இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0441அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்

(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:441)

பொழிப்பு: அறம் உணர்ந்தவராய் முதிர்ந்த அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து, ஆராய்ந்து, கொள்ள வேண்டும்.

மணக்குடவர் உரை: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை - அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை, தேர்ந்து திறன் அறிந்து கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.)

இரா சாரங்கபாணி உரை: அறத்தின் கூறுகளை அறிந்து தன்னிலும் மூத்த அறிவுடையவரது நட்பைப் பெறுதற்குரிய வழியறிந்து ஆராய்ந்து அந்நட்பைக் கொள்ள வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன்அறிந்து தேர்ந்து கொளல்.


அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை:
பதவுரை: அறன்-நல்வினை; அறிந்து-தெரிந்து; மூத்த-முதிர்ந்த; அறிவுடையார்-அறிவுடையவர்; கேண்மை-உறவு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை;
பரிப்பெருமாள்: அறத்தின் பாடு அறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை;
பரிதி: கல்வி கேள்வி அறிந்து தன்மத்தின் வழி நிற்பார் உறவை;
காலிங்கர்: இவ்வாறு பெரியோரை இவ்வரசர் தமக்குத் துணை கொள்ளும் இடத்துப் பல அறநூல்களாலேஅறநெறிகளைஅறிந்து;
பரிமேலழகர்: அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை;
பரிமேலழகர் குறிப்புரை: அறநுண்மை நூலானேயன்றி, உய்த்துணர்வானும் அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார். மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும் முதிர்தல். அறிவுஉடையார் நீதியையும் உலகஇயலையும் அறிதலை உடையார்.

அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த அறிவுடையாரது கேண்மையை என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'பெரியோரைத் துணைகொள்ளும் இடத்து, அறநூல்களாலே அறநெறிகளை அறிந்து' என்று இம்முதலடிக்குப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது நட்பை', 'அறத்தின் இயல்பினை நன்கறிந்தவராய்த் தன்னைப் பார்க்கினுஞ் சிறந்த மூதறிவாளர்தம் நட்பினை', 'அறநெறியை அறிந்து முதிர்ந்த அறிவினையுடையாரது நட்பை', 'அறநெறியை அறிந்து தெளிந்த அறிவினை உடையவர் நட்பினை' என்ற பொருளில் உரை தந்தனர்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை என்பது முதலடியின் பொருள்.

திறன்அறிந்து தேர்ந்து கொளல்:
பதவுரை: திறன்-கூறுபாடு; அறிந்து-தெரிந்து; தேர்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று.
பரிதி: எந்த வகையினாலும் பண்ணிக்கொள்வார் என்றவாறு.
காலிங்கர்: மற்று இதற்குக் குறைபடாதவாறு தேர்ந்து கைக்கொள்க என்றவாறு.
பரிமேலழகர்: அரசன் அதனது அருமையை ஓர்ந்து, கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்.

அருமையை ஓர்ந்து, ஆராய்ந்து, கொள்க என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'இதற்குக் குறைபடாதவாறு தேர்ந்து கைக்கொள்க' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெரிந்து பெற்றுக் கொள்க', 'கொள்ளுமுறையை அறிந்து பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்', 'அதன் ஆற்றலை அறிந்து ஆராய்ந்து அடைய வேண்டும்', 'பெறுகின்ற முறையறிந்து ஆராய்ந்து கொள்ளுதல் வேண்டும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதன் ஆற்றலை அறிந்து ஆராய்ந்து பெற வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுபொருள் உரைப்போரைத் தேர்ந்தெடுப்பது பற்றிய பாடல்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை, திறன்அறிந்து தேர்ந்து கொளல் என்பது பாடலின் பொருள்.
'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்றால் என்ன?

மூத்த என்பதற்கு முதிர்ந்த என்பது பொருள்.
கேண்மை என்ற சொல் நட்பு, உறவு என்ற பொருள் தரும். இங்கு உறவு என்ற பொருள் பொருத்தம்.
கொளல் என்பது கொள்க என்ற பொருள்படும்.

இப்பாடல் இன்று நாம் அறிந்துள்ள அறிவுரையாளர் அதாவது ஆலோசகர் (Advisor) என்ற பெரியாரைப் பற்றியது. இதன் முதலடி அப்பெரியாரின் இயல்பு கூறுகிறது; இவர் அறிவும் முதிர்ச்சியும் அறமுமுடையவராகவும் அமைவது வேண்டப்படுகிறது. ஈற்றடி அவரது உறவைப் பெறும் திறன் அறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைமை பற்றிப் பேசுகிறது.

அறத்தின் சிறப்பை உணர்ந்தவர்களாகவும் பட்டறிவு (அனுபவ அறிவு) மிக்கவர்களாகவும் உள்ள பெரியவர்களே அறிவுரை கூறத் தகுதியானவர்கள். அறிவும் அறமும் உடைய பெரியோரின் அண்மையில் அவர்களின் அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வதால் சிறந்த நன்மை உண்டாகும்.
அறநூல்கள் கற்றிருத்தல் மட்டும் போதாது உலகநடைய உணர்ந்தவராக இருக்கவேண்டும் என்பதால் 'அறன்அறிந்து' எனப்பட்டது (பரிமேலழகர்). அப்படிப்பட்ட பெரியோரது உறவைத் திறனறிந்து மேற்கொள்ள வேண்டும் என்கிறது பாடல்.

'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்றால் என்ன?

பெரியோரைப் பிணிக்கும் வழியே 'திறன்அறிந்து தேர்ந்து கொளல்' என்பது பரிமேலழகர் கருத்து. ‘திறனறிந்து’ என்பதற்கு உறவைக் கொள்ளும் திறன் எனக்கொண்டு அதற்கு விளக்கங் கூறிய அவரது உரை நுணுக்கமானது. அவர் 'திறன் அறிதலாவது நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல் என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து செய்தல்' என்கிறார். அதாவது 'பெரியோர் நன்கு மதிக்கப்படவேண்டும், அவர்க்குத் தகுநிலை தரப்படவேண்டும், அவர் கூறும் எல்லையில் தாம் நிற்கவேண்டும், அவர் தொடர்ந்து நம்மிடம் நீடிக்கும்படி அவர்களிடம் ஒத்த அன்புடையராக நடத்தல்' எனச் சில வரையறைகளுடன் முறைமை விளக்குவார் பரிமேலழகர். இவற்றிற்கெல்லாம் பொருந்துவராக இருந்தால் பெரியோரை அறிவுரையாளராக ஏற்றுக் கொள்ளலாம் என்பது அவர் உரைக்கருத்து.

இத்தொடர் கொள்ளப்படும் பெரியோர் திறம் அறிந்து கொள்வதைச் சொல்கிறதா அல்லது கேண்மையைக் கொள்ளுந் திறன் அறிந்து கொள்வதைச் சொல்கிறதா?
யார் யாருடைய நட்பு எந்த எந்தக் காரியங்களுக்கு உதவும் என்ற திறங்களை அறிந்து ஆராய்ந்து பொறுக்கி அடைந்து கொள்வது என்றும் தலை இடை கடை யெனப் பெரியாரைத் தரம் அறிந்து ஆய்ந்து பார்த்துத் தழுவிக் கொள்க என்றும் இத்தொடர்க்குப் பொருள் கூறினர். திறன் தேர்ந்து அறிந்து கொளல் எனக்கூட்டித் திறன் தேர்தல்-கொள்ளும் வகைகள் பலவாதலான் இவர் எவ்வகையாற் கொள்ளத் தக்கார் என்பதைத் தேர்ந்து கொள்க என்றும் உரைத்தனர்.
கொள்ளப்படும் பெரியோர் தரத்தையும், கொள்ளுந் தரத்தையும் அறிந்து தேர்ந்து கொள்வது என்பது பொருளாகும்.

அறக்கூறுகளை அறிந்த முதிர்ந்த அறிவாளியினது உறவை, ஆற்றல் அறிந்து ஆராய்ந்து பெற வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியாரைத் துணைக்கோடல் முறைமை கூறும் பாடல்.

பொழிப்பு

அறமும் முதிர்ந்த அறிவும் உடையவரது உறவைப் பெறுதற்குரிய வழியறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.