இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0377



வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:377)

பொழிப்பு (மு வரதராசன்): ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது.

மணக்குடவர் உரை: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து.
இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.
(ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.)

தமிழண்ணல் உரை: ஊழ் என்னும் நெறி முறையை இறைவன் வகுத்துள்ளான். அங்ஙனம் வகுத்த அவ் ஊழ் படிதான் செல்வத்தைத் துய்க்க முடியுமே தவிரக் கோடி கோடியாகப் பொருள்களைத் தேடிச் சேர்த்தவர்களுக்கும் அவற்றை நுகர்தல் இயலாது.
கைக்கு எட்டியது, ஊழ்ச்சுழலால் வாய்க்கு எட்டாது போகக்கூடும். அஃதாவது செல்வம் பெற்றாலும் அதை நுகர்வதற்கான ஊழ் அமைய வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

பதவுரை: வகுத்தான்-வகைசெய்தவன். ஊழை வகுத்தவன், கடவுள்; வகுத்த-திட்டம் செய்த; வகை-கூறுபாடு; அல்லால்-அன்றி; கோடி-கோடி, நூறு நூறாயிரம்; தொகுத்தார்க்கும்-திரட்டினவர்க்கும்; துய்த்தல்-நுகர்தல்; அரிது-அருமையானது, உண்டாகாது.


வகுத்தான் வகுத்த வகையல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினானல்லது;
பரிப்பெருமாள்: தானம் பண்ணினவன் தானம் பண்ணின வகையினானல்லது;
பரிப்பெருமாள் குறிப்புரை: வகுத்தான் என்பதை யூழ்வினைக் கிழவன் என்பாருமுளர்.
பரிதி: இவனுக்குப் பொசிப்பாகிய ஆகிறஊழ், அழிகிறஊழ் என்னும் முறைமையிலே இவன் பொசிப்பதன்றியிலே;
காலிங்கர்: அதனால் முன்னஞ் செய்தார் செய்தவினை வகையால் துய்த்தவல்லது;
பரிமேலழகர்: தெய்வம் வகுத்த வகையான் அல்லது;
பரிமேலழகர் குறிப்புரை: ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று.

'விதானம் பண்ணினவன்/முன்னஞ் செய்தார்/தெய்வம் வகுத்த வகையான் அல்லது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அமைத்தவன் அமைத்த நெறிப்படி யல்லது', 'ஊழ் வகுத்த முறைப்படி பொருள்களை நுகரலாமே யன்றி', 'விதிக்கக்கூடிய (தெய்வமாகிய) ஊழ்வினை விதிக்கிற அளவுக்கும் விதத்துக்கும் அதிகமாக', 'கடவுள் விதித்த வகையால் அல்லாமல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊழை வகுத்தவன் அமைத்த முறைப்படியன்றி என்பது இப்பகுதியின் பொருள்.

கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனானுள்ள பயன்கோடல் அருமையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: கோடி தொகுத்தானென்றமையால் தானப் பயன் என்பது பெற்றாம். அத்தானத்தைக் கொண்டோர் அமைதியினால்லது, பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ்வேண்டுமென்றது.
பரிதி: இவனிடத்திலே கோடி தனம் இருந்தாலும் பொசிக்க ஒண்ணாது என்றவாறு.
காலிங்கர்: மற்றுக் கோடிபொருள் ஈட்டினார்க்கும் அதுகொண்டு துய்த்தல் அரிது;
காலிங்கர் குறிப்புரை: எனவே அங்ஙனம் ஈட்டுதற்கு உரியர் தானம் முதலிய நல்வினை முன்செய்து மற்றது கொண்டு தான் நுகர்தற்குவேண்டும் நல்வினை முன்னஞ் செய்யாரேல் ஈட்டினரேயாயினும் குறைவறத் துய்த்தல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும் நுகர்தல் உண்டாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: படையா தார்க்கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.

'கோடி பொருளை யீட்டினவர்க்கும் அதனால் வரும் பயன்கோடல் அருமையுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கோடி தொகுப்பினும் நுகருதல் இயலாது', 'அவற்றைக் கோடியாகத் தொகுத்து வைத்தவர்க்கும் முறை கடந்து நுகர்தல் இயலாது', 'கோடி கோடியாகச் செல்வத்தைச் சம்பாதித்துச் சேர்த்துவிட்டவர்களும்கூட அந்தச் செல்வத்தை அனுபவித்துவிட முடியாது', 'நுகர்தற்குரிய ஒரு கோடிப் பொருளை ஒருங்கு சேர்த்து அவற்றை நுகர்தற்குரிய முறையில் ஒழுங்குபடுத்தி வைத்தவர்களுக்கும் அவற்றை நுகர்தல் முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கோடி தொகுத்தவர்க்கும் அவற்றை நுகருதல் இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊழை வகுத்தான் அமைத்த முறைப்படியன்றி கோடி தொகுத்தவர்க்கும் அவற்றை நுகருதல் இயலாது என்பது பாடலின் பொருள்.
'வகுத்தான்' யார்?

தொகுத்த கூழின் சுவையைப் பெறவும் ஊழின் துணை வேண்டும்.

தெய்வம் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் எத்துணைப் பெரும் பொருள்கள் சேர்த்துக் குவித்தார்க்கும் அவற்றைத் துய்த்தல் முடியாது.
கோடிப் பொருள் தொகுத்தவரும் அதைத் தம் விருப்பம் போலத் துய்க்க முடியாது. சிலர் செல்வத்தைத் தேடிக் குவித்திருந்தாலும் அதை நுகர முடியாத நிலையில் இருக்கின்றனர் என்கிறது பாடல்.
மக்கள் ஓடி ஓடிச் செல்வம் சேர்க்கிறார்கள். அங்ஙனம் சேகரித்த பொருளை நுகர்வர்கள் சிலரே. பொருள் தொகுத்த அளவிலேயே இன்பம் துய்க்கமுடியும் என்பது கிடையாது. துய்க்கும் நேரம் வரும்போது தடைகள் நிறைய ஏற்படுகின்றன. சிலர்க்கு நோய்கள் தாக்கப்பெற்று உண்ண விரும்பியதை உண்ண முடியாமல் போகிறது. பசியின்மை வயிற்று வலி இவை காரணமாகவும் துய்க்க முடியாமல் ஆகிறது. மேலும் காண விரும்பியதைக் காண முடியாமலும், கேட்க விரும்பியதைக் கேட்க முடியாமலும், வேறு புலன் நுகர்ச்சிகள் கொள்ளமுடியாமல் ஆகிவிடுகிறது. அரசு தலையிட்டு பொருள்களை எடுத்துச் சென்றுவிடுகிறது அல்லது அவர்கள் நான்கு சுவர்களுக்குள் சிறைப்படுத்தப்படுகின்றனர். சில பொருள்கள் களவில் மறைந்துவிடுகின்றன. இன்னபிற சூழ்நிலைகளில் விரும்பியவாறு துய்த்தல் இயலாது.
நல்வழியால் சேர்த்த பொருளோ அல்லது தீயவழியில் ஈட்டிய செல்வமோ எதுவானாலும் அது துய்க்கும் நோக்கில்தான் ஆக்கப்படுகிறது. உண்டாக்கியவர் அப்பொருளைத் துய்க்கமுடியவில்லை என்றால் அதற்கு ஊழே காரணம். இதைத்தான் ஊழ் வகை செய்யாவிட்டால் அதாவது ஊழ் வகுத்தபடியல்லாமல் நுகர முடியாது என்கிறது இக்குறள்.

'வகுத்தான்' யார்?

'வகுத்தான்' என்றதற்கு விதானம் பண்ணினவன், தானம் பண்ணினவன், முன்னஞ் செய்தார், தெய்வம், ஊழ், இறைவன், அமைத்தவன், அரசாங்கம், விதிக்கின்றவன், ஊழானமைந்த ஆட்சியாளன், கடவுள், விதிக்குரியான் (கடவுள்), அறநெறி வகுத்த சான்றோர், ஊழ்த் தெய்வம், ஊழை வகுத்தான் எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வகுத்துக் கொடுப்பவன் வகுத்தான் ஆவான். வகுத்தல் என்பதற்கு விதித்தல் என்றும் பகிர்ந்து கொடுத்தல், கூறுபடுத்தல் அல்லது பிரித்துக் கொடுத்தல் என்றும் பொருள் கூறினர். அதிகாரம் ஊழ் என்பதால் வகுத்தான் என்பதற்கு ஊழை வகுத்தவன் என்று பலரும் கொண்டனர். எந்த உயிர்களாலும் எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாத பெரும் ஆற்றல் கொண்ட ஊழைக் கடவுளைத் தவிர யார் உண்டாக்க முடியும்? எனவே தெய்வம், இறைவன் அல்லது இயற்கை என்ற பொருள்கள் பொருத்தமானவை.

வகுத்தான் யார் என்பதை விளக்க வினைப்பயன் அடியாக சில உரைகள் எழுந்தன. சென்ற காலத்தில் அல்லது முன்பிறவிகளில் உயிர்கள் செய்த வினையின் பயனாக இக்காலத்தில் அனுபவிக்கும் நன்மை, தீமைகள் ஊழ் எனப்படுகின்றது என்று சிலர் ஊழுக்கு விளக்கம் தந்தனர். இவர்கள் பிறவிகள்தோறும் உண்டான நல்வினை, தீவினைப் பயன்களைக் கூட்டிக் கழித்துத் தருவது வகுத்தான் செய்வது என்று கூறுபவர்கள்.
ஒருவர் செய்த செயலின் பயன் பிறிதோர் உயிரிடம் செல்ல முடியாது; அந்த உயிர்க்கே அமையும் அதாவது அவனவன் செய்ததை அவனவனேதான் அனுபவித்தாக வேண்டும்; இதை வரையறுத்து நுகர்விப்பவன் வகுத்தான் என்றனர் சிலர். காலிங்கர் ‘பழவினை தன்னைச் செய்தானைத் தானே சென்றடையும்’ என்னும் சமயக் கொள்கையைத் தழுவி 'முன்னஞ் செய்தார் செய்தவினை வகையால் துய்த்தவல்லது மற்றுக் கோடிபொருள் ஈட்டினார்க்கும் அதுகொண்டு துய்த்தல் அரிது; எனவே அங்ஙனம் ஈட்டுதற்கு உரியர் தானம் முதலிய நல்வினை முன்செய்து மற்றது கொண்டு தான் நுகர்தற்குவேண்டும் நல்வினை முன்னஞ் செய்யாரேல் ஈட்டினரேயாயினும் குறைவறத் துய்த்தல் அரிது என்றவாறு' என்றார். இவ்வுரைப்படி ஒருவருக்கு இயல்பான ஏற்பட்ட பங்கினை ஒருவர் பெறுவது ஆகும். இதன் பொருள் ஒருவர் தன் விதியைத் தானே உருவாக்கிக் கொள்கிறார் என்பது. அடுத்து 'ஓர் உயிர் செய்த வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார்' எனப் பரிமேலழகர் வகுத்தானுக்கு விளக்கம் தருகிறார். அவரே பொழிப்புரையில் வகுத்தான் என்பதற்குத் 'தெய்வம்' என்று பொருள் கூறியுள்ளார். ஒருவர் தான் அனுபவிக்கவேண்டிய விதியை உருவாக்குபவராக இல்லாமல் விதித்தவர் அல்லது விதிக் கடவுளைக் குறிப்பிடுவதாக உள்ளது இது. மு கோவிந்தசாமி 'வகுத்தான் –பகவான் என்பதே வகுத்து வினைப்பயனை அளிப்பவன் என்ற பொருளது' என்கிறார்.
ஊழை விளக்குவதற்கு வினைப்பயன்களைக் கொண்டுவர வேண்டியதே இல்லை. பொருள் தொகுத்தல், துய்த்தல் இவற்றிற்கும் முன்வினைப் பயனுக்கோ இம்மைப்பயனுக்கோ எந்தவிதத் தொடர்பும் இல்லை. எனவே இக்குறள் வினைப்பயன் கூறுவதல்ல.

திருக்குறள் முனிசாமி 'இக்குறட்பாவில் ஊழின் அமைப்பைக் கூறவந்த ஆசிரியர் திருவள்ளுவனார் அந்த ஊழினை உருவகமாகக் கூறினார். இது ஒரு மரபு. அப்படி ஒருவன் இருந்து கொண்டு வகுத்து அமைக்கிறான் என்பது பொருளல்ல. இயற்கையின் விதியைக் கூற வந்த ஆசிரியர், குணத் தன்மையினை விளக்கினார். காமம் என்ற உணர்ச்சியினைக் காமன் என்று சொன்னது போல, இயற்கையின் நிகழ்ச்சியினைப் பகுப்பு-வகுப்பு முறையினை உருவகப் படுத்தி ‘வகுத்தான்’ என்று கூறினார்' என்று உரை வரைந்தார். வகுத்தான் என்றதற்கு இவ்வுரை ஏற்புடையதாக உள்ளது.

'வகுத்தான்' என்பது ஊழை வகுத்தான் அல்லது இறைவன் என்பது பொருள்.

ஊழை வகுத்தவன் அமைத்த முறைப்படியன்றி கோடி தொகுத்தவர்க்கும் அவற்றை நுகருதல் இயலாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கைக்கெட்டியதை வாய்க்கு எட்டாது செய்யும் ஊழ்.

பொழிப்பு

ஊழை வகுத்தவன் அமைத்த நெறிப்படி யல்லது கோடிப்பொருள் தொகுத்தவர்க்கும் துய்த்தல் இயலாது.