இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0355



எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:355)

பொழிப்பு (மு வரதராசன்): எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

மணக்குடவர் உரை: யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும் அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்.
மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.

பரிமேலழகர் உரை: எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் - யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
(பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு பொருள் எத்தன்மையதாக இருப்பினும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

பதவுரை: எப்பொருள்-எந்தப்பொருள்; எத்தன்மைத்து-எந்த இயல்புடையது; ஆயினும்-ஆனாலும்; அப்பொருள்-அந்தப் பொருள்; மெய்ப்பொருள்-உண்மைத்தன்மை; காண்பது-காணுதல்; அறிவு-உணர்வு.


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும்;
பரிப்பெருமாள்: யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும்;
பரிதி: எப்பொருள் எது சொன்னாலும்;
காலிங்கர்: உலகத்து யாதானும் ஒரு பொருள் உண்மை நிகழாது வேறுபாடு உடையதாயினும்;
பரிமேலழகர்: யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்,

'யாதொரு பொருள் யாதொரு தன்மைத்தாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'எப்பொருள் எது சொன்னாலும்' என்றார். 'யாதானும் ஒரு பொருள் உண்மை நிகழாது வேறுபாடு உடையதாயினும்' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்' எனப் பொருள் கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோன்றினாலும்', 'எந்தப் பொருள் எப்படி நமக்குத் தோற்றமளித்தாலும்', 'எந்தப்பொருள் எவ்வியல்பு உடையதாகத் தோன்றினும்', 'யாதொரு பொருள் யாதொரு தன்மையாய்த் தோன்றினும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எந்த ஒரு பொருளும் எத்தன்மையதாக இருப்பினும் என்பது இப்பகுதியின் பொருள்.

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்.
மணக்குடவர் குறிப்புரை: மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.
பரிப்பெருமாள்: அப்பொருளினுடைய வுண்மையைத் தான் உண்மையாகக் காண்பது யாதொன்று அஃது அறிவாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று.
இவை மூன்றினானும் உலகத்து தோற்றுகின்ற பொருள்களை இந்திரியங்களாற் கண்டு அதன்பின் அப்பொருள்களைக் கண்டவாற்றால் தெளியாது அவையிற்றனது உண்மையைப் போக்கறவாராய்ந்து காண்பது மெய்யென்று கூறப்பட்டது.
பரிதி: அந்தப் பொருளை உபதேசமாகக் காண்பது அறிவு என்றவாறு.
காலிங்கர்: அப்பொருளை மெய்யென்று கருதாது மற்று அப்பொருளை உண்மைப் பொருளாகக் காணவல்லது யாது; மற்று அதுவே ஒருவர்க்கு அறிவானது என்றவாறு.
பரிமேலழகர்: அத்தோன்றிய ஆற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது.
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது கோச்சேரமான் யானைக் கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்றவழி. அரசன் என்பதோர் சாதியும் சேரமான் என்பதொரு குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேய் என்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒரு பொருளின் கண் கற்பனை ஆகலின், அவ்வாறு உணராது, நிலம் முதல் உயிர் ஈறாகிய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம் முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக் கொண்டுசென்றால், காரணகாரியங்கள் இரண்டும் இன்றி முடிவாய்நிற்பதனை உணர்தலாம். 'எப்பொருள்' என்ற பொதுமையான், இயங்குதிணையும் நிலைத்திணையும் ஆகிய பொருள்கள்எல்லாம் இவ்வாறே உணரப்படும். இதனான் மெய் உணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.

'அப்பொருளினுடைய உண்மையை உண்மையாகக் காண்பது அறிவாம்' என்ற பொருளில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். அப்பொருளை உபதேசமாகக் காண்பது அறிவு' என்கிறார் பரிதி. 'அப்பொருளை உண்மைப் பொருளாகக் காணவல்லதுவே அறிவானது' என்பது காலிங்கரது உரை. 'அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய் உணர்வாவது' என்பது பரிமேலழகரது உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'அப்பொருளின் உள்ளீடாக உள்ள மெய்ப்பொருளைக் காண்பதே அறிவாகும்', 'அந்தப் பொருளில் எது அழியாமல் என்றுமிருக்கக் கூடியது என்று கண்டுபிடிப்பதுதான் மெய்ப்பொருளை ஆராய்க்கூடிய அறிவு', 'அப்பொருளிற்கு உள்ளீடாய் உள்ள மெய்ப்பொருளைக் காண்பதே தெள்ளிய அறிவாகும்', 'அப்பொருளின் தோற்றத்தால் மயங்காது உண்மைத் தன்மையை அறிவதே அறிவாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அப்பொருளின் உண்மையை உணர்வதே அறிவாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எந்த ஒரு பொருளும் எத்தன்மையதாக இருப்பினும் அப்பொருளின் உண்மையை உணர்வதே அறிவாகும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பொருட்களின் உண்மைத் தன்மையை உணர்ந்து பயன் பெறுக.

எந்தப் பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும் அந்தப் பொருளின் உண்மையான குணத்தினை உணர்ந்து கொள்வதே அறிவுடைமை ஆகும்.
ஒரு நுகர் பொருளை அதன் வெளிப்படு நிறம், வடிவம், பெயர் (brand), சுவை இவற்றைப் பார்த்து அதனை ஏற்றதெனக் கொள்கிறோம். அதன் உள்ளீடு மாறாக இருக்கலாம்; அது. பெருங்கேடு செய்வதாயிருக்கலாம். அதன் உட்பொருளை நன்கு அறிந்து எடுத்துக் கொள்வது நலன்பயக்கும். அதுபோலவே மற்றப் பொருள்களின் தன்மைகளையும் ஆராய்ந்து ஏற்கத்தக்கதானால் எடுத்துக்கொள்க என அறிவுரை கூறுகிறது இப்பாடல்.

இக்குறள் நடை போன்றே அமைந்து இதுபோலவே அழுத்தமான கருத்துடன் கூடிய குறள் பொருட்பாலிலும் உள்ளது: எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (அறிவுடைமை 423 பொருள்: எந்த ஒரு செய்தியைப் பற்றியும் யார் ஒருவர் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின் மெய்ப்பொருளை ஆராய்ந்து கண்டுகொள்வது அறிவு). இரண்டினது ஈற்றடியும் ஒன்றாக உள்ளது நோக்கத்தக்கது. ஒன்று, பிறர் கூறுவதில் உள்ள உண்மைகளைக் கண்டறிவது பற்றியது. மற்றொன்று பொருள்களின் தன்மைகளைக் கண்டறிவதைச் சொல்வது.

திருக்குறளிடத்துப் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த இங்கர்சால் என்னும் மேற்குநாட்டு அறிஞர் அடிக்கடி மேற்கோளாகக் காட்டி எழுதியும் பேசியும் வந்த குறள்களில் இதுவும் ஒன்று.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

மெய்யுணர்தல் என்றால் என்ன? எப்பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே மெய்யுணர்தல் என்கிறது பாடல். இது பொருள்களின் உண்மைத் தன்மை அறிய அவற்றை அறிவியல் அணுகுமுறைக்கு உட்படுத்தச் சொல்கிறது. மணக்குடவர் இக்குறளுக்கான விளக்கவுரையில் 'மெய்யென்பதூஉம், அறிவென்பதூஉம் ஒன்று: என்னை? எக்காலத்தும் எவ்விடத்தும் ஒரு தன்மையாக அழியாது நிற்றலின் மெய்யாயிற்று: எல்லாப் பொருளையுங் காண்டலால் அறிவாயிற்று' எனக் கூறுகிறார்.
மெய்யுணர்தல் என்பது பகுத்தறிதல்தான் எனச் சொல்வதுபோல் தெரிகிறது.

'மெய்ப்பொருள் காண்பது' அதாவது மெய்யுணர்தல் என்பதை 'ஆட்சிமுறை' என்ற பொருளை எடுத்துக்காட்டாகக் கொண்டு நோக்கலாம். எது போன்ற ஆட்சிமுறை நமக்கு வேண்டும்? குடியரசு, சமஉடைமை (Socialism), பொதுவுடைமை(communism), நன்னோக்கு வல்லாட்சி (சர்வாதிகார ஆட்சி) (Benevolent dictatorship), முடியரசு ஆகியன எல்லாமே அரசியலமைப்பு ஆட்சி முறைகள்தாம். இவை ஒவ்வொன்றும் தனித்தனிப் பொருள்கள்; ஒவ்வொன்றும் தனித் தன்மைகள் அதாவது வெவ்வேறான குணங்கள் கொண்டன. சிலர் சர்வாதிகார ஆட்சியில் நன்மைகள் விரைவில் கிடைக்கும். எனவே அதுவே சிறந்தது என்பர். ஆனால் அத்தகைய அரசில், அதிகாரம் ஒருவரிடமோ அல்லது ஒரு குடும்பத்திடமோ குவிந்து விடுவதால் குடிகள் தங்கள் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் உடன் இழந்துவிடுவர்; அரசியலில் என்ன நடக்கின்றது என்று யாருக்குமே தெரியாமல் போய்விடும். நல்லவர்கள் கூட ஒரு சொல் முணுமுணுத்தாலே 'காணாமல்' போய்விடுவார்கள். அப்பொழுது வல்லாட்சியில் அந்நாடு வளம் பெறுகிறது என்பது பொருளற்றதாகி விடும். மேலே சொல்லப்பட்ட எல்லா ஆட்சிமுறைகளின் மெய்ப்பொருள்களையும் ஆழ்ந்து ஆராய்ந்து தெரிந்து கொள்பவர்கள் குடியரசு முறையே சிறந்தது என்ற முடிவுக்கு வருவர்.
இன்னொரு காட்டாக, மெய்யியல் தத்துவத்தைக் காணலாம். ஆன்மீகப் பொருள்களையும் (மெய்யியல்களையும்) கடவுள் வழங்கியது என்றும் புனிதத்தன்மை பொருந்தியது என்றும் கூறி நம்மை ஏற்கச் செய்ய முயல்வர். அவற்றின் மெய்ப்பொருளை, ஆராய்ந்தறிந்து ஏற்கவோ விடுக்கவோ செய்க என்பதுவும் இக்குறள் வழி சொல்லப்படுகிறது. இதைப் பரிமேலழகர் 'பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது (அறிவு)' என்று தெளிவுபடுத்துவார்.
இவைபோன்றே மற்ற உலகப் பொருட்களிலும் - பொருளாதார, சமுக, சமய, மெய்யியல் கொள்கை, கோட்பாடு எதுவானாலும் அதன் மெய்ப்பொருளைக் காண வேண்டும்.
எத்துறையிலும் உண்மையை யறிய விழைபவராகவும் உண்மையறிவில் நாட்டம் உடையவராகவுமே மாந்தர் இருக்க வேண்டுமென வள்ளுவர் விரும்புகிறார். இதுவே இக்குறள் கூறும் செய்தி.

எந்த ஒரு பொருளும் எத்தன்மையதாக இருப்பினும் அப்பொருளின் உண்மையை உணர்வதே அறிவாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நுகரப்படும் பொருள்களை நுனித்தறிதல் மெய்யுணர்தல் ஆம்.

பொழிப்பு

ஒரு பொருள் எத்தன்மையதாகத் தோன்றினாலும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு.