இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0400



கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை

(அதிகாரம்:கல்வி குறள் எண்:400)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல.

மணக்குடவர் உரை: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல.
இது கல்வி அழியாத செல்வமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.
(அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: கல்வியே அழிவில்லாத சிறந்த செல்வமாகும். ஒருவனுக்கு மற்றவை எல்லாம் அதுபோன்ற சிறந்த செல்வம் ஆகா.
கல்விச் செல்வம் பிறரால் கொள்ளை கொள்ள முடியாதது. கொடுத்தால் குறையாதது. மேலும் உயிரோடு ஒட்டியதாகும். ஏனைய பிரிக்கக்கூடிய செல்வங்களைவிட இது ஒருவனுக்கேயுரிய அவனுடைய சொந்தச் செல்வமாகி விடுவதால், 'மற்றையவை மாடல்ல' என்றார். (மாடு-செல்வம்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு கேடில் விழுச்செல்வம் கல்வி மற்றைவை மாடு அல்ல.

பதவுரை:
கேடில்-அழிவில்லாத; விழுச்செல்வம்-மதிப்புமிகு செல்வம்; கல்வி-கற்றல் (கல்வி அறிவு பெறுதல்); ஒருவற்கு-ஒருவனுக்கு. மாடல்ல-உடைமையல்ல; மற்றையவை-பிற எல்லாம்.


கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி:
பரிப்பெருமாள்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி:
பரிதி: அழியாத செல்வமாவது கல்வி;
காலிங்கர்: உலகத்து சிறந்தார் ஒருவர்க்கு எஞ்ஞான்றும் கேடுபடாத விழுமிய செல்வம் யாதோ எனின், சிறந்த நூல்களைக் கற்கும் கல்வியே;
பரிமேலழகர்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி;
பரிமேலழகர் விரிவுரை: அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். [வழிபட்டார்க்கு-கற்பதற்கு (பிற்றை நிலை முனியாது) வழிபாடு செய்கின்றவர்க்கு]

பழம் ஆசிரியர்கள் 'ஒருவனுக்கு கேடில்லாத/அழிவில்லாத சீரிய செல்வம் கல்வி' என்று இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். பரிமேலழகர் அழிவின்மைக்கு என்பதற்கு விளக்கமாக தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமை என்று விளக்கம் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அழியாத சிறந்த செல்வம் கல்வியே', 'ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வி ஒன்றேயாம்', 'ஒருவனுக்கு அழிவில்லாத உயர்ந்த செல்வமானது கல்வி', 'ஒருவர்க்கு அழிவில்லாத சீரிய செல்வமாக அமைவது கல்வியாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவற்கு அழிவில்லாத விழுமிய செல்வம் கல்வி என்பது இப்பகுதியின் பொருள்.

மாடல்ல மற்றை யவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மற்றவையெல்லாம் பொருளல்ல.
மணக்குடவர் கருத்துரை: இது கல்வி அழியாத செல்வமென்றது.
பரிப்பெருமாள்: மற்றவை எல்லாம் பொருள் அல்ல.
பரிப்பெருமாள் கருத்துரை: இது அழியாத செல்வம் கல்வி என்றது.
பரிதி: அழிந்து போகிற செல்வம் செல்வமல்ல.
காலிங்கர்: அதனால் மற்றை பல செல்வமெல்லாம் செல்வம் என்று சொல்லப்படுவன அல்ல.
காலிங்கர் குறிப்புரை: மாடு என்பது பொருள்.
பரிமேலழகர்: அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.
பரிமேலழகர் விரிவுரை: பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.

'மற்றவை எல்லாம் செல்வம் அல்ல' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறபொருள்கள் செல்வம் அல்ல', 'மற்றைய பொன், பொருள் போன்றவை எல்லாம் ஒருவனுக்கு நிலைத்த செல்வமல்ல', 'மற்றச் செல்வங்கள் எல்லாம் அத்துணை நிலைத்த செல்வம் அல்ல', 'கல்வி யொழிந்த பிறவெல்லாம் நிலைத்த செல்வங்கள் ஆகா' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிறவெல்லாம் சிறந்த முதலீட்டுச் செல்வம் அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவற்கு அழிவில்லாத விழுமிய செல்வம் கல்வி; பிறவெல்லாம் மாடு அல்ல என்பது பாடலின் பொருள்.
'மாடு' என்பதன் பொருள் என்ன?

மதிப்புமிக்க முதலீட்டுச் செல்வமான கல்வி அழிவில்லாதது.

ஒருவனுக்கு அழிவில்லாத மேம்பாடான செல்வம் கல்விதான். அதைத்தவிர பிற உடைமைகள் எல்லாம் சிறந்தன அல்ல.
கேடு என்ற சொல்லுக்கு அழிவு என்பது பொருள். கேடில் என்றது அழிவில்லாத எனப் பொருள்படும். கேடு என்ற சொல்லுக்கு அழிவு தவிர்த்து இழப்பு, தீமை, கெடுதல் எனவும் பொருள் உண்டு. எனவே கேடில் என்ற சொல் தரும் இழப்பு இல்லாத, தீமையற்ற, கெடுதல்இல்லாத ஆகிய பொருள்களும் இக்குறளுக்குப் பொருந்துவனவே. விழுச்செல்வம் என்பதற்கு மதிப்புமிகு செல்வம், சீரிய செல்வம், சிறந்த செல்வம், விழுச்செல்வம், குற்றமற்ற செல்வம் என்று பொருள் கொள்வர்.

செல்வம் என்பது பெரும்பாலும் பொருட்செல்வம் என்ற பொருளிலேயே புரிந்துகொள்ளப்படுகிறது. குறளில் பொருள் தவிர்த்து கல்வி, பணிவு, ஊக்கம், அருள், வேண்டாமை என்பனவும் செல்வங்களாகாகச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன. இங்கு கல்வியானது விழுச்செல்வம் அதாவது மதிப்புமிகுந்த செல்வம் என்ற சிறப்பு அடைகொடுத்துக் குறிக்கப்படுகிறது. கற்றார் உயர்ந்தோராக மதிக்கப்படுவதாலும் கல்வி விழுச்செல்வம் எனப்பட்டது. ஒருவர் கல்வி பெற்றால் அவர் அழிவற்ற சீரிய செல்வம் பெற்றவர் ஆகிறார். மற்ற செல்வங்களெல்லாம், அதாவது நிலம், பொன், மணி போன்றவை எல்லாம் தீரக்கூடிய, அழியக்கூடிய, செல்வங்களாம். 'மாடல்ல மற்றையவை' என்றதனால் எல்லாச் செல்வங்களையும் விட கல்வியறிவே மிகச் சிறந்த முதலீடு என்கிறது குறள்; கல்வி மற்றச் செல்வங்கள் பெருகுவதற்கும் வழி வகுக்கும் என்பது உட்கருத்து.
'பொதுவாகப் பொருளாதார நிலை வளர வேண்டுமானால் அனைவரும் கல்வி உடையவராக இருத்தல் வேண்டும். எல்லாவற்றையும் விட இந்தக் கல்வியறிவே மிகச் சிறந்த மூலதன முதலீடு என்கிறோம். இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டுதான் வள்ளுவர் இப்பாடலில் தனிமனிதனை நோக்கியும் உறுதி கூறுகின்றார்' என்பது தெ பொ மீனாட்சிசுந்தரத்தின் கருத்துரை.

கல்வியின் அழிவின்மையைப் பாடும் ஒரு தொல்கவிதை தேவநேயப்பாவாணர் உரையில் சுட்டப்பட்டுள்ளது. அப்பாடல்:
வெள்ளத்தாற் போகாது வெந்தழலால் வேகாது வேந்தராலும்
கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும் நிறைவொழியக் குறைபடாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது கல்வியெனும்
உள்ளத்தே பொருளிருக்க வுலகெல்லாம் பொருள்தேடி யுழல்வதேனோ

(பொருள்: வெள்ளம் அடித்துக் கொண்டு போகாது; தீயில் வேகாது; அரசும் எடுத்துக் கொள்ள முடியாது; யார்க்கும் கொடுத்தாலும் குறையாது; கள்வர்கள் பறித்துக் கொள்ளார்; காப்பது எளிது; கல்வி என்ற உயிரோடு இணைந்த செல்வம் இருக்க உலகமெல்லாம் மற்றச் செல்வங்களைத் தேடி ஏன் அலைந்து துன்பப்பட வேண்டும்?)

'மாடு' என்பதன் பொருள் என்ன?

மாடு என்ற சொல்லுக்குப் பொருள் என்றும் செல்வம் என்றும் பொருள் கொள்வர். நாமக்கல் இராமலிங்கம் நிலைத்து நிற்பது என்ற பொருளில் 'இடம்' என்று சொல்வார். தேவநேயப் பாவாணர் 'முற்காலத்தில் ஆவுங்காளையும் எருமையும் ஆகிய மாடுகளே செல்வமாகக் கருதப்பட்டதினால், மாடு என்னும் பெயர் செல்வப் பெயராயிற்று. மேலைநாடுகளிலும் இங்ஙனமே மாடு செல்வமாகக் கொள்ளப்பெற்றது' என்று விளக்கம் தந்துள்ளார்.
அன்று பண்டமாற்று வணிகத்தில் மாடு பெரும்பங்கு கொண்டதும் மாடு என்பதற்குச் செல்வம் என்று பொருள் பெற ஒரு காரணம் என்பர். மாடு ஒரு முதலீட்டுப் பொருளாக இருந்திருக்கிறது. இன்றும் கிராமப் பொருளாதாரத்தில் ஒருவர் உடைமையாகக் கொண்ட மாடு எண்ணிக்கையை வைத்து அவரது வளப்பம் மதிக்கப்படுகிறது. இப்பாடலில் மாடு என்பது முதலீடு செய்யப்பட்ட உடைமை (Investment Asset) என்ற பொருளிலேயே ஆளப்பட்டதாகத் தெரிகிறது.

'மாடு' என்ற சொல்லுக்கு 'முதலீட்டு உடைமை' என்பது பொருள்.

ஒருவற்கு அழிவில்லாத விழுமிய செல்வம் கல்வி; பிறவெல்லாம் சிறந்த முதலீட்டுச் செல்வம் அல்ல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கல்வி அறிவு பெறுதல் வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும் நல்லதோர் முதலீடு.

பொழிப்பு

ஒருவர்க்குக் கல்வியே அழியாத மதிப்புமிகு செல்வம்; பிறவெல்லாம் நல்ல முதலீட்டுச் செல்வங்கள் அல்ல.