இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0374



இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:374)

பொழிப்பு (மு வரதராசன்): உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு.

மணக்குடவர் உரை: செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு.

பரிமேலழகர் உரை: உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு - ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.
(செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஊழினாலே உலக இயல்பு இரண்டு வேற்றுமைப் பட்ட பகுதிகளையுடையது; செல்வம் உடையராதற்கு உரிய ஊழ் வேறு; அறிவுடையராதற்கு உரிய ஊழ் வேறு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு.

பதவுரை: இரு-இரண்டாகிய; வேறு-வகை; உலகத்து-உலகத்தில்; இயற்கை-இயல்பு, தன்மை, ஊழ், விதி, நியதி; திரு-செல்வம்; வேறு-தனி; தெள்ளியர்-அறிவுடையர்; ஆதலும்-ஆகுதலும்; வேறு-கூறு.


இருவேறு உலகத்து இயற்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு;
பரிப்பெருமாள்: ஆதலால் இரண்டு வகையாதல் உலகத்தியல்பு;
பரிதி: இரண்டுவகைப்படும் செல்வம்;
காலிங்கர்: இரண்டு கூறுபட்டிருக்கும் உலகத்தார் ஊழாம் இயற்கை; எங்ஙனம் எனில் செல்வம் உண்டாதலும் ஒரு நல்லூழின் கூறு; கல்வியால் தெளிந்த நல்லறிவு உடையராகலும் மற்றொரு நல்விதிக்கு அமைந்த கூறு;
பரிமேலழகர்: உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு;

'இரண்டு வகையாதல் உலகத்தியல்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'இரண்டு கூறுபட்டிருக்கும் உலகத்தார் ஊழாம் இயற்கை' என்கிறார் காலிங்கர். பரிமேலழகர் 'உலகத்து ஊழினான் ஆய இயற்கை இரண்டு கூறு' எனப் பொருள் தருகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தின் இயல்பு இருவேறு பட்டது', 'ஊழினால் உலகத்தியற்கை இரு கூறு உடையது', 'உலகத்தில் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன', 'உலகத்து இயல்பு இரண்டு வகைப்படும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உலகத்து இயல்பு இரண்டு வகைப்பட்டது என்பது இப்பகுதியின் பொருள்.

திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்.
பரிப்பெருமாள்: செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒன்றுடையார்க்கு ஒன்று இன்னாதற்குக் காரணம் முன்செய்த நல்வினை வேறுபாட்டானே என்றது.
பரிதி: எப்படியென்றால், எட்டுவகையான செல்வமும், கல்வியும் என்றவாறு. [எட்டுவகைச் செல்வம்: தனம், தானியம், தைரியம், வீரியம், சந்தானம், வெற்றி, புகழ், அரசாட்சி]
காலிங்கர்: எனவே முன்னமே இல்லறத்(தாராகலும் பின்) னும் துறவறமியற்றியவழித் தெளிந்த நல்லறிவுடைய ஞானத்தாராகலும் என இங்ஙனம் இரண்டு கூறுபடும் என்றவாறு.
பரிமேலழகர்: ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு.
பரிமேலழகர் குறிப்புரை: செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும் பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே? அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார் செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ் செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும் ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே, செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும் வேண்டா என்பது பெற்றாம்.

'செல்வமுடையாராதலும் தெள்ளியாராதலும் வேறு வேறு ஊழினால் வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'இல்லறத்(தாராகலும் துறவறமியற்றியவழித் தெளிந்த நல்லறிவுடைய ஞானத்தாராகலும் இரண்டு கூறு' எனப் பொருள் கூறினார். பரிமேலழகர் 'செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும் வேறு' என உரை தந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வமுறை வேறு, அறிவுமுறை வேறு', 'செல்வராதலும் வேறு; அறிஞராதலும் வேறு', 'செல்வமுள்ளவர்களாக இருப்பது வேறு. தெளிந்த அறிவுடையவர்களாக இருப்பதும் வேறு', 'செல்வமுடையராதல் ஒரு வகை; தெளிந்த அறிவினை உடையராதல் இன்னொரு வகை. (இரண்டுக்கும் தொடர்பின்று.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உலகத்து இயற்கை இரண்டு வகைப்பட்டது; செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு என்பது பாடலின் பொருள்.
'உலகத்து இயற்கை' என்றால் என்ன?

ஊழின் பார்வையில் செல்வம், அறிவு ஆகியன உலகத்துக் கூறுகள்.

இவ்வுலகத்தின் தன்மை இரண்டு வகைப்படும்; செல்வநிலை ஒன்று, அறிவுத் தெளிவுடையோராக இருப்பது மற்றொன்று.
உலகத்தில் ஊழாலேற்பட்டுள்ள அமைப்பு இருவகையாக உள்ளது; செல்வம் அடைவதற்கு உரிய அமைப்பும் அறிவுடையராக விளங்குவதற்கு வேண்டிய அமைப்பும் வேறு வேறாக உள்ளன. திரு, தெள்ளியர் என்ற சொல்லாட்சிகளால் இது மாந்தர் உலகத்துக்கானது (உயர்திணை) எனத் தெளியலாம். செல்வம், அறிவுடையவர் எனும் இக்கூறுபாடுகளே ஊழின் ஆட்சிக் களம்; நியதியின் அதாவது விதியின் ஆணை செல்லுபடியாகும் பரப்பு.
இரண்டு கூறுபட்டிருக்கும் உலகத்தார்க்கு செல்வம் உண்டாதல் ஒரு நல்லூழின் கூறு; கல்வியால் தெளிந்த நல்லறிவு உடையராகல் மற்றொரு நல்லூழுக்கு அமைந்த கூறு. திருவுடையராவதற்கு உரிய ஊழ்ச்சூழல் வேறு, தெளியராவதற்குரிய ஊழ்ச்சூழல் வேறு என்பது கருத்து. இரண்டினது ஆக்க வழிகளும் வேறு வேறானவை; அவற்றின் உயர்வும் தாழ்வும் ஊழால் வேறுபடுகின்றன எனச் சொல்லப்படுகிறது.

அறமும் மறமும் எதிர்நிலைகள், அருளும்-பொருளும் எதிர்நிலைகள். இவை நேர் முரணானவை. ஆனால் செல்வமும் அறிவும் இருவேறு நிலைகள் என்றாலும் அவை நேர் முரணானவை அல்ல. செல்வம்-அறிவு என்ற இருவேறுலகுமும் பல்வேறுபட்ட ஒற்றுமை வேற்றுமைகளிடையே இயங்கிவரும் இயல்பின. இவற்றிற்கிடையே ஏற்றத் தாழ்வுகள் பல உண்டு. செல்வப் பெருக்குடையவர் அறிவாற்றல் கொண்டவராகவும் இருக்கின்றனர். தெளிந்த அறிவினர் செல்வம் படைக்கவும் முடியும். செல்வம் உடையராதல் வேறு. தெள்ளியர் ஆதல் வேறு என்று வள்ளுவர் இங்கு கூறியது, அறிவுடையவர்களும், திருவுடையவர்களும் வெவ்வேறு நிலையில் ஊழால் ஆளப்படுகின்றனர். என்பதைப் புலப்படுத்தவே.
ஊழே செல்வம் பெறுவதற்கும் இழப்பதற்கும் காரணமாக உள்ளது ஆதலால் எவ்வளவு முயன்றாலும் செல்வம் மேடும் மடுவும் போலவே அமைந்து கிடக்கிறது. அதுபோல் ஊழே அறிவு பெறுவதற்கும் அல்லது பேதைமையுறுவதற்கும் காரணமாக அமைகிறது.

'உலகத்து இயற்கை' என்றால் என்ன?

'உலகத்து இயற்கை' என்ற தொடர்க்கு உலகத்தியல்பு, உலகத்தார் ஊழாம் இயற்கை, உலகத்து ஊழினான் ஆய இயற்கை, (ஊழின் காரணமாக) உலகத்தின் இயற்கை, உலகத்தில் ஊழினாலாகிய இயற்கைச் சூழல், உலகத்தின் இயல்பு, ஊழினால் உலகத்தியற்கை, உலகத்தின் இயல்பு, ஊழினாலே உலக இயல்பு, உலகத்து இயல்பு, உலகத்தின் தன்மை என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

ஊழ் அதிகாரத்திலோ அல்லது குறளில் வேறு எங்குமோ, ஊழ் என்ற சொல்லுக்கு வள்ளுவரால் இலக்கணம் தரப்படவில்லை. இக்குறட்பாவில் ஊழ் என்பது 'உலகத்து இயற்கை' என விளக்கப்படுகிறது. ஞாயிறு திங்கள் கோள்கள் விண்மீன்கள் போன்றன எவ்வாறு தெய்வத்தால் முறைமையுடன் இயங்கியும் இயக்கியும் வருகின்றனவோ, அதுபோன்று 'உலகத்து இயற்கை' என்கிற ஊழும் அதற்கென்று உண்டான ஒழுங்கு முறையினூடே இயங்கி இயக்குகிறது; ஆனால் அந்த ஊழின் இயக்கம் பற்றி ஒன்றும் இதுவரை அறியக்கூடவில்லை. மனிதரின் எல்லாக் கணிப்பிற்கும் கட்டுப்பாடிற்கும் அப்பாற்பட்டு அவ்வியற்கை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊழ் என்கிற இயற்கை ஒருவனது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்தும் வரலாம் அல்லது ஒவ்வாதும் இருக்கலாம். அதாவது பொருளும் காலமும், சூழலும் செயற்படும் தகுதியும், மற்றவையும் ஒருவன் செயல்களுக்கு ஒத்தும் வரலாம்; ஒவ்வாமலும் போகலாம். ஊழ் ஒத்துவரின், செல்வ-அறிவுப் பயன் நிரம்பப் பெறலாம். ஒவ்வாவிடின் பொருள்-அறிவுடைமை இவற்றிற்கு இழப்பு நேரிடும்.
மணக்குடவர் ஊழ் என்பதை 'உலகத்தியல்பு என்றே விளக்குகிறார். தெ பொ மீனாட்சிசுந்தரம் 'வள்ளுவர் கூறும் 'உலகத்து இயற்கை' அதாவது 'உலக இயல்பு' என்பது நியதிவாதம் அதாவது மனிதச் செயல் துணிபாகும். உள்ளடங்காத எல்லாச் செய்திகளும் புறப்பொருள் தூண்டுதலாற்றல்களாலேயே துணியப்படுகின்றன என்னும் கோட்பாடாக இருக்கலாம்' என்பார்.
'உலகத்து இயற்கை' என்ற தொடர் இங்கு ஊழின் காரணமாக அமைந்த உலகத்தின் இயற்கை என்ற பொருளில் வந்தது.

உலகத்து இயற்கை என்ற தொடர் ஊழ் குறித்தது.

உலகத்து இயல்பு இரண்டு வகைப்பட்டது; செல்வமுறை வேறு, தெளிந்த அறிவினை உடையராதல் வேறு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இரு வேறு நிலைகளை உலக மாந்தரிடை உருவாக்கி ஊழ் ஆட்சி செய்கிறது.

பொழிப்பு

உலகத்தின் இயல்பு இருவகையானது; செல்வமுறை ஒரு கூறு, அறிவுமுறை வேறு கூறு.