இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0413



செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

(அதிகாரம்:கேள்வி குறள் எண்:413)

பொழிப்பு: செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.

மணக்குடவர் உரை: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.

பரிமேலழகர் உரை: செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
(செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்', என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: செவியுணவாகிய கேள்வியுடையவர் இவ்வுலகத்தவராயினும் அவியுணவினைக் கொள்ளும் தேவரோடு ஒப்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செவியுணவின் கேள்வி உடையார் நிலத்து அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர்.

பதவுரை: செவி-காது; உணவின்-உணவாகிய; கேள்வி-கேட்டல்; உடையார்-உடைமையாகக் கொண்டவர்; அவிஉணவின்-வேள்வித் தீயில் சொரியப்படும் உணவினையுடைய; ஆன்றாரோடு-அறிவுடையரோடு, பெரியோரோடு (இங்கே பெரியார் தேவர்களைக் குறித்தது); ஒப்பர்-நிகர்ப்பர்; நிலத்து-நிலஉலகின்கண், பூமியின்கண்.


செவியுணவின் கேள்வி உடையார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர்;
பரிப்பெருமாள்: செவிக்கு உணவு போன்ற கேள்வி உடையவர்கள்;
பரிதி ('செவியுணர்வின்' பாடம்): செவியிற் கேள்வியுள்ளபேர்;
காலிங்கர்: இவ்வையகத்துத் தம் செவிக்கு அமுதமாகிய கேள்வியினை உடையார் யாரை ஒப்பாரெனின்;
பரிமேலழகர்: செவியுணவாகிய கேள்வியினை உடையார்,
பரிமேலழகர் குறிப்புரை: செவி உணவு- செவியான் உண்ணும் உணவு. அல்வழிக்கண் வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது.

'செவிக்கு உணவு போன்ற கேள்வியை யுடையவர்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். பரிதி 'செவியிற் கேள்வியுள்ளவர்' என்றும் காலிங்கர் 'செவிக்கு அமுதமாகிய கேள்வியினை உடையார்' என்றும் பரிமேலழகர் 'செவியுணவாகிய கேள்வியினை உடையார்' என்றும் பொருள் உரைத்தனர். 'உணவின்' என்பதை 'போல' என ஒப்புப் பொருள் கொண்டு 'உணவு போன்ற கேள்வி உடையவர்' என்றனர் மணக்குடவரும் பரிப்பெருமாளும்; 'உணவாகிய கேள்வி' எனப்பொருள் கண்டார் பரிமேலழகர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செவியறிவாகிய கேள்வியுடையார்', 'செவியுணவு உண்டவர்', 'செவி உணவாகிய கேள்வியினால் பெற்ற அறிவுடையவர்கள்', 'செவி உணவாகிய கேள்வியினை உடையார்' என்றபடி உரை கூறினர்.

செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையார் என்பது இப்பகுதியின் பொருள்.

அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
பரிப்பெருமாள்: நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாரானும் நன்கு மதிக்கப்படுவர் என்றது.
பரிதி: பூலோகத்திலே இருந்தும் தேவரோடு ஒப்பாவார்.
பரிதி குறிப்புரை: அஃது எப்படி என்றால், தெய்வ லோகத்திலே இருந்தும் பூலோகத்திலே அவிப்பாகங் கொள்ளும் முறைமைபோல என்றவாறு.
காலிங்கர்: அவியுணவினராகிய அமரரோடு ஒப்பர்.
காலிங்கர் கருத்துரை: ஈண்டு மக்களில் இவர்க்கு ஓர் நிகரில்லை என்றவாறு.
பரிமேலழகர்: நிலத்தின்கண்ணர் ஆயினும் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்' என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.

'நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவி உணவினையுடைய தேவரோடு ஒப்பர்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேள்வி உணவு கொள்ளும் விண்ணுலகில் உள்ள தேவரை ஒப்பர்', 'அவியுணவு உண்ட தேவர்க்கு ஒப்பாவர் இவ்வுலகில்', 'வேள்வியில் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும் விண்ணவர்க்கு ஒப்பாவர்', 'இவ்வுலகில் வேள்வி வழியாக உணவினைப் பெறும் தேவரோடு ஒப்பர்' என்றவாறு உரை தருவர்.

அவியுணவு கொள்ளும் தேவர்க்கு ஒப்பாவர் இவ்வுலகில் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையார் அவியுணவின் ஆன்றாரோடு ஒப்பர் இவ்வுலகில் என்பது பாடலின் பொருள்.
'அவியுணவின் ஆன்றார்' யார்?

கேட்டல், அறிவுக்குச் சிறந்த உணவு.

செவியுணவாகிய கேள்வியினையுடையார் அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர்.
செவியுணவின் கேள்விஉடையார் என்ற தொடர் செவிவழியாகக் கேட்டு அறிவைப் பெருக்கிக்கொள்பவரைக் குறிக்கும். இவர் அவியுணவு கொள்ளும் ஆன்றார்க்கு ஒப்பிடப்படுகிறார் இக்குறளில். அவியுணவு என்பது வேள்வி என்னும் நெருப்பில் இடப்பட்ட உணவாம். அது தீயில் தூய்மைப்படுத்தப்பட்டு தேவர்களுக்கு உணவாகிறது எனத் தொன்மங்கள் கூறுகின்றன. அது போல, நல்லோர்வழி கேட்டு உணர்ந்த சிறந்த நுண்பொருள்களை உணவாக்கி அதை செவி வழியாக ஏற்றி அறிவுப்பசியை நிறைவு செய்வர் கேள்வியுடையார்; அவியுணவு கேள்விப்பொருளுக்கும், செவி வேள்விக் குழிக்கும், தேவர் கேட்பவர்க்கும் உவமைப் படுத்தப்பட்டன எனக் கொள்வர்.

அவிசொரிதல், விண்ணவர் நிலை போன்றவை இக்குறளில் சொல்லப்படவில்லை என்று எண்ணுபவர்கள் வேறுவகையான உரைகள் தருவர். அவற்றிலிருந்து சில;
இளங்குமரன் 'இறந்தார் என்பது போன்ற சொல்லே 'ஆன்றோர்' என்னும் சொல்லும். 'அகன்றோர்' என்பதே சொல்லியல் முறைப்படி ஆன்றோர் ஆயது. 'ஆன்றோர்' என்பது விரிந்த அறிவாளரைக் குறிப்பதுடன் இறந்தவரையும் குறிக்கப் பயன்பட்டது (413). அதனால் அவர் உரையாளர்களால் தேவர் எனப்பட்டார். அவர் 'பேருண்டியர்' என்பது இக்குறள் வழி அறியும் பொருளாம்' எனவும் கூறுகிறார். மேலும் 'புல்லைக் காட்டினால் அதனைத் தேடி ஓடும் மாடு போல், புத்தகத்தைக் காட்டினால் யான் தேடி ஓடுகின்றேன்' என்ற சாக்ரடீஸ் கூற்றை மேற்கோள் காட்டி அவர் தரும் விளக்கவுரையாவது: 'அவியுணவு அவித்து ஆக்கப்படும் உணவைக் குறித்தது. அந்த உணவில் பேரார்வம் கொள்வார் அவியுணவின் ஆன்றார் ஆகிறார். ஆன்றோர் என்பது அகன்றோர் விரிந்தோர் பெருகினோர் என்னும் பொருள் தருவது. பெரிதுண்பான் உணவைத் எப்படித் தேடித் தேடி உண்பானோ அதுபோல கேள்வி வேட்கையரும் தேடித் தேடிப் பெறுவர் என கேள்வி உடையாரது ஆர்வப் பெருக்குக்குக் காட்டிய உவமை இது. பெரிதுண்பானை கேள்வி வேட்கையர்க்கு உவமை காட்டலாமோ எனின் ஆர்வப் பெருக்குக்குக் காட்டிய உவமையே அன்றி ஆளுக்குக் காட்டியதில்லையாம்' எனவும் சொல்கிறார்.
புலவர் குழந்தை ‘அவி’தல் = குறைதல்; அவியுணவு = ‘குறைவான உணவு’ என்று விளக்கம் தந்து 'குறையுணவு உண்டு புலனடக்கி வாழும் ஆன்றோர் போலக் கேள்விச் செல்வம் உடையோர் மதிக்கப்பெறுவர்' என்கிறார்.

'அவியுணவின் ஆன்றார்' யார்?

'அவியுணவின் ஆன்றார்' என்ற தொடர்க்கு அவியை யுணவாக வுடைய தேவர், அவியுணவினராகிய அமரர், அவியுணவினையுடைய தேவர், அவி உணவைக்கொள்ளும் தேவர், 'அவி' எனும் உணவினைப் பெறுகின்ற தேவர், வேள்வி உணவு கொள்ளும் விண்ணுலகில் உள்ள தேவர், அவியுணவு உண்ட தேவர், அவியுணவினைக் கொள்ளும் தேவர், அவித்துப் பக்குவம் செய்யப்பட்ட உணவுகள் விஷயத்தில் வானுலகத்திலுள்ள தேவர், பக்குவமான நல்ல உணவுகளைத் தேடித்தேடி உண்ணும் பேருண்டியர், வேள்வியில் செய்யும் உணவை ஏற்றுக் கொள்ளும் விண்ணவர், வேள்வி வழியாக உணவினைப் பெறும் தேவர், அவியுணவைக் கொண்டு வாழும் தேவர், வானுலகத்தில் வேள்வி உணவு உண்ட தேவர், குறைந்த உணவினையுடைய நிறைந்த அறிவினையுடையவர், அவியுணவினையுடைய விண்ணுலகத்தேவர், தேவ உணவாகிய அவிகள் உண்ட தேவர், யாகங்களில் உணவளிக்கப்படும் தேவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'அவியுணவின் ஆன்றார்' என்றதற்குப் பலரும் 'அவியை உணவாக உடைய தேவர்' என்றே மொழிந்தனர்.
அவி என்பது வேள்வித் தீயில் சொரியப்படும் உணவாகும். தீயை வளர்த்து ஆரியர்கள் வழிபடும் முறை வேள்வி என அறியப்படும். விண்ணில் உள்ள தேவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் வேள்விக் குண்டத்தில் போடப்படும். அவை அவியுணவு எனப்படுகிறது. அவிசொரிதலால் தேவர்கள் மகிழ்ந்து வேள்வி செய்வோர் கேட்ட வரம் தருவர் என்பது அவர்தம் நம்பிக்கை. அவியுணவின் ஆன்றார் என்பது வானுலகிலுள்ள தேவரைக் குறிக்கும் என்பர்.

கேள்வி உடையாருடன் வானுறையும் தேவர் எவ்விதம் ஒப்பர்?
தேவர்களுக்குண்டான ஒரு பண்பாகக் கருதப்படுவது 'அவர்கள் மேவன செய்து ஒழுகுபவர்கள்' அதாவது கட்டுப்பாடின்றி தாம் விரும்பியதைச் செய்பவர்கள் என்பது. இப்பண்பு ஒற்றுமை காட்டப்படுகிறதா இங்கு? ஒருவர் தாம் விரும்பியதைச் செய்வதற்காகக் கேள்வி அறிவு பெறுகிறார் என்ற பொருளில் வள்ளுவர் கூறியிருக்க மாட்டார். விரும்பியதைச் செய்வது என்ற ஒப்புமை என்பது இல்லை.
அடுத்து, இன்பங்கள் அனைத்தையும் கொண்டது வானுலகம்; அங்கு துன்பங்களே இரா என்பர். நூற்பொருள்களைக் கேட்டவர் விண்ணுலக இன்பம் போன்ற இன்பத்தை இவ்வுலகிற் பெறுவர் என்பதால் வானோர்க்கு ஒப்பாவார் என்கிறதா இக்குறட்பா? தேவருலகத்தினும் கேள்வியுடையார் உலகம் இன்பமானது என்ற கருத்தில் 'கேள்விச் செல்வத்தையும் கூர்ந்த அறிவுமுடையவர்களுடன் கூடியிருந்து மகிழ்வதைக்காட்டிலும் இன்பம் தருவதாயிருப்பின் தேவர்களது வாழும் இடத்தை யாம் காண்பாம்' என்கிறது ஒரு நாலடிச் செய்யுள். அது:
தவல் அருந் தொல் கேள்வித் தன்மை உடையார்,
இகல் இலர், எஃகு உடையார், தம்முள் குழீஇ,
நகலின் இனிதுஆயின், காண்பாம், அகல் வானத்து
உம்பர் உறைவார் பதி.
(நாலடியார், பொருட்பால், கல்வி, 137)
(பொருள்: அழிதலில்லாத பழைமையான நூற்கேள்விப் பேறுடையராய், முரணிலராய், கூர்மையான அறிவுடையராய், விளங்கும் கற்றோருடன் சேர்ந்து அளவளாவி மகிழ்தலினும் இனிமையுடையதாயின், அகன்ற விண்ணின் மேலிடத்தில்உறையுந்தேவர்களின் திருநகரைக் காண முயல்வோம்.) -துறக்க இன்பத்தினும் கல்வியின்பமே உயர்ந்தது என்பது நாலடியார் பாடலின் கருத்து.

வேறு எவ்வெவ்வகையில் ஒப்புமை உண்டு என உரையாளர்கள் கூறியவற்றிலிருந்து சில:

  • எல்லாரானும் நன்கு மதிக்கப்படுவர் என்றது (பரிப்பெருமாள்).
  • (விண்ணுலக இன்பம் அடைவர் என்று சொல்லாமல்) இவ்வுலகில் துன்பம் எய்தார்; அதனால் தேவர்க்கு இணையாவர் (பரிமேலழகர்).
  • தெய்வ லோகத்திலே இருந்தும் பூலோகத்திலே அவிப்பாகங் கொள்ளும் முறைமைபோல (பரிதி). 'நேரே நூல்களைப் பயிலாமல் கற்றவர் வாய்கேட்டு அந்நூற்பொருள்களை அறிவதுபோல' என்பது இதன் விளக்கம்.
  • இவ்வுலகத்தில் கேள்வியுடையார்க்கு நிகர் வேறு யாருமில்லை என்பதால் அவர் தேவர்க்கு ஒப்பார் (காலிங்கர்).
  • அவியுணவைத் தவிர பிறவுணவைத் தேவர் விரும்பார்; கேள்வியுடையாரும் செவியுணவைத் தவிர பிற விரும்பார். இப்பொதுத் தன்மையினாலேயே கேள்வியுடையார் தேவரை ஒப்பர் எனக்கூறப்பட்டது (இரா சாரங்கபாணி)
  • தேவர்கள், மூதாதையர் ஆகிய ஆன்றோருக்குப் படைக்கப்பட்ட உணவுகள் பரப்பப்பட்டபடியே இருக்கின்றன. அதுபோல கேள்வியில் ஈடுபட்டவர்களுக்கு முன்னால் எவ்வளவு சுவையுள்ள உணவு வகைகளை வைத்தாலும் அவை அப்படியே இருக்கும். அவர்களுடைய மனம் கேள்வியை விட்டு உணவுகளின் மீது செல்லாது. அதனால் அவர்கள் இவ்வுலகத்தில் உள்ளவர்களானாலும் வானுலகத்திலுள்ள ஆன்றோருக்கு ஒப்பாகிறார்கள் (நாமக்கல் இராமலிங்கம்)
  • தாம் நேரே நூல்களைப் பயிலாதே கற்றவர் வாய்கேட்டு அந்நுல்களாலாம் அறிவினைப் பெறுதலால் இவர்கள் கண்கண்ட தேவர்கள் ஆகின்றனர் (தமிழண்ணல்).

'தேவர்கள் விண்ணுலகு, அமுதம் முதலியன, நூலளவையின் அன்றி, ஏனைய அளவைகளால் அறியப்பெறாதவை. அவற்றோடு மண்ணுலகு, செவியுணவு, அதனாற் பெறும் உணர்வின்பம், இவை காட்சியளவைக்கு உரியவை. இதனை ஆகம அளவைக்கு ஒப்பாகக் கூறியது கேள்வியின் சிறப்பைப் புலப்படுத்துதற்கு' என்று இக்குறளுக்கான ஒப்புமையை விளக்குவார் தண்டபாணி தேசிகர். 'கேள்வியுடையார் அவியுணவின் ஆன்றாரோடு நிலத்து ஒப்பர் எனக் கூட்டிச் செவியுணவினைப் பெற்ற சீரியோர் அவியுணவினையுடைய ஆன்றோர்க்கு ஒப்பாராவரோ எனவும் பொருள் காணலாம்' என மாற்றுரை ஒன்றும் தருகிறார் இவர். 'அவி-சோறு. அவியுணவின் ஆன்றோர் என்றது, உணவாற் பெரியோர் என இகழ்ச்சி குறித்து நின்றசொல். ஒப்பர் என்றது ஒலிக்குறிப்பால் ஒப்பாகார் என்பதை விளக்கியவாறு' எனவும் குறித்துள்ளார்.

செவிக்கு உணவாகிய கேள்வியினை உடையார் அவியுணவு கொள்ளும் தேவர்க்கு ஒப்பாவர் இவ்வுலகில் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்ல கருத்துகளைச் செவி என்னும் குண்டத்தில் சொரிந்து கேள்வி வேள்வி செய்பவன் உயர்வு பெறுவான்.

பொழிப்பு

இவ்வுலகத்து செவியுணவாகிய கேள்வியுடையவர் அவியுணவு உண்ணும் தேவரோடு ஒப்பர்.