இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0420செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:420)

பொழிப்பு: செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு வாழ்ந்தாலும் என்ன?

மணக்குடவர் உரை: செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.

பரிமேலழகர் உரை: செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் - செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர், அவியினும் வாழினும் என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: செவியால் நுகரப்படும் கேள்விச் சுவையினை அறியாதாராய், வாயால் உண்ணப்படும் உணவின் சுவையுணர்வை மட்டும் உடையார் இறந்தால் என்ன? உயிரோடு இருந்தால் என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்?


செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்:
பதவுரை: செவியின்-காதினால்; சுவை-சுவை; உணரா-தெரியாத; வாய்-வாய்; உணர்வின்-அறிவினையுடைய மாக்கள்-(பகுத்தறிவில்லாத) மக்கள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாக்கள்;
பரிப்பெருமாள்: செவியால் நுகரும் இன்பத்தை யறியாது, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள்;
பரிதி: செவியின் சுவையாகிய கேள்வியில்லாதார்;
காலிங்கர்: சான்றோரால் தம் செவியிற் சொல்லுவதாகிய கேள்விச் சுவையை நுகர்ந்தறியா மாந்தர் ஆகலான், வெறும் வாயுணர்வினையே ஓர் உணவாக மதித்திருக்கின்றனர்;
பரிமேலழகர்: செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய் உணர்வினையுடைய மாந்தர்;
பரிமேலழகர் விரிவுரை: செவியால் நுகரப்படும் சுவைகளாவன: சொற்சுவையும் பொருட்சுவையும். அவற்றுள் சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து: பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும். 'வாயுணர்வு' 'என்பது இடைப்பதங்கள் தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என விரியும். அவை கைப்பு. கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். வாயுணவின் என்று பாடம் ஓதுவாரும் உளர்.

செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மாந்தர் என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர். வாயுணர்வின் என்று மற்றவர்கள் கொள்ள காலிங்கர் வாயுணவின் என்று கொண்டார். வள்ளுவர் சொல்லாகிய மாக்கள் என்றதையே மணக்குடவர் குறிக்க, பரிப்பெருமாள் மக்கள் என்று அதை மாற்றி அமைத்தார். காலிங்கரும் பரிமேலழகரும் மாக்கள் என்றதை மாந்தர் என்று குறிப்பிடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செவியினால் கேட்டறியும் கல்வியறிவில் சுவைகண்டு, அதில் ஆர்வம் காட்டாது, வாயால் உண்ணப்படும் உணவிலேயே ஆர்வம் காட்டும் மக்கள்', 'செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள்', 'செவிச்சுவையறியாத வாய்ச்சுவை மட்டும் அறிகின்ற கீழ்மக்கள்', 'செவியினாலே நற்கல்வியின் நயத்தினை நுகரமுடியாது. நாவினாலே நல்ல உணவின் சுவையினை மாத்திரம் அறியக்கூடிய மாந்தர்கள்' என்றபடி உரை தந்தனர்.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராத, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் என்பது இத்தொடரின் பொருள்.

அவியினும் வாழினும் என்:
பதவுரை: அவியினும்-இறந்தாலும்; வாழினும்-வாழ்ந்தாலும்; என்-என்ன?.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
மணக்குடவர் கருத்துரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிப்பெருமாள்: செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? உலகத்தார்க்கு.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேள்வியில்லாதார் பிறர்க்குப் பயன் படாரென்றது.
பரிதி: செத்தால் என் இருந்தால் என் என்றவாறு.
காலிங்கர்: மாய்ந்தால் வரும் சேதமும் இருந்தால் வரும் இலாபமும் என் உலகோர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
பரிமேலழகர் விரிவுரை: செத்தால் இழப்பதும் வாழ்ந்தால் பெறுவதும்' இன்மையின், இரண்டும் ஒக்கும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்கேளாதவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

கேள்வியில்லாதார் உலகத்தார்க்கு பயன்படாராதலால் அவர்கள் செத்தால் வருந் தீமை யாது? வாழ்ந்தால் வரும் நன்மை யாது? என்றபடி மணக்குடவரும் பரிமேலழகரும் இத்தொடர்க்குப் பொருள் கூறினர். பரிதி அவர்கள் செத்தால் என்ன இருந்தால் என்ன என்கிறார். காலிங்கர் அவர்கள் செத்தால் ஒரு இழப்பும் இல்லை இருப்பதால் பயனும் இல்லை என்று உரை தருவார். பரிமேலழகர் சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன? என்று முன்னவர்கள் உரைகளைத் தொகுத்துக் கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செத்தால் என்ன? வாழ்ந்தால் என்ன?', 'வெந்தால் என்ன? இருந்தால் என்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகிற்கு வருவதென்ன?', 'செத்தாலும் வாழ்ந்தாலும் உலகத்திற்கு வருவதென்ன?' என்றபடி பொருள் உரைத்தனர்.

செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
கேள்விச் சுவை அறியார் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என்னும் குறட்பா.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராது, வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன என்பது பாடலின் பொருள்.
கேள்விச் சுவையற்றோரை மாக்கள் என்றும் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் வள்ளுவரைக் கூறவைப்பது எது?

செவியிற் சுவையுணரா என்ற தொடர்க்கு 'கேள்விச்சுவை தெரியாத' என்பது பொருள்.
வாயுணர்வு என்பது 'வாயால் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு' என்று பொருள்படும்.
மாக்கள் என்ற சொல் மன உணர்ச்சி இல்லாதவரைக் குறிப்பது; விலங்குப் பண்பு கொண்ட மக்கள் என்பது பொருள்.
அவியினும் என்பது அழிந்தாலும் என்ற பொருள் தரும்.

கல்லாதவனை விலங்கு என்றார் (குறள் 410) முன்பு; இங்கு கேள்வியைப் பற்றி உணராதவனை மாக்கள் என்று கூறி அவன் இருப்பதும் இல்லாததும் ஒன்றுதான் என இன்னும் மிகையாக வசை பாடுகிறார் வள்ளுவர்.
மாக்கள் இயல்பு என்ன? அவை நாளும் உண்ணும்; உறங்கும்; உறவுகொள்ளும். அவ்வளவுதான். அதற்குமேல் அவற்றிற்குச் சுவை ஒன்றும் தெரியாது. சொற்சுவை, பொருட்சுவை, இசைச்சுவை என்ற செவிக்கும் உள்ளத்திற்கும் இன்பம்தரும் ஒன்றையும் அவை அறியா. உணவால் வயிறு நிரப்பும் நாக்குச் சுவை ஒன்றையே எண்ணும். செவியுணவாகிய கேள்விச் சுவைகளை நுகரப் பயிலாமல் வெறும் வாயுணவின் ருசிகளை மட்டும் நுகர்ந்து, வீணே உண்டு கழிக்கும் மாக்கள் இங்கு உயிருடன் இருந்தால் என்ன? அவை செத்து மடிந்தால் என்ன? இரண்டும் ஒன்றுதான். இவ்வாறு செவியின் சுவை உணரா மாந்தரை இக்குறள் இகழ்ந்துரைக்கிறது.

கேள்விச் சுவையற்றோரை மாக்கள் என்றும் அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றும் வள்ளுவரைச் சினம் கொண்டு கூறவைப்பது எது?

முதல் வாசிப்பில் கேள்விச் சுவை மனிதனுக்கு அவ்வளவு தேவையா என்று படிப்போரைத் திகைக்க வைக்கும் மொழி கொண்டது இப்பாடல்.
முன்னர் செவிக்கு உணவு இல்லாதபோது சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உண்ணுவதை இனியநடையில் கூறிய வள்ளுவர் இங்கு வெறுமனே உண்டு உறங்கும் மக்களை விலங்குகள் என்று வசைபாடி அவ்வாயுணர்வின் மாக்கள் இருந்தும் என்ன பயன் என வெறுப்பும் சலிப்பும் கொண்ட நடையில் கடுமையாகத் திட்டுகிறார்.
குறளில் வேறு சில இடங்களிலும் அவர் சினப் பார்வை கொண்டு மக்களைப் பேய், பூமிக்குப் பாரம், நடைபிணம் என்றும் கூறியுள்ளார். மக்களை மாண்புறுத்தும் நோக்கம் மட்டுமே அறநெறியாளரான வள்ளுவர்க்கு உண்டு. அதனால் சிலவேளைகளில் சொல்லின் கனபரிமானம் மிகுந்து அதில் இனியது இன்னாது என்று பாராமல், நல்விளைவு ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் கடுஞ்சொற்களை ஆள்கிறார். வள்ளுவரின் இன்னா நடையைத் திருந்த முயலாத மக்களைப் பண்படுத்தும் நோக்கில் ஆளப்பட்டதாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

அறிவுள்ள மக்களாலே உலகம் நிறைந்திருக்க வேண்டும் என்று விரும்புவர் வள்ளுவர். அறிவு பெற கேள்வி ஒரு சிறந்த வாயிலாக உள்ளது. மிகக் கடினமின்றி கிடைக்கும் கேள்விச் செல்வம் பெற முயலாமல் வீணே இரைதேடி அலையும் மனிதரை அவர் வெறுக்கிறார்.
அறுசுவை உணர்ந்து அனுபவித்து உண்பது குற்றமில்லை. ஆனால் செவி உணவை நாடாமல், வாயுணர்வினை மட்டுமே உணவாக எண்ணும் மக்களை அவர் கீழாகப் பார்ப்பதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
செவியின் சுவை தெரியாமல் விலங்குகளைப் போல வாயின் சுவை மட்டுமே அவர்களுக்குத் தெரிவதால் இக் கூட்டத்தினை மாக்கள் என்று சாடுகிறார் வள்ளுவர். கேள்விஅறிவு பெறகூட வாய்ப்பற்றவர்கள் உண்டு என்பதை அறிந்தவர்தான் அவர். ஆனாலும் எப்படியாகிலும் கேள்விச்சுவையை அவர்களும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்று சொல்ல வருபவர், கேள்விச்சுவை என்ற ஒன்றைத் தெரியாமல், அதனால் கிடைக்கின்ற இன்பங்களை உணராமல், நாக்குக்கு கிடைக்கற சுவையை மட்டுமே எப்பொழுதும் நினைத்துகொண்டு வயிற்றை நிரப்பும் மனிதர்கள் செத்தால்தான் என்ன என்று கேட்கிறார் இப்பெரியார்.

செவியால் கேட்டறியும் சுவைகளை உணராத வாயால் நுகரும் இன்பத்தையறியும் மக்கள் செத்தால் என்ன? இருந்தால் என்ன? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கேள்விச் சுவை அறியாது எப்போதும் தின்றுகொண்டே இருப்பவர்கள் பூமிக்குப் பாரம் என்னும் பாடல்.

பொழிப்பு

செவிச்சுவை தெரியா வாய்ச்சுவை மக்கள் செத்தாலும் வாழ்ந்தாலும் என்ன?