இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0380



ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:380)

பொழிப்பு (மு வரதராசன்): ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.



மணக்குடவர் உரை: ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள? பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.

பரிமேலழகர் உரை: மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள - அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள.
('பெருவலி' ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஊழைப் பார்க்கிலும் மிக்க வலிமை யுடையன எவை? அதனை விலக்குதற்குரிய ஒரு சூழ்ச்சியைக் கடைப்பிடித்தாலும் அச்சூழ்ச்சியையுந் தடைப்படுத்தி அது தான் முற்பட்டு நிற்கவல்லது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊழின் பெருவழி யா உள? மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும்.

பதவுரை: ஊழின்-ஊழைவிட; பெருவலி-மிக்கவலியுடையன; யாவுள-எவை இருக்கின்றன? மற்றொன்று-வேறு ஒன்று; சூழினும்-நினைத்தாலும்; தான்-தான்(ஊழ்); முந்துறும்-முற்பட்டு நிற்கும்.


ஊழிற் பெருவலி யாவுள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊழினும் மிக்க வலியுடையன யாவையுள?
பரிப்பெருமாள்: ஊழினும் மிக்க வலிமையுடையன யாவையுள?
பரிதியார்: ஊழைப்போல பொல்லானில்லை;
காலிங்கர்: உலகத்து யாவர்க்கும் அவரவர் ஊழின் சிறந்த பெருவலியுடையன யாவை உள;
பரிமேலழகர்: அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள?
பரிமேலழகர் குறிப்புரை: 'பெருவலி' ஆகுபெயர்.

ஊழினும்/ஊழைப்போல மிக்க வலியுடையன யாவையுள? என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊழைக் காட்டிலும் வலியது உண்டோ?', 'ஊழைக் காட்டிலும் பேராற்றல் படைத்தவை எவை உள்ளன?', '(இந்தப் பிறப்பில் அனுபவிக்க வேண்டுமென்று முன்பே விதிக்கப்பட்டுவிட்ட) பழவினைகளைக் காட்டிலும் அதிக வலிமையுள்ளவை எவை இருக்கின்றன?', 'ஊழைப்போல மிகுந்த வலிமை உடையன யாவை?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றொன்று சூழினும் தான்முந் துறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.
பரிப்பெருமாள்: பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தெரிந்துணர்தல் வல்லாரை ஊழ் என் செய்யும் என்றார்க்கு, அத்தெரிதல் தானாய்நின்று கேடு வரும் வழியைத் தெரியும் என்றது.
பரிதியார்: எப்படி என்றால், ஆகின்ற காலம், அழிகின்ற காலங்களிலே தான் முன்னே வந்து நிற்கையால் என்றவாறு.
காலிங்கர்: எனவே யாவுமில்லை எனின், தமக்கு விதியினால் வருவது ஒழியத் தம் அவாவினால் வேறொன்று வரக் கருதினும் அஃதிறந்து மற்று அவ்விதியினால் வருவது தானே முன்னுற்று நிற்கும் ஆதனால் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை விலக்குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்,
பரிமேலழகர் குறிப்புரை: சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல். செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின், உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான் அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.

'பிறிதொன்றை யாராயுங் காலத்தும் தான் முற்பட அவ்வாராய்ச்சிக்கு உடன்பட்டுநிற்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'ஆகின்ற காலம், அழிகின்ற காலங்களிலே தான் முன்னே வந்து நிற்கையால்' என உரை வகுத்தார். காலிங்கர் 'விதியினால் வருவது ஒழியத் தம் அவாவினால் வேறொன்று வரக் கருதினும் அஃதிறந்து மற்று அவ்விதியினால் வருவது தானே முன்னுற்று நிற்கும்'. 'தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும், தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும்' என்பது பரிமேலழகர் உரை,

இன்றைய ஆசிரியர்கள் 'எது தொடர்ந்தாலும் அது முந்தி விடும்', 'ஊழைத் தடுக்க நாம் வேறொரு வழியை எண்ணினாலும் அது அவ்வழியைத் தாண்டி முன்வந்து நிற்கும்', 'அதை மாற்ற வேறு என்ன உபாயத்தைச் செய்தாலும் அதுதான் முன்னால் வரும்', 'ஊழை விலக்குவதற்கு வேறொரு செயலை ஆராய்ந்து துணிந்தாலும் ஊழ் முன்னே வந்து தடுத்து நிற்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.



.

நிறையுரை:
ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஊழ் பிறிதெதையும் வென்று விடும் ஆற்றல் கொண்டது.

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமை உடையவை யாவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்குவதற்காக வேறு ஒரு வழியினை ஆராய்ந்தாலும், அங்கே ஊழே முன் வந்து நின்று அம்முயற்சி பயன்படாமல் தடுக்கும்.
ஊழின் வலி மிகப் பெரிது; அதனை எதிரிட்டுத் தடுக்க ஒன்றை நாம் நினைக்கு முன்னரே அம்முயற்சியைப் பின்தள்ளி. ஊழின் செயல்பாடுதான், முந்தி நிற்கும். ஊழ் என்ற சொல்லுக்கு நேரடி விளக்கம் எங்கும் குறளில் சொல்லப்படவில்லை. ஆயினும் இவ்வதிகாரத்துக் குறள்களில் ஆகூழ், போகூழ், இழவூழ், ஆகலூழ் என்றெல்லாம் ஊழின் தன்மைகளையும், விளைவுகளையும் வகைப்படுத்தி பொருள் ஆக்கப்படுவதும் கைப்பொருள் போகச் செய்வதும் ஊழ் எனச் சொல்லி, ஊழ் வகை செய்யாவிட்டால், 'கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது' என்றும் எடுத்துக்காட்டினார் வள்ளுவர். இங்கு ஊழ் என்பது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஆற்றல் கொண்டது என்ற பொருள்பட 'ஊழைவிட வலிமை உடையது உண்டோ? என்ற கேள்வியை இங்கு எழுப்புகிறார்.
'ஊழிற் பெருவலி' என்று சொல்லும்போது, ஊழ் என்பது ஆகூழ், போகூழ் என்ற இரண்டு ஊழ்களுக்கும் பொதுவாகவே கூறப்படுகிறது. இவை இரண்டுமே பெருவலியுடையன என்பது பொருள்.
இக்குறளிலுள்ள 'முந்துறும்' என்ற சொல் ஏதோ போட்டி நடக்கிறது என்பதைத் தெரிவிப்பதுபோல் தெரிகிறது. அப்போட்டி மனிதனின் மதிவலிக்கும் மக்களறிவுக்கு எட்டாத ஊழ்வலிக்குமிடையேயான போட்டி எனலாம். அப்போட்டியில் மதிவலியைக் கடந்து ஊழ்வலியே எப்பொழுதும் முற்பட்டு நிற்கும் என்கிறது பாடல். 'முந்துறும்' என்ற சொல்லில் ஓர் உறுதிப்பாடு ஒலிக்கவில்லை. 'முன்வந்து நிற்கும்' என்றுதான் கூறுகிறார். இதில் 'முந்துறும்' என்கிறாரே தவிர 'ஊழே வெல்லும்' என்ற உறுதிப்பாட்டை வள்ளுவர் உணர்த்தவில்லை எனச் சொல்வர்.

மனிதனால் ஆவது எதுவுமில்லை; ஊழைத் தவிர்க்க எத்தகைய வழிகளை எண்ணி முயன்றாலும் அந்த ஊழே அங்கெல்லாம் முந்தி நிற்கும் என்ற பொருள் தருவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஊழ் வழியே உலகம் செல்வதைத் தடுக்க முடியாது என்று சொல்லப்பட்டாலும் இக்குறளின் பொருளை ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (ஆள்வினை உடைமை 620 பொருள்: சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் தோல்வியுறச் செய்வர்) என்ற குறட்பொருளொடு இணைத்துப் பொருள் காண்பர். இவ்விரண்டு குறட்பாக்களையும் (குறள் 380, குறள் 620) சேர்த்துப் பொருள் கொண்டால் 'ஊழ் பெரும் வலிமையுடையதுதான்; ஆனால் அதை அழிக்கத்தக்க துணை வலி கொண்டு எதிர்த்தாலன்றி அது முனைந்து முன்னேறும்; உலையா முயற்சிக்கெதிரே ஊழ் நில்லாது பின்னடையும்' என்ற தெளிவான கருத்து கிடைக்கிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

ஊழினை வெல்வதற்குரிய வழிகளை மாந்தர் சிந்தித்துச் செயல்படுத்த எண்ணுவர். ஆனால் ஊழானது அவற்றையும் அறிந்து அவை செயல்படுமுன்னர் தடைப்படுத்தும் நோக்கில் முன்வந்து நிற்கும். ஊழ் மற்ற எந்த ஆற்றலும் தன்னை வெல்லவிடாது செய்து தனது பேராற்றலை நிலைநிறுத்தும் வகையில் முனைப்புடன் செயல்படும். ஊழை எந்த ஆற்றலாலும் வெல்லமுடியாது எனச் சொல்லப்படுகிறது.
ஊழ் மிகவும் வலியது என்பது 'ஊழிற் பெருவலி யாவுள' எனும் வினாவால் அழுத்தமுறச் சொல்லப்பட்டது. 'மற்றொன்று சூழினும்' எனும் தொடர் ஊழ் என்பது மற்றொன்றால் சூழப்படும் நிலையில்தான் உள்ளது; அவ்வாறு சூழப்படும் போது அது தனது பேராற்றலால் முற்பட்டுச் சென்றுவிடும் வலிமையுடையது. 'சூழினும்' எனும் சொல்லிலுள்ள 'உம்மை' ஊழின் பெருவலிமையை மேலும் அழுத்தமாகக் கூறுவதாகிறது.

இக்குறள் கூறும் செய்தியாக உரையாளர்கள் கூறுவன:

  • ஊழின் ஆட்சி வலிமையை உணர்ந்து அறநெறியைப் போற்றி வாழ்வதே கடமையாகும்.
  • ஊழ் என்பது உலகச் சூழ்நிலை. அஃது ஒருவனுக்கு நன்று தீது ஆகிய இருதிறமும் செய்ய மாட்டுவது.
  • மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட ஊழ் கூறப்படுகிறது.
  • ஊழே மிக்க வலியுடைத்து; மனிதன் செய்யும் முயற்சிகளை யெல்லாம் தள்ளிக்கொண்டு தான் முன்னே வந்து நிற்கும்.
  • ஊழினால் தமக்கு வந்துள்ள கேட்டினை மாற்றிக் கொள்ளப் பலருடன் கூடிக் கலந்து பேசி பல்லாற்றான் முயற்சி செய்தாலும் ஊழின் பயனை அனுபவிக்காமல் தப்பித்துக் கொள்ள முடியாது. அப்படியானால் ஊழினை வெற்றி பெற முடியாதா, என்ற வினா எழும். ஊழினை வெற்றி பெற முடியும். வாழ்க்கையின் நோக்கமே ஊழினை வெற்றி பெறுவதுதானே!
  • வள்ளுவர் ஊழின் வலிமையை மிகமிக உயர்த்திக் காட்டியிருப்பதெல்லாம், முயற்சியின் அருமையையும் பெருமையையும் காட்டுதற்கே. ஊழை மனித முயற்சி புறங்காண வேண்டும் என்பதற்காகவே, அதற்குச் சிறுமுயற்சி போதாது, பெரு முயற்சி பெரிதும் வேண்டும் என்று எச்சரிப்பதற்காகவே அவ்வாறு கூறினார்.
  • ஊழுக்குத் தெய்வம் என்பதும் ஒரு பெயர். தெய்வத்தின் வலிமை மனித வலிமையிலும் மேம்பட்டது. எனவே ஊழிற் பெருவலி யாவுள என்கிறார்.
  • உலகியல்பு வேறாக இருக்க நாமொன்றைச் செய்தால் அவ்வுலகியல்புப்படியே நடக்குமாகையால், அவ்வுலகியல்பை விட வலியுடைய பொருள் இல்லை என்றார்.

ஊழைவிடப் பெரிய வலிமையுடையவை எவை உள்ளன? ஊழின் விளைவுகளை விலக்கிட என்ன வழிகளை எண்ணினாலும் அது முன்னால் வந்து நிற்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊழே எல்லாவற்றினும் வலியது.


பொழிப்பு

ஊழைக் காட்டிலும் பேராற்றல் படைத்தது உண்டோ? அதைத் தடுக்க நாம் வேறொரு வழியை எண்ணினாலும் அங்கும் அது முன்வந்து நிற்கும்.