இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0445



சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:445)

பொழிப்பு (மு வரதராசன்): தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல் காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்.

பரிமேலழகர் உரை: சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க.
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அறிஞர்களே அரசன் கண்கள் ஆதலின் அவர்களை ஆராய்ந்து அணைத்துக் கொள்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சூழ்வார்கண் ஆக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.


சூழ்வார்கண் ஆக ஒழுகலான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்;
பரிப்பெருமாள்: காரியமெண்ண வல்லார் தனக்குக் கண்ணாக வொழுகலான்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பகைவர் சூழ்ச்சியால் தேற்றமையால் அவரைத் தோள்வலியாற் கோடல் அரிதாம்; ஆகலான் சூழ்வார் கண்ணாக ஒழுகவேண்டும் என்றது.
பரிதி: தன்னிற் பெரிய பலமான அரசரைத்தான் உறவு கொள்ள வேண்டினால்;
காலிங்கர்: மறைமுதலாக இராசநீதிக்கு அடுத்த முறை நெறியும் நெறி அல்லதும் பிரித்து ஆராயினும், பெரியோரைத் தனக்கு அவற்றை விளங்கக் காட்டும் கண்ணாகக் கொண்டு ஒழுக வேண்டுதலான்;
பரிமேலழகர்: தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்; [தன் பாரம்- தனது அரசியற் பொறுப்பு] .

இப்பகுதிக்கு 'காரியம் எண்ணவல்லார் தனக்குக் கண்ணாக ஒழுகவேண்டும்'என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை கூறினார். 'அரசனை உறவு கொள்ள வேண்டினால்' என்பது பரிதியின் உரை. 'வேந்தன் மறை, நீதி நூல்களை கற்றிருந்தாலும், பெரியோர் அவற்றைத் தனக்கு விளங்கக் காட்டும் கண்ணாகக் கொண்டு ஒழுக வேண்டியிருப்பதால்' என்று காலிங்கர் மொழிந்தார். பரிமேலழகர் 'தன் அரசுரிமைப் பொறுப்பை அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தவேண்டி இருப்பதால்' என்றபடி உரை நல்கினார். 'சூழ்வார்' என்பதற்குப் பரிமேலழகர் ஒருவரே அமைச்சர் என்று விளக்குகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராய்ந்துரைக்கும் அமைச்சர் முதலிய பெரியோர்களைக் கண்ணாகக் கொண்டு அரசன் நடக்க வேண்டுதலின்', 'ஓர் அரசனுக்கு ஆராய்ந்து அறிவு சொல்லக் கூடியவர்களே அவனுக்கு வழிகாட்டும் கண்கள் போன்றவர்களானதால்', 'அமைச்சரைக் கண் ஆகக்கொண்டு அரசன் நடக்க வேண்டி இருத்தலால்', 'நன்மையை ஆராய்வாரைக் கண்ணாகக் கொண்டு அரசியல் நடைபெறலான்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஆராய்ந்துரைக்கும் அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு இயங்க வேண்டுவதால் என்பது இப்பகுதியின் பொருள்.

மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல்;
பரிப்பெருமாள்: அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொள்ள நினைப்பத் தானுஞ் சூழ்ச்சியாற் கொள்ளவல்லவனாதல்;
பரிதி: அவருக்கு இஷ்டமான பேரைத் துணையாகப் பண்ணிக்கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: உலகத்து மன்னனானவன் அங்ஙனம் அவற்றைப் பழுதறத் தேரும் பெரியோரைத் தான் ஆராய்ந்து கைக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. பரிமேலழகர் குறிப்புரை: இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.

மணக்குடவர் 'அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்லவல்லவனாதல்' என்று இப்பகுதிக்கு உரை பகன்றார். இவர் குறளின் பிற்பகுதியிலுள்ள 'கொளல்' என்ற சொல்லுக்கு 'கொலல்' என்று பாடம் கொண்டிருப்பர் போல் தெரிகிறது. பரிப்பெருமாள் 'அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொள்ள நினைப்பத் தானுஞ் சூழ்ச்சியாற் கொள்ளவல்லவனாதல்' என்றார். பரிதி 'அவருக்கு இஷ்டமான பேரைத் துணையாகப் பண்ணிக்கொள்வான்' என்று எழுதினார். காலிங்கர் 'மன்னன் பெரியாரை ஆராய்ந்து கைக்கொள்க' என்று பொருள் வழங்கினார். பரிமேலழகர் 'அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க' என்றபடி இப்பகுதிக்கு உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அத்தகையோரை அவன் ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும்', 'அந்த ஆலோசனைகளை அவன் தன்னை விடப் பெரியவர்களாக உள்ளவர்களைத் தேடியடைந்து அவர்களிடம் கேட்டுக் கொள்ளவேண்டும்', 'அவர்களை நன்றாக ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்ளல் வேண்டும்', 'அரசன் நன்மையை ஆராய்வாரையே ஆராய்ந்து துணையாகக் கொள்ளல் வேண்டும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஆட்சித்தலைவன் அப்பெரியோரை ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சூழ்வாரைக் கண்ணாகக் கொண்டு இயங்க வேண்டுவதால் ஆட்சித்தலைவன் அப்பெரியோரை ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'சூழ்வார்' யார்?

தனது உள்வட்டத்தில் உள்ளோர் தலைவனுக்குக் கண் போன்றவர்கள்.

சுற்றியிருப்பவர் அரசாட்சிக்குக் கண்போல் இருந்து உதவுபவராதலால், அப்பெரியோரை ஆட்சித்தலைவன் நன்றாக ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பை திறம்பட நடத்த நாட்டுத் தலைவனுக்கு அறிவுரை கூற அமைச்சர், படைத்தலைவர், புலவர், ஒற்றர், தூதர் போன்ற பெரியோர்கள் அவனுடைய அணுக்கத்தில் எப்போதும் இருப்பர். இவர்கள் அவனைச் சுற்றியிருப்பவர்கள் ஆதலால் சூழ்வார் எனப்பட்டனர். ஆட்சித் தலைவன் எல்லாவற்றையும் தானே கண்டு ஆராய முடியாது. எனவே இப்பெரியவர்களை நாடி, அவர்களின் ஆராய்ச்சியைப் பயன்படுத்திக் கொள்வான். இவர்கள் அவனுக்கு கண்ணாக இருந்து அனைத்தையும் கண்டறிந்து கூற அவன் ஆட்சி நடத்துவான். கண் ஒருவனது உடம்பைக் காத்தற்கு மிக்க கவனமாயிருப்பது போல, இப்பெரியார் தம்முடைய தலைவனைக் காப்பதில் மிக்க கருத்துடையாயிருப்பர். கண்ணில் குறையிருந்தால் நடப்பதில் குற்றம் உண்டாகும். பெரியார் வாயிலாக உலகத்தைத் தெளிந்து அரசு நடத்தப் படுதலால், ஆள்வோருக்கு கண்ணாயிருக்கிற பெரியார் அறிவும் அனுபவமும் திறமையும் வாய்ந்தவர்களாக இருக்கிறார்களா என்று ஆராய்ந்து அவன் அவர்களைத் தன் கிட்டே வைக்கவோ தள்ளவோ செய்வான்.

சூழ் என்ற சொல் சூழ்ந்துகொள், ஆராய் என்ற இரண்டு பொருளில் இக்குறளில் வந்துள்ளது. சூழ்ந்து கொளல் என்பதிலுள்ள சூழ் என்பதற்கு ஆராய் என்பது பொருள். சூழ்ந்து என்றது தன்னைச் சுற்றிக்கொள்பவர்களாக ஏற்றுக்கொள்ளுமுன் அவர்கள் சிறந்தார்களா என்பதை 'ஆராய்ந்து' தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.

நன்கு கற்ற அறிஞரைத் தன் சுற்றமாகக் கொள்வது பற்றிய வேறு சில பழம் செய்யுள்கள்:
ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்
கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்
சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ
கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே
(சீவக சிந்தாமணி - விமலையார் இலம்பகம் 28 பொருள்: ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும், அறநூல் கற்றவரைக் கண்போலக் கொள்வதும் மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப)
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்
உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்
மரையா துணைபயிரும் மாமலை நாட!
சுரையாழ் நரம்பறுத் தற்று.
(பழமொழி, 260 பொருள்: பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே!, நீதிநூல்களைக் கற்றவர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தானே ஒருவகையாகத் துணிதல், நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்.)

'சூழ்வார்' யார்?

'சூழ்வார்' என்ற சொல்லுக்குக் காரியமெண்ண வல்லார், நெறியும் நெறி அல்லதும் பிரித்துப் பழுதறத் தேரும் பெரியோர், அமைச்சர், மந்திரிகள், தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞர், தனக்காகச் சிந்தனைசெய்து ஆலோசனை கூறுபவர்கள், தம்மைச் சூழ்ந்திருப்பார், அறிஞர்கள், ஆராய்ந்துரைக்கும் அமைச்சர் முதலிய பெரியோர்கள், ஆராய்ந்து அறிவு சொல்லக் கூடியவர்கள், அறிவான் மிக்க பெரியோர், நன்மையை ஆராய்வார், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர் சேனைத்தலைவர் புலவர் முதலியவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

சூழ்வார் என்ற சொல்லில் உள்ள 'சூழ்' என்பது சூழ்ந்துகொள் அதாவது சுற்றியிரு என்ற பொருளில் வந்து சூழ்வார் என்பது சூழ்ந்துள்ளவர் (சுற்றியிருப்பவர்) எனப் பொருள்படும். இங்கு நாட்டுத் தலைவனைச் சுற்றியிருப்பவர்கள் சூழ்வார் எனப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு அறிவு கொண்ட பெரியோர்களாயிருப்பர். அவனுக்கு ஆராய்ச்சியுரையும் அறிவுரையும் கூறுபவர்கள் இவர்களே. அவர்களைக் கலந்து எண்ணியே ஆட்சித்தலைவன் அரசியல் முடிவுகளை அவன் எடுப்பான். சூழ்வார் என்றதற்குச் சூழ்ச்சித் துணையாவார் என்றும் பொருள் கூறுவர்.
இக்குறளில் இரண்டாவதாக வரும் 'சூழ்வார்' என்பதற்கு ஆராய்ந்துரைக்கும் பெரியார் என்பது பொருள்.

'சூழ்வார்' என்ற சொல் அறிவாலும் பயிற்சியாலும் சூழ்ச்சியாலும் தேர்ந்த பெரியோரைக் குறிக்கும்.

சூழ்ந்துள்ள அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு இயங்க வேண்டுவதால் ஆட்சித்தலைவன் அப்பெரியோரை ஆராய்ந்து துணையாகக் கொள்ள வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தானாக அறிந்திருந்தாலும் தலைவன் அரசாட்சியில் பெரியாரைத் துணைக்கோடல் வேண்டும்.

பொழிப்பு

கலந்தெண்ணும் அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு இயங்க வேண்டுவதால் தலைவன் அப்பெரியாரை ஆராய்ந்து துணையாகக் கொள்ளவேண்டும்