இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0422



சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:422)

பொழிப்பு (மு வரதராசன்): மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

மணக்குடவர் உரை: உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது, தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது.
இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.

பரிமேலழகர் உரை: சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
(வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)

இரா சாரங்கபாணி உரை: மனத்தைப் போனவழியிற் போகவிடாமல் தடுத்துத் தீமையின் நீக்கி நன்மையிடத்துச் செலுத்துவது அறிவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சென்ற இடத்தால் செலவிடாது, தீது ஒரீஇ, நன்றின்பால் உய்ப்பது அறிவு.

பதவுரை: சென்ற-(உள்ளம்) போன; இடத்தால்-இடத்தில்; செலவிடா-போக விடாமல்; தீது-தீமை; ஒரீஇ- நீக்கி; நன்றின்பால்-நல்லதன் கண், நல்ல வழியில்; உய்ப்பது-செலுத்துவது; அறிவு-அறிவு.


சென்ற இடத்தால் செலவிடாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது;
பரிப்பெருமாள்: உள்ளஞ் சென்ற விடத்தே உடம்பையுஞ் செல்லவிடாது;
பரிதி: ஐம்புலன் சென்ற பாவத்தின் வழியிலே மனத்தை விடாமல்;
காலிங்கர்: (காற்றினுங் கடிய) வேகமுடைய நெஞ்சிற்கு இயல்பு ஆகலான், அங்ஙனம் அஃது ஓடியவழி ஓடவிட்டுக் கெடாது;
பரிமேலழகர்: மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது;
பரிமேலழகர் குறிப்புரை: வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது.

'உள்ளம் ஓடியவழி ஓடவிட்டு விடாது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சென்ற மனத்தை சென்றபடி விடாது', 'மனத்தால் அது போன போக்குகளிற் போகவிடாமல்', 'மனத்தை அது செல்லக் கருதிய இடத்திற்கு எல்லாஞ் செல்லவிடாது', 'உள்ளத்தைப் புலன்களின் வழியே செல்லவிடாமல்' என்றபடி உரை தந்தனர்.

உள்ளத்தை அது போன போக்குகளிற் செல்லவிடாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது.
மணக்குடவர் கருத்துரை: இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
பரிப்பெருமாள்: தீமையை நீக்கி நன்மைப் பகுதியிலே செலுத்துவது அறிவாவது.
பரிப்பெருமாள் கருத்துரை: இது காம நுகர்ச்சியின்கண் பழியும் பாவமும் பொருட்கேடும் வாராமற் செலுத்துவது அறிவென்றது.
பரிதி: நல்வழியிலே செலுத்துவது அறிவு என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனை ஒழித்து அவ்வுள்ளத்தை நீக்கி நன்மை (ப்பகுதியிலே வருந்தியும் செலுத்தவல்லது அறிவாவது) என்றவாறு.
பரிமேலழகர்: அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு.
பரிமேலழகர் கருத்துரை: குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.

'தீமையை நீக்கி நல்வழியிலே செலுத்துவது அறிவு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு', 'தீய காரியங்களுக்குப் போவதைத் தடுத்து நல்ல காரியங்களில் ஈடுபடச் செய்வதுதான் அறிவு', 'அதனைத் தீமையினின்று நீக்கி நன்மையின்பால் செலுத்துவதே அறிவாகும்', 'தீமையிலிருந்து நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே உண்மை அறிவின் இயல்பாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தீமையினின்று நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளத்தை அது போன போக்குகளிற் செலவிடா, தீமையினின்று நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும் என்பது பாடலின் பொருள்.
'செலவிடா' குறிப்பது என்ன?

ஒருவரது நன்னடத்தைக்கு அறிவே வழிகாட்டி.

மனம் சென்ற வழியெல்லாம் ஒருவனைச் செல்லவிடாமல் தீமையிலிருந்து நீக்கி அவனை நல்ல வழியில் செலுத்துவது அறிவாகும்.
பலவகையான எண்ணங்கள் வாழ்நாள் முழுதும் ஒருவரது மனத்தை தாக்கிய வண்ணமே இருக்கும். அவற்றுள் வேண்டாதவற்றை முன்னரே ஒதுக்கிக் கொள்வது மனத்துக்கு இயலாது. அறிவுதான் ஓய்வு ஒழிச்சலின்றி, எப்பொழுதும் விழிப்பொடு இருந்து மனத்தை அதன் போக்கில் விட்டுவிடாமல் அது தீயதைப் பற்றும்போது பிடித்து நிறுத்தி நல்ல வழியில் செலுத்த வேண்டும். மனத்தை எப்பொழுதும் நல்வழிப்படுத்தக் கடமைப்பட்டது அறிவு என்கிறது இப்பாடல்.

ஒருவனுடைய அறிவுடைமை அவனுக்குத் தீமை வருவதையும் தடுக்கும். அவன் பிறருக்குத் தீமை எண்ணுவதையும் விலக்கும். அதைப் போலவே அவனுக்கு நன்மை எது என்பதையும் காட்டும். பிறருக்கு நன்மை செய்யவும் தூண்டும். அறிவுள்ளவன் தீயவழியைத் தெரிவு செய்ய மாட்டான். தீயவழியில் செல்பவன் அறிவற்றவனாகவே கருதப்படுவான்.
வாழ்க்கைச் சூழல் ஒருவனுடைய ஆளுமை உருவாக்கத்துக்கும் நன்னெறி ஒழுகுதலுக்கும் ஒரு முக்கியமான காரணமாக அமைகின்றது. நல்ல சூழல் உதவியாக அமையாதபோதுகூட அவன் தன் அறிவுச் செயற்பாட்டை விழிப்பாக வைத்திருந்து, மனத்தைக் கட்டுப்படுத்தி அது நாடிச் செல்லும் தீயவழி போகவிடாது தடுத்து நிறுத்தி நல்லவழியில் ஒழுகுவானானால், ஆளுமையும் உயரும் வாழ்வும் மேம்படும்.

'செலவிடா' குறிப்பது என்ன?

செலவிடாது அதாவது செல்லவிடாது என்பது செலவிடா என்று குறைந்து நின்றது; உள்ளத்தைச் செல்லவிடாது என்பதைக் குறிப்பது; வினைக்கு ஏற்ப குறளில் இல்லாத 'உள்ளம்' வருவிக்கப்பட்டது.
விரும்பும் பொருளைக் கண்டால் மனம் அதை அடையத் தாவும். தவறான வழியிலும்கூட அதை அடைய எண்ணும், முயலும். அப்பொழுது அவனுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவனை நெறிப்படுத்துவது அவனுடைய அறிவாகும். மனம் வேறு அறிவு வேறு என்றும் மனத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றே அறிவு என்றும் உணர்ந்து மனத்தை ஒழுக்கி ஆள்வதே அறிவு. இவ்வாறு தீமையான வழியில் செல்லவிடாமல் நெறிப்படுத்துதலையே 'செலவிடா' என்பது குறிக்கிறது.
உள்ளம் விரும்பியோ விரும்பாமலோ தானே தீ நெறிக்கண் செல்லும்; அதனைத் தடுக்க வேண்டும் என்ற பொருளில் செல்லவிடாது என்கிறார் வள்ளுவர். ஆனால் மனமானது நல்லவழியில் தானே செல்லாது; அது அறிவால் செலுத்தப்படவேண்டும். இதை 'உய்ப்பது' என்ற சொல் உணர்த்திற்று.

உள்ளத்தின் பண்பை 'காற்றினுங் கடிய) வேகமுடைய நெஞ்சிற்கு இயல்பு' என்று கூறி விரைவில் செயல்படக்கூடிய உள்ளம் ஓடியவழி ஓடவிட்டுக் கெடாது நல்வழிப்படுத்த வேண்டும் என்று காலிங்கர் இக்குறட்கருத்தை விளக்குவார்.
பரிமேலழகர் இதை குதிரையின் ஓட்டத்திற்கு ஒப்பிட்டு குதிரைப் பாகன் எப்படி நிலம் அறிந்து அதைச் செலுத்துவானோ அதுபோல் மனம் செல்லும் வழியை நல்ல வழியில் மட்டுமே நடத்தவேண்டும் என உவமை காட்டி உரை எழுதினார்.
புறநானூற்றுச் செய்யுள் ஒன்றும் நல்வழி இட்டுச்செல்லும் வண்டி (அரசு) செலுத்துவோன்(வேந்தன்) திறன் பற்றிப் பாடியது. அது,
கால் பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்,
ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே;
உய்த்தல் தேற்றானாயின், வைகலும்,
பகைக் கூழ் அள்ளற் பட்டு,
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே.
(புறநானூறு 185 பொருள்: உருளையையும் பாரையும் கோத்து உலகின் கண்ணே செலுத்தும் காப்புடைய சகடந்தான், அதனைச் செலுத்து வோன் மாட்சிமைப்படின்; ஊறு பாடில்லையாய் வழியை இனிதாகச் செல்லும். அவன் அதனை இனிதாகச் செலுத்துதலைத் தெளியமாட்டானாயின், அது நாடோறும் பகையாகிய செறிந்த சேற்றிலே யழுந்தி, மிகப் பல தீய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கும்.)
இவை தெரிவிப்பன: மனம் காற்றைவிட வேகமாகச் செயல்படக்கூடியது; குதிரைப்பாகனும் வண்டி செலுத்துவோனும் திறமையாகச் செலுத்தி நல்வழியில் இட்டுப் பயணத்தை எவ்வாறு இனிதாக்குகிறார்களோ அதுபோல ஒருவன் தன் மனத்தை அறிவின் துணைகொண்டு ஆண்டு அதை நல்வழியில் செலுத்தவேண்டும்.

உள்ளத்தை அது போன போக்குகளிற் செல்லவிடாமல், தீமையினின்று நீக்கி நன்மையின்கண் செலுத்துவதே அறிவாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனம் போன போக்கில் ஒழுகுவது அறிவுடைமை ஆகாது.

பொழிப்பு

உள்ளம் போன போக்குகளில் செல்லவிடாமல், தீமையின் நீக்கி நன்மையிடத்துச் செலுத்துவது அறிவு.