இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0381



படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:381)

பொழிப்பு (மு வரதராசன்): படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.



மணக்குடவர் உரை: படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன் அரசருள் ஏறுபோல்வன்.
ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று. இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.

பரிமேலழகர் உரை: படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான்.
(ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. 'ஏறு' என்பது உபசார வழக்கு.
இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம்கூறப்பட்டன.)

குன்றக்குடி அடிகளார் உரை: படையும் குடியும் பொருளும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு உறுப்புக்களையும் ஒரு சேரப் பெற்று விளங்குபவன் அரசருள் ஆண் அரிமாப் போல்வான்.
குடியை முதன்மைப்படுத்தாது படையை முதன்மைப்படுத்துவது ஏன்? குடி இயல்பாய் அமைவது. படை தயாரிக்கப்படக்கூடிய ஒன்று. தன் நாட்டில் குடியை முறையாகப் பாதுகாக்கப் படை தேவை. அதனால், படை முதனிலைப்படுத்தப் பெற்றது. அமைச்சு என்பது படை, குடி, கூழ் ஆகியன பற்றிச் சிறந்த முறையில் அரசுக்கு எடுத்துக் கூறி வழி நடத்துவது. அமைச்சு அரசியல்-ஆட்சியியல் தொடர்புடையது. நட்பு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பங்கேற்று, அவனுடைய திறன்கள் பெருகி வளர்வதற்கு உட்சுற்றில் அமைந்த உறுப்பு. நட்பு அரசனின் அரசியல், வாழ்வியல் இரண்டுக்கும் உறுப்பாக அமைந்து இயங்கி வழி நடத்துவது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு.

பதவுரை:
படை-படை; குடி-நாட்டுவாழ் மக்கள்; கூழ்-உணவிற்கேதுவாகிய பொருள்; அமைச்சு-அமைச்சரவை; நட்பு-தோழமை, நட்புநாடுகள்; அரண்-கோட்டை, எல்லைகளுக்குக் காவல்; ஆறும்-ஆறும் (ஆறு உறுப்புகளையும்); உடையான்-உடைமையாகக் கொண்டவன்; அரசருள்-ஆட்சித்தலைவர்களுக்குள்; ஏறு-ஆண் சிங்கம்.


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும் உடையான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன்;
மணக்குடவர் குறிப்புரை: ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று.
பரிப்பெருமாள்: 'படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்னும் ஆறுபொருளினையும் உடையவன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டுக் குடி என்றது குடியுள்ள நாடு.
பரிதி: இந்த ஆறு செல்வமும் உள்ளவன்;
காலிங்கர்: படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்னும் இவ் ஆறு உறுப்பினையும் உடையான்;
காலிங்கர் குறிப்புரை: இனி அரசருள் ஏறு எனவே இவ்வுறுப்பு ஆறில் குறைபாடு உடையார் அரசெரெனப் படுவாராயினும் சிறப்புடையவர் அல்லர் என்பதூஉம் அரசனையும் உறுப்பாகக் கொண்டு இவை ஆறினோடும் கூட்டி இராச்சியமெல்லாம் ஒன்றாக்கி வடநூலார் கூறுமவற்றின் சில வேறுபடுத்து மாசனம் முதலாக நாட்டிற்கு இவ்வாறினையும் உறுப்பாக்கிக் கூறினர் என்பதூஉம் கொள்க. இனி, இங்குச் சொன்ன இறை முதலாகிய எழுவகைப் பொருளுமே இப்பொருட்பால் நடைப்பொருள் என அறிக.
பரிமேலழகர்: படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன்;
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை, நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம். வடநூலார் இவற்றிற்கு 'அங்கம்' எனப்பெயர்கொடுத்ததூஉம் அது நோக்கி. இதனால் அரசற்கு அங்கமாவன இவை என்பதூஉம், இவைமுற்றும் உடைமையே அவன் வெற்றிற்கு ஏது என்பதூஉம் கூறப்பட்டன.

பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் அரசனுக்கு ஆறு 'பொருள்கள்' என்று இக்குறளில் கூறப்பட்ட ஆறையும் சொல்வர். பரிதி ஆறு 'செல்வமும்' உள்ளவன் என்று உரை பகன்றார். காலிங்கர் இந்த ஆறு 'உறுப்புகளுடன்' அரசையும் சேர்த்து ஏழாக்கி உரைத்தார். பரிமேலழகர் இந்த ஆறு 'அங்கங்களை' உடையவன் என்று கூறி அவற்றின் வரிசை அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு என்றிருக்கவேண்டும் எனச் சொல்லி அவை முறைமாறியதற்கு விளக்கமும் கொடுக்கிறார். மேலும் அவர் சிறப்புரையில் குடியை 'நாடு' என்றும் கூழை 'பொருள்' என்றும் மாற்றிக் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'படை குடி உணவு அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையவன்', 'படை,குடி,உணவுப்பொருள், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்புகளையும் உடையவனே', 'படைவலிமையும் ஜனக்கட்டும் செல்வச் சிறப்பும் நல்ல மந்திரிகள் சபையும் அயல் நாட்டரசர்களின் நட்பும் கோட்டை கொத்தளங்களும் ஆகிய இந்த ஆறும் சரியாக அமையப் பெற்ற', 'தானையுங் குடிகளும் பொருள்களும் அமைச்சரும் நண்பருங் கோட்டையும் ஆகிய ஆறும் செம்மையாக உடையவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

படை, குடிமக்கள், பொருள், அமைச்சு, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற ஆறு அங்கங்களையும் உடையவன் என்பது இப்பகுதியின் பொருள்.

அரசருள் ஏறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மனக்குடவர்: அரசருள் ஏறுபோல்வன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அரசனுக்கு உண்டாக்குவன கூறிற்று.
பரிப்பெருமாள்: அரசருள் ஏறுபோல்வன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரசனுக்கு உண்டாக வேண்டுவன கூறிற்று.
பரிதி: அரசர் என்னும் பசுக்களுக்கு ஒரு ரிஷபம்.
காலிங்கர்: அரசருள் ஏறு.
பரிமேலழகர்: அரசருள் ஏறு போல்வான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஏறு' என்பது உபசார வழக்கு.

அரசருள் ஏறுபோல்வான் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசரிற் சிறந்தவன்', 'அரசருள் அரிமா போல்வான்', 'அரசனே சிறப்புடையவன்', 'அரசருள் அரிமா எனப்படுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
படை, குடிமக்கள், பொருள், அமைச்சு, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்பது பாடலின் பொருள்.
'நாடு' என்ற ஒன்று ஏன் இங்கு குறிப்பிடப்படவில்லை?

ஒரு நாட்டிற்குண்டான உறுப்புக்கள் எவை என்பது சொல்லப்படுகிறது.

வலிய போர்ப்படை, நாட்டுப்பற்று கொண்ட குடிமக்கள், சிறந்த விளைச்சல், திறனான அமைச்சு, நம்பிக்கைக்குகந்த நட்பு வட்டம், அரண்கள் முதலிய பாதுகாப்புகள் என்ற ஆறு பகுதிகளையும் ஒழுங்குபெற அமைத்து வைத்துக் கொண்டுள்ளவனே ஆட்சித்தலைவர்களுள் ஆண் சிங்கம் போன்று சிறந்தவன் ஆவான்,
உள்நாட்டு அமைதியைப் பாதுகாக்கவும் வெளிநாட்டுப் படையெடுப்பை எதிர்க்கவும் போதுமான படைகள்; ஊக்கமுடைய குடிமக்கள்; நாட்டிற்குப் போதுமான உணவு, பொருட்செல்வம் ஆகியன; அறிவும் திறமையும் உள்ள அமைச்சர்கள்; உதவும் நட்பு நாடுகள்; நாட்டில் பகைவர் எளிதில் நுழையாதபடி காக்கும் அரண்கள்; இவற்றை உடைய நாட்டுத்தலைவன் மற்ற ஆட்சியாளரிடையே பெருமிதம் தோன்ற விளங்குவான்.

வடமொழிப் பொருள் நூல்களாகிய சுக்கிர நீதியும் கௌடிலியமும் அரச அங்கங்கள் ஏழு என்று கூறின. 'இங்கு அரசன் ஏழு உறுப்புகளில் ஒன்றாக அமையாது, மற்றைய ஆறு உறுப்புகளையும் ஒருமைப்படுத்தி உயிர் கொடுத்து நிற்கும் முதற்பொருளாக விளங்குகின்றான். ....அரசியல் அமைப்பு அனைத்தையும் ஒன்றாகக் காண்கின்ற காட்சி இங்குத் தோன்றுகிறது.....இது திருவள்ளுவர் செய்த புதுமை' என்று தெ பொ மீ கூறுவார். அரசனின்றி ஆட்சியில்லை ஆதலால் அரசனை வினை முதலாக்கிக் கூறிய வள்ளுவர் கருத்தே சிறந்தது (தண்டபாணி தேசிகர்). அரசனை உயிராக்கிப் பிறவற்றை உடலாக்குவது சங்கநூல் வழக்கு. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் (புறநானூறு 186).

இவ்வுறுப்புகள் ஆறில் குறைபாடு உடையார் தலைவனெனப் படுவாராயினும் சிறப்புடையவர் அல்லர். ஆறும் அமைந்திருந்தால்தான் ஆட்சித்தலைவன் ஏறு ஆகிறான் என்பதைக் குறிக்க ஆறு என்றதுடன் உம்மை சேர்க்கப்பெற்று 'ஆறும்' எனச்சொல்லப்பட்டது.
அரசருள் ஏறு என்று சொன்னது ஆண் சிங்கம் போன்றவன் என்ற கருத்துடையது. சிங்கம் என்றது தலைமைப் பண்பு ஏற்று பெருமித நடையுடன் வெல்லமுடியாதவனாகவும் செம்மாந்தும் இருப்பான் என்பதை உணர்த்திற்று.

பொருட்பாலின் முதல் பாடலான இது இப்பாலின் கருதுகோள் கூறும் சுருக்க உரையாகவும் அமைகிறது.

'நாடு' என்ற ஒன்று ஏன் இங்கு குறிப்பிடப்படவில்லை?

வட நூல்கள் அரசியலை நாடு, அரசன், அமைச்சர், பொருள், படை, பாதுகாப்பு, நட்பு, ஆகிய ஏழு அங்கங்கள் அடங்கியதாகக் கருதின. (இவற்றில் குடிமக்கள் காணப்படவில்லை.) வள்ளுவர் அவற்றை ஆறு என்று குறைத்துக் காட்டுகிறார். அவர் ஏன் நாட்டைக் குறிக்கவில்லை? நாடில்லாத அரசனைப் பற்றியா அவர் சொல்லுகிறார்? என்ற வினாக்கள் எழுப்பப்பட்டன. இதற்கு விளக்கமாக மணக்குடவர் 'ஈண்டுக் குடியுள் நாடு அடங்கிற்று' என்று சிறப்புரையில் சொல்கிறார். மணக்குடவர் உரையை 'ஈண்டுக் குடி என்றது குடியுள்ள நாடு!' என்று பரிப்பெருமாள் சிறு திருத்தம் செய்தார். பரிமேலழகரும் 'ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை' என்று விளக்கினார்.

குடியில்லாத நாட்டிற்கு அரசனாயிருத்தலாற் பயன் என்ன? எனவே நாடு என்று சொல்லாது குடி என்று சொல்லப்பட்டது.

படை, குடிமக்கள், பொருள், அமைச்சு, நட்பு நாடுகள், பாதுகாவல் என்ற ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இறைமாட்சிக்கு ஏதுவாகும் அரசாட்சி உறுப்புக்களை வகுத்துக் கூறும் பாடல்.

பொழிப்பு

படை, குடி, விளைச்சல், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் உடையவன் அரசருள் அரிமா போன்றவன்.