இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0430



அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:430)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

மணக்குடவர் உரை: அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்.
இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: அறிவுடையார் எல்லாம் உடையார் - அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர், அறிவிலார் என் உடையரேனும் இலர் - அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.
(செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: அறிவுடையார் வேறொன்றும் இல்லாதவராயினும் அவ்வறிவால் எல்லாம் உடையவராவர். அறிவில்லாதவர் எல்லாம் உடையவராயினும் அவ்வறிவின்மையால் ஒன்றும் இல்லாதவராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறிவுடையார் எல்லாம் உடையர் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்.

பதவுரை: அறிவுடையார்-அறிவுடையவர்; எல்லாம்-அனைத்தும்; உடையர்-உடைமையாகக் கொண்டவர்; அறிவிலார்-அறிவு இல்லாதவர்; என்-யாது; உடையரேனும்-உடையராயினும்; இலர்-இல்லாதவர்.


அறிவுடையார் எல்லாம் உடையர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவினை யுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாமுடையர்;
பரிப்பெருமாள்: அறிவினை யுடையார் யாதொன்றும் இலர் ஆயினும் எல்லாமுடையர்;
பரிதி: அறிவுடையாற்கு அருமையானது ஒன்றும் இல்லை; எல்லாப் பதார்த்தமும் உடையர்;
காலிங்கர்: கற்றும் கேட்டும் கசடு அற்ற அறிவுடையோரை மற்று எல்லாம் உடையரென்று உணரப்படும்;
பரிமேலழகர்: அறிவுடையார் பிறிதொன்றும் இலராயினும் எல்லாம் உடையராவர்;

'அறிவுடையார் யாதொன்றும் இல்லாராயினும் எல்லாம் உடையராவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையவர் அறிவால் எல்லாம் உடையர்', 'அறிவுடையோர் வேறொன்றும் இல்லாதவரானாலும் எல்லாம் உடையவர் ஆவர்', 'அறிவுடையார் எல்லா நன்மைகளையும் உடையார் ஆவார்', 'அறிவுடையவர்கள் மற்ற எது இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ளவர்களாவார்கள்' என்றபடி உரை தந்தனர்.

அறிவுடையார் எல்லாம் உடையராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவிலார் எல்லாப் பொருளும் உடையாராயினும் ஒரு பொருளும் இலர்.
மணக்குடவர் கருத்துரை: இஃது அறிவுடைமை வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அறிவில்லாதார் எல்லாப் பொருளும் உடையாராயினும் இலர்.
பரிப்பெருமாள் கருத்துரை: ஆதலான் அறிவுடைமை வேண்டுமென்றது.
பரிதி: அறிவில்லாற்கு ஏதுண்டு; ஒன்றுமில்லை என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் மற்று அங்ஙனம் தெளிந்த அறிவிலாதார் வேறு யாதானும் உடையரேனும் யாதும் இலர் என்றவாறு.
பரிமேலழகர்: அறிவிலாதார் எல்லாம் உடையராயினும் ஒன்றும் இலராவர்.
பரிமேலழகர் விரிவுரை: செல்வங்கள் எல்லாம் அறிவாற் படைக்கவும் காக்கவும் படுதலின், அஃது உடையாரை 'எல்லாம் உடையார்' என்றும், அவை எல்லாம் முன்னே அமைந்து கிடப்பினும் அழியாமல் காத்தற்கும் தெய்வத்தான் அழிந்துழிப் படைத்தற்கும் கருவியுடையர் அன்மையின், அஃது இல்லாதாரை, 'என்னுடயரேனும் இலர்' என்றும் கூறினார். 'என்னும்' என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான், அவரது உடைமையும் ஏனையாரது இன்மையும் கூறப்பட்டன.

'அறிவிலார் எல்லாம் உடையாராயினும் ஒன்றும் இலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலார் என்ன இருந்தும் இலர்', 'அறிவில்லாதவர் பிற எல்லாம் உடையவராய் இருந்தாலும் ஒன்றும் இல்லாதவர் ஆவர்', 'அறிவிலார் எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவரே', 'மற்ற எது இல்லாவிட்டாலும் அறிவில்லாதவர்கள் ஒன்றும் இல்லாதவர்களேயாவார்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அறிவில்லாதவர் எல்லாம் உடையவராயினும் ஒன்றும் இலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவுடையார் எல்லாம் உடையராவர்; அறிவில்லாதவர் என்னுடையரேனும் ஒன்றும் இலர் என்பது பாடலின் பொருள்.
என்னுடையரேனும் என்றால் என்ன?

ஒருவன் அறிவுடையோனாக விளங்குகிறான். வேறு என்ன உடைமை வேண்டும் அவனுக்கு?

அறிவுடையவர் எல்லா உடைமைகளையும் கொண்டவராவர்; அறிவில்லாதவர் எல்லா வளங்களும் உள்ளவராக இருப்பினும் ஏதொன்றும் இல்லாதவராகவே இருப்பர்.
எதனையும் ஆளுபவன் உடையான்; யாதொன்றும் ஆளத்தெரியாதவன் இல்லான் என உடைமைக்கும் உடைமை இன்மைக்கும் இலக்கணம் கூறுவர். அறிவுடையார் என்றது தம் அறிவை ஆளத் தெரிந்தவரையும் அறிவிலார் என்றது தம் அறிவை ஆட்சிப்படுத்த அறியாதவரையும் குறித்தன.
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருளை வைத்தே உடைமைகளை மதிப்பீடு செய்கிறோம். அறிவு இருந்தால்தான் பொருளை ஆக்கமுடியும்; உள்ள பொருளைக் காக்கவும் முடியும். இன்பம் துய்ப்பவனும் அறிவுடன் செயல்படாவிட்டால் துன்பத்தை எதிர்கொள்வான். எனவே பொருள், இன்பம் ஆகிய வாழ்வுடைமைகளுக்கு அறிவாட்சி தேவை. மாந்தர் தம் வாழ்க்கையில் உண்டாகும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கும் அவனது வாழ்வின் வளத்திற்கும் மேம்பாட்டிற்கும் அவனுடைய அறிவுவளம் இன்றியமையாது வேண்டுவதாகிறது. இதனாலேயே அறிவு பெற்றவர்கள் வேறொரு செல்வமும் இல்லாவிட்டாலும் எல்லாம் உடையவர்களே; அறிவு இல்லாதவர்கள் எவ்வளவு செல்வம் பெற்றிருந்தாலும் ஒன்றும் இல்லாதவர்களே என்கிறது இப்பாடல்.
அறிவு உடையவர்கள் இயற்கைச் செல்வம் அழிந்த போதும், அறிவின் துணை கொண்டு, வேண்டிய செல்வங்களைப் படைத்துக் காக்கும் கருவியுடையார் எனப் பரிமேலழகர் இக்குறளுக்கு விளக்கம் கூறினார்.

உடையார்முன் இல்லார்... (கல்வி 395) என்ற பாடலில் ‘உடையார்’ என்ற சொல் செல்வம்உடையார் என்ற பொருளிலே ஆளப்பட்டது. அதுபோல் இங்கும் 'எல்லாம் உடையர்' என்ற தொடர் எல்லாச் செல்வங்களும் உடையவர் என்ற பொருள் தருகிறது. அறிவிருந்து என்ன பயன், பொருளில்லையே எனச் செல்வங்களற்றவரை இகழ்வது உலகியல். ஆனால் வள்ளுவர் அறிவுடையவர்கள் எல்லாம் உடையவரே என்கிறார். அறிவுடைமை இருந்தால் அது எல்லாச் செல்வங்களும் உள்ளது போன்றது; அறிவில்லாதவர் மற்ற செல்வங்கள் எத்துணை கொண்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும் இல்லாதவர்கள் போல்தான். அறிவுள்ளோர், பொருள் இல்லாத நிலையையோ அல்லது பொருள் இழக்கும் சூழலையோ எதிர்ப்படினும், அதைத் தம் அறிவின் துணைகொண்டு சரி செய்துகொள்வர். ஆனால், பொருள் இருந்து அறிவில்லா நிலையில் அவர்கள் தம் உடைமைகளைக் காத்தல் அரிது. அந்நிலை சரி செய்ய முடியாத/ மாற்றீடு இல்லாத துன்ப நிலையே ஆகும்.

இக்குறட் கருத்துக் கொண்ட நாலடியார் பாடல் ஒன்று உள்ளது. அது:
நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம் ;
(நாலடியார், அறிவின்மை, 251)
(பொருள்: ஒருவனுக்கு நுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அந் நுட்ப அறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்கு மிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்;)
இதே கருத்துக் கொண்ட பழமொழிச் செய்யுள் ஒன்றும் இருக்கிறது:
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம்? பொறியின்
மணி பொன்னும், சாந்தமும், மாலையும், மற்று இன்ன
அணி எல்லாம், ஆடையின் பின்.
(பழமொழி நானூறு, 271)
(பொருள்: அறிவினாலாகிய பெருமை ஒருசிறிதும் பெறாத ஒருவன், செல்வத்தைப் பெற்றதனால் மாட்சிமையுடையதனால் அவனுக்கு என்ன பெருமையைக் கொடுக்கும்? சாணையாற் கழுவுதலையுடைய இரத்தினாபரணமும் பொன்னாபரணமும்,கலவையும் பூமாலையும் இவைபோன்ற பிற அணிகள் யாவும் அழகுறச் செய்வதில் உடையின் பின்னேவைத்து எண்ணத்தக்கனவாம்.) இதன் விளக்கம்: ஆடையில்லானை அணிகள் அழகுறச் செய்யாமை போல அறிவில்லானைச் செல்வம் பெருமையுறச் செய்யாது, செல்வம்உடையோரினும் அறிவுடையாரே சிறந்தோர் ஆவர்.

என்னுடையரேனும் என்றால் என்ன?

'என்னுடையரேனும்' என்றதற்கு எல்லாப் பொருளும் உடையாராயினும், வேறு யாதானும் உடையரேனும், எல்லாம் உடையராயினும், வேறு என்ன உடையவராக இருப்பினும், வெகு தனங்களையுண்டாயிருந்தாலும், எல்லாம் உடையவர்களேயாயினும், பிறவெல்லாம் பெற்றிருந்தாலும், என்ன இருந்தும், எல்லாம் உடையவராயினும், மற்ற என்ன இருந்தாலும், மற்றை எவற்றை உடையரேனும், பிற எல்லாம் உடையவராய் இருந்தாலும், எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும், எல்லா நலன்களும் உடையவராக இருப்பினும், எல்லாச் செல்வங்களும் பெற்றிருந்தும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு பொதுமையில் 'என்ன உடையவராக இருப்பினும்' என்றும் 'நலன்கள் உடையவராக இருப்பினும்' என்றும் பொருள் கூறப்பட்டிருப்பினும் பெரும்பான்மை உரையாளர்கள் இது 'எல்லாச் செல்வங்களையும் பெற்றிருந்தாலும்' என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதாகவே கொள்வர். நிலம், நீர், வாகனம், ஏவலாளர், பொன், பதவி போன்றன செல்வங்களாம். என்னுடையரேனும் அதாவது பிறஉடைமைகள் அனைத்தும் கொண்டிருந்தாலும், அறிவில்லாதவர் ஒன்றும் இலர் என்று கூறுகிறது இக்குறள்.

என்னுடையரேனும் என்னும் தொடர் '(செல்வம்) எது உடையவராக இருந்தாலும்' என்ற பொருள் தருவது

அறிவுடையார் எல்லாம் உடையராவர்; அறிவில்லாதவர் எல்லாம் உடையவராயினும் ஒன்றும் இலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவுடைமை பிற உடைமைக் குறைவை நிறை செய்யும்.

பொழிப்பு

அறிவுடையவர் எல்லாம் உடையவராவர்; அறிவில்லாதவர் என்ன இருந்தும் ஒன்றும் இல்லாதவராவர்