக்காது', 'கட்டிடத்தைத் தாங்கும் கொடுங்கை போல அரசினைத் தாங்குந் துணிவரில்லாதவர்க்குச் சலியாது நிற்கும் நிலை இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியாரைத் துணைக் கொள்ளாத நிதி நிர்வாகம் சீர் பெறாது என்னும் பாடல்

முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை; தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது பாடலின் பொருள்.
முதல், ஊதியம், சார்பிலார் இவற்றினிடையே என்ன தொடர்பு இருக்க முடியும்?

முதல் என்றது முதற்பொருளைக் குறித்தது. இதனை மூலதனம் அதாவது முன்பணம் என்றும் அழைப்பர்.
ஊதியம் என்ற சொல் இலாபம் அல்லது வருவாயைக் குறிக்கும்.
மதலை என்ற சொல் பாரந் தாங்கும் தூண், உத்தரம் இவற்றைக் குறித்தது. வன்மையுடையது என்ற பொருளும் உண்டு.
சார்பிலார் என்ற சொல் சார்ந்திருப்பவர் அல்லது துணையாயிருப்பவர் என்ற பொருள் தரும்.
நிலை என்ற சொல் நிலைபேறு எனப் பொருள்படும்.

இக்குறளின் முற்பகுதியான 'முதலிலார்க்கு ஊதியம் இல்லை' என்பது உவம வாக்கியம்.
'ஊதியம்' என்பது பெருவழக்குச் சொல்லாக இன்று உள்ளது. ஊதியம் என்பதற்கு இலாபம், ஆக்கம், பயன் என்ற பொருள்கள் உண்டு.
முதல் இல்லாத வாணிகத்தில் ஊதியம் இல்லை என்பது எல்லாரும் அறிந்த செய்தி. வணிகர்கள் மொழியில் ஊதியம் என்பது இலாபம் என்றும் அறியப்படும். வணிகத்தில் இலாபப் பொருளுக்கு முதற்பொருள் இன்றியமையாதது. முதல் வைத்தே ஊதியம் ஈட்ட வேண்டும். உரையாசிரியர்களில் காளிங்கர் தவிர அனைவரும் 'வாணிகம் செய்வோர்க்கு முதற்பொருள் இல்லாமல் இலாபம் இல்லை' என்றே முற்பகுதிக்குப் பொருளாகக் கொண்டனர்.
காளிங்கர் மட்டும் 'தமக்கு நெஞ்சுறுதியாகிய முதற்பொருள் இல்லாதார்க்கு மற்று அஃதடியாகப்பின்பு பொலிந்து வரும் இலாபம் யாதும் இல்லை' என்று தலைவனது மன உறுதியால் விளையும் பேறுகள் போல என்று, தனது உரையில், வணிகமுறை விளக்கம் இல்லாமல், முதற்பொருளைத் தலைவனுக்கு உரியதாக்குகிறார்; மற்றவர்கள் பெரியாரை 'முதல்' என்று கூறினர்.

பாடலின் பிற்பகுதியான 'மதலையாம் சார்பிலார்க்கு இல்லை நிலை' என்பது பொருள் வாக்கியம்.
இதிலுள்ள மதலை என்பதற்குப் உரையாசியர்கள் பலரும் தாங்கும் தூண் என்ற இயற்பொருளிலே உரை செய்தனர். சார்பிலார் என்பதைப் பெரியாரைச் சுட்டிய சொல் என்று அனைவரும் கொண்டனர். நிலை என்பதற்கு நிலைபெறுதல் என்ற பொருளில் உரை கண்டனர். அரசியலில் சோர்வு ஏற்படும்போது பளு தாங்கும் தூண்போல் தாங்கிப் பிடித்து நிலைபெறச் செய்பவர்கள் பெரியார்கள் என்பது இதன் பொருளென இவர்கள் உரைகள் அமைந்தன.
பரிதியும் நாமக்கல் இராமலிங்கமும் மதலை என்பதற்குப் பிள்ளை என்று பொருள் கொண்டனர். பரிதியினது உரையான 'பிள்ளையில்லாதாற்கு நிலைமையில்லை' என்பது எதனினும் தொடர்பில்லாமல் உள்ளது. நாமக்கல் இராமலிங்கம் 'குழந்தையாகத் தம்மை அணைப்பவர்கள் இல்லாதவர்களுக்கு நல்ல நிலைமை இருக்காது' என்றார்.

தேவையான முதலீடு செய்பவர்க்கே தொழில் ஆதாயம் கிடைப்பது போல, அரசு நிலை நிற்றலுக்குப் பெரியார் துணை தேவை என்ற பொருளில் உரையாசிரியர்கள் இக்குறளுக்குப் பொருள் கூறினர். அதாவது அரசன் 'பெரியாரில் முதலீடு' செய்தால் நிலைநிற்றல் என்ற ஊதியம் கிடைக்கும் என்பது அனைவரின் கருத்து.

வணிக உலகச் சொற்களான முதற்பொருள், வருவாய் என்பதற்கும் துணைகொள்ளார் (சார்பிலார்) என்றதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

இக்குறளுக்குக் கீழ்க்கண்டவாறு உரை விளக்கங்கள் கிடைக்கின்றன.
1. பொருள் முதலீடு செய்யாதவருக்கு வணிகத்தில் ஆதாயம் வராது; அதுபோல தம்மைத் தூண்போல் தாங்கவல்ல பெரியார் இல்லாதவர் நிலை கெடும். இது அரசுக்கு இலாபத்தைக் கொடுக்கும் பொருளாயிருப்பவர் பெரியோர் என அமைகிறது. (பெரும்பான்மை உரையாளர்கள்)
2. மூலதனம் இல்லாத வணிகருக்கு இலாபம் இல்லை. குழந்தையை அணைத்து ஆறுதல் செய்து அறிவு சொல்லும் தாய் போன்ற பெரியவர்களுடைய ஆதரவில்லாதவர்களுக்கு நல்ல நிலைமை இருக்காது. (பரிதி, நாமக்கல் இராமலிங்கம்(
3. தலைவனது மன உறுதியில்லாமையால் இழக்கும் பேறுகள் போல, தமது நீதி தளராமல் தூண்போன்று தாங்கும் பெரியார் துணை இல்லாதார்க்கு நிலை இல்லை (காளிங்கர்).

மேற்சொன்ன உரைகள் வழி முதல், ஊதியம், பெரியார் இவற்றிற்கிடையே உள்ள இயைபு விளங்கவில்லை. இவ்வுரைகள அனைத்தும் அத்துணைச் சிறப்பாக இல்லை; பொருத்தமாகவும் இல்லை. உவமப்பொருளை விளக்குவதாகவும் இல்லை.
பரிப்பெருமாள் தனது விளக்கவுரையில் 'பெரியாரைத் துணையாகக் கொள்ளாதார்க்கு வரும் குற்றம் கூறுகின்றார். ஆதலின் முற்படப் பொருட்கேடுண்டாம் என்று கூறினார்' என எழுதுகிறார். இவர் எதனால் பொருட்கேடு உண்டாகும் என்று சொல்லவில்லை.
குறளின் சொல்லாட்சிகளை நோக்கும்போது வள்ளுவர் நிதி மேலாண்மை (Treasury Management) பற்றி இங்கு பேசுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிதி நிர்வாகத்திற்குத் தகுதியான வல்லுநர் இல்லாவிட்டால் அரசின் நிதி நிலை குலையும்; நிதிநிலை குலைந்தால் அரசே நிலை தடுமாறும் என்பது குறள் கூறவரும் செய்தி ஆகலாம். இதனாலேயே வணிக முறையில் சொல்லாட்சிகள் அமைந்தன. பரிப்பெருமாள் கூறவரும் பொருளும் இதுவாக இருக்கலாம். 'சார்பிலார்க்கு நிலை இல்லை' என்ற தொடர்க்கு நிதி நிலை முறையாகக் காக்கப்படவில்லையானால் அது சீர் குலையும் என்று பொருள் கொள்ளலாம். பெரியார் துணை இல்லாத அரசின் நிதிநிலை ஆக்கமின்றிக் கெட்டுப் போகும் என்று கொண்டால் இக்குறளின் பொருள் தெளிவாகும்.

முதல் இடாதவர்களுக்கு ஊதியம் இல்லை; தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு நல்ல நிலை இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைகோடல் செய்யாதவன் கைமுதல் இல்லாதவன் கடைத்தேற முடியாதது போல் தளர்ச்சியுறுவான் என்னும் பாடல்.

பொழிப்பு

முதல் இடாமல் ஊதியம் இல்லை; தாங்கும் துணையில்லாதவர்க்கு நிலை இல்லை.