இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0363



வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டும் அஃதொப்பது இல்

(அதிகாரம்:அவாவறுத்தல் குறள் எண்:363)

பொழிப்பு (மு வரதராசன்): அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை.

மணக்குடவர் உரை: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.
இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை - ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை, ஆண்டும் அஃது ஒப்பது இல் -இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.
(மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: ஆசையில்லாமை போன்றதொரு சிறந்த செல்வம் இங்கே இல்லை. இங்கே மட்டுமன்றி வேறு எங்கேயும் அதனைப் போன்றதொரு செல்வம் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்பது இல்.

பதவுரை: வேண்டாமை-அவாவாமை; அன்ன-அது போன்ற; விழுச்செல்வம்-விழுமிய செல்வம், சிறப்பான செல்வம், மதிப்புமிக்க செல்வம்; ஈண்டு-இங்கு, இவ்வுலகில்; இல்லை-இல்லை; யாண்டும்-எங்கும், எவ்விடத்தும்; அஃது-அது; ஒப்பது-போல்வது; இல்-இல்லை.


வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை;
பரிப்பெருமாள்: அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை;
பரிதி: ஆசையற்ற செல்வத்திற்குப் பூலோகத்திலும்;
காலிங்கர்: அவா என்னப்பட்டது யாதொன்றினையும் விரும்பாமையாகிய இதனை ஒப்பதோர் விழுமிய செல்வம் இவ்விடத்தில்லை;
பரிமேலழகர்: ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை;

'அவாவின்மை போல மிக்க செல்வம் இவ்விடத்தில் இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆசையின்மையே சிறந்த செல்வம்', 'ஒரு பொருளையும் விரும்பாமையைப் போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை', 'எதிலும் ஆசை வைக்காதிருப்பதைப் போன்ற குறைவற்ற செல்வம் இந்த உலகத்தில் நாம் கண்டதில்லை', 'ஒரு பொருளையும் விரும்பாமையை ஒத்த விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

யாண்டும் அஃதொப்பது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.
பரிப்பெருமாள்: அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இதனின் மிக்கதொரு பொருளுமில்லை யென்றது.
பரிதி: தெய்வலோகத்திலும் நிகரில்லை.
காலிங்கர்: அதுவேயும் அன்றி மற்றும் எவ்விடத்தும் அதனை ஒப்பது ஒன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பது இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: மக்கள் செல்வமும் தேவர் செல்வமும் மேன்மேல் நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பதில்லை என்றும் கூறினார். ஆகம அளவை போலாது காட்சி அளவை எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள்செல்வம் வகுத்து முன்கூறப்பட்டது. பிறவாமைக்கு வழியாம் எனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

'அவ்விடத்தினும் அதனை யொப்பது பிறிதில்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் யாண்டும் என்பதற்கு முறையே தெய்வலோகத்திலும், துறக்கத்தின் கண்ணும் என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோன்ற செல்வம் எங்கும் இல்லை', 'அதனை ஒப்பது மற்றும் எவ்விடத்தும் இல்லை', 'வேறு எந்த உலகத்திலும் அதற்கிணையான செல்வம் இருக்க முடியாது', 'எங்கும் அதனை ஒப்பது ஒன்று கிடையாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுச்செல்வம் இவ்வுலகில் இல்லை; அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'விழுச்செல்வம்' என அவாவின்மை ஏன் சிறப்பித்துக் கூறப்படுகிறது?

வேண்டாம் என்றலும் ஒரு செல்வமாம்.

ஆசையில்லாமையைப் போன்ற விழுமிய செல்வம் இந்த உலகத்தில் இல்லை; வேறு எங்குமே அதற்குச் சமமான ஒன்று இல்லை.
மெய்யுணர்வு பெற்று உலகியல் தேவைகளைக் குறைத்து வாழ்பவர்களுக்கு அவா அற்ற நிலைமை இயல்பாகிவிடும். தேவைக்கு மேல் எந்த ஒரு பொருளையும் விரும்பாமல் வாழும் அந்த நிலைமையேகூட ஒரு விழுப்பமான செல்வம்தான்; இந்த 'வேண்டாமை' அதாவது எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகத்திலோ வேறு எங்குமோ இல்லை.
அவாவறுத்தலின் பயனாக வேண்டாமை என்னும் விழுமிய செல்வம் கிடைக்கும். வானோர் உலகத்தில் கிடைக்காதது எதுவுமே இல்லை என்று சொல்வர். அங்குகூட இல்லாத மதிப்புமிக்க செல்வமாக அவாவாமை உள்ளது என்கிறது இப்பாடல்.

'ஆண்டும்' எனப் பிரித்துத் 'துறக்கத்தின் கண்ணும்' எனப் பொருள் காண்கிறார் பரிமேலழகர். அதனினும் 'யாண்டும்' என்று வேறு பாடம் கொண்டு, ‘எவ்விடத்தும்’ என்று கூறும் காலிங்கர் உரை இயல்பானதாக உள்ளது.

'விழுச்செல்வம்' என அவாவின்மை ஏன் சிறப்பித்துக் கூறப்படுகிறது?

செல்வம் என்று சொல்லும்போது நாம் பொருட்செல்வத்தையே எண்ணுகிறோம். வள்ளுவர் பணிவு (125), அருள்(241), கல்வி(400), கேள்வி(411), ஊக்கம் (592), என்பனவற்றையும் செல்வங்களாகவே உயர்வாகக் கூறுவார். வேண்டாமையை மதிப்பு கூடியதாகவும் காட்டி 'விழுச்செல்வம்' என்றழைக்கிறார். கல்வியையும் விழுச் செல்வம் என்று கூறியிருக்கிறார் அவர்
விரிந்து பரந்து பெருகிய ஆசைகளை, விருப்பங்களைக் குறைத்து மிகத் தேவையான பொருள்களில் மட்டும் நாட்டம் கொண்டு வாழும்போது எதையோ இழந்து விட்டோமே என்று அவன் எண்ணுவதில்லை; பெருஞ்செல்வம் பெற்றவன் போன்றே அவன் உணர்வான். அவாக்களை மிகவும் பெருக்கிக்கொண்டு அவற்றை அடைய முடியாது துன்புறாமல், அவை வேண்டாம் என்று விலக்குவது சிறந்த பயனைத் தரும். கள்ளுண்ணல் ஆசையை விட்டவன் உடல் நலம் தேறி, குடும்ப உறவு சீராகி, சமூகத்தில் மேன்மை பெறுவான். அப்பொழுது அவன் பெறும் மகிழ்ச்சி அளப்பறியது.
ஆசை துன்பம் விளைவிப்பது; ஆசையை விடவிட ஒருவகையான நிறைவு எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும். ஒரு பொருளும் வேண்டாம் என்ற நிலை ஒருவன் அடையத்தக்க உயர்ந்த செல்வம். அதைப்போன்ற விடுதலை இன்பம் எங்குமிராது. அது வேண்டாமை எண்ணம் நிறைவு எய்திய இன்ப நிலையில் வருவது. வேண்டாமை நிலையே விழுமிய செல்வம் அடைந்த நிலை. இதுவே இப்பாடலில் உணர்த்தப்படுகிறது.

வேண்டும் வேண்டும் என்று நினைப்பதால் தான் ஒருவன் மேலும் மேலும் ஆக்கம்பெற்று உயரமுடிகிறது. இது போதும் என்று நிறுத்தி விட்டால் பொருள் செய்வது எப்படி? வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது?
அவாஅறுத்தல் அதிகாரம் எல்லாருக்குமானதல்ல. இல்லறவாழ்வின் அனைத்துப் பயன்களையும் அனுபவித்தபின். அதன் முடிவில் இருப்பவர்களுக்காகச் சொல்லப்படுவது. ஒருவனது உயிர்வாழ்வு கலக்கமில்லாத, நிறைவான, அமைதியான இறுதி பெறுவதற்காக எழுந்தது. அந்த நிலையில் அவாவாமை விழுச்செல்வம்தான். வேண்டாமையை விழுச்செல்வம் எனக் கூறியது சீரிய சிந்தனையின் வெளிப்பாடாம்.

எதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம் இவ்வுலகில் இல்லை; அதுபோன்றது வேறுஎங்கும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவாவறுத்தல் ஒப்புமை இல்லாத மேலான செல்வம்.

பொழிப்பு

விரும்பாமையைப் போன்ற விழுமிய செல்வம் இங்கில்லை; அதனை ஒப்ப செல்வம் எங்குமேயும் இல்லை.