இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0356



கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:356)

பொழிப்பு (மு வரதராசன்): கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.

மணக்குடவர் உரை: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்; மீண்டு இவ்விடத்து வாராத வழியினை.
கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.

பரிமேலழகர் உரை: ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார் - இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர், மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர் - மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
('கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம். ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது.)

இரா இளங்குமரன் உரை: ஈங்குக் கற்க வேண்டுவனவற்றைக் கற்று அவற்றிலுள்ள மெய்ப்பொருளை அறிந்து கொண்டவர், பிறர்க்குத் தோன்றாத நெறிகள் எல்லாம் விளங்கித் தாம் சிறப்புறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் மற்றீண்டு வாரா நெறி தலைப்படுவர்.

பதவுரை: கற்று-தெளிவாகி, கற்று; ஈண்டு-இவ்வுலகில்; மெய்ப்பொருள்-உண்மைப்பொருள்; கண்டார்-உணர்ந்தவர், அறிந்துகொண்டவர்; தலைப்படுவர்-எய்துவர், முற்படுவர்; மற்று-பின்; ஈண்டு-இங்கு, இப்பிறப்பு வாழ்வில்; வாரா-(துன்பம்) வராத; நெறி-வழி.


கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்;
பரிப்பெருமாள்: இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்;
பரிதி: ஞான சாஸ்திரமே கற்று ஈண்டு உண்மை தெரிசித்து நிலைமையிலே நின்றார்;
காலிங்கர்: உயர்ந்தோர் மெய்ப்பொருள் தெரிதற்கு விளங்கிய நூல்களைக் கசடறக் கற்று அதனாலே மெய்ப்பொருளைக் கண்டோர் எய்துவர்;
பரிமேலழகர்: இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கு அருமையும் பெற்றாம்.

'இவ்விடத்தே மெய்ப்பொருளை யறிந்துதெளிந்தாரே அடைவார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'உபதேச மொழிகளை அனுபவம் உடைய தேசிகர்பால் கேட்டு மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்' என்பார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பிறப்பில் கற்று உண்மை கண்டவரே அடைவர்', 'மெய்ப்பொருள் காட்டும் நூல்களைக் கற்று இவ்விடத்து மெய்ப்பொருளை உணர்ந்தவர் எய்துவர்', '(மெய்ப் பொருளை ஆராயும் வழிகளைக்) கற்று இந்தப் பிறப்பில் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அடைவார்கள்', 'மெய்யாசிரியன்பால் கற்றற்கு உரியதை இப் பிறப்பிலே கேட்டறிந்து, பொருளையுணர்ந்தவர்கள் அடைவார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர் அடைவர் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றீண்டு வாரா நெறி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மீண்டு இவ்விடத்து வாராத வழியினை.
மணக்குடவர் குறிப்புரை: கல்வி யறிவால் அறிவை அறியப் பிறப்பறு மென்றவாறு.
பரிப்பெருமாள்: மீண்டு இவ்விடத்து வாராத வழியினை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வி-அறிவு; 'கல்லாக்கடுவன்' என்றாற்போல-காட்சி-தெளிவு; உள்பொருளிதுவென உணர்தல் ஞானமாம். தெள்ளிதின் அப்பொருள் தெளிதல் காட்சியாம். என்று பிறரும் சொன்னாராகலின் இது பிறப்பறு மென்றது.
பரிதி: பிறவாநெறி பெறுவர் என்றவாறு.
காலிங்கர்: யாதினை எனில் மறித்து இவ்வுலகத்து வந்து பிறக்கவேண்டாத நெறியினை என்றவாறு.
பரிமேலழகர்: மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை.
பரிமேலழகர் குறிப்புரை: ஈண்டுவாரா நெறி: வீட்டு நெறி. வீட்டிற்கு நிமித்த காரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று: அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுள் கேள்வி இதனால் கூறப்பட்டது. [கேள்வி - ஞானாசிரியனிடம் கேட்டல்; விமரிசம் - மனனம் (சிந்தித்தல்); பாவனை - தெளிதல்]

'மீண்டு இவ்விடத்து வாராத வழியினை' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இவர்கள் அனைவரும் 'மீண்டும் இவ்வுலகில் வந்து பிறக்க வேண்டாத நெறி' பற்றியே சொல்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திரும்பப் பிறவா வீட்டினை', 'மீண்டும் இவ்வுலகில் வந்து பிறவாத பேரின்ப நெறியை', 'மறுபடியும் இந்த உலகத்தில் பிறவாதிருக்கும் நிலைமையை', 'மீட்டும் உலகத்திற்கு வாராத உயர் நெறியை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர் என்பது பாடலின் பொருள்.
'ஈண்டு வாரா நெறி' என்பது என்ன?

உலக இயக்கம் உணர்ந்தவர்க்குத் துன்பங்கள் தெரிவதில்லை.

இவ்வுலகிலே மெய்ப்பொருளைக் கற்று உணர்ந்தவர், வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாதவாறு நல்வழியை அடைய முற்படுவர்.
மெய்ப்பொருள் என்பதற்கு உண்மைப்பொருள், இறைப்பொருள் என்றவாறு பொருள் கூறுவர். எவ்வாறு 'மெய்ப்பொருள் காண்பது' என்பதற்கு இக்குறளிலேயே 'கற்று' என்று விடை உள்ளது. பாடலில் 'கற்று ஈண்டு' எனச் சொல்லப்பட்டுள்ளதால், மெய்ப்பொருள் என்பது இவ்வுலகில் கற்கப்படவேண்டிய ஒன்று எனத் தெரிகிறது. மெய்ப்பொருள் காண்டற்குக் கல்வி பெருந்துணையாகும் என்பது வள்ளுவரின் கருத்து. விளங்கிய நூல்களைக் கசடறக் கற்று மெய்ப்பொருள் பெற முயல்தல் வேண்டும் எனச் சொல்லப்பட்டது.
வெறும் கல்வி அறிவால் மெய்ப்பொருளைக் காண முடியுமா? மெய்ப்பொருள் என்பது உணரப்படுவதும் ஆம். எனவே கற்று என்றது கல்வி, கேள்வி, பட்டறிவு ஆகியன கொண்டு மாசறு காட்சி பெறுவதைக் குறிப்பதாகும். பலவற்றையும் கற்று மெய்ப்பொருளைக் காண்பவர் மெய்யுணர்தல் பெற்றவர் ஆகிறார். இவர் உலக இயக்கம், இறை இயக்கம் இவற்றை அறிந்து தெளிந்தவராயிருப்பார்; வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை அஞ்சாமல் எதிர்கொள்வார். எதையும் துன்பமாகக் கருதமாட்டார். இவ்விதம் கற்பன கற்று இவ்வுலகத்தில் மெய்ப் பொருளைக் கண்டவர்கள் இந்தப் பிறப்பு வாழ்க்கையில் துன்பங்கள் புகாத நன்னெறியை எய்துவர்.

'ஈண்டு வாரா நெறி' என்பது என்ன?

'ஈண்டு வாரா நெறி' என்றதற்கு இவ்விடத்து வாராத வழி, பிறவாநெறி, இவ்வுலகத்து வந்து பிறக்கவேண்டாத நெறி, இப்பிறப்பின்கண் வாராத நெறி, இப் பிறப்பிற்கு வாராத வழி, இப்பிறவியின்கண் வாராத வீட்டுநெறி, பிறவா நெறி, பிறவா வீடு, இவ்வுலகில் வந்து பிறவாத பேரின்ப நெறி, இந்த உலகத்தில் பிறவாதிருக்கும் நிலைமை, உலகத்திற்கு வாராத உயர் நெறி, பிறப்பறும் நெறி, இவ்வுலகில் பிறவாத வழி, இவ்வுலகத்தில் பிறந்து துன்புறாத சிறந்த வழி, இப்பிறப்பின்கண் வராத வழி, பிறவிக்கண் வருந்தும் தீநெறி விட்டு வீடு பேற்றுக்குரிய நல்வழி, திரும்பப் பிறக்க மாட்டார்கள், திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழி என்றும்
பிறர்க்குத் தோன்றாத நெறி, துறவி நெறியினின்றும் திரும்பும் பழையநெறி, இல்லறத்துக்கு வராத நெறி என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.

கிட்டத்தட்ட அனைத்து அன்றைய/இன்றைய உரையாசிரியர்களும் 'இப்பிறப்பிற்கு வராத வழி'யை அடைவர் என்றே பொருள் கூறினர்.
இப்பிறப்பிற்கு வராத வழி என்பதற்கு 'வீடு பெற்றுவிடுதல்' என்பர். வீடு அடைந்தவர் மீண்டும் இவ்வுலகம் வந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய தேவையில்லை என்பது நம்பிக்கை.
எல்லோருமே திரும்பி இவ் வுலகிற்கு வாராத வழி என்றதால் நிலவுலக வாழ்க்கை மிகவும் வெறுக்கத்தக்கது என்று சொல்வதாகிறது. உலக வாழ்க்கையை மறுக்கிற தத்துவங்களுக்கிடையில் உலக வாழ்க்கையை வற்புறுத்துவது என்று நாம் பெருமைப்படுதற்குரிய நூல் திருக்குறள். இதில் எப்படி 'உலக வாழ்க்கையே துன்பம் நிறைந்தது', 'பிறப்பறுத்தலே வாழ்வின் நோக்கம்', 'வாழத்தகுதியற்றது பூவுலகம்' போன்ற கருத்துக்கள் இடம் பெறும்? கற்க வேண்டியதை கற்றால் மறு பிறவி என்பதை விட்டு அகன்று விடலாம் என்பது மெய்ப்பொருளுக்கே மாறானது.

ஈண்டு வாரா நெறி என்பது வாழ்க்கைத் துன்பம் நெருங்காத நெறி எனப் பொருள்படும். கற்க வேண்டிய நூல்களைக் கற்று இவ்வுலகிலே உண்மைப் பொருள்களை உணர்ந்தவர் வாழ்க்கைய செம்மையாக வழிநடத்தத் தம்மை அணியப்படுத்திக் கொண்டவர்கள். துன்பம்-இன்பம், நன்மை-தீமை போன்ற இருமைவகை தெரிந்தவர்கள். அவர்களிடம் இவ்வுலக வாழ்க்கையின் அச்சந் தரும் துன்பங்கள் அண்டுவதில்லை. 'துன்பங்கள் புகாத நன்னெறி' என்பதே ஈண்டு வாரா நெறி என்பது.

இவ்வுலகின் மெய்ப்பொருளைத் தெளிவாக உணர்ந்தவர், பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைய முற்படுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மெய்யுணர்தல் பெற்றார்க்குத் துன்பம் இல்லை.

பொழிப்பு

இவ்வுலகின் மெய்ப்பொருளை தெளிவாக உணர்ந்தவர் பின் வாழ்க்கைத் துன்பங்கள் இங்கு தோன்றாத வழிகளை அடைவர்.