இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0447இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:447)

பொழிப்பு: கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரை ஆள்வாரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?

மணக்குடவர் உரை: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்.
இது கேடில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் - கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும் துணையாம் தன்மையாவது , தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தீயன கண்டால் அஞ்சாது இடித்துக் கூறும் துணையாம் தன்மை உடையாரைப் பெற்றிருக்கின்றவர்களைக் கெடுக்கும் வலிமையுடயவர் யார்? ஒருவருமிலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே கெடுக்கும் தகைமை யவர்.


இடிக்கும் துணையாரை ஆள்வாரை:
பதவுரை: இடிக்கும்-நெருங்கிச் சொல்லும்; துணையாரை-துணையாந் தன்மையுடையவரை; ஆள்வாரை-ஆள்கின்றவரை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரை;
மணக்குடவர் கருத்துரை: இது கேடில்லை யென்றது.
பரிப்பெருமாள்: குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லாரை;
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேடில்லை யென்றது. இதனானும் தம்மிற் பெரியராக மதித்து வைக்கப்படும் என்று கண்டு கொள்க.
பரிதி: சிரிக்கச்சொல்லிக் கொடுக்காமல் அடிச்சுப்புத்தி சொல்லுகிறபேர் வார்த்தை கேட்டுத் துணையாகக் கொண்டிருப்பாரை;
காலிங்கர்: மறந்தும் உணர்ந்தும் தகாதன செய்யுமிடத்து நமக்கு இது இயல்பல்ல என்று கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை;
பரிமேலழகர்: தீயன கண்டால் நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை உடையாரை இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசரை;
பரிமேலழகர் குறிப்புரை: தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம் தன்மையாவது, தமக்கு அவையின்மையும், அரசன்கண் அன்புடைமையும் ஆம்.

'குற்றங் கண்டால் கழறுந் தன்மை யுடையாரைத் தமக்குத் துணையாகக் கொண்டிருப்பாரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.பரிதி 'சிரிக்கச்சொல்லிக் கொடுக்காமல் அடிச்சுப்புத்தி சொல்லுகிறபேர்' என்று பேச்சு நடையில் எழுதியது படிக்கச் சுவையாக உள்ளது.

இன்றைய ஆசிரியர்கள் 'கடிந்துரைக்கும் நண்பர் உடையவரை', 'செவி வெறுக்கும்படி இடித்து அறிவுரை கூறும் பெரியாரைத் துணையாக ஏற்றுக் கொள்பவரை', 'தீயன கண்டால் அவற்றை ஒழிக்கும் வண்ணம் கடிந்து கூறும் தன்மையுடையாரைப் போற்றி வாழ்கின்றவரை', 'இடித்துக் கூறி அறிவு சொல்லும் பெரியவர்களைத் துணைவர்களாகக் கொண்டு குற்றமில்லாமல் நடந்து கொள்ளுகிறவர்களுக்கு' என்ற பொருளில் உரை தந்தனர்.

குற்றங் கண்டால் கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை என்பது இப்பகுதியின் பொருள்.

யாரே கெடுக்கும் தகைமை யவர்:
பதவுரை: யாரே-எவரே; கெடுக்கும்-அழிக்கும்; தகைமையவர்-பெருமையுடையவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்.
பரிப்பெருமாள்: கெடுக்குந் தகைமையுடையார் இவ்வுலகத்து யாவர்.
பரிதி: யாராலே கெடுக்கலாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று யாரேதான் வந்து கெடுக்கும் தகைமைப் பாட்டினை உடையார் யாரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
பரிமேலழகர் கருத்துரை: அத்தன்மை உடையார் நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர் ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம் . 'நெருங்கிச் சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர். இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.

'கெடுக்கும் தகைமைப் பாட்டினை உடையார் யாரும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரும் கெடுக்க முடியுமா?', 'எத்தகைய பெருமை வாய்ந்த பகைவரும் கெடுக்க முடியாது', 'கெடுக்கும் வலிமை உடையவர் உலகத்து யாவருளர்? (ஒருவரும் இல்லை.)', 'கெடுதி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இடித்துரைக்கும் அணுக்கம் கொண்ட பெரியாரும் தலைவனின் ஆளுதலுக்கு உட்பட்டவரே என்னும் பாடல்.

இடிக்கும் துணையாரை ஆள்வாரைக் கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது பாடலின் பொருள்.
'இடிக்கும் துணையாரை ஆள்வாரை' என்றால் என்ன?

யாரே என்ற சொல் யார்தான் என்ற பொருள் தரும்.
தகைமையவர் என்றதற்குப் பெருமை கொண்டவர் என்பது பொருள்.

தெரிந்தும் தெரியாமலும் தகாதன செய்யும் தலைவனிடத்து இது நமக்கு இயல்பல்ல என்று கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரை யாரும் கெடுக்க முடியாது.

தம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் தம் புகழ்பாட வேண்டும்; தம் சொற்களை அனைவரும் கேட்கவேண்டும் என்பது பொதுவாக நாடோள்வரின் விருப்பமாக இருக்கும். இத்தன்மையுடைய தலைவனின் குற்றங்களை யாரும் சுட்டிக் காட்ட முன்வர மாட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில், சுற்றியுள்ளவர்களும் தவறு செய்யத் துணிந்து விடுவதால் குற்றங்கள் மேலும் மிகும்.
குற்றம் காணும்போது, தன் நலத்துக்காக, அதை ஆதரிப்பவன் நல்ல துணயாக இருக்கமாட்டான். இச்சகம் மட்டுமே பேசும் சூழ்வார் தலைவனைத் தவறான வழியில் கொண்டு செல்வார்கள். தீயன நேரும் சமயங்களில் நெருக்கிக் கழறுபவரே உண்மையான துணையாவார். அவரே, உரிய நேரத்தில் தலைவன் என்றும் தயங்காது, அஞ்சாமல் அவனை இடித்துரைத்து நல்லாற்றுப் படுத்தும் பெற்றியார் ஆவர். இப்பெரியார் தானே தியன இல்லாமலிருந்து, தலைவனிடத்து அன்புகொண்டு, அவனை நெருக்கி அதாவது இவ்வாறு செய்யவேண்டாம் என இடித்துரைத்துத் திருத்த முயல்வார்கள். தலைவனிடம் தான் பேசுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பொதுநலனையே கருத்தில் கொண்டு நடுநிலையிலிருந்து, தவறுகண்டபோது நல்லன இவை தீயன இவை என எடுத்துச் சொல்வர்.

பெரியார் துணைக் கொள்வதின் சிறப்பைச் சொல்ல வந்த குறள்களுள் ஒன்றுதான் ,இதுவும். ஆயினும் இங்கே பெரியாரையும் ஒரு கட்டுப்பாட்டில் வைக்க வள்ளுவர் விரும்புகிறார் என்று தெரிகிறது. எனவே பெரியாருக்கு தலைவனை இடித்துக் கூற இடம் கொடுத்தாலும், அவரும் அளவு மீறிவிடாதபடி தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தலைவன் பெரியாரையும் 'ஆள' வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்துகிறார். இத்தகைய ஆளுமை கொண்ட தலைவனைக் கெடுக்குந் தகைமையுடையார் உலகத்து யாவர்? என வள்ளுவர் வினவுகிறார். ஒருவரும் இல்லை என்பது எளிதில் அறியப்படும்.

துணையாகும் பெரியாருக்குத் தலைவன் பேச்சுரிமை அளிக்கவேண்டும், அவ்வுரிமை அரசியல் நலத்திற்கு இன்றியமையாதது என்பதும் பெரியாரும் தலைவன் ஆளுகைக்கு உட்பட்டவரே என்பதுவும் இக்குறள் தெரிவிக்கிற செய்திகளாகும்.

'இடிக்கும் துணையாரை ஆள்வாரை' குறிப்பது என்ன?

'பெரியோரை ஆள்வாரை' என்பதிலுள்ள ஆள்வார் என்பதற்கு ஆளும்அரசர் என்றும் துணைக்கொள்வார் என்றும் உரையாளர்கள் பொருள் கூறியுள்ளனர்.
பெரியார் அரசின் வல்லமை, தண்டனை முதலியன கண்டு அஞ்சாது, தயங்காது, அவன் திருந்தும்படி இடித்துரைக்கும் பேராற்றல் உடையார். ஒருவர் தம்மையோ-தம் செயலையோ முறையன்று என்று மறுத்தால் ஆராய மனமில்லாமல் சொல்பவர் மீது சினம் தோன்றுதல் இயல்பு. பெரியாரின் இடித்துரை கேட்கும் தலைவன் அவ்வாறு சினம் கொண்டு, அவரை நீங்கிப் போகும்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகலாம். தலைவனைச் சுற்றியுள்ள மற்றவர் இச்சூழலைபத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலலாம். ஆனால் இவற்றையெல்லாம் புறந்தள்ளி தலைவன் தனது ஆளுகையை நிலைநாட்டுவான். இடித்துரை கேட்டாலும் முடிவு தலைவன் எண்ணப்படிதான் அமையும்.

இடித்துரை கூறிய பெரியாரையும் அடக்கி ஆள்தலாலேயே 'இடிக்கும் துணையாரை ஆள்வாரை' எனக் குறிப்பிட்டார் வள்ளுவர்.

குற்றங் கண்டால் கழறி நெருக்கும் பெரியோரை ஆள்வாரைக் கெடுக்கும் தகைமை உடையவர் யாவர்? (ஒருவரும் இல்லை) என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரும் தலைவனும் ஒருவருக்கொருவர் அளவு மிஞ்சிவிடாமல் சமநிலைப் படுத்தும் நிலை கூறும் பெரியாரைத் துணைக்கோடல் குறட்பா.

பொழிப்பு

கடிந்துரைக்கும் பெரியாரையும் ஆளுகை செய்பவரைக் கெடுக்கவல்லவர் யாவர்?