இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0402



கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று

(அதிகாரம்:கல்லாமை குறள் எண்:402)

பொழிப்பு (மு வரதராசன்): (கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது.

மணக்குடவர் உரை: கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல், இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்.
இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல், முலை இரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
('இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கல்வி அறிவில்லாதவன் அவையின்கண் பேச விரும்புதல் முலை இரண்டும் இல்லாதபெண் பெண் தன்மையை விரும்பினால் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று.

பதவுரை: கல்லாதான்-படிக்காதவன்; சொல்-மொழி; காமுறுதல்-விரும்புதல்; முலை-கொங்கை; இரண்டும்-இரண்டும்; இல்லாதாள்-இல்லாதவள்; பெண்-பெண்மை; காமுற்று-விரும்பினால்; அற்று-அத்தன்மைத்து.


கல்லாதான் சொல் காமுறுதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல்;
பரிப்பெருமாள்: கல்வியில்லாதான் சொல்லுதற்கு ஆசைப்படுதல்;
பரிதி: கல்லாதான் சொல்லைக் காமுறுதல்;
காலிங்கர்: கற்றிலாதான் மற்று அக்கற்றவர் முன்னர்த் தானும் சில சொல்லுதலைக் காதலித்தல் எத்தன்மைத்தோ எனில்;
பரிமேலழகர்: கல்வியில்லாதான் ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை அவாவுதல்;

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'கல்வியில்லாதான் சொல்வதற்கு விரும்புதல்' என்று உரை கூறினர். காலிங்கர் 'கல்லாதான் தானும் சில சொல்லுதலைக் காதலித்தல்' என்றார். பரிமேலழகர் 'கல்வியில்லாதான் அவையின்கண் சொல்லுதலை அவாவுதல்' என்று பொருள் கூறினார். இவர்கள் நால்வரும் ஒரே வகையான உரை கூற பரிதி மட்டும் வேறுபட்டு 'கல்லாதான் சொல்லை விரும்புதல்' அதாவது கல்லாதான் சொல்வதைக் கேட்க விரும்புதல் என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'படிப்பு இல்லாதவன் பேச விரும்புதல்', 'கல்வியறிவில்லாதவன் அவையேறிப் பேச விரும்புதல்', 'கல்வியறிவில்லாதவன் பிரசங்கம் செய்ய ஆசை கொள்வது', 'நூல்களைக் கல்லாதவன் ஒன்றைப் பற்றி விரிவுரையாற்ற விரும்பி முற்படுதல் ' என்று உரை சொல்வர்.

நூலறிவு இல்லாதவன் பேச விரும்புதல் என்பது இப்பகுதியின் பொருள்.

முலைஇரண்டும் இல்லாதாள் பெண் காமுற்றற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்.
மணக்குடவர் கருத்துரை: இது தன்னாசையல்லது சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.
பரிப்பெருமாள்: இரண்டு முலையுமில்லாதாள் பெண்மைக்குக் காமுற்றாற்போலும்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது தன்னாசையல்லது பிறர்க்குப் பொருந்தாது என்றவாறு; சொன்னாலும் விரும்புவாரில்லை யென்றது.
பரிதி: தனபாரம் இல்லாத பெண்ணைக் காமுறுதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: முலையிரண்டும் முன்னமே தனக்கு இல்லாதாளாகிய பேடியானவள் மற்று அம்முலை வனப்புறூஉம் திருவுடையாட்டியது பெண்மை கொண்டு இன்புறுதற்குத் தானும் காதலித்த அத்தன்மைத்து என்றவாறு.
பரிமேலழகர்: இயல்பாகவே முலை இரண்டும் இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இனைத்தென அறிந்த சினை' (தொல்.சொல்.33) ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார். சிறிதும் இல்லாதாள் என்பதாம். அவாவியவழிக் கடைப் போகாது, போகினும் நகை விளைக்கும் என்பதாயிற்று.

மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோர் 'முலையில்லாதாள் பெண்மைக்கு விரும்பினாற் போலும்' என்றனர். காலிங்கர் 'முலையிரண்டும் இல்லாத பேடிப் பெண் பெண்மை கொண்டு இன்புறுதற்கு விரும்புதல்' என்கிறார். பரிமேலழகர் 'இயல்பாகவே முலை இல்லாதவள் பெண்மையை அவாவுதல்' என்று உரை கூறுவார். பரிதி முந்திய பகுதிக்குப் பொருந்துவது போல 'முலையில்லாப் பெண்ணை விரும்புவதைப் போல' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முலையில்லாதவள் இன்பம் விழைவது போலும்', 'முலை இரண்டும் இல்லாதவள் பெண்மையை விரும்பினாற் போலும் (இரண்டு விருப்பமும் நிறைவேறா)', 'இரண்டு முலைகளும் இல்லாத ஒரு பெண் பெண்மை நடத்த ஆசைப்படுவதைப் போன்றது', 'கவர்ச்சி தரும் முலைகள் இரண்டும் இல்லாதாள் பெண் தன்மையை விரும்பியதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முலையிரண்டும் இல்லாதாள் பெண் தன்மையை விரும்பியதைப் போல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நூலறிவு இல்லாதவன் பேச விரும்புதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண் தன்மையை விரும்பியதைப் போல என்பது பாடலின் பொருள்.
முலைஇரண்டும் இல்லாதாள் யார்?

கல்விபெறாதவனுக்கு நயம்பட உரைக்கத் தெரியாது.

கல்வியறிவு இல்லாத ஒருவன் ஒரு அவையில் பேச விரும்புதல் இரண்டு முலைகளும் இல்லாத ஒருத்தி பெண் தன்மையை விரும்புவதைப் போல.
இக்குறளின் சொல்லமைப்பு இருவகையாகப் பொருள்கொள்ள வைக்கிறது. 'கல்வி அறிவில்லாதவன் அவையில் பேச ஆர்வம் கொள்வது முலையிரண்டும் இல்லாத பெண் காதலுறுவது போன்றது' என்றும், 'கல்லாதவனின் பேச்சில் ஈர்க்கப்படுதல் மார்புகள் இல்லாதாள் பெண்தன்மையைக் காமுறுவது போல்வது' என்பதாகவும் இதற்கு இருதிறமாக உரைகள் சொல்லப்பட்டன.
'கல்லாதான் சொல் காமுறுதல்' என்ற தொடர்க்கு நேர் பொருள் 'கல்வியில்லாதவன் சொல் விரும்புதல்' என்பது. தொல்லாசிரியர்களில் பரிதி ஒருவரே இதற்குக் 'கல்லாதான் சொல்லைக் காமுறுதல்' என்று 'சொல்லைக் கேட்க விரும்புவதாக' உரை சொல்கிறார். மற்ற பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'கல்வியில்லாதான் சொல்லுவதற்கு ஆசைப்படுதல்' என்று 'கல்லாதவனின் விருப்பமாக' இதைக் கொள்வர். இன்றைய ஆசிரியர்களுள் பெரும்பான்மையினரும் பின்சொல்லப்பட்ட கருத்துக் கொண்டவராக இருக்கின்றனர்.
உவமானப் பொருள் நோக்கியும், ஏற்கனவே அதிகாரத்து முதல் பாடலில் (குறள் 401) கல்வியறிவில்லாதவன், கூட்டத்தில் பேச ஆசைப்பட்டது கூறிவிட்டது கருதியும், 'கல்லாதவன் சொல் காமுறுதல்' என்னும் இப்பாடலைச் சொல் கேட்பவன் பற்றிய பாடலாகக் கொள்வதும் ஏற்கும். ஆயினும் கல்லாதவனது சொல்லைக் கேட்க விரும்புவது என்பதினும் கல்லாதவன் ஒன்று சொல்லிப் பாராட்டு பெறுதற்கு ஆசைப்படுதல் என்பது சிறந்ததாகலாம்.

கற்றார் பேசிச் சிறப்பெய்தல் கண்டு கல்லாதாரும் அவையிற் கருத்துரைக்கத் துணிவு கொள்வர். கொள்ளினும், மயில் ஆடுவதைக் கண்ட வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடியதுபோல், அது நகைப்புக்கு இடமாகும். கல்வியறிவு இல்லாதவன் பேசுவதில் உள்ளுறை இருக்காது; அறிவுசார்ந்த பொருள் இருக்காது; கோர்வையாக இருக்காது; பிறர்க்கு இன்பமும் பயக்காது. அது சுவையற்ற உரையாக இருக்குமாதலால் அவையோர் யாரும் அதை விரும்பமாட்டார்கள். அதனால் கல்வியறிவில்லாதவர்கள் அவையில் பேசாமல் இருப்பதே நல்லது.

'பெண்' என்னும் சொல் 'பெண் தன்மை' என்னும் பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கொள்வர்.

பால்உறுப்புக் குறைபாடுடைய மாந்தரை உவமித்தது இப்பாடல். கல்வியில்லாதவன் சுவையுணர்வு இல்லாத உரையே நிகழ்த்துவான் என்பதைக் கூற வருவது. சொல்ல வந்த கருத்துக்கு ஆளப்பட்டுள்ள உவமை பொருத்தமாக இருக்கலாம். ஆனால் அது வள்ளுவரல்லாததாக உள்ளது.

முலைஇரண்டும் இல்லாதாள் யார்?

ஒரு பெண்ணின் மார்பகங்கள் அவளுக்கு அழகு சேர்ப்பன. அவை காம இச்சையைக் கிளரும் தன்மை கொண்டனவும் ஆகும். மேலாடை விலகி தலைவியின் மார்பகங்களைப் பார்க்க நேர்ந்தால் அவை காதலனைக் 'கொல்லும்' ஆற்றல் உடையன என்று கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் (தகையணங்குறுத்தல், 1087) என்ற குறள் பெண்ணின் முலையைக் காதல் உறுப்பாக ஏற்றிச் சொல்லும்.
இப்பாடல் 'முலையிரண்டும் இல்லாதாள்' பற்றிப் பேசுகிறது. இத்தொடர்க்குக் கீழ்க்கண்ட வகையான பெண்கள் சுட்டப்படுகின்றனர்.
1. மார்பகம் மிகக்குன்றி இருக்கும் இயல்பான பெண்.
2. பருவம் அடையாததால் மார்பக வளர்ச்சி இல்லாத சிறுமி.
3. மார்பு இரண்டும் இல்லாத பேடிப்பெண்.
இவற்றுள் முதலில் சொல்லப்பட்ட இயல்பான பெண், குருதிஇயக்கு நீர் (ஹார்மோன்கள்) சுரப்பது சுருக்கமாக இருப்பதால், மார்பு சிறிதாக அமைந்தவள்; மற்றப்படி பெண்மைக்குரிய குணநலன்களும், சிறப்புறுப்பும் கொண்டவள்; இவள் காமத்துக்குரியவள்; மக்களைப் பெற்று மகிழக்கூடியவள். குறள் சொல்லும் பெண் இவளல்ல.
இரண்டாவதாக உள்ள பருவம் நிறையாச் சிறுமியாகவும் அப்பெண் இருக்க முடியாது. அப்படியிருந்தால் பருவம் குறிக்கும் சொல் ஒன்று பயிலப்பட்டிருக்கும். மேலும் இக்குறள் கல்லாதவனின் இழிவு சுட்ட வந்தது. சிறுமியை இழிவுப் பொருளாகக் குறள் ஒப்புமை காட்டாது.
ஆகவே இக்குறள் கூறுவது மூன்றாவதாகச் சொல்லப்படும் பெண்பேடியையே. பெண் அவாய்ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் (நாலடியார்: பொருட்பால்: அறிவின்மை: 251 பொருள்: மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கியபேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகியஅணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ!) என்கிறது நாலடி. பெண்ணியல்பு மிகுந்து ஆணியல்பு நீங்கியவர் பெண்பேடி. 'பேடி' என்பது ஆணாக என்ணப்படும் ஒருவன் ஆண் தன்மையின்றிப் பெண்தன்மையை அவாவும்போது அமையும் பெயர். (பெண்மை திரிந்து ஆண்தன்மை அவாவுதலும் உண்டேனும் ஆண்மை திரிதல் பெரும்பான்மையாம்.) இவள் பெண்தன்மைக்கு ஆசைப்பட்டுப் பெண்போல ஒப்பனை செய்து பெண் போலவே நடை உடை மாற்றிக்கொள்வாள். காமுறினும் உறுப்புக் குறையால் இவளால் காமப்பயனை அடையமுடியாது. இது 'முலையிரண்டும் இல்லாதாள் பெண் காமுறுதல்' குறிக்கும் பொருள்.

மார்பகங்கள் இல்லாத பெண் காமுற்றுக் குழந்தையைப் பெற்று அதற்குப் பாலூட்ட இயலாமையை நினைத்து என்ன துயரப்படுவாளோ அதுபோலக் கல்வியறிவு இல்லாதவனும் ஆசைகொண்டு அவையில் ஊட்டுவதற்கு அறிவில்லாமல் தன் கல்லாமையை நினைத்துத் துன்பப்பட வேண்டியும் வரும் என்றும் இக்குறட்குப் பொருள் கூறியுள்ளனர். இது இயல்பாக இல்லை.

நூலறிவு இல்லாதவன் பேச விரும்புதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண் தன்மையை விரும்பியதைப் போல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையேறி சுவைபட உரைக்க இயலாமைக்குக் கல்லாமை ஒரு காரணம்.

பொழிப்பு

படிப்பு இல்லாதவன் அவையில் பேச விரும்புதல் முலையிரண்டும் இல்லாதவள் பெண்மையைக் காதலுறுதல் போலும்.