இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0383



தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:383)

பொழிப்பு (மு வரதராசன்): காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை ஆகிய இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.

மணக்குடவர் உரை: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.

பரிமேலழகர் உரை: நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.
(கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.

நாமக்கல் இராமலிங்கம் உரை: அரச காரியங்களில் அயர்ந்துவிடாமல் விழிப்பாக இருப்பது, அப்போதைக்கப்போது அறியவேண்டியவற்றைக் கற்றுக் கொள்வது, உடனுக்குடன் ஆலோசனை நடத்திக் காரியங்களை நிச்சயிப்பது ஆகிய மூன்று குணங்களும் நாடாளும் தலைவனிடத்தில் எந்த நேரத்திலும் நீங்காதிருக்க வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலன் ஆள்பவற்கு தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா.

பதவுரை:
தூங்காமை-விரைவுடைமை; கல்வி-நூற்கல்வி; துணிவு-முடிவெடுக்கும் திறன்; உடைமை-உடையனாந்தன்மை; இம்மூன்றும்-இம்மூன்றும்; நீங்கா-விலகாமல் நிற்கும்; நிலன்-நாடு; ஆள்பவற்கு-ஆளும் பொறுப்பேற்றவர்க்கு.


தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்;
பரிப்பெருமாள்: மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலாகச் செயற்கைக் குணம் கூறுகின்றார். உலகத்துக் குற்றமும் குணமும் ஆராயுங்கால் மயங்கக்காணாது உண்மை ஆராய்ந்து துணிதல் ஒருதலையாக நிலனாள்பவர்க்கு வேண்டும் என்பதானாலும், அதுதான் கல்வியானல்லது ஆராய்தல் அரிது ஆகலானும், அக்கல்வி மடியின்மையானல்லது வராது ஆகலானும் சிறப்பு நோக்கி முற்பட இம்முறையே கூறினார்.
பரிதியார்: ஆலசிய புத்தியின்மையும், கல்வியுடைமையும், திடமான புத்தியும் இந்த மூன்று காரியமும்; [ஆலசியம்-அலட்சியம் அல்லது கவனக்குறைவு]
காலிங்கர்: விரையுங்கருமம் தாழாது இயற்றுகையும், அருமறை முதலாக அறநீதி முடிவாக இங்ஙனம் தாம் கற்கத் தருமவற்றைக் கற்கும் கல்வியும், தாம் செய்யும் கருமத்து மனத்திட்பமும் இம்மூன்றும்;
பரிமேலழகர்: அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடைமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும்;
பரிமேலழகர் குறிப்புரை: கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின், அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய.

'மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். தூங்காமை என்பதற்கு விரைவுடைமை என்றும் துணிவுடைமை என்றதற்கு ஆண்மை உடைமை என்றும் பரிமேலழகர் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலந்தாழாமை கல்வி துணிவு மூன்றும்', 'விரைந்து செயல்படல், கல்வி, உண்மையினை ஆராய்ந்து தெளிதல் என்னும் இம்மூன்றும்', 'நாட்டினை ஆள்கின்ற அரசனுக்கு விடாமுயற்சியும் கல்வியும் திண்மையும் ஆகிய மூன்று பண்புகளும்', 'காலத்தாழ்வு இல்லாமையும், கல்வியும் துணிந்து செய்யும் பண்பும் ஆகிய மூன்றும் ', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரைந்து செயல்படல், கல்வி, மனத்திட்பம் ஆகிய மூன்று குணங்களும் என்பது இப்பகுதியின் பொருள்.

நீங்கா நிலன் ஆள்பவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.
பரிப்பெருமாள்: நிலனாள்பவர் தமக்கு நீங்காவாதல் வேண்டும்.
பரிதியார்: இராசாக்கள் செல்வம் என்றவாறு.
காலிங்கர்: ஒழியாது செலுத்துமதுவே மண் ஆளும் வேந்தர்க்கு இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு ஒருகாலும் நீங்கா.
பரிமேலழகர் குறிப்புரை: 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க.

'நிலனாள்பவர் தமக்கு நீங்காவாதல் வேண்டும்/நீங்கா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிலன் ஆள்பவனுக்கு நீங்காது வேண்டியவை', 'நிலத்தினை ஆளும் அரசனுக்கு நீங்காதிருத்தல் வேண்டும்', 'அவனை விட்டு நீங்காதிருக்கற் பாலன', 'நிலத்தை ஆளும் பொறுப்பு ஏற்றவர்க்கு ஒருகாலும் நீங்காமலிருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாடாள்பவர்க்கு நீங்காமல் இருக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விரைந்து செயல்படல், கல்வி, முடிவெடுக்கும் மனத்திட்பம் ஆகிய மூன்று குணங்களும் நாடாள்பவர்க்கு நீங்காமல் இருக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நீங்கா' என்ற சொல் குறிப்பது என்ன?

ஆட்சித் தலைவன் கற்றுத் தெளிய வேண்டிய செயற்கைக் குணங்கள் காலத்தாழ்வு இல்லாமை, நூலறிவு, ஆய்ந்து முடிவெடுக்கும் மனத்திட்பம் ஆகியன.

இப்பாடல் கூறும் மூன்று குணங்களாவன:
தூங்காமை- இது காலத்தாழ்வு செய்யாமல் விரைந்து செய்தல் குறித்தது. கணப்பொழுதும் கண்ணயராமல் எனவும் கூறலாம். செயல் ஆற்றுவதில் சோர்வின்மை அல்லது விழிப்பாக இருத்தல் என்றும் இதற்குப் பொருள் கொள்வர். ஒரு செயலைக் காலத்தில் செய்யாமை, காலம் தாழ்த்துதல், தள்ளிப்போடும் மனப்பான்மை போன்றவை அரசாட்சியின் திறனைக் குறைக்கும். இவை முறைகேடுகளுக்கும் வழி வகுப்பன. விரைந்து செயல்படல் திறமையின் அளவுகோல்; அது அரசினது செயல்பாடுகளின் வெற்றி அடையாளமுமாகும்.
கல்வி- அறநூல், நீதிநூல், போர்முறை பற்றிய நூல், ஆட்சிமுறை கூறும் நூல் இன்னபிற நூல்களைக் கற்றுத் தேர்தலுடன் அவற்றைக் காலம் செல்லச் செல்ல அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ளவும் வேண்டும். நூற்கல்வி சிந்தனைத் தெளிவு தந்து ஆள்பவர்க்குத் துணை நிற்கும்.
துணிவுடைமை- துணிவுடைமை என்பது உண்மை ஆராய்ந்து தெளிவான உறுதியான முடிவெடுக்கும் மனத்திட்பம் பற்றியது.

'நீங்கா' என்ற சொல் குறிப்பது என்ன?

மேற்சொன்ன மூன்று குணங்களும் ஆட்சித்தலைவனை விட்டு 'நீங்கா' என்கிறது பாடல்.
முந்திய பாடலில் (382) சொல்லப்பட்ட அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் என்ற நான்கும் இயற்கைக் குணங்கள். இவை உயிர்க்குணங்கள் என்றும் அறியப்படும். இப்பாடலில் நாட்டுத்தலைவன் செயற்கையாகப் பெறவேண்டிய அதாவது கற்றுக் கொள்ளவேண்டிய மூன்று குணங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றைத் தொழிற்குணங்கள் என்றும் அழைப்பர். இயற்கைக் குணங்கள் ஒருவனுடன் நீங்காமல் அமைந்திருப்பன. செயற்கைக் குணங்கள் சோம்பலினாலும் அறியாமையாலும் முடிவெடுக்கும் திறன்குறைவாலும் ஒருவர் உணர்ந்துகொள்ள இயலாமல் அவரை விட்டு நீங்கும் தன்மையன. எனவே அவற்றை நீங்காமல் நாடாள்பவர் காத்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளில் நீங்கா என்கிறது இக்குறள்.

காலம்தாழ்த்தாமை, கல்வி, முடிவெடுக்கும் மனத்திட்பம் இவை மூன்றையும் நாடாள்பவன் தன்னை விட்டு விலகாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கற்றுத்தேறும் அரசியல்புகளைக் கூறும் இறைமாட்சி பாடல்.

பொழிப்பு

விரைந்துசெயல்படல், கல்வி, மனத்திட்பம் இம்மூன்றும் நிலன் ஆள்பவருக்கு நிலைத்து நின்றிருக்க வேண்டியவை.