இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0419



நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:419)

பொழிப்பு: நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

மணக்குடவர் உரை: நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார், தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.

பரிமேலழகர் உரை: நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார், வணங்கிய வாயினர் ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம். 'அல்லால்' என்பதூஉம் பாடம்.)

இரா சாரங்கபாணி உரை: நுட்பமான கேள்விச் செல்வம் பெறாதவர் நாவடக்கம் உடையவராதல் இயலாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது..


நுணங்கிய கேள்வியர் அல்லார் :
பதவுரை: நுணங்கிய-நுட்பமான; கேள்வியர்-கேள்வியுடையவர்; அல்லார்-அல்லாதவர்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுண்ணியதாகிய கேள்வியை யுடையாரல்லாதார்;
பரிப்பெருமாள்: நுண்ணியதாகிய கேள்வியுடையர் அல்லாதார்;
பரிதி: நுண்ணிய கேள்வி இல்லாதாற்கு;
காலிங்கர்: கல்வியாற் சிறந்த சான்றோர் உரைக்கும் நுண்ணியவாகிய கேள்வியை யுடையவரல்லது;
காலிங்கர் பதவுரை: நுணங்கிய என்பது நுண்ணிமை என்றது.
பரிமேலழகர்: நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்;
பரிமேலழகர் குறிப்புரை: கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது. 'அல்லால்' என்பதூஉம் பாடம்.

'நுண்ணியதாகிய கேள்வியுடையர் அல்லாதார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நுண்ணியதாகிய கேள்வியறிவில்லாதவர்', 'நுட்பமான கேள்வியறிவு இல்லாதவர்க்கு', 'நுண்ணிய கேள்வியுடையர் அல்லாதார்', 'நுட்பமான நூற்பொருளைக் கேட்டலில்லாதார்' என்றபடி உரை தந்தனர்.

நுட்பமாகக் கேட்காதவர் என்பது இத்தொடரின் பொருள்.

வணங்கிய வாயினர் ஆதல் அரிது:
பதவுரை: வணங்கிய-பணிந்த; வாயினர்-மொழியினையுடையவர்; ஆதல்-ஆகுதல்; அரிது-அருமையானது.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
மணக்குடவர் கருத்துரை: இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
பரிப்பெருமாள்: தாழ்ந்த சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை.
பரிப்பெருமாள் கருத்துரை: இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா ரென்றது.
பரிதி: வணக்கமுள்ள சொல் அரிது என்றவாறு.
காலிங்கர்: மற்று ஏனையோர் பலரிடத்தும் தாழ்ந்த சொல்லியராதல் பெரிதும் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: பணிந்த மொழியினை உடையராதல் கூடாது.
பரிமேலழகர் கருத்துரை: 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி - பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம்.

'தாழ்மையான சொல் கூறுவாராதல் அரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பணிவான சொற்களையுடையவராதல் அரிது', 'வணக்க ஒடுக்கமான வாய் இராது', 'பணிவான மொழியை உடையராக முடியாது', 'பணிவான சொற்களைக் கூறுதல் முடியாதவராவார்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பணிவான சொல் கூறுவோர் ஆதல் கடினம் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
காதைச் சீராகத் திறந்து வைத்தால், வாய்ச்சொல் அளவோடு வரும் என்னும் பாடல்.

நுட்பமாகக் கேட்காதவர் பணிவான சொல் கூறுவோர் ஆதல் அரிது என்பது பாடலின் பொருள்.
நுட்பமாகக் கேளாதவர் ஏன் தாழ்வான மொழி பேசமாட்டார்?

நுணங்கிய என்ற சொல்லுக்கு நுட்பமான என்பது பொருள்.
கேள்வியர் அல்லார் என்ற தொடர் கேளாதவர் என்ற பொருள் தரும்.
வணங்கிய என்ற சொல் 'பணிவுடன் கூடிய' அல்லது 'அடக்கமான' என்று பொருள்படும்.
வாயினர் ஆதல் என்ற தொடர் 'சொல்லை உடையவர்கள் ஆகுதல்' என்று விளக்கமுறும்.
அரிது என்ற சொல் அருமை அல்லது கடினம் என்ற பொருள் தரும்.

ஒருவன் செருக்கற்று, பணிந்த மொழியினையுடையவனாக விரும்பினால், நுண்ணிதாகிய கேள்விச் செல்வம் பெற வேண்டும் என்கிறது இக்குறள்.
நுட்பமான பொருள்களை தக்கவரிடத்துக் கேட்டறியாதவர் அறிவின்மையால் பணிவுதணிவு இல்லாமல் தம்மைத் தாமே வியந்து ஆணவத்துடன் பேசுவர்.
நுண்ணிய பொருள்களைக் கேட்டறிந்தவர்களுக்கு வணங்கும் தன்மையுள்ள பேச்சு தானாக வரும் என்பது கருத்து.

நுட்பமாகக் கேளாதவர் ஏன் பணிவாகப் பேசமாட்டார்?

நுட்பமான கேள்விச் செல்வமுடையவர் பணிவாகப் பேசுவார். அத்தகைய கேள்வி இல்லாதார் அடக்கமாகப் பேசமாட்டர்.
அவர்கள் தம்மை வியந்து தருக்கிய வாய்ச்சொல் கூறார் என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் முதலிய தொல்லாசிரியர்கள் இதற்கு விளக்கம் அளித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் இதனை விளக்கும்போது, 'பிறருடைய பேரறிவு அவர்கள் பேச்சால் வெளிப்படுதலின் அதனைக் கேட்கும்போது தம்மறிவின் சிறுமையும், பேசுபவர்கள் பெருமையும் புலனாவதால் கேட்பவர்க்குப் பணிவு விளையும்; அவர்கள் வணங்கிய வாயினர் ஆகிடுவர்' என்று எழுதினர்.
உள்ளத்தில் பதியும்படி அழுந்த ஆராய்ந்துணர்ந்து அறிவு நிரம்பிய பொருள்களைக் கேட்டவரது மனம் அடங்கி அமைதியுறும்; உள்ளம் ஒடுங்கியவர்கள் அளவாகவும் அறிந்தும் பேச விழைவர்; தருக்குச் சொல் தவிர்ப்பர்; அவ்விதம் நுட்பமான கேள்வி வாயிலாக அறிவு நிரம்பாதார் செருக்கித் தற்புகழ்ச்சி செய்வராதலால் அவர்களிடமிருந்து வணக்கமான சொற்கள் வராது; கேள்வி உடையார் பெரியோர் அறிவுடைமை கண்டு தம் சிறுமையை உணர்வார்களாதலால் பணிமொழி தானேவரும் என்பர் இவர்கள்.

பெரியோர் சொல்லுக்கும் செயலுக்கும் தம் மதிப்பினைப் புலப்படுத்தும் வகையில் கேட்போர் வணக்கம் அமைகிறது. அவர்களிடம் அடங்கிக் கேட்டால்தான் அறிவுச் செல்வத்தைப் பயன்தரும் வகையில் பெற முடியும்.
கேள்வி கேட்க விழைவோர், செய்திகளைத் தேடவும், அவைகளிலிருந்து உண்மையைக் காணவும், தமது தவறுகளைத் திருத்தவும் முனைப்பு உண்டாகும் போது, உள்ளம் அடக்கம் பெறுகிறது. தீர ஆராயாமல், கண்டபடி பிதற்றுவதை இந்த அடக்கம் தடுத்து விடுகிறது.
கேள்வியில் ஈடுபாடு இல்லாதவர் தமது அரைகுறை அறிவாலும் தாழ்வுணர்ச்சியாலும் தம்குறையை மறைப்பதற்காக உரக்கப் புன்மொழி பேசுவர். கேட்டல் இல்லாத இவர்களிடத்து வணக்கமான பேச்சை எதிர்பார்க்க இயலாது.
நுட்பமான பொருள்களை எல்லாம் கேட்டறிந்தவர்களுக்கு நாவடக்கத்தோடு பேசும் பண்பு இயல்பாக அமைந்துவிடுகிறது. செவி பண்படும்போது, சொல்லும் பண்படுகிறது.

கம்பர், அனுமன் கூறுவதாக உள்ள செய்யுள்ளில் வணங்கிய, நுணங்கிய கேள்வியன் என்னும் குறட்சொற்களை ஆண்டமை நோக்குதற்குரியது:
இணங்கினர் அறிவிலர் எனினும் எண்ணுங்கால்,
கணம் கொள்கை நும்மனோர் கடன்மைகாண்' என
வணங்கிய சென்னியன், மறைத்த வாயினன்,
நுணங்கிய கேள்வியன், நுவல்வதாயினான்
(கம்பராமாயணம் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப் படலம் 84)
(பொருள்: நம்மை அடைக்கலமாக வந்து அடைந்தவர்கள் அறிவில்லாதவர் என்றாலும்; நினைத்துப் பார்த்தால்; அவர்களை இனமாகக் கொண்டு சிறப்பித்தல் உங்களைப் போன்றவர்களுக்கு உரிய கடமையாகும் என்று வணங்கிய தலையை உடையவனாகவும்; கைகளால் மறைத்த வாயினை உடையவனாகவும் நுணுக்கமான கேள்வி அறிவு உடையவன் சொல்லுவானானான்.)

நுட்பமாகக் கேட்காதவர் பணிவான சொல் கூறுவோர் ஆகுதல் கடினம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆழ்ந்த கேள்வி இல்லை என்றால் ஒடுக்கமான வாய் இராது.

பொழிப்பு

நுட்பமான கேள்விச் செல்வம் பெறாதவர் அடக்கமாகப் பேசுவது அரிது.