இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0371



ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி

(அதிகாரம்:ஊழ் குறள் எண்:371)

பொழிப்பு (மு வரதராசன்): கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்; அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும்.
இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.

பரிமேலழகர் உரை: கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் - ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.
(ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.)

தமிழண்ணல் உரை: ஒருவனுக்கு ஆகூழ் தோன்றும் சூழலால் மனச் சோர்வின்மை தோன்றும்; கையிலுள்ள செல்வம் கைவிட்டுப் போகக்கூடிய போகூழால் சோம்பலாகிய மனச்சோர்வு தோன்றும்.
மனச்சோர்வின்மையும் சோர்வும் ஆகூழ், போகூழை முன்கூட்டித் தெரிவிக்கும் அறிகுறிகளாகும் என்னுமிது அசைவில்லா மனத்தால் போகூழை ஆகூழாக மாற்றமுடியும் என்ற குறிப்பையும் தருகிறது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கைப்பொருள் ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை போகுஊழால் மடி தோன்றும்.

பதவுரை: ஆகுஊழால்-ஆகுவதற்குரிய ஊழால்; தோன்றும்-பிறக்கும்; அசைவின்மை-சோம்பல் இல்லாதிருத்தல்; கைப்பொருள்-கையிலுள்ள செல்வம், கையிற் பொருள் உடைத்தல்; போகுஊழால்-அழிக்கும் ஊழால், போகச் செய்தற்குரிய ஊழால்; தோன்றும்-உண்டாகும்; மடி-சோம்பல்.


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்;
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்;
பரிதி: ஊழாவது போன சென்மத்தில் செய்த நல்வினை தீவினை என்க. அஃது இரண்டு வகைப்படும்; அவையாவன, ஆகிற ஊழ் என்றும், அழிக்கிற ஊழ் என்றும் எனக் கொள்க. ஆகிற ஊழ் புத்தியைத் தரும்;
காலிங்கர்: உலகத்து யாவருக்கும் மேனின்ற முறைமையாகுவதோர் ஆகூழினால் அவரவர் நெஞ்சின்கண் தோன்றும் யாதொரு வினையில் அதற்கு ஏற்ற மடியின்மை;
காலிங்கர் குறிப்புரை: அசைவின்மை என்பது மடியின்மை.
பரிமேலழகர்: ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான் முயற்சி உண்டாம்;

'ஆக்கங் கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் முயற்சி தோன்றும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வளருங்கால் ஊக்கம் பிறக்கும்', 'கைப்பொருள் வருங்காலத்து முயற்சி உண்டாகும்', 'செல்வம் வரவேண்டிய நல்வினைப் பயனால் சோர்வில்லாத ஊக்கம் உண்டாகும்', 'ஒருவனுக்குக் கைப்பொருள் உண்டாவதற்குரிய ஊழிருந்தால் திட்பமாகிய நன்முயற்சி யுண்டாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் ஊக்கம் பிறக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

போகூழால் தோன்றும் மடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
பரிப்பெருமாள்: அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் ஏதுவான முயற்சியும் முயலாமையும் ஊழால் வருமென்றது.
பரிதி: அழிகிற ஊழ் சோம்பினைக் கொடுக்கும். ஆகையால், ஆகிற ஊழைக் கொள்க.
காலிங்கர்: இனி இவ்வாறன்றித் தம்மிடத்து எய்திய பொருளும் நீங்கிப் போகுவதோர் போகூழினால் அவரவர் நெஞ்சில் தோன்றும் மடியானது என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம்.
பரிமேலழகர் குறிப்புரை: ஆகூழ், போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான் விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி. பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.

'அழிவு கொடுக்கின்ற ஊழ் தோன்றினால் மடிதோன்றும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் போகுங்கால் சோம்பல் வந்து விடும்', 'அது போங்காலத்துச் சோம்பல் உண்டாகும்', 'கையிலுள்ள செல்வம் போக வேண்டிய தீவினைப் பயனால் (அதைத் தடுக்க முடியாதபடி) சோர்வு உண்டாகிவிடும்', 'பொருள் போவதற்குரிய விதியிருந்தால் சோம்பல் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருள் நீங்குதற்குரிய ஊழிருந்தால் சோம்பல் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் அசைவின்மை பிறக்கும்; அது நீங்குதற்குரிய ஊழிருந்தால் மடி உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
அசைவின்மை-மடி-ஊழ் என்ன தொடர்பு?

செல்வம் சேருவதும் நீங்குவதும் ஊழின் கையில்தான் உள்ளன.

கைப்பொருள் உண்டாவதற்குக் காரணமான ஊழால் சோம்பலின்மை பிறக்கும். கைப்பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழால் சோம்பல் உண்டாக்கும்.
முயற்சி திருவினை ஆக்கும் அதாவது ஒருவனது இடைவிடாத மெய்முயற்சி அவனுக்குச் செல்வத்தினைச் சேர்ப்பிக்கும்; முயற்சி இல்லாமை செல்வ நீக்கத்தை ஏற்படுத்தும். இம்முயற்சி உண்டாவதும் அது இன்மையும் ஊழால் விளைவன என்கிறது பாடல். பொருள் சேரவேண்டுமென்றிருந்தால் ஊழ் சோர்வின்மையை உண்டாக்கி ஒருவனது ஊக்கத்தை மிகுவிக்கும். இது ஆகூழினது விளைவு. அதுபோல பொருள் அழிய வேண்டியிருந்தால் அவனுக்கு சோம்பலை உண்டாக்கித் தொழிலில் ஈடுப்பாட்டைக் குறைக்கச் செய்யும். இது போகூழால் உண்டாகும் விளைவு. ஊழ் நினைத்தால் ஒருவனை செல்வமுடையவனாக்கும் அல்லது அவனுடைய பொருளை நீக்கித் துன்புறச் செய்யும் என்கிறது இப்பாடல்.

நன்மை தோன்றுவதற்குக் காரணமான ஊழ் ஆகூழ் என்றும் இழப்பு ஏற்படுவதற்குக் காரணமான ஊழ் போகூழ் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆகூழ், போகூழ் என்பன நல்லூழ், தீயூழ் எனவும் அறியப்படும். கைப்பொருள் மிகுவதற்குக் காரணமான நல்லூழால் முயற்சி உண்டாகும்; கைப்பொருள் அழிவதற்குக் காரணமான தீயூழால் சோம்பல் தோன்றும்.
அசைவின்மை என்பதற்கு மன உறுதிப்பாடு என்று பொருள்; தளர்வில்லாமல் இருப்பதை அதாவது சோம்பலின்மையைக் குறிப்பது. மடி என்றது ஊக்கம் குறைதலை அல்லது சோம்பியிருத்தலைச் சொல்வது.

அசைவின்மை-மடி-ஊழ் என்ன தொடர்பு?

ஆக்கும் ஊழ் செல்வம் சேர்ப்பதற்கான ஊக்கத்தையும், போக்கும் ஊழ் பொருள் நீங்குதற்கான சோம்பலையும் தரும் என்கிறது பாடல். ஒருவனுக்கு சுறுசுறுப்பு உண்டாவதும், சோம்பல் ஏற்படுவதும் அவனுக்குப் பொருள் சேர வேண்டுமா, அல்லது இருக்கும் பொருள் நீங்க வேண்டுமா என்பது பற்றி ஊழ் செய்யும் முடிவுதான் காரணம்.
ஆகூழ் வரும்போது அது 'இதை முயன்றுபார்; அந்தத் தொழிலைச்செய்' என்று ஒருவனை உள்ளுக்குள் தூண்டும். அம்முயற்சியால் அவன் பெரும் செல்வந்தன் ஆகிவிடுகிறான், போகூழ் தோன்றினாலோ அவனிடமிருந்த சுறுசுறுப்பு மறைந்து சோம்பல் வந்து பிடித்துக்கொள்ளும்; பொறுப்பின்றி வாழ்வு நடத்தி உள்ளனவற்றையெல்லாம் தொலைத்து நிற்பான். இது இக்குறள் தரும் செய்தி. முயல்தல் மற்றும் முயற்சி இன்மை எல்லாம் தெய்வச் செயல்கள் என்னும் அடிப்படையில் சொல்லப்படுபவை இவை.

’ஆகூழ், போகூழ்’ என்பவற்றுக்கு அவை தெய்வத்தால் முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டவை என்னும் கருத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் முயற்சியாளர் ஊழ் வழிப்பட்டவர் அல்லர் என்கின்றனர். அதற்கு ஆகுதற்குரிய சூழ்நிலை போகுதற்குரிய சூழ்நிலை என்று அவர்கள் பொருள் கூறுவர்.
வ சுப மாணிக்கம் 'தீயூழ் ஒருவனை வென்றது எனின், அதனால் வெல்லப்பட்டவன் முழுமடியன், என்று கருத்தாகுமே யன்றி, அம்மெல்லிய வெற்றியால், ஊழாட்சியே உலகாட்சி என்று பொருளாகாது. ஆள்வினை வழங்கும் சூழ்நிலை எது, அது ஆகூழ் எனப் பற்றுக. மடியை விளைக்கும் சூழ்நிலை எது, அது போகூழ் என நீங்குக என்று செயலூட்டுவது வள்ளுவர் நெஞ்சம். ஆகாச் சூழ்நிலையைப் பிரித்து ஆகுஞ் சூழ்நிலையை நட்புக் கொள் என்பது உள்ளுறை. ஒருவன் முயலாதும் வாளா கிடப்பானேல், அவன் என் செய்வான், ஊழ் அவனை அங்ஙனமெல்லாம் ஆட்டுகின்றது என்று வம்புப் பொருள்படுத்தி வலிய சாவுக்கு ஏற்பாடு செய்கின்றோம்' என இக்குறட்கருத்தைப் பொருந்த விளக்குவார்.
மற்றும் சிலர்:

  • வளஞ்சேரத்தக்க ஆக்க இயற்கை உண்டாயின், உறுதிப்பாடு உண்டாகும்; அதனைப் போக்கும் இயற்கை உண்டாயின் சோம்பல் உண்டாகும்.
  • எவ்வளவு முயன்றாலும் ஏழைகள் செல்வம் சேர்க்க முடிவதில்லை. சிறுது முயன்றாலும் பெருஞ் செல்வம் செல்வர்க்குச் சேர்ந்துவிடுகிறது. தவிர, வறுமைச் சூழலில் ஏழைகளுக்கு முயற்சியும் தோன்றுவதில்லை. ஆகவே, முயற்சிகூட விதியினால் ஏற்படுகிறது என்ற மாயைக்குள் நுழைந்துவிட வேண்டியதாகிறது.
  • ஒருவனுக்குத் தளர்வின்மை வரும்போது ஆக்கம் தரும் உலகச் சூழ்நிலை (ஆகூழ்) அமைகிறது; சோம்பல் தோன்றும்போது போக்கும் உலகச் சூழல் உருவாகிறது என்பதே இக்குறட்பாவின் உட்பொருள். எனவே ஆகூழ், போகூழ் என்பவை முறையே தளர்வின்மை மற்றும் சோம்பலைப் பற்றியவையாகும். அவை மற்றவற்றைப் பற்றுவதில்லை.
  • செல்வத்திற்குக் காரணம் ஆகூழே என்றால் முயற்சி இல்லாமலேயே செல்வம் வருதல்வேண்டும். அவ்வாறன்றி முயற்சியுள்ள பொழுதன்றோ அதன் பயனாகச் செல்வம் வருகின்றது.
  • சோம்பேறிகளுக்குத்தான் கெடுதல் வரும். உறுதியும் ஊக்கமும் உள்ளவர்களுக்கு வாழ்க்கை நலங்கள் வந்து சேரும். விதியை மாற்றி எழுத முடியுமா என்று கேட்பவர்களுக்கு நல்லவை நடக்க சோம்பலை விடுக்க என்று இங்கே ஒரு பூடகமாக விதியும் கூறுகிறார் வள்ளுவர்.
என்றபடி உரைத்தனர்.

பொருள் கிடைப்பதற்குரிய ஊழிருந்தால் ஊக்கம் பிறக்கும்; அது நீங்குதற்குரிய ஊழிருந்தால் சோம்பல் வந்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒருவனது முயற்சிக்குக்கூட ஊழ்தான் காரணம்.

பொழிப்பு

பொருள் வரவேண்டும் என்றிருந்தால் ஊக்கம் தோன்றும்; அது நீங்கிப்போக வேண்டுமென்றிருந்தால் சோம்பல் உண்டாகும்.