இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0428அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)

பொழிப்பு: அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையவரின் தொழிலாகும்.

மணக்குடவர் உரை: அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்; அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.

பரிமேலழகர் உரை: அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
(பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பாவம், பழி முதலிய அஞ்சத்தகும் செயலுக்கு அஞ்சாமை அறியாமையாம். அஞ்சத் தகும் செயலுக்கு அஞ்சுதல் அறிஞர் கடமையாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்.


அஞ்சுவது அஞ்சாமை பேதைமை:
பதவுரை: அஞ்சுவது-அஞ்சத் தகுவன; அஞ்சாமை-அஞ்சாமல் நிற்றல்; பேதைமை-அறியாமை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவர்க்கு அறிவின்மையாகும்;
பரிப்பெருமாள்: அஞ்சத் தகுவதனை அஞ்சாதொழிதல் ஒருவற்கு அறிவின்மை ஆவது;
பரிதி: பாவத்தின் வழி செல்லப்பயப்படும் அறிவுடைமை;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன இருவகை மரபின் புறத்தன எல்லாம் பெரிதும் அஞ்சத்தகும் அன்றே; மற்று அதனை அஞ்சாமை பேதைமை. எனவே, அதன்கண் சேறலே அறியாமையாவது.
பரிமேலழகர்: அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம்,
பரிமேலழகர் கருத்துரை: பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல்.

'அஞ்சத் தகுவனவற்றுக்கு அஞ்சாதொழிதல் அறிவின்மையாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை', 'நடுங்கக்கூடியதற்கு நடுக்கமில்லா திருத்தல் அறியாமையாகும்', 'அஞ்ச வேண்டியதனை அஞ்சாமலிருப்பது அறியாமையாகும்', 'அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் எதிர்ப்பது (தைரியமல்ல) முட்டாள்தனம்' என்றபடி உரை தந்தனர்.

பயப்பட வேண்டியவனவற்றிற்குப் பயப்படாமலிருத்தல் அறிவின்மையாம் என்பது இத்தொடரின் பொருள்.

அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்:
பதவுரை: அஞ்சுவது-அஞ்சப்படுவதற்கு; அஞ்சல்-பயப்படுவது; அறிவார்-அறிவுடையவர்; தொழில்-கடமை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
மணக்குடவர் கருத்துரை: மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.
பரிப்பெருமாள்: அஞ்சத்தகுவதனை அஞ்சுதல் அறிவுடையார் தொழில்.
பரிப்பெருமாள் கருத்துரை: மேல் அஞ்சாமை வேண்டு மென்றாராயினும் ஈண்டு அஞ்ச வேண்டுவனவற்றிற்கு அஞ்சுதல் அறிவென்றார்.
பரிதி: ஒருவற்கு ஏதொன்றும் கொடாமல் வஞ்சிக்கும் அறிவில்லாமையின் குணம் என்றவாறு.
காலிங்கர்: இனி அஞ்சத் தகுவதனைப் பெரிதும் அஞ்சுவது அறிவார் தொழில் எனவே அதனிற் செல்லாது மரபிற் சேறலே அறிவுடையாரது செய்தி என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்.
பரிமேலழகர் கருத்துரை: அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின், ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.

'அஞ்சத் தகுவனவற்றுக்கு அஞ்சுதல் அறிவுடையவர் தொழில்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் இவர்கள் மூவரும் இறைமாட்சியில் அஞ்சாமை வெண்டும் என்று சொல்லப்பட்டாலும் இடம் கருதி இங்கு அஞ்சல் வேண்டும் என்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை', 'அதற்கு நடுங்குதல் அறிவுடையார் செய்கை ஆகும்', 'அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடையார் தொழிலாகும்', 'அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது (கோழைத்தனமல்ல) அறிவுடைமை' என்றபடி பொருள் உரைத்தனர்.

பயப்படுவனவற்றிற்குப் பயப்படுதல் அறிவுடையவர் கடமை என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அஞ்சாமைக்கு எல்லைக் கோடு போடுகிறது இப்பாடல்.

பயப்பட வேண்டியவனவற்றிற்குப் பயப்படாமலிருத்தல் அறிவின்மையாம்; பயப்படுவனவற்றிற்குப் பயப்படுதல் அறிவுடையவர் தொழில் என்பது பாடலின் பொருள்.
ஏன் தொழில் என்று சொல்லப்பட்டது?

பேதைமை என்ற சொல்லுக்கு மடமை என்பது பொருள்.
அறிவார் என்பது அறிவுடையவர் என்ற பொருளில் சொல்லப்பட்டது.

அஞ்சாமை இயல்பான குணமாக இருக்க வேண்டும் (குறள் 382) என்றும் அச்சம் கயவர்களது ஒழுக்கநெறி (குறள் 1075) என்றும் அஞ்சாமையை உயர்த்தியும் அச்சத்தை இழித்தும் பேசுபவர் வள்ளுவர். இங்கு அஞ்சாமை மடமை என்றும் அஞ்சுதல் கடமை என்றும் கூறியுள்ளார். ஏன்?

அஞ்சாதே என்ற அறிவுறுத்தல் மூடத் துணிவுக்கு இடம் அளித்துவிடக்கூடாது என்பதற்காக அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்கிறது குறள். நன்மை செய்வதில் எவ்விதத் தடைகள் வந்தாலும் அஞ்சாமல் செயல்பட வேண்டும். ஆனால் தீமையையும் அஞ்சாது செய்தல் தகாது.
பயப்பட வேண்டியதற்குப் பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்யவும் குற்றச் செயல்களில் ஈடுபடவும் அஞ்சவே வேண்டும். பயம் சில சமயங்களில் தேவையானதும் ஆகும். அது அறிவற்றமுறையில் நாம் நடந்து கொள்ளாமல் இருக்கவும் உதவுகிறது. விளைவுகளை எண்ணிப் பார்க்காமல், 'வீரதீரச்' செயல்கள் என்றெண்ணி, தீய செயல்களில் ஈடுபடுவது அறிவற்ற தன்மைத்துதான். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் நிற்பது துணிவல்ல; அது முட்டாள்தனமே. எனவே தூற்றப்படும் செயல்கள், தீய செயல்கள் இவற்றைச் செய்வதற்கு ஒருவர் நடுங்காவிட்டால் அது மடமையாகும் என்று குறள் கூறுகிறது.
பயம் ஏற்படுவது வெறுக்கத்தக்கதல்ல; அது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரண் என்றும் நமக்கு நன்மையையும் செய்கிறது என்றும் எண்ண வேண்டும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது கோழைத்தனமல்ல; அது அறிவுடைமை ஆகும். அறிவுடையோர் அஞ்சுவனவற்றுக்கு அஞ்சுதலைக் கடமையாகவே மேற்கொளவர் என்கிறது இப்பாடல்.

ஏன் தொழில் என்று சொல்லப்பட்டது?

தொழில் என்பதற்குப் பொதுவாகச் செயல் என்றும் செய்யும் வேலை என்றும் பொருள் கொள்ளப்படும். இங்கு அது கடமையாகப் பின்பற்றப்படுதல் என்ற பொருளில் ஆளப்பட்டது.

பரிமேலழகர் 'அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார்' என்று விளக்கம் அளித்தார். அஞ்சுதல் இகழப்படவேண்டியதுதான். ஆனால் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சியே ஆகவேண்டும் என்பதை நிலைநாட்ட அதை அறிவுடையார் தொழில் என்று கூறி இகழ்ச்சியை நீக்கினார் வள்ளுவர். அதாவது அறிவுடையார் பயப்படவேண்டியதிற்கு பயப்படுதலை, தாம் மேற்கொண்ட வேலையாகவே, கடமையாகவே கொண்டு கருத்தாகச் செய்வர் என்பது பொருள்.
தேவநேயப் பாவாணர் தொழில் என்பதற்கு இயல்பு எனப்பொருள் கொண்டார்.

பயப்பட வேண்டியவனவற்றிற்குப் பயப்படாமலிருத்தல் அறிவின்மையாம்; பயப்படுவனவற்றிற்குப் பயப்படுதல் அறிவுடையவர் கடமை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அஞ்சுதலும் அறிவுடைமை.யே என்னும் குறள்.

பொழிப்பு

அஞ்சத்தகும் செயலுக்கு அஞ்சாமை அறிவின்மையாம்; அஞ்சத் தகும் செயலுக்கு அஞ்சுதல் அறிவுடையவர் கடமையாம்.