இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0437



செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்

(அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்:437)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம் உய்யுந்தன்மை இல்லாமல் அழியும்.

மணக்குடவர் உரை: .....................மணக்குடவர் உரை இல்லை.................

பரிமேலழகர் உரை: செயற்பால செய்யாது இவறியான் செல்வம் - பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம் உயற்பாலது அன்றிக் கெடும் - பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
(செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சி இலக்குவனார் உரை: செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இறுகப் பற்றிக் கொண்டிருப்பான் செல்வம், பின் நிலைத்திருக்கும் தன்மையில்லாமல் வீணாகக் கெடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் உயற்பாலது இன்றிக் கெடும்.

பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவைகள்; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத் தக்கது, விலக்கத் தக்கது, நீக்கத் தக்கது, விடத்தக்கது; இன்றி-இல்லாமல்; கெடும்-அழியும்.


செயற்பால செய்யாது இவறியான் செல்வம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: செய்யும் முறைமை செய்யாதே ஈட்டுதற்கு விரும்பியவனும் அவனது செல்வமும்;
பரிதி: செய்யும் முறைமை அறிந்து செய்யாதான் செல்வம்;
காலிங்கர்: தனக்கு எய்திய பொருள் கொண்டு அதனால் செய்தற்பாலனவாகிய நல்வழக்கம் செய்யாத உலோபியவனது செல்வமானது;
பரிமேலழகர்: பொருளால் தனக்குச் செய்து கொள்ளப்படும் அவற்றைச் செய்து கொள்ளாது அதன்கண் பற்றுள்ளம் செய்தானது செல்வம்;
பரிமேலழகர் விரிவுரை: செயற்பால ஆவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செய்தலாவது பெருக்குதல்; அது 'பொன்னின் ஆகும் பொருபடை அப்படை, தன்னின் ஆகும் தரணி, தரணியில், பின்னை ஆகும் பெரும்பொருள், அப்பொருள், துன்னும் காலைத் துன்னாதன இல்லையே' (சீவ. விமலை. 35) என்பதனான் அறிக.

இப்பகுதிக்குச் 'செய்யும் முறைமை செய்யாதவனது செல்வம்' என்று பரிப்பெருமாளும் பரிதியும் உரை பகன்றனர். 'செய்தற்பாலனவாகிய நல்வழக்கம் செய்யாத உலோபியவனது செல்வம்' என்று காலிங்கர் கூற, 'தனக்குச் செய்து கொள்ளவேண்டியவற்றைச் செய்யாதானது செல்வம்' என்று பரிமேலழகர் உரை எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செய்வன செய்யாது சிக்கெனப் பிடித்தவனது செல்வம்', 'பொருளினால் தனக்குச் செய்து கொள்ளவேண்டியவற்றைச் செய்து கொள்ளாமல் அதன்மீது பற்றுள்ளம் கொண்டு செலவழிக்காமல் இறுகப்பிடிப்பானது செல்வம்', 'பொருளால் செய்துகொள்ளப்படும் வசதிகளை அமைத்துக் கொள்ளாது செட்டுச் செய்தவனது செல்வம்', 'செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் அசட்டையாக இருந்து வருகிறவனுடைய செல்வ வளம்' என்ற பொருளில் உரை தந்தனர்.

செய்ய வேண்டியவனவற்றைச் செய்யாது பொருள்மேல் பற்றுள்ளம் கொண்டவனது செல்வம் என்பது இப்பகுதியின் பொருள்.

உயற்பாலது இன்றிக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: உய்யும் பகுதியின்றிக் கெடும் என்பது. கெடும் என்பதனை இரண்டிடத்தும் கூட்டுக. இது, பிறர் பொருளை விரும்பினால் வருங்குற்றம் கூறிற்று. இதனாற் கெட்டான் புரூரவா என்பது
பரிதி: தன்னைச் சத்துருக்கன் கெடுக்காமல் தானே கெடும்.
காலிங்கர்: கெடுவழிப் பின் ஒருகால் இவனுக்கு உய்தற் பகுதியாம் குறியின்றி செலவறக் கெட்டுவிடும் என்றவாறு.
பரிமேலழகர்: பின் உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்.
பரிமேலழகர் விரிவுரை: அறம் செய்யாமையானும் பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' என்றும், இன்பப்பயன் கொள்ளாமையின் 'கெடும', என்றும் கூறினார். 'உயற் பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

இப்பகுதிக்குப் பரிப்பெருமாள் 'உயற்பாலதின்றிக் கெடும். இவறியான் கெடும்' என உரை காண்பார். பரிதி 'சத்துருக்கன் கெடுக்காமல் தானே கெடும்' என எழுதினார். காலிங்கர் 'உய்தற்பகுதியாம் குறியின்றி செலவறக் கெட்டுவிடும்' என்றார். பரிமேலழகர் 'உளதாம்பான்மைத்து அன்றி வறிதே கெடும்' என்று உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தப்பும் வழியன்றிக் கெடும்', 'அழிவுக்குத் தப்பி எஞ்சியிருக்கும் தன்மையின்றிக் கெட்டொழியும்', 'மிஞ்சியிருக்கும் பான்மை இல்லாமல் வீணிற் கெட்டு ஒழியும்', 'தப்பாமல் கெட்டுப் போகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

எஞ்சிநிற்கும் தன்மையின்றிக் கெட்டுப்போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்ய வேண்டியவனவற்றைச் செய்யாது பொருள்மேல் பற்றுள்ளம் கொண்டவனது செல்வம் எஞ்சிநிற்கும் தன்மையின்றிக் கெட்டுப்போகும் என்பது பாடலின் பொருள்.
'செயற்பால' குறிப்பது என்ன?

சேர்த்த செல்வத்தை நல்ல செயல்களுக்குச் செலவழிக்காது பதுக்குபவன் குற்றமுடையவனே.

செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இறுகப்பிடித்து வைப்பவனுடைய செல்வம் மீட்கமுடியாதபடி அழிந்துபடும்.
அவன் நல்ல வழியில்தான் பொருள் ஈட்டினான். ஆனால் அப்பொருளைச் செய்ய வேண்டுவனவற்றிற்குச் செலவழிக்காமல் கஞ்சத்தனத்துடன் தன்னிடமிருந்து நீங்காதவாறு வைத்துக் கொண்டிருக்கிறான். அச்செல்வம் காலம் செல்லச் செல்ல, எவருக்கும் பயனில்லாமல், எஞ்சியிருக்கும் தன்மையின்றிக் கெட்டொழியும்.
அறங்களைச் செய்யாதவர்களுடைய செல்வம் இழப்புக்குள்ளாகும் எனத் 'தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர்', 'ஒண்பொருள் கொள்வார் பிறர்' என்றெல்லாம் குறளில் பிற இடங்களில் கூறப்பட்டுள்ளன. இங்கு செய்யப்படவேண்டியவைகளை செய்யாது சேர்த்த பொருள் திரும்பப் பெறமுடியாதபடி தானாகவே கெட்டுப் போகும் எனச் சொல்லப்படுகிறது.
செல்வம் தேக்கத் தன்மையுடையதன்று. அது இடம் மாறிமாறி சென்று கொண்டிருப்பது. நல்லன செய்தல், துய்த்தல் ஆகிய செயற்பாட்டினை நோக்கியதே செல்வம், சரியாகப் பயன்படுத்தப்படும் செல்வம் மேலும் வளம் பெருக்கும். செல்வத்தை முதலீடு செய்து மேலும் பொருளாக்கம் பெறலாம். உதவி நாடினோர், வறியர் ஆகியோருக்குத் துய்ப்பன வழங்கி வாழ்விக்க வகை செய்யலாம்.

செல்வம் உய்யுந் தன்மை இல்லாமல் அழியும் என்கிறது இப்பாடல். சேர்த்த செல்வத்தைப் பின் பயன்படுத்தலாம் என்ற காரணம் கூறி செலவழிக்காதவனது செல்வம் பின் ஒன்றும் இல்லாமல் போய்விடும் என்பதை அவன் அறியவேண்டும். செய்யவேண்டியதைச் செய்யாது பொருளைச் சேர்த்து வைப்பவரின் செல்வம் ஒன்றுக்கும் உதவாது அழியும். பயன்படுத்தப்படாத கருவிகள் துருப்பிடித்து அழிந்து விடுவதுபோல, செலவிடப்படாத செல்வத்தை இழக்கப்பட்டதென்றே கொள்ளநேரிடும்; அது காக்கக் கூடியதாகாமல் வீணாகத் தாமே அழிந்துவிடும். செல்வ இழப்பு களவு போதல், இயற்கைச் சூழலால் அழிதல் ஆகியனவழியும் ஏற்படக்கூடும். ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் (கொன்றைவேந்தன், 4: பொருள்: வறியவர்க்குக் கொடாதவர் தேடிய பொருளைத் தீயோர் எடுத்துச் செல்வர்) என்பது ஔவையார் வாக்கு.

செல்வத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்கப்படாததும் ஒரு குற்றமே. அக்குற்றம் களையப்படவேண்டும் என்பதால் இப்பாடல் 'குற்றங்கடிதல்' அதிகாரத்தில் இடம் பெற்றது.
இக்குறள் பணத்தைச் சுழற்சிக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொருளியல் கொள்கையையும் உள்ளடக்கியது என்பதை உணரலாம்.

இப்பாடலில் 'உயற்பாலது இன்றி' என்று மற்றவர்கள் பாடமாகக் கொள்ள, பரிமேலழகர் 'உயற்பாலது அன்றி' எனக் கொண்டார். 'இன்றிக் கெடும்' என்பதே சிறந்த பாடமாகிறது என நிறுவுவார் தண்டபாணி தேசிகர்.

''செயற்பால' குறிப்பது என்ன?

''செயற்பால' என்றதற்குச் செய்யும் முறைமை, செய்யும் முறைமை அறிதல், செய்தற்பாலனவாகிய நல்வழக்கம், தனக்குச் செய்து கொள்ளப்படுபவை, செய்யத்தக்க நன்மைகள், தனக்கும் பிறர்க்கும் செய்து கொள்ளக்கூடிய நன்மைகள், செய்வன, தனக்குச் செய்து கொள்ளவேண்டியவை, (தன்னிடத்திலும் தன்னைச் சேர்ந்தவர்களிடத்திலும் குற்றம் இல்லாமல் இருக்க) செய்ய வேண்டியவைகள், செய்யவேண்டிய நற்செயல், பொருளால் செய்துகொள்ளப்படும் வசதிகள், செய்யவேண்டியவை, செய்து கொள்ளத்தக்க வசதிகள், அறப் பயன்பாடுகள், பொருளால் தனக்கும் தன் நாட்டிற்கும் ஆக்கமும் பாதுகாப்பும் பற்றிச் செய்யவேண்டியவை, நற்பணிகள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறள் தனிமனிதருக்கு மட்டுமன்றி ஆள்வோருக்கும் சொல்லப்பட்டது போன்று அமைந்துள்ளது. அரசன் நாட்டுக் காவலுக்கும் வளர்ச்சிப் பணிகளுக்கும் பொருட்செலவு செய்தே ஆகவேண்டும். பரிமேலழகர் மேற்கோள் காட்டியுள்ள சிந்தாமணிப் பாடல் இக்கருத்தைத் தொட்டுச் செல்கிறது. அது:
பொன்னி னாகும் பொருபடை யப்படை
தன்னி னாகுந் தரணி தரணியிற்
பின்னை யாகும் பெரும்பொரு ளப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.
(சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம், 35 பொருள்: இப் பொருளாலே போருக்குரிய படை வளர்ச்சியுறும்; அப்படையினாலே நாடு வளரும்; நாட்டால் பின் பெரும் பொருள் வளரும்; அப்பொருள் கைகூடும் அளவில் எய்துதற்கரியன வேறு எவையும் இல்லை.)
ஓர் அரசு தன்னிடமுள்ள பணத்தைச் செலவிடாமல் சேர்த்துச் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கக் கூடாது. அரசுக்கு வருவாய் மக்களிடமிருந்து வரும் வரிப்பொருள், சுங்கப்பொருள் போன்றவையே. மக்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை மக்கள் நலனுக்காகச் செலவழிக்க அரசுக்கு என்ன தடை? கருவூலத்தை நிரப்புவதே குறியாக இருந்த அரசர்கள் சேமித்த செல்வம் பகைவர்களால் கைப்பற்றப்பட்டு இழக்கப்பெற்ற வரலாறு நிறைய உண்டு.

இன்று, தனிமனிதன் தான் சேமித்த பணத்தை வங்கியில் போடாமல் பானைக்குள் பதுக்கிவைத்தால் அது வேறு எதற்கும் பயன்படாதலால் அப்படிப் வீட்டுக்குள்ளேயே வைத்திருப்பதுவும் குற்றமாகவே கருதப்படும்.
தேங்காயைப் பெற்ற நாய் அதைத் தனக்குப் பயன்படுத்த முடியாமலும், பிறர்க்குக் கொடுக்க மனமின்றியும், உருட்டிக்கொண்ட அலையும். அதுபோலத் தானும் துய்க்காமல் மற்றவர்க்குக் கொடுக்கவும் இல்லாமல் உள்ள செல்வமும் வீணே அழியும் என்று பழமொழிப் பாடல் ஒன்று சொல்கிறது:
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம், - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.
(பழமொழி நானூறு, 216 பொருள்: முழங்குகின்ற அருவிகளையுடைய மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே! பிறர்க்கீதலும், தான் அடைதலும் முதலியன அறியாதான் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய்பெற்ற தேங்காயை அஃது ஒக்குமல்லவா? )

தனிமனிதர் 'செயற்பால செய்யாமையாவன' என்பதற்குக் காட்டுகள்: தான் துய்ப்பதற்காகச் செலவழிக்காமலிருப்பது - இன்றியமையாத உணவுகளை உண்ணாதிருப்பது, மதிப்பை நிலைக்கச் செய்யாதிருப்பது போன்றன. பிறர்க்குச் செய்யவேண்டியவை செய்யாமையாவன: தொடர்புடையாரின் துன்பங்களை நீக்காதிருப்பது, இரப்பவர்க்கு உதவாதிருப்பது முதலியன.
அரசு 'செயற்பால செய்யாமையாவன' என்பதற்குக் காட்டுகள்: நாடு காவல், படை கூட்டல், செல்வம் பெருக்கல், வறியோர்க்குதவுதல் போன்றவை.
தேவநேயப்பாவாணர் செயற்பால-அறம், பொருள் இன்பங்கள் எனக் கொண்டு செயற்பால செய்யாமையை விளக்குகிறார்:

  • வளமைக்காலத்தில் அறவோர்க்கும் துறவோர்க்கும் வழக்கமாக அறப்புறம் விடுவதுடன், வறட்சிக் காலத்தில் வந்தவர்க்கெல்லாம் பருப்புச்சோறு, தயிர்சோறு, எலுமிச்சஞ்சோறு, ஊன்சோறு, முதலிய சோற்றுருண்டை வழங்கும் சிறுசோற்றுவிழாவும் அறத்தின் பாற் படுவதாம்.
  • ஒரு நாட்டிற்கு முதன்மையாகச் சிறந்தபொருள் உணவேயாதலின், உணவை விளைக்கும் உழவுத்தொழிலைப்பெருக்க நீர் நீலைகள் அமைப்பதும் வரி குறைத்தும் கடனுதவியும் உழவரை ஊக்குவதும், பொருட்பாற் படுவனவாம்.
  • பொருளாற் படைதிரட்டிப் பிறநாடு கைக்கொண்டு இறையும் திறையுமாகிய செல்வம் பெறுவது, பொருளாற் பொருள் செய்தலாம்.
  • புலவர், பாணர், கூத்தர், பொருநர் முதலியோர்க்கு நாள் தொறும் பரிசுவழங்குவது, செல்வப் பொருளாற் கல்விப் பொருள் வளர்த்தலாம்.
  • புதுப்புனலாட்டுவிழா, வேந்தன் (இந்திர) விழா முதலிய திருவிழாக்கள், பட்டிமண்டபம், வேட்டையாடல் முதவியவற்றிற்குச் செலவிடுவது இன்பத்தின் பாற்படுவதாம்.


செய்ய வேண்டியவனவற்றைச் செய்யாது பொருளை இறுகப் பற்றிக் கொண்டவனது செல்வம் மீட்க முடியாதபடி அழிந்துபோகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்யக் கூடியதைச் செய்யாது பொருட்பற்றுக் கொள்ளும் குற்றங்கடிதலைக் கூறும் பாடல்.

பொழிப்பு

செய்வன செய்யாது இறுகப் பிடித்துவைத்தவனது செல்வம் மீட்க இயலாதவாறு கெட்டுப்போகும்.