இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0446



தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:446)

பொழிப்பு: தக்க பெரியாரின் கூட்டத்தில் வேறுபட்டவனாய்த் தோன்றாதவாறு நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனைப் பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.
இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.

பரிமேலழகர் உரை: தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை - தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை, செற்றார் செயக் கிடந்தது இல் - பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: பெரியவர்களுடைய சகவாசமுள்ளவனாக அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடந்துகொள்ளுகிற ஒருவனை அவனுடைய பகைவர்கள் ஒன்றும் செய்யமுடியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல்.


தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச் :
பதவுரை: தக்கார்-தகுதியுடையர்; இனத்தனாய்-சேர்க்கையுடையவனாய்; தான்-தான்; ஒழுக-நடந்துகொள்ள; வல்லானை-திறமையுடையவனை .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தகுதியுடையா ரினத்தானாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனை;
பரிப்பெருமாள்: தகுதியுடையாக்கு இனவனாய்த் தானும் அவரோ டொக்க ஒழுகவல்லவனை;
பரிப்பெருமாள் கருத்துரை: தகுதியுடையாக்கு இனவன் ஆதலாவது, தன்னோடு ஒத்த வரிசை அவர்க்கு உண்டாக்குதலும் தன்னைக் கண்டாற் போல அவரை உலகத்தார் மதிக்கப் பண்ணுதலும். ஒக்க ஒழுகுதலாவது,.ஒத்த சூழ்ச்சி உடையனாதல்,
பரிதி: தக்கார் மிக்கார் தனக்குத் துணையாகக் கொண்டிருப்பவனை;
காலிங்கர்: தமது அறிவு மிகுதியால் தகாதனவற்றுக்கு இடிக்கத் தகும் சான்றோர் இனத்தனாய்க் கொண்டு இங்ஙனம் தான் ஒழுக வல்லவனை;
பரிமேலழகர்: தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை,
பரிமேலழகர் குறிப்புரை: தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார். ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல் வஞ்சித்தல்,

'தகுதியுடையவர் இனத்தானாய்த் தானும் நடக்கவல்லவனை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்கள் துணையாக ஒழுகுபவனை', 'தகுதி வாய்ந்த பெரியோரினத்தைச் சேர்ந்தவனாய்த் தானும நன்னெறியில் ஒழுக வல்லவனை', 'தக்க அறிவாளரது கூட்டத்தை உடையவனாய்த் தானும் அறிவோடு ஒழுக வல்லவனுக்கு', 'தக்காருடைய கூட்டத்தை உடையவனாய் தான் அரசியலில் அறிந்து ஒழுக வல்லவனை' என்ற பொருளில் உரை தந்தனர்.

தகுதி வாய்ந்த பெரியோரினத்தைச் சேர்ந்தவனாய்த் தானும் அரசியல் அறிந்து ஒழுக வல்லவனை என்பது இப்பகுதியின் பொருள்.

செற்றார் செயக்கிடந்தது இல்:
பதவுரை: செற்றார்-பகைவர்; செய-செய்ய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவனைப் பகைவரால் வெல்ல லொண்ணா தென்றது.
பரிப்பெருமாள்: பகைவர் செய்யக் கிடந்ததொருநெறி யில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: பகைவரால் வெல்ல ஒண்ணா தென்றது.
பரிதி: சத்துருக்களாலும் ஒன்றுஞ் செய்யப் போகாது என்றவாறு.
காலிங்கர்: வேறு பகைவரால் செய்து முடிப்பக் கிடந்தது யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
பரிமேலழகர் கருத்துரை: கூடினவரைப் பிரித்தல், வேறு பகை விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர் செய்யுந் துன்பங்கள் பலதிறத்¢த ஆயினும், தானும் அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண் அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்கிடந்தது இல்' என்றார்.

'பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர்கள் என்ன செய்ய முடியும்?', 'பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது', 'பகைவர்கள் செய்யக் கிடந்தது ஒரு கெடுதியும் இல்லை', 'பகைவர் ஒன்றும் செய்ய முடியாது' என்றபடி பொருள் உரைத்தனர்.

பகைவர்கள் செய்யக் கிடக்கும் கேடு ஒன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியார் சிந்தனையின் அலைவரிசையில் தானும் செயல்படும் தலைவனுக்குத் தீங்கு நேராது என்னும் குறள்.

தக்கார் இனத்தனாய்த் தானும் அரசியல் அறிந்து ஒழுக வல்லவனுக்குப் பகைவர்கள் செய்யக் கிடக்கும் கேடு ஒன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'தக்கார் இனத்தனாய்' குறிப்பது என்ன?

வல்லானை என்பதற்கு திறனுடையவனை என்பது பொருள்.
செற்றார் என்ற சொல் பகைவர் என்ற பொருள் தரும்.
செயக் கிடந்து என்ற தொடர் செய்யக்கூடியது என்று பொருள்படும். இங்கு செய்யக்கூடிய ஊறு என்பதைக் குறிக்கும்.

தகுதியுடைய பெரியாரைத் தமக்கு இணக்கமாய் இருக்கத்தக்கவராகக் கொண்டு நடக்கும் திறன் படைத்த தலைவனைப் பகைவர் ஒன்றும் செய்துவிடமுடியாது.

பெரியார் இனச் சிந்தனையைச் சேர்ந்து தானும் அவர்களையொட்டி நடந்து கொள்ளக் கூடிய தலைவன் பற்றி இக்குறள் பேசுகிறது. இக்குறளிலுள்ள 'தான்ஒழுக வல்லானை' என்றதற்குத் 'தானும் அறிந்து ஒழுக வல்ல அரசனை' என்று பரிமேலழகர் கூறுவது பெரியார்க்கு இணையாக நடத்தல் மட்டுமன்றித் தலைவன் தானும் மேல்வரும் செய்லகளை ஆராய்ந்து அறிந்து ஒழுகுவதை வலியுறுத்துகிறது என விளக்குவர்.
அரசியலில் அறிந்து ஒழுக வல்லவனாக இருப்பதாலும், பெரியாரை ஒத்த சூழ்ச்சி உடையவனாக தலைவன் ஆகி விடுவதாலும், பகைவரால் தலைவனுக்குத் தீங்கு செய்யக் கிடந்தது ஒன்றும் இல்லை என்பது கருத்து.

'தக்கார் இனத்தனாய்' குறிப்பது என்ன?

தக்கார் என்பதற்குத் தகுதியுடையவர் என்பது பொருள். இனத்தனாய் என்பது இனமானவன் என்ற பொருள் குறிக்கும். 'தக்கார் இனத்தனாய்' என்ற தொடர் 'தகுதி வாய்ந்த பெரியோரினத்தனாய்' என்று பொருள்படும்.

'தக்கார் இனத்தனாய்' என்ற தொடர்க்குத் 'தகுதியுடையார்க்கு இனவனாய்' (பரிப்பெருமாள்) என்றும் 'தக்காராகிய இனத்தை உடையவனாய்' (பரிமேலழகர் முதலியோர்) என்றும் இருபொருள் காணப்பெறுகின்றது.
இதில் தக்கார்க்கு எனின், மன்னன் தக்கார்க்கு இனமாய் விடுகிறார் எனப் பெரியோர் சிறப்புத் தோன்ற நிற்கிறது. தக்காராகிய இனத்தையுடையவனாய் என்னும்போது தலைவன் தக்காருக்குரைத்தவற்றை உடைமையாகக் கொள்கிறான் எனத் தலைவன் சிறப்புத் தோன்ற இருக்கிறது. இப்பகுதி தலைவன் கடமையுணர்த்த வந்தது; அதிகாரம் பெரியாரைத் துணைக்கோடலே; பெரியார்க்குத் துணையாதல் அல்ல; எனவே 'தக்காராகிய இனத்தை உடையவனாய்' என்ற கருத்தே வலியுறும். மேலும், இப்பொருளில் தான் ஒழுக-தானும் அறிந்து ஒழுக எனத் தலைவனுக்குத் தலைமை தந்ததும் நோக்கத்தக்கது (தண்டபாணி தேசிகர்).
'தக்கார்க்கு இனத்தனாய்' என்றது இயல்பாகத் தோன்றினும் 'தக்காராகிய இனத்தை உடையவனாய்' என்ற பொருள் அதிகார இயைபு சிறந்து நிற்கிறது..

தகுதி வாய்ந்த பெரியோரினத்தைச் சேர்ந்தவனாய்த் தானும் அரசியல் அறிந்து ஒழுக வல்லவனுக்குப் பகைவர்கள் செய்யக் கிடக்கும் கேடு ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெரியாரின் கூட்டத்தில் ஒன்றுபட்டு நடக்க வல்லவனை யாரும் தீண்ட முடியாது என்னும் பெரியாரைத் துணைக்கோடல் பாடல்.

பொழிப்பு

தகுதியுடைய பெரியோர் இனத்தைச் சேர்ந்தவனாய்த் தானும நடக்க வல்ல தலைவனைப் பகைவர்கள் ஒன்றும் செய்ய முடியாது.