இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0423



எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

பொழிப்பு (மு வரதராசன்): எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும்.



மணக்குடவர் உரை: யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும் அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது.
இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.

பரிமேலழகர் உரை: எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
(குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)

குன்றக்குடி அடிகளார் உரை: எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. "யார்,யார் வாய்க் கேட்பினும்" என்றதால் சொல்லுபவரின் தகுதி பற்றி ஆராயாமல் அல்லது ஏற்காமல், கேட்கப்படும் செய்தி பற்றியே முடிவு கொள்க என்று உணர்த்தியவாறு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பதவுரை:
எப்பொருள்-எந்தப் பொருள்; யார்யார்-எவர் எவர்; வாய்-வாய்வழி (வாய்ச்சொல் குறித்தது), 'இடம்' என்றும் பொருள் கொள்வர்; கேட்பினும்-கேட்டாலும்; அப்பொருள்-அந்தச் செய்தி; மெய்ப்பொருள்-உண்மைப் பொருள்; காண்பது-காணுதல்; அறிவு-அறிவு.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும்;
பரிப்பெருமாள்: யாதொரு பொருளை யாவர் சிலர் சொல்லக் கேட்பினும்;
பரிதி: எந்தப் பொருளாகிலும் யார் வாக்கிலே கேட்டாலும்;
காலிங்கர்: யாதானும் ஒரு பொருளைக் கீழ்ச்சொன்ன தம் மரபின் உயர்ந்தோர்மாட்டுக் கேட்பினும் கேட்க; மற்று ஏனை இழிந்தோரிடத்துக் கேட்பினும் கேட்க;
பரிமேலழகர்: யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும்;

'எந்தப் பொருளாகிலும் யார் சொல்லக் கேட்டாலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும்', 'யாதொரு பொருளை எவரெவர் வாயாற் கேட்டாலும்', 'யாதொரு பொருளை எவ்வெவர் சொல்லக் கேட்டாலும்', 'எந்தப் பொருளை எவர் எவரிடம் கேட்டாலும்' என்றபடி உரை தந்தனர்.

எந்த ஒரு செய்தியைப் பற்றியும் யார் ஒருவர் சொல்லக் கேட்டாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பொருளினது உண்மையை யாராய்வது அறிவாவது.
மணக்குடவர் கருத்துரை: இது யாவர் சிலர் நட்டோராயினும் பகைவராயினும் அவர் கூறக் கேட்டவற்றில் தெள்ளியராய் ஆராய்ந்து துணித லறிவென்றது.
பரிப்பெருமாள்: அப்பொருளினது உண்மையை யாராய்வதே அறிவாவது.
பரிப்பெருமாள் கருத்துரை: யாவர் சிலர் நட்டாராயினும் பகைவராயினும் இது கேட்டவற்றால் தெளியாது ஆராய்ந்து துணிதல் அறிவென்றது.
பரிதி: அந்தப் பொருளை மெய்ப்பொருளாகக் காண்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: தாம் கேட்கின்ற பெரும் பொருளின்கண் சிறுதும் குலவேற்றுமை இல்லாமையான், அவருரைக்கும் பெரும்பொருளின் உண்மையைத் தெரியக் காண்பதும் மற்ற ஏனைய சிறுபொருளை விரும்பாது விடுத்தலுமே அறிவினது இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு.
பரிமேலழகர் விரிவுரை: குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல், நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.

இப்பகுதிக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'அப்பொருளின் உண்மையை ஆராய்ந்து தெளிய வேண்டும்' என்று உரை கூறினர். பரிதி 'அப்பொருளை மெய்ப்பொருளாகக் காண்பர்' என்கிறார். 'பொருளின் தன்மையை வைத்து உண்மை தெளிவதோ அப்பொருளை விடுத்தலோ அமையும்' என்பார் காலிங்கர். பரிமேலழகர் இவர்கள் மூவர் உரைக்கருத்துகளை இணைத்துத் தனது உரையில் 'அப்பொருளின் உண்மையான பயனைக் காணவல்லது அறிவு' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதன் உண்மையைக் காண்பதே அறிவு', 'அப்பொருளின் மெய்யான பயனைக் காண வல்லது அறிவு', 'அப்பொருளின் உண்மையான பயனைக் காணவல்லது அறிவு', 'அந்தப் பொருளின் உண்மையான இயல்பைக் காணக்கூடியதே அறிவாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அப்பொருளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து கண்டுகொள்வது அறிவு என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
எந்த ஒரு செய்தியைப் பற்றியும் யார் ஒருவர் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்ப்பொருளை ஆராய்ந்து கண்டுகொள்வது அறிவு என்பது பாடலின் பொருள்.
கேட்கும் பொருள்களுக்கெல்லாம் மெய்ப்பொருள் ஆய்தல் இயலுமா?

அறிவு இலக்கணம் கூறும் புகழ் பெற்ற குறட்பா.

எத்தகைய செய்தியாக இருந்தாலும் அதனை யார் சொல்லக் கேட்டாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அல்லது இகழ்ந்து தள்ளாமல், அதன் உண்மைப் பொருளை ஆராய்வதே அறிவாகும்.

யார்யார்வாய் என்பதற்கு 'யார்யார்வாய்ச்சொல் கேட்பினும்' அதாவது யாவர் யாவர் சொல்லக் கேட்பினும் என்றும் அல்லது 'யாரிடமிருந்தும்' அதாவது யாரிடமாகக் கேட்பினும் என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம். இவ்விரண்டும் கூறும் பொருள் ஒன்றே. யார்யார் என அடுக்குப் பன்மையில் வந்ததால் யார்யார்வாய்க் கேட்பினும் என்றது பொருள் ஒன்றாகவும், சொல்வோர் பலராகவும், அவர்கள் சொல்வன பலவகையாகவும் இருத்தலைக் குறித்தது என்பது பெறப்படும்.
எந்த ஒரு பொருளையும் யார் யாரிடம் கேட்டாலும் அப்படிக் கேட்டவாறே ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்பது பாடலின் பொருள். கேட்டல் என்று சொல்லப்பட்டாலும் யார் யாரிடம் கற்றாலும் அல்லது தெரிந்து கொண்டாலும் அல்லது எந்த நூலாசிரியர் எழுதியதைப் படித்தாலும் என்பதாகவும் கொள்ளலாம்.
கருத்துக் கூறுவர் எவராக இருந்தாலும் அவர்மீது கொண்ட பற்றின் காரணமாகவோ, மதிப்பின் காரணமாகவோ, விழைவின் காரணமாகவோ புகழ் பெற்றவர், செல்வாக்கு கொண்டவர், உயர்நிலையில் இருப்போர் எழில்நலம் மிக்கவர் என்பதற்காகவோ அவர் சொல்வதை ஏற்கக் கூடாது. நண்பராயிருப்பவர் ஒருவர், தாழ்ந்த பொருளைக் கூறினும், நட்பு கருதி அதை ஏற்கவேண்டாம்; அதுபோல் பகைவரேயானாலும் சிறப்பான உயர்ந்த பொருளைக் கூறின், அவர்களிடம் உள்ள வெறுப்பால், அதைத் தள்ளி விடாது ஏற்க வேண்டும். சொல்பவர் தரம் நோக்காது மெய்ப்பொருளை உணரவேண்டும் என்பது கருத்து.
பகுத்து அறியும் அறிவு பகுத்தறிவாகும். எந்த நிலையிலும், எதிலும், சிறந்தது எது, நல்லது எது, விழுமியது எது என்றெல்லாம் உணர்ந்து அறியும் அறிவே பகுத்தறிவு எனப்படுவது. நூலறிவாலும் கேள்வியறிவாலும் பெற்றதை நுணுகிப் பார்த்து உண்மையை அல்லது சரியானது எது என்று பகுத்து அறிந்து கொள்ளவேண்டும். யாரையும் எல்லாமறிந்தவராகக் கருதி அவர் சொல்வனவற்றிற்கெல்லாம் அடிமையாகாமல் அவர் கூறும் ஒவ்வொரு கருத்தையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவு செய்ய வேண்டுவது மெய்ப்பொருள் காண்பது ஆகும். ஒரே பொருளைப் பலரும் பலவிதமாகச் சொல்வர். அவற்றில் மெய்ப்பொருளைத் தேர்ந்து காணவேண்டும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட சுருங்கிய உலகில் உள்ளோம். இன்று முழு விடுதலை பெற்ற குடியரசு அமைப்பின் கீழ் நாம் வாழ்கிறோம். முன்னைவிட எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கூடுதலாக நமக்குக் கிடைத்துள்ளன. இந்தச் சூழ்நிலைகளில், பல்வேறுபட்ட சமயக் கோட்பாடுகள், அரசியல் கருத்துக்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு பகுதிகளிலிருந்து தோன்றி நம்மை நாளும் தாக்குகின்றன. செய்தித்தாள்கள், செய்தி இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையதளங்கள், கைபேசி போன்ற ஊடகங்களும் அளவின்றிச் செய்திகளை அள்ளித்தருகின்றன. அதனால் பயனுள்ள செய்திகளுடன் கவர்ச்சிப் பேச்சுக்களும் மயக்கும் வாதங்களும் மலிந்து வருகின்றன. இன்னபிற காரணங்களால் இன்று இக்குறள் இன்னும் பொருள் வாய்ந்ததாக அமைகிறது.
பொதுவாகத் தனி மனிதப் பற்றும், புகழ்ச்சியும் மிகையாக நம்மிடையே உண்டு; யார் சொல்லுகிறார் என்பதைத்தானே பார்க்கிறோமேயொழிய என்ன சொல்லுகிறார் என்பதை ஆராய்வதில்லை. சொல்லுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சொல்லுகிற கருத்திலே மெய்ப்பொருள் தன்மை இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சொல்பவர் தோற்றம் கண்டு மயங்காமல் சொல்லப்பட்டதன் மெய்ப்பொருளைக் கண்டு பயன்பெற வேண்டும்.
சமயக்கருத்துக்கள் எல்லாம் சில நம்பிக்கைகளை அடிப்படைகளாகக் கொண்டவை; வள்ளுவர் நம்பிக்கையை முதன்மையாகக் கொள்ளவில்லை; அவர் அறிவையே முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துபவர். எனவே கண்மூடித்தனமாக நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளவேண்டாம் என்பதை அறிவுறுத்தவும் வந்தது இப்பாடல் என்பர்.

புத்தரும் மெய்ப்பொருள் காண்பதற்கு முதலிடம் தந்தார். பௌத்த நூலில் காணப்படும் 'பிட்சுகளே! நன்றாக உருக்கியும் நறுக்கியும் கட்டளைக் கல்லில் உறைத்தும் பார்த்துப் பொன்னின் மாற்றினைச் சோதிக்கும் அறிஞனைப்போல என் சொற்களையும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்த பிறகுதான் நீங்கள் ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். என்னிடம் வைத்திருக்கும் மதிப்பு மரியாதை காரணமாக என் சொற்களை ஏற்க வேண்டாம்' என்ற பகுத்தறியச் சொல்லும் அவரது அறிவுரை இதற்குச் சான்று பகரும்.
கிரேக்க அறிஞர் சாக்ரடீஸும் 'பகுத்தறிவால் ஆராய்ந்து பார்' என்றார். குறள் ஆய்வாளர்கள் இக்குறளைத் திறன் செய்யும்போது சாக்ரடீஸை வள்ளுவருடன் ஒப்பு நோக்கத் தவறுவதில்லை. 'ஏன்' என்று கேட்பது பாவச் செயல் என்று கருதப் பழக்கப்பட்ட மனிதர்களை நோக்கி 'ஏன்' என்று கேள்வி கேட்கத் துணிய வேண்டும் என்று கூறினார் சாக்ரடீஸ். இக்குறளின் நோக்கமும் அதுதான்.
அறிவை முதன்மையாகப் போற்றும் வள்ளுவருடைய பண்பு சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த இங்கர்சால் என்னும் புகழ்பெற்ற பகுத்தறிவாளரை திருக்குறளிடத்து ஈர்த்தது. இங்கர்சாலின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து அவரால் மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வரப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று.

எந்தவொரு கோட்பாட்டிற்கும் அடிமைப்படாத, கட்டறுத்த உரிமை நிலை கொண்ட சிந்தனையாளரான வள்ளுவர் நம் அறிவுக்கும் தடைவிதிக்காமல் உண்மைப் பொருளைக் கண்டறிய வேண்டும் என்று அறிவுரை பகர்கின்றார். தனது கருத்தே உயர்ந்தது என்றும் எங்கும் அவர் சொல்லவில்லை. வள்ளுவர் சொன்னார் என்பதற்காக எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்பதும் இக்குறளால் பெறப்படும். எனவே திருக்குறள் கருத்துக்களிலும் மெய்ப்பொருள் காண்பதையே அவர் விரும்புவார். அவ்வாறு உண்மை கண்டறிவோரே வள்ளுவர் வழியில் நிற்பவராவர். அவருடைய முடிவுகளிலிருந்து வேறுபடுவதற்கும் முடிவினை மாற்றுவதற்கும் அவர் இப்பாடல் மூலம் நமக்கு உரிமை தந்திருக்கிறார். ஆனால் அதற்குத் தேவை இருக்காது என்பதைக் குறள் பயின்றோர் உணர்வர்.

கேட்கும் பொருள்களுக்கெல்லாம் மெய்ப்பொருள் ஆய்தல் இயலுமா?

வேறுபட்ட பல மக்களொடு நாம் அன்றாடம் பழகுகின்றோம். எண்ணற்ற செய்திகள் வெவ்வேறு இடங்களிலிருந்து நாள்தொறும் கிடைக்கப்பெறுகின்றன. பழகுவோர் அனைவரது கருத்துக்களையும் தமக்கு வரும் ஒவ்வொரு செய்தியையும் ஆராய்ந்து அதன்பின் ஏற்றுக் கொள்வது அல்லது விலக்கிக் கொள்வது என்பது இயலாத செயலே. உலகத்துப் பலர் நல்லவர்கள் என்றும், பல செய்திகள் உண்மையானவை என்றும், சொல் பெரும்பாலும் சொல்லியவன் உள்ளங் காட்டுவது என்னும் நல்லெண்ணம் கொண்டுதான் மக்கள் பலரும் வாழ்க்கை நடத்துகின்றனர். எனவே ஒவ்வொரு செய்தியையும் ஆய்வுக்குட்படுத்தத் தேவை இல்லை. ஆயினும் நம் வாழ்க்கைக்குப் பயன் தரக்கூடியவனவும் நம் வாழ்வுநிலையை பெரிதும் பாதிக்கக் கூடியவனவுமான பொருள்களிலே ஆய்தல் செய்ய வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

எந்த ஒரு செய்தியைப் பற்றியும் யார் ஒருவர் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்ப்பொருளை ஆராய்ந்து கண்டுகொள்வது அறிவு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பகுத்தறிந்து பொருள் கொள்ளுதல் அறிவுடைமையாம்.

பொழிப்பு

எந்தவொரு பொருளை யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே அறிவு.