இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0416



எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:416)

பொழிப்பு (மு வரதராசன்): எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்; கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

மணக்குடவர் உரை: எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க; அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும்.
இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
('எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: எவ்வளவாயினும் நல்லவற்றைக் கேட்க; அவ்வளவிற்குச் சிறந்த பெருமை உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.

பதவுரை: எனைத்து- எவ்வளவு; ஆனும்-ஆயினும்; நல்லவை-நல்லவை, நல்ல நூல்கள், உறுதிப் பொருள்கள், நல்லுரை, நல்ல பொருட்கள்; கேட்க-கேட்க வேண்டும்; அனைத்தானும்-அவ்வளவாயினும், அத்துணையாயினும்; ஆன்ற-நிறைந்த, நிரம்பிய, மிக்க; பெருமை-உயர்வு; தரும்-கொடுக்கும்.


எனைத்தானும் நல்லவை கேட்க:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க;
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்கால் நல்ல கேட்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: யாதொன்றாயினும் நல்ல நூல்களைக் கேட்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும், கேட்குங்காலத்து நல்ல கேட்க வேண்டுமென்றது.
பரிதி: என்றென்றும் ஏதாயினும் நல்லதே கேட்க;
காலிங்கர்: எவ்வளவைத்தேனும் சிறிது என்று இகழாது சான்றோருழைச் சென்று நல்லவற்றிலே சில கேட்டுக்கொள்க;
பரிமேலழகர்: ஒருவன் சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க;

இத்தொடரிலுள்ள எனைத்தானும் என்ற சொற்றொடர்க்கு எவ்வளவு ஆயினும் என்ற பொருளில் மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கொள்ள, பரிதியும் பரிப்பெருமாளும் எத்தன்மையாயினும் என்ற பொருளில் உரை கூறினர். காலிங்கரும் பரிமேலழகரும் எவ்வளவு சிறிதாயினும் என்று அளவைச் சிறிதாக்கியும் உரை கூறினர். பரிதி எனைத்தானும் என்பதற்கு என்றென்றும் ஏதாயினும் என்று பொருள் கூறுவர். நல்லவை என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் நல்ல நூல்கள் என்றும், பரிதியும் காலிங்கரும் நல்லவை என்றும், பரிமேலழகர் உறுதிப் பொருள்கள் என்று உரை காண்பர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்த அளவு முடியுமோ, அந்த அளவிற்கு, கற்றவர் கூறும் நல்ல கருத்துக்களைக் கேட்டு அறிக', 'ஒருவன் எந்த அளவிலாயினும் நல்லவற்றையே கேட்கவும்', 'சிறிதாக இருந்தாலும் நல்ல அறிவுரையை ஒருவன் பெரியோர்களிடம் கேட்க வேண்டும்', 'சிறிதளவு ஆயினும் நல்ல பொருளை ஒருவன் கேட்க வேண்டும்' என்றபடி உரை கூறினர்.

எவ்வளவு ஆயினும் நல்லதே கேட்க என்பது இத்தொடரின் பொருள்.

அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும்.
பரிப்பெருமாள்: அக்கேள்வி அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும்.
பரிதி: அது என்றென்றும் பெருமையே தரும் என்றவாறு.
காலிங்கர்: அது சிறிதேயாயினும் ஒருவர்க்குப் பெரிய உபதேசமாய் முடியும் ஆகலான் அமைந்த பெருமையவாகிய முத்தியைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று இகழற்க என்பதாம்.

அந்த அளவிற்கு நிறைந்த பெருமையைத் தரும் என்ற பொருளில் இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்கள் உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அந்த அளவிற்கு அது நிறைந்த பெருமையைத் தரும்', 'அக்கேள்வியறிவு சிறிய அளவினதாயினும் நிறைந்த வலிமை பெற ஏதுவாகும்', 'அக்கேள்வி அவ்வளவு சிறியதாக இருந்தாலும் நிறைந்த பெருமை தரும்', 'அது கேட்ட அளவில் சிறந்த பெருமையைத் தரும்' என்றவாறு உரை தந்தனர்.

அந்த அளவிற்கு அது நிறைந்த பெருமையைத் தரும் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும் நிறைந்த பெருமையைத் தரும் என்பது பாடலின் பொருள்.
எனைத்து, அனைத்து குறிப்பவை எவை?

எவ்வளவானாலும் கேள்; ஆனால் நல்லதையே கேள்.

ஒருவர் நல்லவற்றையே கேட்டறிய வேண்டும்- அது எவ்வளவு சிறியதாக இருப்பினும். அவர் கேட்ட அளவுக்கு அது நிறைந்த பெருமையைத் தரும்.
எவ்வளவுக்குக் கேட்கிறோமோ அவ்வளவிற்குப் பெருமை சேரும் என்கின்ற பாடல் இது. எவ்வளவாயினும் நல்லவற்றையே கேட்க வேண்டும்; செவிச்சுவையைத் தேர்ந்து கேட்க வேண்டும்; கேட்பவை சிறிதளவே ஆனாலும் நல்லவற்றையே கேட்க வேண்டும். செவிக்குச் சுவையானதும் அறிவார்ந்ததுமான செய்திகள் கிடைக்குமாறு கேட்டல் வேண்டும். உடம்பிற்கு ஒவ்வாத தீயஉணவை விரும்பாததுபோல, நச்சுச் செய்திகளையும் கருத்துக்களையும் கேட்கக் கூடாது. அப்பொழுது அவை ஒருவனுக்கு நிறைந்த பெருமை தரும்.

'எனைத்தானும் நல்லவை கேட்க' என்கிறது குறள். யார் எதைச் சொன்னாலும் கேட்க வேண்டாம். அறிவைப்பயன்படுத்தி அரிதின் முயன்று நல்லனவற்றை மட்டுமே கேள் என அறிவுறுத்தப்படுகிறது. நல்லவை என்பன சொற்சுவை, பொருட்சுவை கொண்ட பொருள்களாம். நல்லவற்றைக் கேட்கும் போது தான், கேட்பவர் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். நல்ல எண்ணங்கள் தோன்றினால் தான் நல்லவைகள் நடக்கும். நல்ல இசையும் கேட்கப்படவேண்டியவற்றில் சேரும். 'நல்லவை கேட்க' என்றதால் நல்லவையல்லாதன கேட்கக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டது.
எல்லாவற்றையும் கேட்பது சிறுபொழுதில் நன்மை பயந்து குறுகிய நேர இன்பமாக முடியும். எல்லாவற்றையும் என்பதற்கு, இன்றைய சூழலில், கண்டகண்ட மேடைப் பேச்சுக்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். நல்லவற்றைக் கேட்பதோ நீண்ட காலம் உள்ளத்தில் பதிந்து பயன் அளிக்கும். நல்லோர் அறிவுரைகள், கருத்துச் செறிவான இலக்கியச் சொற்பொழிவுகள், தரமான திரைப்படங்கள்/தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை பயன் அளிக்கக் கூடிய செவிச் செல்வங்களுக்கு எடுத்துகாட்டுகளாக அமையும்.

கல்வி-கேள்வி பற்றிய குறள்கள் மக்களின் பல்வேறு நிலைகள் நோக்கிச் சொல்லப்பட்டவை. ஒரு சொல்லே கூட ஒருவரது வாழ்க்கையில் மாற்றங்களுக்கு, வளர்ச்சிக்கு உதவியாக அமைய முடியும். மழை நீர்த்துளி சிறிது சிறுதாகச் சேர்ந்து பெருவெள்ளமாகிப் பயன்தரும் என்ற உவமை மூலம் பரிமேலழகர் இதை நயமுற விளக்கினார். பலதுளி பெருவெள்ளம் ஆவது போல் சிறிய சிறிய கேள்வியறிவும் சிறிது சிறிதாகச் சேர்ந்து கால ஓட்டத்தில் பேரறிவாய்ப் பெருகிப் பெரும் நன்மை அளிக்கும் என்பது கருத்து.

எனைத்து, அனைத்து என்ற சொற்களின் பொருள் என்ன?

எனைத்து என்ற சொல்லுக்கு 'எவ்வளவு' என்று ஒரு பொருளும் 'எத்தன்மை' என்று மற்றொரு பொருளும் உரையாசிரியர்களால் கூறப்பட்டன. முதல் உரையாசிரியரான மணக்குடவர் தனது சிறப்புரையில் 'எல்லாக்காலமுங் கேட்டிலனாயினும்' என்று குறிப்பிடுகிறார். இதனைத் தழுவி பரிமேலழகர் தனது விரிவுரையில்: ''எனைத்து' , 'அனைத்து' என்பன கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன' என்று உரை எழுதினார். இவர்கள் உரைப்படி எனைத்துஆயினும் என்பது 'ஒரு கருத்தை எவ்வளவு கேட்டாலும், எக்காலம் கேட்டாலும்' என்ற பொருள் தரும்.
அதுபோலவே 'அனைத்துஆயினும் பெருமை' என்பதும் 'அவ்வளவிற்குப் பெருமை என்றும் எல்லாக் காலங்களிலும் பெருமை' என்று பொருள் கொண்டனர்.
எனவே எனைத்து அனைத்து என்னும் அளவுச் சொற்கள் பொருளளவுங் கால அளவும் பற்றியன.
எவ்வளவு என்பது எவ்வளவு சிறிதாக இருந்தாலும் என்றவாறு உணர்த்தியதாகக் காலிங்கர் குறிப்பிட்டார். அதனைத் தழுவி பரிமேலழகரும் 'சிறிதாயினும் கேட்க' என்று சொன்னார். சிறிதளவேயாயினும் நல்லவற்றைக் கேட்டுக்கேட்டு நல்லறிவு பெறவேண்டும் என்பது இவர்தம் பொருள்.

எவ்வளவு ஆயினும் நல்லதே கேட்க அந்த அளவிற்கு அது நிறைந்த பெருமையைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தேர்ந்து கேள்வியுறுதல் சிறப்புச் சேர்க்கும்.

பொழிப்பு

எவ்வளவாயினும் நல்லவற்றைக் கேட்க; அவ்வளவிற்குச் அவை நிறைந்த பெருமை தரும்.