இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0387



இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண்டு அனைத்துஇவ் வுலகு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:387)

பொழிப்பு (மு வரதராசன்): இனிய சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.

மணக்குடவர் உரை: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்குத் தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.

பரிமேலழகர் உரை: இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு - இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து - இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
(இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல். இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்.)

இரா சாரங்கபாணி உரை: இனிய சொற்கூறி ஈதலைச் செய்து துன்பம் நேராமல் காக்கவல்ல அரசனுக்கு இவ்வுலகம் அவன் ஏவற்படி நினைத்தது போலவே நடக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு, இவ்வுலகு தன் சொலால் தான் கண்டனைத்து.

பதவுரை:
இன்சொலால்-இனிய சொல்லுடனே; ஈத்தளிக்க-ஈந்து தண்ணளி செய்யக்கூடிய அதாவது கொடுத்து நலிவுவராமற் காக்க; வல்லார்க்கு-திறமையுடையவனுக்கு; தன்சொலால்-தனது சொல்லுடன்; தான்-தான்; கண்டு-கருதிய அளவொடு; அனைத்து-அவ்வளவிற்று; இவ்வுலகு-இந்த உலகம்.


இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்::
மணக்குடவர்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;
பரிப்பெருமாள்: இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்ய வல்ல அரசனுக்கு;
பரிப்பெருமாள் குறிப்புரை: தலையளியாவது வரிசை கொடுத்தல்.
பரிதி: இன்சொல்லாலே குடியைக் காப்பானாகில்;
காலிங்கர்: தன்மாட்டு மரபின் வந்து எய்தும் மக்கள் யாவர்க்கும் கீழ்ச்சொன்ன முறைமையானே இன்சொல்லால் சில வழங்குதலேயுமன்றி மற்றுத் தன் நெஞ்சினாலும் தண்ணளி செய்யவல்ல அரசர்க்கு;
பரிமேலழகர்: இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு;
பரிமேலழகர் குறிப்புரை: இன்சொல்: கேள்வியினும் வினையினும் இனியவாய சொல். ஈதல்: வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல். அளித்தல்: தன் பரிவாரத்தானும் பகைவரானும் நலிவுபடாமல்காத்தல்.

பழம் ஆசிரியர்கள் இனிய சொல்லுடன் ஈதல் செய்து தண்ணளி புரியு வல்ல அரசர்க்கு என்று பொருள் வருமாறு உரை தருகின்றனர். அளித்தல் என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் மக்கட்கு அரசனது பரிவாரங்களாலும் அதாவது சுற்றங்களாலும் சூழ்ந்துள்ளோராலும் நலிவு வராமல் காக்க வேண்டும் என்பதாக விளக்கம் தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இனிது சொல்லி அளிசெய்யும் அரசன்', 'இனிய வார்த்தைகள் பேசி (குறை சொல்லிக் கொண்டவர்களுக்கு) உதவி கொடுத்து (முறை சொல்லிக் கொண்டவர்களுக்குப்) பாதுகாப்பளிக்க வல்லவனாகிய அரசன்', 'இனிய சொல்லுடன் வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்துக் காப்பாற்றவல்ல அரசனுக்கு', 'இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

தன்சொலால் தான்கண்டு அனைத்துஇவ் வுலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.
பரிப்பெருமாள்: தன்னேவலாலே இவ்வுலகம் தான் கண்டாற் போலும் தன் வசத்தே கிடக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவ்வரிசை பெற்றவர் அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது.
பரிதி: தன் சொல்லினாலே தானே உலகத்தைப் படைத்துத் தானே உலகத்தைக் காத்ததற்கு ஒக்கும்.
காலிங்கர்: இங்ஙனம் சொல்லுகின்ற (தனது சொல்நலத்)தினாலே தான் (படைத்த அத்தன்மைத்து இவ்வுலகு என்னவே மற்று) இவ்வுலகில் வாழ்வார் யாவரும் தன்வசத்து ஒழுகுவர்.
பரிமேலழகர்: இவ்வுலகம் தன் புகழோடு மேவித் தான் கருதிய அளவிற்றாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை அரியவாகலின் 'வல்லாற்கு' என்றும், அவன் மண் முழுவதும் ஆளும் ஆகலின் 'இவ்வுலகு' என்றும் கூறினார். கருதிய அளவிற்றாதல் - கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்

மணக்குடவரும் காலிங்கரும் 'தன் ஆணைப்படி அமைந்து தன் வசம் உலகம் இருக்கும்' என்கின்றனர். பரிப்பெருமாள் உரையான 'அவ்வரிசை பெற்றவர் (அதாவது அமாத்தியர்) அரசனுக்கு நல்லர் ஆதலானே, தாம் இருந்த இடம் எல்லாம் அரசன் இருந்தானாகக் கொண்டு இராச காரியத்தைத் தப்பாமல் செய்வர்; ஆதலால் தான் கண்டால் ஒக்கும் என்றது' என்பது மிகக்குறுகிய பரப்பைத் தழுவி உள்ளது. பரிதி 'இவ்வுலகமே தன் வாய்ச்சொல்லால் படைக்கப்பட்டு அதைத் தானே காப்பது போல் உணர்வான்' என்கிறார். 'நினைத்தது நிறைவேறும்' என்ற பொருள் தரும்படி பரிமேலழகர் 'தான் கருதிய பொருள் எல்லாம் சுரத்தல்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்சொற்படி உலகத்தைக் காண்பான்', 'சொல்லுகிறபடி அவன் விரும்பினதையெல்லாம் உலகத்தார் செய்வார்கள்', 'அவனது சொல்லாற்றலாலேயே இவ்வுலகம் அவன் நினைத்த அளவு அவனுடையது ஆகும்', 'இவ்வுலகம் அவன் விரும்பியவாறு அவன் சொற்படி நடக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது பாடலின் பொருள்.
'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன?

அருள் நெஞ்சம் கொண்ட ஆட்சித்தலைவன் சொல்வதை எல்லாம் குடிகள் கேட்டு நடப்பர்.

இன்சொல், ஈகைக்குணத்துடன், நெஞ்சில் ஈரம் மிகக் கொண்ட நாட்டுத்தலைவன் தன் ஆட்சிமுறையில் தான் நினைப்பது நடப்பதாக இறும்பூது எய்தும் நிலை கூறும் செய்யுள். தலைவன் தன் குடிகளிடம் எந்தவகையில் உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதைச் சொல்கிறது இப்பாடல்.
இனிய சொல்லுடனே, ஈந்து, தண்ணளி செய்யும் தலைவனுக்கு அவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன் வசத்து ஒழுகுவர். அவன் நாட்டுமக்களை தன் சொல்லாலும் செயலாலும் பிணித்துக் கொள்வான். இவ்வாறு அருளுணர்வோடு ஆளும் திறம்கொண்ட தலைவன் நாட்டில் வாழ்வார் யாவரும் அவன்வசத்து ஒழுகுவர். அரசு குடிமக்களின் நன்மையில் அக்கறை கொண்டு ஆட்சி செய்கிறது என்பது கருத்து. அரசும் மக்களும் கருத்து ஒற்றுமை கொண்டால் ஆட்சி சீராகச் செல்லும்; குழப்பம் உண்டாக வழியில்லை. அப்படிப்பட்ட ஆட்சியில் தலைவனுக்கு அவனது நாட்டில் எல்லாமே அரசின் எண்ணப்படி நடப்பதாக இருக்கும்.
தனது நாட்டிற்குத் தான் விரும்பிய நல்லனவெல்லாம் செய்ய எண்ணும் ஆட்சித்தலைவன் இன்சொல் பேசி, வள்ளன்மையுடன் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட தலைவன் அமைந்தால் அவன் விரும்பும்படியெல்லாம் நாட்டினரும் நடப்பார்கள்.
'உலகு' என்பது ஆட்சித்தலைவனது எல்லைக்குட்பட்ட உலகத்தைக் குறிக்கும்.

'தன்சொலால் தான்கண்டனைத்து இவ்வுலகு' என்றதற்கு தான் கருதியவாறு தன் நாடு இயங்குவதைக் காண்பான் என்பது பொருள். இதற்குத் 'தன் ஏவற்படி உலகம் நடக்கும்' என்று உரைத்தார் மணக்குடவர். இதே கருத்துக்கொண்ட புறநானூற்றுப் பாடல்வரியை இக்குறளுக்கு ஒப்பிட்டுக் காட்டுவர். அப்பாடலாவது: யான்கண் டனையரென் னிளையரும் (புறநானூறு 19:4 பொருள்: யான்கருதிய அதனையே கருதுவர், என்னுடைய ஏவல்செய்வாரும்)

'வல்லார்க்கு' என்ற சொல் குறிப்பது என்ன?

பல்வேறு குணங்கள் கொண்ட மக்களுடன் நாளும் கலந்துரையாடும் தலைவன் நிதானம் இழக்காமல் இனிமையுடன் பேசுவதற்கு அவன் தனித் திறம் கொண்டவனாக இருக்க வேண்டும். இத்தன்மை உடையோன் தன்னைத் தானே ஆள்வான் என்பது தெளிவு. அத்துடன் வேண்டியவர்க்கு தேவையறிந்து வழங்குவதற்கும் தனி ஆற்றல் வேண்டும். மேலும் முறை வேண்டினார்க்குப் பாதுகாப்பு அளித்துப் பயத்தைப் போக்கும் தன்மை எல்லோருக்கும் அமையாது. தன்னை ஆள்பவனாய் இருந்து கருணை நெஞ்சினனாகவும், பாதுகாப்பு உணர்வை மக்கள் அனைவரிடமும் ஏற்படச்செய்யும் தலைவனுக்குத் தன் மக்களை ஆள்வதும் அவர்களை அன்பினால் கட்டிப்போட்டு வைப்பதும் எளிது. குடிமக்கள் அவற்றைத் தரும் தலைவனால் ஈர்க்கப்பட்டு அவன் ஆணையை எதிர்நோக்கி நிற்பர். இது ஆள்வோர் எல்லாருக்கும் இயலாது; ஒரு சிலராலேயே இவ்விதம் மக்களைக் கட்டுண்டு கிடக்கச் செய்ய முடியும். எனவேதான் வள்ளுவர் அத்தகையோரை வல்லார் என்கிறார்.
''வல்லாற்கு' என்றது ஈபவர் கொடைச் செருக்கால் அல்லது கொடையுரிமையால் கொடிய சொல்லுஞ்செயலும் உடையராதலுங் கூடும். அதனையும் மாற்றும் வல்லமையுடையார்க்கு' என்பது தண்டபாணி தேசிகர் தரும் விளக்க உரை.

'வல்லார்க்கு' என்ற சொல்லுக்குத் திறனுடையார்க்கு என்பது பொருள்.

குடிமக்களிடம் இனிய சொல்லுடன் ஈதலைச் செய்து அளிக்கவல்லவனுக்கு, தன்சொற்படி இவ்வுலகம் அமைந்துள்ளதாகப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மக்கள் செல்வாக்குப் பெற்ற இறைமாட்சி கூறும் பாடல்.

பொழிப்பு

குடிகளிடம் இனிய சொல் பேசி, வேண்டிய உதவிகள் செய்து, அருள்காட்டும் அரசன் தன்சொற்படி உலகத்தைக் காண்பான்