இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0397



யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு

(அதிகாரம்:கல்வி குறள் எண்:397)

பொழிப்பு (மு வரதராசன்): கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?

மணக்குடவர் உரை: யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம். ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?
இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.

பரிமேலழகர் உரை: யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
(உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: கற்றவனுக்குத் தன் நாடும் தன் ஊரும் போல எந்த நாடும் எந்த ஊரும் சொந்தமாகிவிடும். ஆகவே ஒருவன் சாகும் வரையும் கல்லாதிருப்பது என்ன கருதியோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
யாதானும் நாடாமால் ஊராமால்; ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு என்?.

பதவுரை:
யாதானும்-எதுவேனும்; நாடாமால்-நாடாகுமே; ஊராமால்-ஊராகுமே; என்-எதனால்? (எது கருதி); ஒருவன்-ஒருவன்; சாம்-இறக்கும்; துணையும்-அளவும்; கல்லாதவாறு-கல்லாமல் இருப்பது.


யாதானும் நாடாமால் ஊராமால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்;
பரிப்பெருமாள்: யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்;
பரிதி: எந்தத் தேசமேயானாலும் தன்தேசமேயாம்; மாலூராகிய வைகுண்டப்பதம் மறுமைக்காம்;
காலிங்கர்: இங்ஙனம் கற்று உணர்ந்த பெரியோர்க்கு வேறு யாதானும் ஒருநாடும் யாதானும் ஒரூரும் முன்னந் தாம் பயின்ற நிலம் போலத் தமது நாடும் தமது ஊரும் ஆம்;
பரிமேலழகர்: கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்;

பழம் ஆசிரியர்கள் எந்த நாடேயானாலும் எந்த ஊரேயானாலும் தம் நாடாம்; தம் ஊராம் என்றபடி உரை நல்கினர். பரிதியின் 'மாலூராகிய வைகுண்டப்பதம் மறுமைக்காம்' என்ற சமயம் சார்ந்த உரைக்கு மூலத்தில் இடம் இல்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்நாடும் தன்னாடாம்; எவ்வூரும் தன்னூராம்', '(எவ்வளவு படித்தாலும் நல்லதுதான் என்பது மட்டுமல்ல;எத்தனை மொழிகளைப் படித்தாலும் நல்லதுதான்.) எந்த நாடும் சொந்த நாடாகும்படியும் எந்த ஊரும் சொந்த ஊராகும்படியும்', 'கற்றவனுக்கு எந்த நாடும் அவனுடைய நாடாகும். எந்த ஊரும் அவனுடைய சொந்த ஊர் ஆகும்', 'கற்றவர்க்கு எந்த நாடும் தம் நாடு ஆகும்; எந்த ஊரும் தம் ஊராகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எதுவானாலும் தம் நாடு ஆகுமே, தம் ஊர் ஆகுமே என்பது இப்பகுதியின் பொருள்.

என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதி?
மணக்குடவர் குறிப்புரை: இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படு மென்றது.
பரிப்பெருமாள்: ஆதலால் ஒருவன் சாந்துணையுங் கல்லா தொழுகுதல் யாதினைக்கருதியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கல்வி எல்லாரானுங் கைக்கொள்ளப்படுவர் என்றது.
பரிதி: ஆதலால் சாமளவும் கல்வியே பயிலுவான்.
காலிங்கர்: அதனால் மக்கட்பண்பு உடையான் ஒருவன் தனது யாக்கை இறந்துபடும் துணையும் கல்லாது ஒழிகின்ற முறைமை என்ன முறைமையிருக்கின்றதோ அரசர்க்கும் யாவர்க்கும்.
பரிமேலழகர்: இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி?
பரிமேலழகர் குறிப்புரை: உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.

பழைய ஆசிரியர்கள் 'ஆதலால் சாகும் வரை ஒருவன் கற்காது காலம் கழிப்பது ஏன்?' என்றபடி இப்பகுதிக்கு உரை வழங்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏன் ஒருவன் சாகும்வரை படிப்பதில்லை?', 'பலநாட்டு மொழிகளிலும் உள்ள பற்பல நூலகளையும் சாகிறவரையிலும் ஒருவன் படித்துக்கொண்டே இருந்தால்தான் என்ன?', 'அப்படியிருந்தும் சாகிறவரையும் ஒருவன் கல்லாமல் இருப்பது யாது கருதி?', 'அங்ஙனமாகவும் ஒருவன் சாகும் வரையில் கல்லாமலிருப்பது என்ன காரணத்தால்? (அறியாமையால்)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒருவன் தான் இறக்கும் வரையில் கல்லாது இருப்பது எதனால்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எதுவானாலும் தம் நாடு ஆகுமே தம் ஊர் ஆகுமே, ஒருவன் தான் இறக்கும் வரையில் கல்லாது இருப்பது எதனால்? என்பது பாடலின் பொருள்.
பிற நாடுகள் வேறாகத் தெரியாததற்கும் சாகும்வரை கல்வி கற்பதற்கும் என்ன தொடர்பு?

தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவன் உலகமே அவனுக்கு உரியதாக உணர்வான்.

கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகுமே; எந்த ஊரும் சொந்த ஊராகுமே அப்படியிருக்கும்போது சாகிறவரையில் ஒருவன் கற்காது காலத்தைக் கழிப்பது ஏன்?
கல்வி உலக மனப்பான்மையை வளர்க்கப் பெரிதும் உதவுவது. கல்வி பெற்றவர் எந்த ஊர் சென்றாலும், முன்னர் தாம் பழகிய நிலம் போலவே உணர்வர் என்கிறது இக்குறள். (இப்பொருள் தருவதாலேலே இப்பாடல் யாதும் ஊரே யாவருங் கேளிர் (புறநானூறு. 192) (பொருள்: எல்லாம் எனது ஊர்; எல்லாரும் என் சுற்றத்தார்) என்ற சங்கச்செய்யுள்ளை நினைவுபடுத்துவதாகக் கூறுவர்.)
ஒருவனுக்கு உலகத்தில் உள்ள தொடர்பு, கல்வி கற்றபின் உண்டான அறிவால், விரிந்து பரந்து வெளியூர்களும் வெளிநாடுகளும் அவனுக்கு நெருங்கிய இடங்கள் ஆகின்றன. 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்ற உள்ளம் அவனிடத்தே மலர்கிறது. கல்வியானது உலகில் ஒருவனுக்கு இவ்வளவு பரந்த இடம் அளிப்பது கண்டும் சிலர் கல்வியில் முயற்சி இல்லாமல் இருக்கின்றார்களே; சாகும் வரையில் கல்வி பெறாமலே இருந்து மறைகின்றனரே; இது ஏன்? என்று வியக்கிறது இக்குறள். கல்வியை ஓரளவோடு நிறுத்திவிடாது எப்பொழுதும் தேடவேண்டும்; மேன்மேலும் தேடவேண்டும் என்பதுவும் இப்பாடல் தரும் செய்தியாகும்.
கற்றவர்க்கே வேற்றுநாடும் வேற்றூரும் தன்னாடும் தன்னூருமாகுமென்பதை,
ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்
(பழமொழி நானூறு 55) (பொருள்: மிகவும் கற்றவர்கள் அறிவுள்ளவர்கள்; அவ்வறிவு படைத்தவர்கள் நான்கு திசைகளில் உள்ள நாட்டிற்கும் சென்றவர்கள். அந்நாடு அவர்களுக்கு வேற்று நாடாக ஆகாது; தம்முடைய நாடாகவே காணப்படும். ஆகவே, வழியில் உண்பதற்கு உணவும் (கட்டுச்சோறு) கொண்டுசெல்ல வேண்டியதில்லை) என்னும் பழம் செய்யுளும் நன்கு உணர்த்தியது.

சாந்துணையுங் கல்லாதவாறு' என்னுந் தொடர்க்கு, வாழ்நாள் முழுதுந் தொடர்ந்து கல்லாமை, சாகும் வரை கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும். இளமையில் கற்க வாய்ப்பில்லாமல் போய்விட்டாலும் சாவதற்குள் கற்றுவிடலாம். சாவதற்குள் எப்போதாயினும் படிக்கலாம். கற்பதற்குக் காலவரையறை இல்லை; முதுமையிலும் கற்கலாம். இப்போது படித்தவை மறுபிறப்பினும் தொடரும், இறந்த பிறகும் கல்வி உயிரோடு செல்லும் எனப் பலவாறாக உரையாளர்கள் விளக்கம் தந்தனர். இவற்றுள் வாழ்நாள் முழுதுந் தொடர்ந்து கற்கவேண்டும் என்பது பொருத்தம்.
ஓதுவ தொழியேல் (ஆத்திச்சூடி 11) (பொருள்: எப்பொழுதும் படிப்பதை விடாதே) என்று ஔவையும் ஒருவன் தொடர்ந்து கற்கவேண்டும் என அறிவுரை தந்தார். கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு கல்வி கற்பதற்குக் காலவரையறை இல்லை. சாகும்வரை கற்பதற்கு இடம் உண்டு எனவும் ஔவையார் கூறினார்.
'கற்றற்குரிய காலம் இளமை', 'பின்னர்ப்படிப்பது வாழ்க்கைக்குப் பயன்படுவதில்லை', காலங்கெட்ட பிறகு முயன்றும் நன்மைமிகுதியில்லை' என்பன பொதுவாக நிலவும் கருத்துக்கள். அதை மறுத்துக் கற்பதற்குக் காலவரையறை இல்லை என்று கூறுகிறது இப்பாடல். தொழில்நுட்பம் விரைவாக வளர்ந்துவரும் இந்நாட்களில் சாந்துணையும் கற்பது இன்னும் பொருத்தமாகவும் இன்றியமையாததாகவும் உள்ளது. நேற்றுவரை மின்னஞ்சல் மட்டும் வாசிக்கத் தெரிந்தவர் இன்று கைபேசியில் இணையப் பக்கங்களுக்குச் சென்று அவற்றின்வழி எல்லாவகைப் பணப்பரிமாற்றங்கள் செய்ய அறிந்துகொள்வதும் கற்பதில் அடங்கும். நாளை வேறு பல முன்னேற்றங்கள் தோன்றவும் செய்யும். அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் வள்ளுவர் சாந்துணையும் கற்பது எனச் சொல்கிறார்.
மாறிவரும் உலகிற்கேற்ப மாறிநின்று ஈடுகொடுத்து வெற்றி பெறுவதற்குக் கல்வி தேவை. கல்வியென்பது வாழ அறிந்து வாழ்வதே என்ற பொருளை உணர்ந்தால் சாந்துணையும் கற்றல் வேண்டும் என்று வள்ளுவர் கூறும் உண்மை விளங்கும் என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.

நல்ல சிந்தனையாளரும் பேச்சு வன்மை மிக்கவரும் முன்னாள் தமிழக முதல்வருமான அண்ணாதுரை ஒரு சிறந்த படிப்பாளியாவார். உடல்நலக் குறைவால் அமெரிக்க நாட்டின் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டு நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் போதும் அவர் நூல் படித்தவாறு இருந்தார். அது சமயம் அவருக்கு சிகிச்சை செய்த டாகடர் அவரிடம் அறுவை சிகிச்சை அடுத்த நாள் செய்யப் போவதாகக் கூறினார். அப்பொழுது அண்ணா அவரிடம் வேண்டுகோளாக இரண்டு நாட்கள் தள்ளி அறுவை சிகிச்சை பண்ணலாமா என்று கேட்டார். டாகடர் காரணம் கேட்டார். தனக்கு அறுவைச் சிகிச்சை குறித்த பயமோ, சாவு குறித்த அச்சமோ, மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையோ இல்லை என்று கூறி தான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பதாகவும் அதில் இன்னும் சில பகுதிகள் படிக்க வேண்டி உள்ளது; இன்னும் இரண்டு நாட்கள் தனக்கு கிடைத்தால் அந்த அரிய நூல் முழுவதையும் படித்துவிடுவேன். படிக்க வேண்டும் என்பதே தன் ஆசை என்று அண்ணா பதில் அளித்தார். பின் சின்னாளில் மறைந்து விட்டார்.
உலகப்புகழ் பெற்ற பல்துறைக் கலைஞர் மைக்கேல் ஆஞ்சலோ (கி பி 1475 – 1564) சாதனைகள் பல படைத்த பின்னும் 'நான் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்' (I am still learning) என்று தனது 87-ஆவது வயதிலும் கூறினார். இறப்பு தம்மைத் தொடும்வரையில் படிப்பைத் தொடந்தனர் இவர்கள் போன்ற மேதைகள்.

பிற நாடுகள் வேறாகத் தெரியாததற்கும் சாகும்வரை கல்வி கற்பதற்கும் என்ன தொடர்பு?

இரண்டு குறள்களில் சொல்லவேண்டிய கருத்துக்களை- கற்றவனுக்கு எல்லா நாடும் தன் நாடாகவே இருக்கும் என்பதையும், கல்விக்கு காலவரையறை இல்லையாதலால் சாகும் வரை கற்கவேண்டும் என்பதையும் இந்த ஒருபாடலில் தந்தது போலத தோன்றுகிறது. இவை இரண்டிற்கும் இயைபு உள்ளதா?'

இப்பாடல் சாகும்வரை கற்றுக்கொண்டே இரு என்று சொல்வதுடன், கற்றவர்க்கு எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் கலக்கமின்றி வாழ முடியும் என்ற கருத்தையும் கூற வந்தது.
நாட்டினில் ஊர் அடங்கும். பின் ஏன் நாடாமல் ஊராமால் என்று இரண்டையும் இப்பாடல் தனித்தனியாக கூறுகிறது? நாடு என்பது வேற்று நாட்டையும், ஊர் என்றது தன்னாட்டிலேயே வேறு ஊர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்கள் இடப்பெயர்ச்சி உலகெங்கும் காலந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. குடிப்பெயர்ச்சி (migration) காரணமாகவும், வணிகம் செய்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் அல்லது வேறு பல நோக்கங்களுக்காகவும் மக்கள் இடம் பெயர்கின்றனர். மாந்தர் தம் சொந்த நலன் கருதியும், அயல் ஊர் அல்லது அயல் நாட்டின் தேவைக்காகவும், சூழ்நிலையின் கட்டாயத்தினாலும், அரசியல்,பொருளாதார, சமூக நெருக்கடிகளினாலும் புலம்பெயர்தல் மேற்கொள்வர். இடப்பெயர்ச்சி தன்னாட்டிலேயே உள்ள பிற ஊர்களுக்கோ அல்லது வேற்று நாடுகளுக்கோ ஏற்படும். இடப்பெயர்ச்சி ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் குடிபெயர்வோர்க்கும் பெரிதும் உதவுகிறது என்று பொருள் அறிஞரும் கருதுவர்.
அவ்வாறு இடப்பெயர்ச்சி நிகழும்போது கல்வி கற்ற மக்கள் தாம் சென்ற இடத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவர். புதிய இடங்களில் புதிய மக்களை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு பண்பாட்டு அதிர்ச்சி உண்டாவதில்லை. அவர்கள் தங்களை எந்தச் சூழ்நிலைக்கும் பொருத்திக்கொண்டு தாங்கள் அடைந்த இடங்களை தங்கள் ஊர் போலவும் தங்கள் நாடுபோலவுமே உணர்ந்து வாழ்வு நடத்தி மகிழ்வர். ஆனால் கல்விக்குறைபாடுடையவர் வேற்று ஊர்களுக்கோ நாடுகளுக்கோ செல்லும்போது நம்பிக்கை தளர்ந்து, மலைத்து, மிரண்டு தோல்வியைச் சந்திப்பர். புதிய சூழ்நிலையை எதிர்கொள்ளும் திறன் அவர்களுக்கு இருக்காது. அத்திறனை வளர்த்துக் கொள்ளவும் இழந்ததை ஈடுகட்டவும் கல்வி பெரிதும் உதவும். இங்கு கல்வியின் பங்கு அளப்பற்கரியது. கல்வி கற்பதற்கு கால எல்லை இல்லை. வயதும் தடையில்லை. எக்காலக் கட்டத்திலும் கற்கலாம். சாகும்வரை படிக்க வாய்ப்பு உள்ளது. அவ்விதம் கல்வி பெற்று இழப்பை எப்பொழுது வேண்டுமானாலும் மீட்டு உலகம் முழுமையுமே ஓர் ஊர்தான் என உணரலாம். இதனாலேயே சாந்துணையும் கல்லாதவாறு என்கிறது குறள்.

எதுவானாலும் தம் நாடு ஆகுமே, தம் ஊர் ஆகுமே, ஒருவன் தான் இறக்கும் வரையில் கல்லாது இருப்பது எதனால்? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கல்வி பெற்றவர் உலகக் குடிமகனாக உயர்கிறார் என்பதைச் சொல்லும் செய்யுள்.

பொழிப்பு

எந்நாடும் தன்னாடாம், எவ்வூரும் தன்னூராம், என்று உணர ஏன் ஒருவன் சாகும்வரை படிப்பதில்லை?