இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0443அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:443)

பொழிப்பு: பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

மணக்குடவர் உரை: செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே; தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.

பரிமேலழகர் உரை: பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)

இரா சாரங்கபாணி உரை: பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல் செயற்கரிய செயல்கள் எல்லாவற்றுள்ளும் அரிய செயலாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரியாரைப் பேணித் தமராக் கொளல் அரியவற்றுள் எல்லாம் அரிதே.


அரியவற்றுள் எல்லாம் அரிதே:
பதவுரை: அரியவற்றுள்-அருமையான பேறுகளுள்; எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்தற்கரியன வெல்லாவற்றினும் அரிதே;
பரிப்பெருமாள்: செய்தற்கரியன வெல்லாவற்றினும் செய்தலரிது;
பரிதி: அரிதான காரியம் ஒரு மலையையெடுத்து ஒரு மலைமேலே வைத்தல். ஒரு கடுகிலே ஏழுகடலை அடக்கல். இதிலும் பெரியது எது என்னில்;
காலிங்கர்: கீழ்ச் சொன்ன கல்வியும் கேள்வியும் அறிவுடைமையும் குற்றங் கடிதலும் பிறவும் ஆகிய செயற்கரிய எல்லாவற்றுள்ளும் பெரிதும் அரிது யாதுஎனின்;
பரிமேலழகர்: அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது.
பரிமேலழகர் குறிப்புரை: உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.

'செய்தற்கரியன எல்லாவற்றினும் செய்தல் அரிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரிய செயல்களுள் எல்லாம் அரியது', 'பெறுதற்கருமையான பாக்கியங்களிலெல்லாம் மிகவும் பெரிய பாக்கியம்', 'அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே அல்லது அரிய பேறுகள் யாவற்றினும் அரிதே', 'அடைவதற்குரிய செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் பெரியது ஆகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே என்பது இப்பகுதியின் பொருள்.

பெரியாரைப் பேணித் தமராக் கொளல்:
பதவுரை: பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-உவப்பன செய்து; தமரா-தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்.
மணக்குடவர் குறிப்புரை: பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரைக் கூட்டிக் கொள்கை.
பரிப்பெருமாள்: தம்மின் முதிர்ந்த அறிவுடையாரை விரும்பித் தமக்குச் சுற்றமாகக் கூட்டிக் கொள்ளுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பெரியாரைக் கொளலென்பது மந்திரி புரோகிதரை.அவரைத் தேடிக் கூட்டுதல் அரிது என்றது.
பரிதி: பெரியோரைத் துணைக்கோடல் என்றவாறு.
காலிங்கர்: முழுதும் உணர்ந்த பெரியோரை ஓம்பித் தமக்குத் துணையாகக் கோடல் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்.

'பெரியோரை ஓம்பித் தமக்குச் சுற்றமாகக் கொள்ளுதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்களைப் போற்றி உறவு கொள்வதே', 'பெரியவர்களை அண்டி அவர்கள் எப்போதும் நமக்கு ஆதரவாக இருக்கும்படி செய்து கொள்வது', 'பெரியவர்களைத் தழுவி அவரைத் தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல்', 'பெரியவர்களை விரும்பித் தமக்குரிய சுற்றத்தாராகக் கொள்ளுதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயறகரிய செய்வோரைத் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளல் மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படும்.

அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமராக் கொளல் என்பது பாடலின் பொருள்.
'தமராக் கொளல்' என்றால் என்ன?

அரியவற்றுள் என்பதற்கு அருமையானவற்றுள் என்பது பொருள்.
பேணி என்பது நலன்பாராட்டி என்ற பொருள் தரும்.

அரிய செய்திகள் பல உலகில் இருக்க, அவற்றில் மிகவும் அரியதானது பெரியாரின் உறவைப் பெற்றுக் கொள்வதே. செயற்கரிய செய்பவரே பெரியார் எனப்படுபவர். அவர்கள் கிடைத்தல் அரிது என்பது எளிதில் அறியப்படும். அத்தகையவர் நட்பைத் தேடி அடைந்துகொள்ளவேண்டும்.அப்படிப்பட்ட பெரியாரது உறவு ஏற்படுமாயின் அது அருமையிலும் அருமையான செய்தியாகும்.

வாழ்க்கையின் தலையான பொருள்களைக் குறள் பலவிடங்களில் கூறுகிறது. அதுபோலவே சிறந்த பொருள்களிலும் சிறந்த பொருள்கள் இவை என்ற பொருளில் நன்றென்றவற்றுள்ளும்.நன்றே... (குறள் 715), பேதைமையுள் எல்லாம் பேதைமை.... (குறள் 832) என்று சில இடங்களில் காட்டப்படுகின்றன. 'அரியவற்றுள் அரிது' என்று இங்கு கூறப்படுகிறது. அரியனவற்றுள் அரிது என்றதால் பெரியாரைத் துணைக்கோடலுக்கு வள்ளுவர் தரும் முக்கியத்துவம் நன்கு புலப்படும்.

செயற்கரிய செய்யும் பெரியோரை அண்டி அவர்களைத் தமக்கு உற்றாராக மேன்மைப்படுத்தி துணையாக்கிக் கொள்ளச் சொல்கிறது இப்பாடல்.

'தமராக் கொளல்' என்றால் என்ன?

இத்தொடர்க்கு 'தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல்', 'தமக்குரிய சுற்றத்தாராகக் கொள்ளுதல்' 'தமக்குச் சுற்றமாகக் கூட்டிக் கொள்ளுதல்', 'தமக்கு வேண்டியவர்களாக ஆக்கிக்கொள்ளுதல்', 'உறவு கொள்வது' 'தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல்', 'தமக்கு அணுக்கமானவராகக் இருத்திக்கொளல்' 'தம்மவராகக் கொள்ளுதல்' என்று பலவாறு பொருள் கூறினர். தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் (பரிமேலழகர்) 'தமக்கு உற்றாராகப் பெற்றுக் கொள்ளுதல்' (கா சு பிள்ளை) என்ற பொருள்கள் பொருத்தம்.

தமராக்கொளல் என்பது உற்றாராக (மேனிலைக்குக்) கொண்டுவருதல் என்ற பொருள்படும்..

அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைக்கோடலை அப்பெரியார் ஏற்றுக் கொள்வது அரிய செயலாகும் என்னும் பாடல்.

பொழிப்பு

அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியவர்களைப் போற்றித் தமக்குச் சிறந்தவராகத் துணையாகக் கொள்ளுதல்.