இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0357



ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:357)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.

மணக்குடவர் உரை: உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின், பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.
மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.

பரிமேலழகர் உரை: உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.
('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: சிந்தித்துத் தெளிந்து மெய்ப்பொருளை உள்ளம் உணர்ந்து கொண்டால், உறுதியாக, மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஓர்த்துள்ளம் உள்ளது ஒருதலையா உணரின் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு.

பதவுரை: ஓர்த்து-தெளிய ஆராய்ந்து; உள்ளம்-நெஞ்சம்; உள்ளது-இருப்பது (இருப்பதாகிய உயிர்வாழ்க்கைப்பொருள்); உணரின்-தெரிந்து கொண்டால்; ஒருதலையா-தெளிவாய்; பேர்த்து-பின்னும், மறுபடியும், மீண்டும், மாறி; உள்ள-ஆராய, நினைக்க; வேண்டா-வேண்டுவதில்லை; பிறப்பு-பிறப்பு.


ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின்;
பரிப்பெருமாள்: உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து ஒருதலையாக வுணருமாயின்;
பரிதி: அறிவின் வெள்ளத்தைத் திருவடியிலே செலுத்துமாகில்;
காலிங்கர்: ஒருவனது உள்ளமானது ஒன்றை மற்றொன்றாகக் கருதி மயங்காது கீழ்ச்சொன்னபடியே ஓர்ந்து பார்த்து மற்று இணை இறந்த தலைப்பாடாக உள்ளதனை உள்ளுமாயின்;
காலிங்கர் குறிப்புரை: ஒருதலை என்பது இணையிறந்த தலை(மை)ப்பாடு.
பரிமேலழகர்: அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது. [விமரிசம் - மனனம் (சிந்தித்தல்)]

'உள்ளமானது உள்ள பொருளை யாராய்ந்து வுணருமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின்' என்பது பரிமேலழகரது உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் உண்மையை உணர்ந்துகொண்டால்', 'ஒருவனது நெஞ்சம் ஆராய்ந்து பார்த்து மெய்ப்பொருளை உணருமாயின் உறுதியாக', 'கல்வி கேள்விகளால் ஆராய்ந்து மனமானது என்றைக்கும் உள்ளதான அழிவில்லாப் பொருளை அறிந்து அதை அனுபவித்தால் நிச்சயமாக', 'பலவகையாலும் ஆராய்ந்து உள்ளமானது மெய்ப்பொருளை அறியின் உறுதியாக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளம் ஆராய்ந்தறிந்து உயிர்வாழ்க்கைப் பொருளை உறுதியாக உணருமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.
மணக்குடவர் குறிப்புரை: மெய்யுணர்ந்தவர் பிறப்புண்டென்று நினையாதொழிக வென்றவாறு.
பரிப்பெருமாள்: பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: மெய்யுணர்ந்தவர்கள் பிறப்புண்டென்று நினைப்பராயின் அஃது ஐயப்படுதல் என்னும் குற்றமாம்; அதனாற் பிறப்பை நினையாதொழிக.
பரிதி: அவனுக்குப் பிறப்பு இல்லை என்றவாறு.
காலிங்கர்: பின்பு பெயர்த்து ஆராயவேண்டா பிறவியினை என்றவாறு.
பரிமேலழகர்: அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா.

'பின்னைப் பிறப்புண்டென்று நினையா தொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்னும் பிறப்புண்டோ என்று அஞ்சாதே', 'அவனுக்கு மறுபடியும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா', 'மறு பிறப்பை நினைக்க வேண்டியதில்லை', 'மீண்டும் பிறப்பினைப்பற்றி நினைக்க வேண்டாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறப்பின் இயல்பை பின்னும் ஆராயவேண்டியதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உள்ளம் ஆராய்ந்தறிந்து உயிர்வாழ்க்கைப் பொருளை உறுதியாக உணருமானால், பின்னும் உள்ள வேண்டாப் பிறப்பு என்பது பாடலின் பொருள்.
'உள்ள வேண்டாப் பிறப்பு' குறிப்பது என்ன?

உயிர்வாழ்க்கையின் இயல்பு அறிந்தபின் பிறப்புஆராய்ச்சி வேண்டுமா?

ஒருவனது உள்ளம் உயிர்வாழ்க்கையின் பொருளை ஆய்ந்து உறுதியாக உணருமானால் பின்னும் பிறப்பு இயல்பு பற்றி எண்ண வேண்டியதில்லை.
உயிர்வாழ்க்கைத் தத்துவத்தை தனக்குள் தானே அகழ்ந்தகழ்ந்து, அதன் பொருளை உணர்ந்து கொண்டபின் பிறப்பு ஏன் உண்டாயிற்று என்ற ஆராய்ச்சி வேண்டி இருக்காது என்கிறது பாடல். உயிர்வாழ்க்கைத் தத்துவம் என்பது வாழ்வுக் கூத்து ஏன் நடைபெறுகிறது, பின்னேயிருந்து அதை இயக்குவது எது, உயிர்கள் வாழும் வாழ்க்கை எத்தகையது, எப்படி வாழவேண்டும், உலகிற்கு அவற்றின் பங்களிப்பு என்ன, அது எவ்விதம் நன்மையாய்/தீமையாய் அமைகிறது இவை போன்றவற்றைப் பற்றி அறிவது. வாழ்க்கையின் மெய்ப்பொருளை கல்வி, கேள்வி, பட்டறிவு இவற்றின் துணைகொண்டு பகுத்தறிந்து அகவுணர்வின் மூலம் அறியலாம்.
உலக வாழ்க்கையின் மெய்ப்பொருளை ஆழ்ந்தாழ்ந்து சிந்தித்து அவற்றின் பொருளை உணர்ந்து கொண்டால் பிறவி வாழ்க்கை பற்றித் தெளிவு உண்டாகும். எல்லாவற்றினுள்ளும் கலந்து எல்லாமாய் நிற்கின்ற, உள்ள ஒரு பொருளை உள்ளம் அப்பொழுது அறியும். அது தெரிந்துவிட்டால், பின் எதற்கு பிறப்பு பற்றி நினைக்க வேண்டும்? தேவையில்லை.
இப்பாடலிலுள்ள 'உள்ளது' என்ற சொல்லுக்கு உயிர்வாழ்க்கைப் பொருள் எனவும் 'பிறப்பு' என்ற சொல்லுக்குப் பிறவிப் பெருங் கடல் .. (கடவுள்வாழ்த்து 10) என்பதிலுள்ளதுபோல் 'பிறவி வாழ்க்கை' எனவும் இங்கு பொருள் கொள்ளப்படுகிறது.

'உள்ள வேண்டாப் பிறப்பு' குறிப்பது என்ன?

'உள்ள வேண்டாப் பிறப்பு' என்றதற்குப் பிறப்புண்டென்று நினையா தொழிக, பிறப்பு இல்லை, ஆராயவேண்டா பிறவியினை, பிறப்புளதாக நினைக்க வேண்டா, பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா, வேண்டாத பிறப்பு இல்லை, பிறப்புண்டோ என்று அஞ்சாதே, பிறப்புள்ளதாக நினைக்க வேண்டா, பிறப்பை நினைக்க வேண்டியதில்லை, அறியாமைத் தோற்றம் வருமென எண்ண வேண்டியதில்லை, பிறவி உண்டென்று திண்ணமாக நினைத்தல் வேண்டாம் பிறவியின்மை திண்ணமாதலின், பிறப்பினைப்பற்றி நினைக்க வேண்டாம், மனிதப் பிறப்பின் இயல்பை மீண்டும் ஆராயவேண்டியதில்லை, பிறப்புள்ளதாக நினைக்க வேண்டியதில்லை, பிறப்பு வருமோ என்று ஐயமோ அச்சமோ கொள்ள வேண்டுவதில்லை, பிறப்பினை நினைக்க வேண்டா என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இக்குறளுக்கும் பலரும் மெய்யுணர்வு அடைதலும் பிறவிச் சுழற்சியில் இருந்து விடுதலும் தொடர்புள்ளவை என்ற கருத்திலேயே பொருள் கூறுகின்றனர். 'என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்' என்று பாடலுக்கு உரை தந்தனர். 'மெய்ப்பொருளை உணரும் உயிர்களுக்கே மீண்டும் பிறவி இல்லை' என்பது பெரும்பாலான உரையாளர்களது கருத்தாக உள்ளது.
குறள் வாழ்க்கைமறுப்பு இல்லாத கோட்பாட்டை உடையது. பிறப்பு வேண்டாம் என்று அது சொல்லாது. எனவே இங்குள்ள 'பிறப்பு' என்ற சொல்லுக்குப் பிறவிவாழ்க்கை என்ற பொருளே தகுவதாகும். பழம் ஆசிரியரான காலிங்கரும் பிறவியினை ஆராயவேண்டா என்றுதான் பொருள் கொள்கின்றார்; பிறவி வேண்டாம் என்று சொல்லவில்லை. எனவே உயிர்வாழ்க்கைப் பொருளை உணர்ந்துகொண்டால் இந்தப் பிறவி ஏன் வந்தது என்ற ஆராய்ச்சி வேண்டாம் என்பதே குறள் கூறவருவது. உள்ள பிறவி ஏன் வந்தது என்பதற்கு விடையும் கிடையாது ஆதலால் பிறவி ஆராய்ச்சி வேண்டா எனச் சொல்லப்பட்டது.

உள்ளம் ஆராய்ந்தறிந்து உயிர்வாழ்க்கைப் பொருளை உறுதியாக உணருமானால், பிறப்பின் இயல்பை பின்னும் ஆராயவேண்டியதில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மெய்யுணர்தல் உயிர்வாழ்க்கைப் பொருளை அறிதலாம்.

பொழிப்பு

உள்ளம் ஆராய்ந்தறிந்து உயிர்வாழ்க்கைப் பொருளை உறுதியாக உணருமானால், பிறப்பு பற்றி ஆராயவேண்டாம்.