இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0444தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:444)

பொழிப்பு: தம்மை விட ஆற்றல் மிக்க பெரியவர் தமக்கு உற்றாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் தலையாயது ஆகும்.

மணக்குடவர் உரை: தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல், வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.

பரிமேலழகர் உரை: தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை.
(பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)

வ சுப மாணிக்கம் உரை: தம்மினும் பெரியவர் தம்மவராக நடப்பது எல்லா வன்மையினும் ஏற்றமானது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை.


தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் :
பதவுரை: தம்மின்-தம்மைக்காட்டிலும்; பெரியார்-பெருமையுடையவர்; தமரா-தமக்குச் சிறந்தாராக; ஒழுகுதல்-நடந்து கொள்ளல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்;
பரிப்பெருமாள்: தம்மின் மிக்க அறிவையுடையார் தமக்குத் தமராகி ஒழுகுதல்;
பரிதி: செல்வம், கல்வி, அறிவு தம்மிலும் பெரியாரைத் தமக்கு உறவாகப் ப்ண்ணிக்கொள்ளுதல்;
காலிங்கர்: குலத்தாலும் குணத்தாலும் கல்வியானும் தம்மின் சிறந்த பெரியோரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே;
பரிமேலழகர்: அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்;

இப்பாடலின் முதலடியிலுள்ள 'தம்மின் பெரியார்' என்பதை விளக்குவதில் தொல்லாசிரியர்கள் வேறுபடுகின்றனர். 'தம்மின் மிக்க அறிவுடையார் தமக்குத் தமராக ஒழுகுதல்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் கூறினர். 'செல்வம், கல்வி,அறிவு இவற்றில் தம்மைவிடப் பெரியாரை உறவாகப் பண்ணிக்கொள்லல்' என்று பரிதி எழுதினார். 'குலம், குணம், கல்வி ஆகியவற்றில் தம்மின் சிறந்த பெரியோரைத் துணையாகக் கொண்டு ஒழுகுதல்' என்றார் காலிங்கர். 'அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்' என்று பரிமேலழகர் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மைக் காட்டிலும் பெரியவர்களைத் தமக்குச் சிறந்தவராகக் கருதித் துணையாகக் கொண்டு அவர்வழி நடத்தல்', 'தம்மைக் காட்டிலும் அறிவு, அனுபவம் திறமை முதலியவற்றில் பெரியவர்கள் தமக்கு எப்போதும் துணைவராக இருக்கப் பெறுவது', 'அறிவினால் தம்மைப் பார்க்கிலும் பெரியவராய் இருப்பவரைத் தம் உற்றாராகக் கருதி, அவர் வழி நடத்தல்', 'அறிவு முதலியவற்றால் தம்மைவிட மிக்கார் தமக்குச் சுற்றத்தாராக அவர் வழி நடந்து கொள்ளுதல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமக்கு உற்றாராக நடந்துகொள்வது' என்பது இப்பகுதியின் பொருள்.

வன்மையுள் எல்லாம் தலை:
பதவுரை: வன்மையுள்-வலிமையுள்; எல்லாம்-அனைத்தும்; தலை-முதன்மை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
பரிப்பெருமாள்: வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி.
பரிப்பெருமாள் கருத்துரை: இவர்கள் உண்டாகவே யானை குதிரை, படையினால் உண்டான வலியினும் மிக வலியுடையவனாவன் என்றது.
பரிதி: வன்மைக்குள் வன்மை என்றவாறு.
காலிங்கர்: வன்மையுள் எல்லாம் தலைப்பாடுடைய வலியாவது என்றவாறு.
பரிமேலழகர்: அரசர்க்கு எல்லா வலி உடைமையினும் தலை.
பரிமேலழகர் கருத்துரை: பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.

'வலியானவை யெல்லாவற்றினும் தலையான வலி' என்றப பொருளில் பழைய ஆசிரியர்கள் ஈற்றடிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலிமைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய வலிமையாம்', 'தமக்குள்ள எல்லா வல்லமைகளிலும் சிறந்த வல்லமையாகும்', 'அரசருக்கு எல்லாவற்றிலும் முதன்மையான வலியாகும்', 'வலிமைகள் எல்லாவற்றுள்ளும் முதன்மையான வலிமையாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியார் உரிமை எடுத்துத் துணை நிற்பது ஒருவரது வலியினைக் கூட்டும் என்னும் குறள்.

தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமக்கு உற்றாராக ஒழுகுதல் தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது பாடலின் பொருள்.
ஒழுகுதல் என்றது பெரியார் ஒழுகுவதையா துணைக் கொள்வோன் ஒழுகுதலையா?

தம்மின் என்பதற்குத் தம்மைவிட என்பது பொருள்.
தமரா என்பது உற்றாராக என்ற பொருள் தரும்.
வன்மை என்ற சொல் வலிமை என்பதைக் குறிக்கும்.
தலை என்றது முதன்மை குறித்தது.

சென்ற குறள் அரிய செய்திகளுள் அரியதானது பெரியாரை உறவாகக் கருதி ஏற்றுக் கொள்வது என்றது. இப்பாடல் அப்பெரியார் துணைகொள்வானை உறவாக ஏற்றுக் கொள்வது முதன்மையான வலிமை ஆகிறது என்கிறது.
தம்மைவிட ஆற்றல் மிகுந்த பெரியார் உரிமையுடன் தம் உற்றாராக நடந்து கொள்ளுதல் தமக்கு உண்டான வலிமைகளில் எல்லாம் தலையாய வலியாகும். உரிமையுடன் என்றால் அப்பெரியவர்களே நம்முடைய செயல்களைத் தம்முடைய செயல்ககளாக முன்னால் நின்று நடத்துவதைக் குறிக்கும்.
'பெரியார் தமரா ஒழுகுதல்' என்றதற்கு பெரியோர்கள் தாமாகவே வந்து தம்முறவுபோல் நடத்தல் என்பார் மு கோவிந்தசாமி.
துணைக்கொள்வோனும் பெரியோரும் ஒருவருக்கொருவர் உற்றாராக நடந்து கொள்கின்றனர் என்பது கருத்து.

ஒருவற்குப் பொருள் வலி, படைவலி, அரண்வலி போன்று எத்துணை வலிமை இருந்தாலும் அவற்றுள் எல்லாம் முதன்மையானது பெரியாரின் துணை கிடைப்பதும் அப்பெரியாரும் உற்றாராக நடந்து கொள்வதும் ஆகும். பெரியோரின் உறவால் துணை கொள்வானது மன வலியும் (Moral Strength) மிகும். பெரியாரது துணை, வேண்டிய காலத்தில் அறிவையும், ஆற்றலையும், ஊக்கத்தையும், சூழ்ச்சித் திறனையும் தந்து துணையாய் நிற்பதால், வலிமையில் தலையாய வலிமையாயிற்று. படை முதலிய வல்லமைகளும்கூட, பெரியோரின் அறிவு, செயலாற்றுந் திறம் முதலிய கொண்டு இயங்கி மேலும் வலி சேர்ப்பதால், பெரியாரின் துணை வலிமையில் முதலிடம் பெறுகிறது.
இக்குறளுக்கு ஏற்ற காட்டாக கண்ணன் அர்ச்சுனனுக்குத் துணையானதைக் குறிப்பர்.

ஒழுகுதல் என்றது பெரியார் ஒழுகுவதையா துணைக் கொள்வோன் ஒழுகுதலையா?

ஒழுகுதல் என்பதற்கு 'வழிநின்று ஒழுகுதல்' என்று பொருள் கொண்டதால் 'பெரியார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்' என்று துணைகொள்வோன் பெரியோர் வழி நடத்தல் என்று பரிமேலழகர் உரை செய்தார்.
காலிங்கர் 'தம்மின் சிறந்த பெரியாரை இவ்வரசர்க்குத் துணையாகக் கொண்டு ஒழுகுதலே' என வரைகிறார்.
கு ச ஆனந்தன் 'பெரியார் தமர்' என்பதற்குத் 'தம்மைவிடப் பெரியவர்கள் தம்முடையவராக ஒழுகுதல்' என்றார்.
இவ்வாறாக ஒழுகுதல் அரசன் ஒழுகுதல் என்றும் பெரியார்வழி ஒழுகுதல் என்றும் வேறுவகையாக உரைகள் அமைந்தன.

இவ்வினாவிற்கு விடை தருவார் போல 'துணைக் கொள்வோன், பெரியோர் தம் பேணுதலானும் பிறவற்றானும் என்றும் தம்மவராகவே நடந்து கொள்ள ஒழுகுதல், என்ற கருத்தினதாகும் உரைகளே, இயலுக்கும் அதிகாரத்திற்கும் ஏற்புடையதாகும்' என்பார் தண்டபாணி தேசிகர். இதை வழிமொழிந்து 'பெரியவர் தம்வழி ஒழுகுவர் எனின் பெரியாரைத் துனைக் கோடல் என்னும் அதிகாரத்துக்குப் பொருந்தாமை காண்க' என்பார் சாரங்கபாணி.
ஆனால் இக்குறளை துணைகொள்வோன் வழி பெரியார் பின்பற்றி நடப்பதா அல்லது பெரியார் வழி துணைக்கொள்வோன் சொற்படி நடப்பதா என்று கொள்ளமல் வேறொரு இயல்பான முறையான பெரியார் துணைக்கொள்வானை உற்றாராக ஏற்று 'நடத்தல்' என்று பொருள் கொள்ளலாம். 'வழிநடத்தல்' என்று பொருள் கொள்ளத் தேவையிருக்கவில்லை.

தம்மைக் காட்டிலும் திறன் மிகக்கொண்டவர்கள் தமக்கு உற்றாராக நடந்துகொள்வது தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியார் தம்முடன் உரிமையுடன் நடந்து கொள்வது பெருவலியைக் கொடுக்கும் என்னும் பெரியாரைத் துணைக்கோடல் பாடல்.

பொழிப்பு

தம்மைக் காட்டிலும் திறம் மிக்கப் பெரியவர்கள் தமக்கு உற்றாராக நடந்துகொள்வது தமக்குள்ள எல்லா வலிமைகளிலும் தலையாய வலிமையாம்.