இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0368



அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:368)

பொழிப்பு (மு வரதராசன்): அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும்மேலும் ஒழியாமல் வரும்.

மணக்குடவர் உரை: ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.

பரிமேலழகர் உரை: அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும் - அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை, அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும் - ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
(உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பெருவிருப்பம் இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும். அஃது இருக்குமானால் எல்லாத் துன்பங்களும் மேன்மேல் கெடாது வளர்ந்து வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவாஇல்லார்க்கு துன்பம் இல்லாகும் அஃதுஉண்டேல் தவாஅது மேன்மேல் வரும்.

பதவுரை: அவா-பெருவிருப்பம்; இல்லார்க்கு-இல்லாதவர்க்கு; இல்-இல்லாதது; ஆகும்-ஆம்; துன்பம்-துயரம்; அஃது-அது; உண்டேல்-இருப்பின்; தவாஅது-முடிவின்றி; மேன்மேல்-இடைவிடாமல்; வரும்-உண்டாம்.


அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லையாகும்;
பரிப்பெருமாள்: ஆசையில்லாதார்க்குத் துன்பம் இல்லையாகும்; .
பரிதி: ஆசையற்றார்க்குத் துன்பமில்லை;
காலிங்கர்: அவாவின் தன்மை இஃது ஆதலால் மற்று இவ் அவா ஒன்றும் தமக்கில்லாதார் யாவர், மற்றவர்கட்கு இல்லையாகும் துன்பமானது;
பரிமேலழகர்: அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமும் இல்லை;

'ஆசையில்லாதார்க்குத் துன்பம் இல்லையாகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசையில்லார்க்குத் துன்பம் இல்லை', 'ஆசையற்றவர்க்குத் துன்பம் இல்லையாம்', 'ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பமும் இல்லை', 'ஆசை இல்லாதவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதுஉண்டேல் தவாஅது மேன்மேல் வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
பரிப்பெருமாள்: அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவாவுண்டானால் வரும் குற்ற மென்னை யென்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: ஆசையுள்ளவர்க்குத் துன்பம் மேன்மேலே வரும் என்றவாறு.
காலிங்கர்: ஆதலால், அதுண்டாமாயின் துன்பம் எஞ்ஞான்றும் கெடாதே மேன்மேலும் வந்து எய்தும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவற்குப் பிற காரணங்களெல்லாம் இன்றி அஃதொன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
பரிமேலழகர் குறிப்புரை: உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்னே செய்து கொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவால் செய்துகொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான், மூவகைத் துன்பங்களும் என்பது பெற்றாம். இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.

'அஃது உண்டாயின் துன்பமானது கெடாது மேன்மேல் வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது உடையார்க்கு துன்பம் வளரும்', 'அவ்வாசை இருந்தால் துன்பங்கள் நீங்காமல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்', 'ஆசை இருந்தால் நிச்சயமாகத் துன்பங்கள் அடிக்கடி வந்து கொண்டேயிருக்கும்', 'ஆசை ஏற்பட்டு விட்டாலோ துன்பங்கள் எல்லாம் ஒழியாது மேன்மேல் வந்து கொண்டிருக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஆசை இருந்தால் துன்பங்கள் முடிவின்றி இடைவிடாமல் வரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை; ஆசை இருந்தால் துன்பங்கள் முடிவின்றி இடைவிடாமல் வரும் என்பது பாடலின் பொருள்.
'தவாஅது' என்பதன் பொருள் என்ன?

ஆசையே துன்பங்களுக்குக் காரணம்.

ஆசையில்லாதவர்களுக்குத் துன்பம் இராது. ஆசை உண்டானால் துன்பங்கள் மேன்மேலும் விடாமல் வந்துகொண்டிருக்கும்.
அருளாமை, பொய் பேசுதல் போன்ற பல காரணங்களுக்காகவும் ஒருவன் வாழ்க்கையில் துன்பங்கள் தோன்றும். அவையன்றி பொருள்களின் மேல் நாம் கொள்ளும் வேட்கை காரணமாகவே துன்பங்கள் உண்டாகும் என்கிறது இப்பாடல். ஆசையென்னும் மாசு தோன்றுவது துன்பத்தின் தொடக்கம். அது வெகுளி, அழுக்காறு, இன்னாச்சொல், இன்னாச்செயல், களவு, கொலை செய்தல் முதலிய பல பெரிய மாசுகளை உண்டு பண்ணுகிறது. இதனால் அவா இருந்தால் துன்பம் ஒழியாமல் மேன் மேலும் வந்துகொண்டிருக்கும்.
அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. அவாவைத் துன்பமூலமாகக் காட்டுகிறார் வள்ளுவர். அவா நீக்குதல் துன்ப நீக்கத்தைத் தரும். ஆசை அறவே இல்லார்க்குத் துன்பமும் இல்லை. அவாவறுத்தல் துன்பத்திற்குத் தீர்வு ஆகிறது.

'தவாஅது' என்பதன் பொருள் என்ன?

'தவாஅது' என்றதற்குக் கெடாது, முடிவின்றி, ஒழியாமல், இடையீடின்றித் தொடர்ந்து, நீங்காமல், தவறாமல், ஓயாது, முடிவில்லாமல், விடாது, குறையாது என உரையாளர்கள் பொருள் கூறினர்.

'தவ்' என்னும் சுருக்க அடி, 'தவல்' என்னும்போது நீங்கல் என்னும் பொருளும், தவா என்னும்போது நீங்காதது என்னும் பொருளும் தரும் வகையில் வள்ளுவத்தில் ஆளப்பட்டுள்ளன' என்பார் இரா இளங்குமரன். இக்குறளில் தவாஅது என்ற சொல் குன்றாது/குறையாது/நீங்காது என்ற பொருளில் வந்துள்ளது.

'தவாஅது' என்றதற்கு ஒழியாமல் என்பது பொருள்.

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை; ஆசை இருந்தால் துன்பங்கள் முடிவின்றி இடைவிடாமல் வரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவாவறுத்தல் துன்ப நீக்கம்.

பொழிப்பு

ஆசையில்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை; ஆசை இருந்தால் துன்பங்கள் நீங்காமல் தொடர்ந்து வரும்.