இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0386



காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:386)

பொழிப்பு (மு வரதராசன்): காண்பதற்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

மணக்குடவர் உரை: காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
இது மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் .
(முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பார்வைக்கு எளிமை சொல்லுக்கு இனிமை உடைய மன்னனது நாடு புகழப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மன்னன் நிலம் மீக்கூறும்.

பதவுரை:
காட்சிக்கு-காண்டற்கு; எளியன்-வருந்தாமல் காணக்கூடிய தன்மையுடையனாய்; கடுஞ்சொல்லன்-கடுமையான சொல்லையுடயவன்; அல்லனேல்-அல்லாதவனாயின்; மீக்கூறும்-உயர்த்திச் சொல்லும்; மன்னன்-ஆட்சித்தலைவன்; நிலம்-உலகம்.


காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காண்கைக்கு எளியனாய்க் கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின்;
பரிப்பெருமாள்: காண்டற்கு எளியனுமாய்க் கடுஞ்சொல் கூறுதலும் இலனாயின்;
பரிதி: குடியானபேர் வந்தால் எளிதாகக் காணவும், இன்சொல் சொல்லவும் வல்லவனாகில்;
காலிங்கர்: வேண்டுநர் வேண்டுழிக் காட்சிக்கு எளியனுமாய் மரபுடைய மக்கட்கு இன்சொலாளனும் ஆவானாகின்;
பரிமேலழகர்: முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். [அத்தாணி - அரசாட்சி மண்டபம்.]

'காண்டற்கு எளியனுமாய்க் கடுஞ்சொல் கூறுதலும் இலனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிமக்கள் நேரில் காணுமாறு எளியவனாய், எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருப்பின்', 'குறை சொல்லிக் கொள்ள விரும்புகின்றவர்கள் எளிதில் காணக் கிடைப்பவனாகவும் குறை சொல்லிக் கொள்ளுவர்களிடத்தில் கடுமையான சொற்களைப் பேசாதவனாகவும் இருந்தால்', 'அரசன் யாவர்க்குங் காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் சொல்லாதவனாய் இருப்பானாயின்', 'யாவர்க்கும் காண்பதற்கு எளியனாய், கடுமையான சொற்களைச் சொல்லுதல் இல்லாதவனாய் இருப்பானேல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குடிகளால் எளிதாகப் பார்க்கக்கூடியவனாகவும், கடிந்து பேசமாட்டாதவனாகவும் இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

மீக்கூறும் மன்னன் நிலம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
பரிப்பெருமாள்: அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
பரிதி: அவனை மிகுதியாகச் சொல்லும் வானாடு என்றவாறு.
காலிங்கர்: அம்மன்னனையே இவ்வுலகத்து வாழ்வார் யாவரும் புகழ்ந்துரைப்பர் என்றவாறு.
பரிமேலழகர்: அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது' என்றார்.

'அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'மிகுதியாகச் சொல்லும் வானாடு' என்றும் காலிங்கர் 'புகழ்ந்துரைப்பர்' என்றும் மீக்கூறும் என்பதற்குப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாட்டு மக்கள் அவனைப் பிறநாட்டு மன்னரினும் புகழ்வர்', 'அந்த மன்னனுடைய நாடு எல்லாராலும் புகழப்படும்', 'அவனுடைய நாட்டினை எல்லா நாட்டினுஞ் சிறந்தது என்று உலகத்தார் பேசுவர். (நிலம் மன்னன் மீக்கூறுமென்று கொண்டால் அவனுடைய குடிகள் அவனை மிகவும் நல்லவன் என்று புகழும் என்பது பொருள்.)', 'அவ்வரசனது நாடு அவனைப் பாராட்டிப் புகழும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாடு அவனை உயரத்திச் சொல்லும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடிகளால் எளிதாகப் பார்க்கக்கூடியவனாகவும், கடிந்து பேசமாட்டாதவனாகவும் இருந்தால் மீக்கூறும் மன்னன் நிலம் என்பது பாடலின் பொருள்.
'மீக்கூறும் மன்னன் நிலம்' குறிப்பது என்ன?

நாட்டுத் தலைவனின் குடிமக்கள் தொடர்பு திறம் பற்றிக் கூறும் பாடல்.

காண வரும் பலருக்கும் எளிதில் காட்சி தந்து, கடுமையாகப் பேசாதவனாகவும் இருக்கும் ஆட்சித்தலைவனை அந்நாடு மிக உயர்த்திச் சொல்லும்.
குடிமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாடாள்வோன் அக்கறை செலுத்தவேண்டும். நாட்டுத்தலைவன் என்ற எண்ணத்தால் செருக்குற்று குடிகளிடமிருந்து விலகி இருக்கும் தலைவனிடம் அவர்கள் குறைகளைக் கூறமுடியாத நிலை இருந்தால் அவனால் நாட்டின் உண்மையான நிலையை அறிய முடியாமல் போய்விடும். சிடுசிடுக்கும் குணம் கொண்டவர்களிடம் தன் மனதிலுள்ளதை வெளிப்படுத்துவதில் எவருக்கும் பயம் ஏற்படும். அந்த அச்சத்தால் சொல்ல வந்த கருத்தையும் சொல்லாமலே விரைந்து வெளியேறி விடுவார்கள். அதனால் தலைவனுக்கும் நாட்டுக்குமேகூட நெருக்கடி ஏற்படலாம்.
குடிமக்கள் விரும்பும்போது எளிதாக நெருங்கத் தக்கவனாகத் தலைவன் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். அவர்கள் தங்கள் மனக்குறைகளைச் சொல்லும் வகையிலான எளிமையைச் சொல்கிறார். 'வேண்டுநர் வேண்டுழி காட்சிக்கு எளியனுமாய்' என இதை விளக்குவார் காலிங்கர். காட்சிக்கெளிமையாய் இருப்பது, அவனை மக்களுக்கு நெருக்கமுள்ளவனாக ஆக்குகின்றது. குடிகளின் துன்ப துயரங்களை நேரில் கேட்பது விரைவான தீர்வுகளுக்கு வழிகோலுகிறது. தலைவன் குடிமக்களை நன்கு மதித்தால் அரசு வினைஞரும் மக்களிடம் முறையாக நடந்து கொள்வர். குடிகள் கூறுவன ஏற்றுக்கொள்ளக் கூடியவையோ அல்லவோ அவற்றை இன்முகத்தோடு காது கொடுத்துக் கேட்போனாகவும் இருக்கவேண்டும். எத்தகைய சூழலிலும் ஆணவத்துடன் கடுமையான சொற்களைச் சொல்லாத பயிற்சி கொண்ட தலைவனாக இருந்தால் அவன் மக்கள் மனத்தில் நிலைத்தவனாய்த் திகழ்வான்.
மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஆள்வோனே அவர்களது அன்பைப் பெற்று வலியவனாகத் திகழ்வான். இவ்வாறு குடிகளுடன் எளிதாகப் பழகும் தன்மையுடன் சுடுஞ்சொல் பேசாதவராகவும் தலைவன் இருந்தால் அவனை மக்கள் கொண்டாடுவர் என்கிறது பாடல்.

முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே (புறநானூறு, 35 பொருள்: நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து செவ்வி எளியோர் இங்குத் துளிவேண்டுங் காலத்து மழை பெற்றவரே) என்ற சங்கப்பாடல் எளிதாக அணுகக் கூடிய தலைவனிடன் சென்றால் மழை வேண்டி நிற்போர் உரிய காலத்தில் பெற்றதைப் போன்றது போல் உணர்வர் என்று கூறியது.

'மீக்கூறும் மன்னன் நிலம்' குறிப்பது என்ன?

'மீக்கூறும்' என்றதற்கு அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர், அவனை மிகுதியாகச் சொல்லும், அம்மன்னனையே இவ்வுலகத்து வாழ்வார் யாவரும் புகழ்ந்துரைப்பர், அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம், அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும், அவனுடைய சீர்மையை உலகம் உயர்த்திச் சொல்லும், அத்தகையவனது நாட்டைப் பிற நாடுகளிலும் மேற்பட்டதென உலகம் உயர்த்திப் பேசும், அரசனின் நாட்டைச் சிறந்த நாடென்று உலகம் உயர்த்திக் கூறும், மன்னனது நாடு புகழப்படும், பிறநாட்டு மன்னரினும் புகழ்வர், மன்னன் உலகத்தாரால் கொண்டாடப்படுவான், நாட்டவர் அனைவரும் அவன் புகழ் கூறுவர், அவனுடைய நாட்டினை எல்லா நாட்டினுஞ் சிறந்தது என்று உலகத்தார் பேசுவர், அவ்வரசனது நாடு அவனைப் பாராட்டிப் புகழும், தலைவனின் நாடு புகழால் மேம்பட்டு நிற்கும், அவ்வரசனது நாட்டை ஏனை நாடுகளினுஞ் சிறந்ததாக உலகம் உயர்த்துக் கூறும், அரசனை அந்நாட்டு மக்கள் பெருமையாகப் புகழ்வர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இப்பகுதிக்கு மணக்குடவர் 'அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்' என்று உரை பகர்ந்தார். பரிமேலழகர் 'மீக்கூறும் மன்னனிலம்' என்பதற்கு 'அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம்' என்று பொருள் கூறி சிறப்புரையில் மணக்குடவர் உரையை மறுப்பார்போல், 'நிலத்தை மீக்கூறும்' எனவே, 'மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று' என்றார். உயர்த்திப் பேசப்படுவது தலைவனா அல்லது அவனது நாடா? என்ற வினா எழுகிறது. எளியனாக இருப்பதும், இன்சொல் கூறுதலும் நாட்டுத்தலைவனது குணங்களால் அமைவதாதலால் புகழுக்குரியவன் தலைவனே என்பது எளிதில் அறியத்தகுமாதலாலும் 'ஆள்வோனை நாடு புகழும்' என்பது குறட்சொல்லமைதியை ஒட்டியிருப்பதாலும் மணக்குடவர் உரையில் கண்டுள்ளபடி நாட்டுத் தலைவனை உயர்த்திக் கூறுவர் என்பதே இயல்பானதும் பொருத்தமானதும் ஆகும்.

'மீக்கூறும் மன்னன் நிலம்' என்றதற்கு ஆட்சித்தலைவனை நாட்டுமக்கள் உயர்த்திக் கூறுவர் என்பது பொருள்.

குடிகளால் எளிதாகப் பார்க்கக்கூடியவனாகவும், கடிந்து பேசமாட்டாதவனாகவும் இருந்தால் ஆள்வோனது நாடு அவனை மிக உயரத்திச் சொல்லும் என்பது இக்குறட்கருத்து.





அதிகார இயைபு

குடிகளை நன்கு மதித்துச் செயல்படுவது நாட்டுத்தலைவனது சிறப்பான ஒழுகுதிறம் என்ற இறைமாட்சி கூறும் பா.

பொழிப்பு

பலரும் காணுமாறு எளியவனாயும், எவரிடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாயும் உள்ள ஆள்வோனது நாடு அவனை மிக உயர்த்திப் பேசும்.